இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டு 1999, பலருக்கும் இது ஒவ்வொரு விஷயத்தில் மறக்கமுடியாத ஆண்டாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் இது மகிழ்ச்சியான ஆண்டு மட்டுமில்லாமல் மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்த ஆண்டு. அதில் முக்கியமானது எனது திருமணம்.

லண்டனைச் சேர்ந்த சங்கீதா திருமதி விஜய் ஆகி விட்டார். எனக்கு வரப்போகும் மனைவி எப்படியல்லாம் இருக்க வேண்டும் என எனது கற்பனையில் என்னென்ன நினைத்திருந்தனோ அத்தனையும் ஒருசேர வந்தவர் தான் சங்கீதா. எனது அப்பா-அம்மா பார்க்கும் பெண்ணைத்தான் மணந்துகொள்வேன் அல்லது தான் காதலிக்கும் பெண் எனது அப்பா-அம்மாவுக்கும் பிடித்தவளாக இருக்க வேண்டும் என அடிக்கடி சொல்லி வருவேன். இப்படி இரண்டும் சேர்த்து எனக்கு கிடைத்தவர் தான் என் மனைவி சங்கீதா.


அப்பா, அம்மா மற்றும் மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய்

திரையுலகம் என்பது ஒரு பக்கம். அதேபோல் குடும்ப வாழ்க்கை என்பது மற்றொரு பக்கம். திருயுலகப் பார்வையை மட்டுமே நான் வெளிச்சம் போட விரும்பிகிறேன். குடும்ப வாழ்க்கையை மிக அமைதியாக, விளம்பரமின்றி நடத்திடவே ஆசை. இந்த எண்ணம் இருந்ததால் தான் எனது வருங்கால மனைவியின் படத்தைக்கூட வெளியிடாமல் தாமதம் காட்டினேன்.

இயல்பாகவே அதிகம் பேசாதவன் நான். சங்கீதாவோ எனது இயல்பு அறிந்து பேசுவார். வாத்தியார் பாணியில் சொல்வதென்றால் “என்ன பொருத்தம் இந்த பொருத்தம்” தான். திருமணத்துக்கு பிறகு நான் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சங்கீதாவின் ஆலோசனை உள்ளது. காலை முதல் மாலை வரை எனது வேலை விவரங்களை தொகுப்பதில் எனக்கு உதவுகிறார்.


நடிகர் விஜய், மனைவி சங்கீதாவுடன் இருக்கும் வித்தியாசமான புகைப்படங்கள்

திருமணத்துக்கு முன்பே நானும் அஜித்தும் நல்ல நண்பர்கள். அந்த நண்பரின் வருங்கால மனைவி ஷாலினியுடன், இப்போது பெயரிடப் படாத படத்தில் – பாசில் இயக்கத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு நடப்பது கேரளாவில். ஷாலினியும், சங்கீதாவும் இப்போது நல்ல நண்பிகளாகிவிட்டனர். அதுவும் அஜித்-ஷாலினி திருமணச் சேதி கேட்டு என் மனைவியும் மகிழ்ச்சி அடைந்தார்.


மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது

ஆமா .... இது தலை தீபாவளியாச்சே ,... அதைப் பத்தி சொல்லாமல் ஏதேதோ சொல்றேன் என எண்ணுகிறீர்களா,... விஷயம் இல்லாமலா… எங்கள் திருமணம் நடந்த ஆகஸ்டு 25-ஆம் தேதிதான் எனக்கு தலைதீபாவளி. தலைதீபாவளி மட்டுமல்ல, முதல் கிறிஸ்துமஸ்,.. கிறிஸ்துமஸ் மட்டுமல்ல, முதல் ரம்ஜானும் அதுதான். ஏனென்றால் திருமணம் நடந்த அன்று என்னை அத்தனை நெஞ்சங்களும் வாழ்த்தியதே .... அந்த ‘தீபாவளி’ அன்றுதான். கிறிஸ்தவ முறைப்படி மாங்கல்யம் அணிவித்தேன். எனவே இந்த நேரத்தில் அன்றைய படங்கள் தருகிறேன். இதோ திருமணம் முடிந்த கையோடு ‘மெர்சி ஹோம்’ என்ற அனாதைக் குழந்தைகள் இல்லத்துக்கு சென்று, விருந்து பரிமாறினோம். இன்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கும் அந்த இனிய நினைவுகளோடு.. அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.

Updated On 13 Nov 2023 11:57 PM IST
ராணி

ராணி

Next Story