இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(9.05.1982 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

"எனக்கு விரைவில் மணம் முடித்து வைக்க என் பெற்றோர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், நான் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை. எனது இலட்சியம் நிறைவேறிய பிறகே கல்யாணம் காட்சி எல்லாம்" என்றார், விஜயகாந்த். சிறந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகராக உருவாகி வரும் விஜயகாந்த், தயாரிப்பாளர்களிடமும், டைரக்டர்களிடமும் "தொல்லை தராத நடிகர்" என்று பெயர் எடுத்தவர். கடந்த கால வாழ்க்கையை மறக்காமல், ஆடம்பரம் இல்லாமல் வாழ்பவர்.

நம்ம வீட்டுப்பிள்ளை

விஜயகாந்தின் இலட்சியம் என்ன? விஜயகாந்த் சொன்னார்:

"தமிழ் மக்களின் பேராதரவால் நான், இப்போதுதான் ஓர் இடத்தைப் பிடித்து இருக்கிறேன். அதை நிலைப்படுத்த வேண்டும். அதோடு, தமிழ் மக்களிடம், “இவன் (விஜயகாந்த்) நம்ம வீட்டுப் பிள்ளை" என்று எண்ணும் உணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த இலட்சியங்கள் நிறைவேறிய பிறகே திருமணத்தைப் பற்றி நினைக்க வேண்டும்" என்று விஜயகாந்த் கூறினார்.


இளமை காலத்தில் வெவ்வேறு தோற்றங்களில் நடிகர் விஜயகாந்த்

முறைப் பெண்

நிருபர்: திருமணம் என்றால், பெண் சினிமா உலகைச் சேர்ந்தவராக இருப்பாரா?

விஜயகாந்த்: நிச்சயமாக இல்லை. நான் ஒரு நடிகையை மணக்க விரும்பவில்லை. இப்படி சொல்வதால், நான் நடிகைகளை குறைத்து மதிப்பிடுவதாக கருதிவிடாதீர்கள். எனக்கு நிறைய முறைப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரையே நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்.

நிருபர்: அப்படியென்றால், பெற்றோராகப் பார்த்து முடித்து வைக்கும் திருமணம் என்று சொல்லுங்கள்!

விஜயகாந்த்: அப்படித்தான். நான் சிறிய வயதில் சினிமா மோகத்தால், என் பெற்றோருக்கு பல வகையில் தொல்லை கொடுத்தவன். ஒழுங்காகப் படிக்காமலும், பின்பு அப்பாவுக்குச் சொந்தமான அரிசி ஆலையை ஒழுங்காக நடத்தாமலும், அப்பாவின் வெறுப்புக்கு ஆளானவன். என்னை வெறுத்து வந்த பெற்றோர்கள், இப்பொழுது என் படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் விருப்பப்படியே என் திருமணம் நடக்கும். ஆனால், அவர்கள் அவசரப்படுவது போல உடனே நடக்காது. நாளாகும்.


திரைப்படத்துறைக்கு வந்த புதிதில் நடிகர் விஜயகாந்த்

நிருபர்: உங்கள் படம் என்றாலே சண்டைப் படம் என்று ஆகிவிட்டதே!

விஜயகாந்த்: இப்போது அப்படிப்பட்ட வேடங்கள்தான் வருகின்றன. நடிப்பிலும் என்னால் திறமை காட்ட முடியும்!

சொந்த வீடு

நிருபர்: சொந்தமாக வீடு வாங்கப் போகிறீர்களாமே!.

விஜயகாந்த்: நண்பர்களோ, உறவினர்களோ வந்தால் ஓட்டலில் தங்க முடிவது இல்லை (விஜயகாந்த் இப்போது ஓட்டலில்தான் தங்கியிருக்கிறார்) அதனால் ஒரு வீடு தேடிக்கொண்டு இருக்கிறேன்.

Updated On 29 April 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story