நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவு அளிப்பதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய் கூறியுள்ளார். நீட் பிரச்சினைக்கு முக்கிய காரணமே, மாநில உரிமைகள் பட்டியலில் இருந்த கல்வியை தேசிய உரிமைகள் பட்டியலுக்கு கொண்டு சென்றதுதான் என்றும், இப்பிரச்சினையில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இது தன்னுடைய கருத்துதான் என்றும், அதை நடக்க விடமாட்டார்கள் என தெரியும் என்றும் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.

மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விஜய்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் கல்வி விருது வழங்கி கவுரவித்து வருகிறார். கடந்த ஆண்டு இதனை தொடங்கிய விஜய், அனைத்து மாவட்ட மாணாக்கர்களையும் ஒரே நாளில் சென்னை வரவழைத்து விருது மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார். ஒரு நாள் முழுவதும் விழா நடைபெற்றதால், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோருக்கு சிரமம் ஏற்பட்டது.


காலையிலேயே விழா அரங்குங்கு வருகை தந்த விஜய்

இந்தநிலையில், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், இந்த ஆண்டு கல்வி விருது விழாவை மிகவும் திட்டமிட்டு நடத்தியுள்ளார். யாருக்கும் எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக 2 கட்டங்களாக விழா திட்டமிடப்பட்டது. முதல்கட்ட விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 800-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு சைவ ராஜ விருந்து உணவு போடப்பட்டது.

கல்வி விருது விழா 2.0

இதைத்தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் காலையே வருகை தந்து, ஏற்பாடுகளை கவனித்தார். இன்றைய நிகழ்ச்சியில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.


மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் பெற்றோருடன் கை குலுக்கி பேசியபோது

மதிய உணவு பட்டியல்

இந்த விழாவின் மதிய உணவு பட்டியல்தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, சாதம், கதம்ப சாம்பார், செட்டிநாடு வத்தக்குழம்பு, தக்காளி ரசம், அவியல், அப்பளம், வடை, மோர், வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளைக்கிழங்கு காரக்கறி, ஆனியன் மணிலா, சாண்ட்விச், ஸ்வீட் ஆகியவை மதிய உணவில் பரிமாறப்பட்டன.


மாற்றுத்திறனாளி மாணவிகள் அன்பாக அளித்த மலர்களுடன் நடிகர் விஜய்

நீட் தேர்வு வேண்டாம் - விஜய் தடாலடி!

முதல் கட்ட விருது விழா நிகழ்ச்சியில், கெட்ட பழக்கவழக்கங்களை மாணவர்கள் தவிர்த்துவிட வேண்டும் என போதைப்பொருளை டார்கெட் செய்து பேசி, அன்பாக அறிவுரை கூறிய விஜய், இன்றைய நிகழ்ச்சியில் நீட் தேர்வு குறித்து சற்று கோபமாகவே பேசினார். நீட் குறித்து நடிகர் விஜய்க்கு பேச தைரியம் கிடையாது என்றும், அதனால்தான் முதல்கட்ட விழாவில் அவர் அதுகுறித்து மாணவர்கள் மத்தியில் பேசாமல் கடந்து சென்றார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் மைக்கைப் பிடித்த விஜய், நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக பேசினார்.

நீட் தேர்வு வேண்டாம் என்றும், இதனால் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். நீட் பிரச்சினைக்கு முக்கிய காரணமே, 1975 வரை மாநில பட்டியலில் இருந்த கல்வி, பின்னர் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டதே என்று கூறினார். இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், இதற்கு நிரந்தர தீர்வு, தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்ட கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஒருவேளை அதில் சிக்கல் இருந்தால், இடைக்கால தீர்வாக, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.


நீட் தேர்வுக்கு எதிராக மேடையில் முழங்கிய த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக அரசுக்கு ஆதரவு

ஒரே நாடு, ஒரே பாடத் திட்டம், ஒரே தேர்வு ஆகியவை அடிப்படையிலேயே கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயமாக இருப்பதாகவும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றார்போல் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும் என்றும் விஜய் தெரிவித்தார். நீட் ரத்துக்கோரி, தமிழக அரசு, சட்டமன்றத்தில் கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக கூறினார். நீட் விவகாரத்தில், ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On 8 July 2024 6:10 PM GMT
ராணி

ராணி

Next Story