நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகக்கலைஞராக திரைத்துறையில் வலம் வருபவர்தான் விக்னேஷ் சிவன். ‘சிவி’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமான இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியவர் இல்லை. குறும்படங்களை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவை திருமணம் செய்ததன் மூலம், வாழ்க்கையில் அவர் பார்த்திராத விமர்சனங்களும் இல்லை, பாராட்டுகளும் இல்லை. இருப்பினும் தன் குறிக்கோள் என்னவோ அதை மட்டுமே நோக்கி எப்போதும் தன் பயணத்தை தொடரும் விக்னேஷ் சிவன், தற்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில், திரைத்துறைக்குள் வந்து 17 ஆண்டுகளை கடந்துள்ள விக்னேஷ் சிவன் கடந்து வந்த பாதை, சந்தித்த ஏற்ற தாழ்வுகள், இயக்குநராக கண்ட வெற்றி தோல்விகள் என அவரின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
சிம்புவால் கிடைத்த வாய்ப்பு
சினிமாவுக்குள் வந்து சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கான இலக்கை அவ்வளவு எளிதாக அடைந்துவிடுவது இல்லை. பல முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் பிறகுதான் யாரோ ஒருவரின் உதவியுடன் தங்களுக்கான இடத்தை தொடவே செய்வார்கள். இதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவில் இன்று முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் தொடங்கி இயக்குநர்வரை பலரை உதாரணமாக சொல்லலாம். இதில் இயக்குநர்கள் என்று எடுத்துக்கொண்டால் சிலர் பெரிய ஜாம்பவான்களிடம் உதவியாளர்களாகவும் இருந்து வருவார்கள், சிலர் தான் பார்த்து ரசித்த சினிமாவையும், அதன் இயக்குநர்களையும் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டும் வருவார்கள். அவர்களில் அன்றைய விக்ரமன் தொடங்கி இன்றைய லோகேஷ் கனகராஜ்வரை பலரை எடுத்துக்காட்டாக சொல்லலாம். அந்த வரிசையில், வெறும் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி வெற்றி இயக்குநர் என்ற அடையாளத்துடன் வலம் வரும் விக்னேஷ் சிவனும் மிக முக்கியமான ஒருவர். தெரிந்த விஷயமாக இருந்தாலும் அதை கொஞ்சம் வித்தியாசமான படைப்பாக கொடுத்து ரசிகர்களை மகிழ்விப்பதில் வித்தகரான இவர் படித்து முடித்த கையோடு, இயக்குநருக்கான முயற்சியில் இறங்கியபோதுதான் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அதன்படி 2007-ஆம் ஆண்டு செந்தில்நாதன் இயக்கத்தில், யோகி என்பவரது நடிப்பில் வெளிவந்த ‘சிவி’ என்ற படத்தில் நாயகனுக்கு நண்பராக பெயரிடப்படாத தோற்றத்தில் வந்து நடித்திருந்தார். இதன் பிறகு இயக்குநருக்கான முழு முயற்சியில் இறங்கியபோது வந்து அமைந்ததுதான் ‘போடா போடி’ திரைப்பட வாய்ப்பு. இந்த படம் எளிதாக கிடைத்தது போல் விக்னேஷ் சிவனுக்கு இருந்தாலும் முதல் படத்தை இயக்கி வெளியிடுவதற்குள் பல போராட்டங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.
'சிவி' திரைப்படத்தில் ஹீரோ யோகிக்கு நண்பராக பெயரிடப்படாத தோற்றத்தில் நடித்த விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் படித்த சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில்தான் நடிகர் சிம்புவும் படித்துள்ளார். விக்னேஷ் சிவனுக்கு சீனியர் மாணவரான அவர் இருந்த மியூசிக் குரூப்பில்தான் விக்னேஷ் சிவனும் டிரம்ஸ் வாசித்து வந்துள்ளார். அப்போது விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட அறிமுகம்தான் பின்னாளில் இயக்குநருக்கான வாய்ப்பை பெற்றுத்தந்தது. ‘சிவி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன் இயக்குநர் முயற்சியை தொடங்கியவர் படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவிலான குறும்படங்களை இயக்கி இருந்தாலும், அதை தவிர்த்து அப்போதைக்கு என்று புரமோஷன் வீடியோ ஒன்றை இயக்கி அதனை நடிகர் சிம்புவிடம் போட்டுகாட்டி வாய்ப்பு கேட்டுள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவனை எங்கோ பார்த்து பழகியது போன்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதால், படத்தின் கதையை கேட்டவுடன் சிம்புவும் விக்னேஷ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் கூறிவிட்டார். இப்படி உருவானதுதான் 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ‘போடா போடி’ திரைப்படம். 'சல்சா' எனும் புகழ்பெற்ற நடனத்தை மையமாக வைத்து, காதல் கதையாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு, வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் எடுக்கப்பட்டு நான்கு ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகுதான் வெளிவந்தது. அதிலும் 2012-ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்துடன், போட்டி போட்டு ‘போடா போடி’ வெளிவந்ததால் வெற்றி பெற முடியாமல் போனது.
நடிகர் சிம்புவுடன் போடா போடி, தனுசுடன் வி.ஐ.பி ஆகிய படங்களில் பணியாற்றிய இயக்குநர் விக்னேஷ் சிவன்
இப்படி நடிகர் சிம்பு வழங்கிய வாய்ப்பால் தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநராக அடையாளம் பெற்றவர் அடுத்தடுத்து படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மீண்டும் பழையபடி தனது போராட்டத்தை தொடங்கியபோதுதான் அனிருத்தின் அறிமுகம் கிடைத்து ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தில் போஸ்டர் டிசைன் செய்வது, பாடல் எழுதுவது என்று தனது அடுத்த கேரியரை தொடங்கினார். அப்போது தனது நண்பரான கபிலன் என்பவருடன் இணைந்து பேப்பர் ராக்கெட் என்ற டிசைன் கம்பெனி தொடங்கி படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்ய ஆரம்பித்த போதுதான் வி.ஐ.பி திரைப்படத்திற்கு போஸ்டர் டிசைன் செய்பவராக சென்று நடிகர் தனுஷின் அறிமுகத்தை பெற்று அப்படத்தில் நடிகராகவும் களமிறங்கினார் விக்னேஷ். 2014-ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டத்தில் ஓரளவு நன்கு அடையாளப்படுத்தப்பட்ட வேடத்தில் தனது விக்னேஷ் என்ற நிஜ பெயரிலேயே வந்து நடித்திருந்தார். சில காட்சிகளில் தனுஷுடனும் சேர்ந்து நடித்திருந்ததால் விக்னேஷ் கவனிக்கப்படக்கூடிய அடையாளம் பெற்றார்.
ஏற்றம் தந்த விஜய் சேதுபதி
‘போடா போடி’ திரைப்படம் முடிந்த சமயத்திலேயே அடுத்ததாக ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கான கதையை எழுதி வாய்ப்பு தேட ஆரம்பித்த விக்னேஷ் சிவனுக்கு, அக்கதையை கேட்க கூட யாரும் தயாராக இல்லையாம். அந்த சமயம் யாருமே பாராட்டாத ‘போடா போடி’ திரைப்படத்தை விஜய் சேதுபதி மட்டும் பார்த்துவிட்டு படம் சூப்பரா இருக்கு. நான் மிகவும் ரசித்து பார்த்தேன் என்று பாராட்டினாராம். இந்த பாராட்டால் கிடைத்த அறிமுகத்தை வைத்து முதலில் இக்கதையை விஜய் சேதுபதியிடம் கூறிய விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு, மிர்ச்சி சிவா, கெளதம் கார்த்திக், நிவின் பாலி, நாயகிக்காக நஸ்ரியா என்று பலரிடம் கதை சொல்லியும் கெளதமை தவிர வேறு யாரும் ஓகே சொல்லவில்லையாம். கௌதமை வைத்து படத்தை எடுக்கலாம் என்றால், தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லை. சரி பிறகு பார்ப்போம் என்று ஒத்தி வைத்துவிட்டு ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் பணியாற்றிய போதுதான் இக்கதையை தனுஷிடம் சொல்லும் வாய்ப்பு கிடைத்து கூறியுள்ளார். தனுஷும் பெருந்தன்மையாக நான் எனது வொண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக தயாரிக்கிறேன்; நீ நடிகர், நடிகைகளை ஓகே செய்; ஆனால் நாயகியாக இதில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும், நான் அவரிடம் சொல்கிறேன்; நீ நேரில் சந்தித்து ஓகே வாங்கிவா என்று அனுப்பி வைத்தாராம். நடிகை நயன்தாராவும் கதையை கேட்டுவிட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது புதுமுகமோ, நட்சத்திர நடிகர்களோ யாரை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள், எனக்கு பிரச்சினை இல்லை. இந்த பாத்திரத்தில் நான்தான் நடிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டாராம். அப்போது மீண்டும் கௌதமிடம் சென்று கேட்டபோது அவர் வேறொரு படத்தில் கமிட் ஆகிவிட்டேன், உடனே முடியாது என்று சொல்லவும் விக்னேஷ் செய்வதறியாது மீண்டும் விஜய் சேதுபதியிடம் சென்று யார் யாருக்கோ வாய்ப்பு கொடுக்கிறீர்கள், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள், அதே கதைதான் என்று கெஞ்சவும், சரி போ உனக்காக இதில் நடித்து கொடுக்கிறேன் என்று கதை மீது நம்பிக்கை இல்லாமல் கடமைக்காக விக்னேஷ் சிவனுக்காக வந்து நடித்து கொடுத்தாராம்.
'நானும் ரவுடிதான்' திரைப்பட காட்சியில் விஜய் சேதுபதி, நயன்தாரா
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமாக தேர்வு செய்து படம் ஆரம்பித்து எடுத்து முடிக்கும்வரை விஜய் சேதுபதி எதிலுமே தலையிடவில்லையாம். மற்ற ஹீரோக்களிடம் சென்று கதை சொல்லியபோது கூட, இதில், பெரும்பாலும் ஹீரோ மற்றவர்களிடம் அடி வாங்குவது போல் உள்ளது. திருப்பி ஒரு அடியாவது அவர் அடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கேட்டு நடிக்க மறுத்தபோதும், விஜய் சேதுபதி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், விக்னேஷ் சொன்னதை மட்டும் கேட்டு அப்படியே நடித்து கொடுத்தாராம். அதனால்தான் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் இன்றும் பேசப்படக்கூடிய இடத்தில், கொண்டாடப்படக் கூடிய இடத்தில் இருக்கிறது. 2015-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி தொடங்கி நயன்தாரா, ராதிகா சரத்குமார், பார்த்திபன், மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமின்றி சிறந்த இயக்குநருக்கான சைமா விருதையும் விக்னேஷ் சிவனுக்கு பெற்றுக்கொடுத்தது. அன்று விஜய் சேதுபதி என்ற கலைஞன் கொடுத்த ஏற்றம்தான் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு தந்தது. ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வெளிவந்த ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்காக வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதன் பிறகு, சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் ஆகியோருடன் இணைந்து 'பாவக்கதைகள்' என்றொரு வெப் தொடரை இயக்கியவருக்கு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் சுமாரான வெற்றிப்படம் என்ற பெயரை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று சிறந்த இயக்குநருக்கான இடத்தை தக்கவைக்க உதவியது.
விக்னேஷ் இயக்கிய சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்' - விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்பட காட்சிகள்
பிரதீப்புடன் கூட்டணி
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாக கிடைத்த வெற்றியை அடுத்து, நடிகர் அஜித்குமாரை வைத்து அவரின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. அதனை விக்னேஷ் சிவனும் உறுதி செய்திருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் அப்படத்தில் இருந்து வெளியே வந்துவிட்டதாக கூறப்பட்டது. பிறகு, அதில் இருந்து விலகியதை உறுதி செய்யும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களை சுவாசிக்கவும், உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது. #NeverEverGiveUp என ஹேஷ் டேக் போட்டு அடுத்த படத்துக்கு தயாராகுகிறேன் என்று பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகுதான், தனது சக நண்பரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.கே அதாவது 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை, ’இதயம் செய்வதை எந்திரம் செய்யாது’ எனக் குறிப்பிட்டு படக்குழு அண்மையில் வெளியிட்டது. அதன்பிறகு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
விக்னேஷ் இயக்கி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' போஸ்டர்கள்
நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனும், விக்னேஷ் சிவனை போன்றே தனித்துவமான சிந்தனை திறன் கொண்டவர். இவர்கள் இருவரும் இயக்கிய படங்களை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் ஓரளவு ஒத்துப்போகும் தன்மை இருப்பது. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'கோமாளி' திரைப்படமாகட்டும், கடைசியாக 2022-ஆம் ஆண்டு வெளிவந்த ‘லவ் டுடே’ திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே விக்னேஷ் சிவனின் படங்களை போன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். இருவரது சிந்தனை திறனும் சரி, இயக்கும் விதமும் சரி, கொஞ்சம் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். குறிப்பாக காதல் மற்றும் காமெடி சென்ஸ் வித்தியாசமாகவும் 2கே கிட்ஸ்களுக்கு பிடிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். அந்த வகையில், இவ்விருவரும் இணைந்துள்ள ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ திரைப்படமும் வித்தியாசமான படைப்பாக அமைந்து நல்லதொரு வெற்றி சரித்திரத்தை படைக்கும் என்று நம்புவோம்.