இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் வித்யா பாலன். கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட இவர் முதலில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால் இங்கு இவரை ராசியற்ற நடிகை என்றும், ஹீரோயினுக்கான முகம் இல்லை என்றும் சொல்லிவிட, கிட்டத்தட்ட 6 மாதங்கள் எதன்மீதும் நாட்டமில்லாமல் இருந்த வித்யா பாலனுக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. அதனை திறம்பட பயன்படுத்திக்கொண்ட இவர் தன்னைப் பற்றி முன்வைத்த விமர்சனங்களுக்கு தனது வெற்றிகளால் பதிலடி கொடுத்துவருகிறார். தைரியமான மற்றும் பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர், திரையுலகில் அறிமுகமாகி தற்போது 19 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்தும், தனது வெற்றியின் ரகசியம் குறித்தும் மனம்திறந்திருக்கிறார் வித்யா பாலன்.

தோல்வியில் முடிந்த முதல் காதல்

கேரள மாநிலம் பாலகாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர் வித்யா பாலன். இவருடைய அப்பா தொலைகாட்சியில் வேலைசெய்ததால் வித்யாவிற்கும் சிறுவயதிலிருந்தே கேமிரா வெளிச்சத்தின்மீது ஆசை இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே சினிமா வாய்ப்புகளைத் தேடிச்சென்றார். முதலில் மலையாளத்தில் மோகன்லாலுடன் சேர்ந்து ‘சக்கரம்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டதால் தமிழ் பக்கம் வந்தார். முதலில் ‘ரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு அதிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ‘மனசெல்லாம்’ படத்திலும் செலக்ட்டாகி பின்னர் நிராகரிக்கப்பட்டார். இப்படி 2000ஆம் ஆண்டு முதல் 2003 வரை தொடர்ந்து படங்களில் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டார். இதனிடையே கல்லூரியில் தான் காதலித்தவனும் தன்னை ஏமாற்றிவிட எல்லா பக்கமும் வித்யா பாலனின் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டது. தனது முதல் காதல் தோல்வியில் முடிந்தது தனக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அதிலிருந்து மீண்டுவர மிகவும் சிரமப்பட்டதாகவும் சமீபத்திய நேர்காணலில் அதுகுறித்து மனம்திறந்திருந்தார் வித்யா. தனது காதல் பிரேக் ஆனபிறகு, காதலர் தினத்தன்று அந்த நபரை கல்லூரியில் சந்தித்தபோது, அவர் தனது முன்னாள் காதலியையே டேட்டிங் செய்யப்போவதாக வித்யாவிடம் கூற, அந்த நாளில் தான் நொறுங்கிவிட்டதாக கூறியிருந்தார். அது தனக்குள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், தனது அன்றாட வாழ்க்கையை பாதித்து, மிகுந்த வலியை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இருப்பினும் அந்த தோல்விதான் தான் முன்னேற வழிவகுத்து கொடுத்ததாகவும், அதனால்தான் இப்போது தன்னை சீரியஸாக காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு வாழ்வதாகவும் மனம்திறந்திருந்தார். திரைத்துறையில் முன்னணி நடிகையாக உருவானபிறகே தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் வித்யா பாலன்.


‘பரிணீதா’ படத்தின்மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்த வித்யா பாலன்

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்

இப்படி சினிமா வாய்ப்பு நிராகரிப்புகள் ஒருபுறம், காதல் தோல்வி மறுபுறம் என சுழன்றுகொண்டிருந்த வித்யா பாலன் தனது முதுகலை பட்டபடிப்பிற்காக மும்பைக்குச் சென்றார். அங்குதான் அவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே மனவலிமையை அதிகரித்துக்கொண்ட வித்யா, சினிமா வாய்ப்பு கிடைக்கும்வரை விளம்பர படங்களில் நடிப்பது என முடிவெடுத்தார். 2000 - 2003க்கு இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட விளம்பரங்களில் தோன்றினார். இதனிடையே சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ‘ஹம் பாஞ்ச் சீசன் 1’இல் நடித்த இவர், பாதியில் அதனை கைவிட்டார். அதன்பிறகு 2003ஆம் ஆண்டு ‘பாலோ தேக்கோ’ என்ற பெங்காலி திரைப்படத்தில் நடித்தார். அதற்காக அனந்தலாக் புரஸ்கார் என்ற கொல்கத்தாவின் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். இதன்மூலம்தான் ‘பரிணீதா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கதாநாயகிக்கான தோற்றம் இல்லை என்ற தொடர் நிராகரிப்புகளை சந்தித்த வித்யாவிற்கு, பாலிவுட்டின் முதல் படமே கதாநாயகியை மையப்படுத்திய படமாக அமைந்தது. அதன்பிறகு ‘லகே ரஹோ முன்னா பாய்’ படத்தில் நடித்தார். அந்த படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. இப்படி தென்னிந்திய தயாரிப்பாளர்களால் ராசியற்ற ஹீரோயின் என நிராகரிப்பட்ட வித்யா பாலன் பாலிவுட்டில் ராசியான முகமாக ஜொலிக்க ஆரம்பித்தார். 2007ஆம் ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் 6 இந்தி படங்கள் வெளியாகின. அதுமுதல் தொடர்ந்து நடித்துவரும் இவர், பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். குறிப்பாக, நடிகை சில்க் ஸ்மிதாவின் சுயசரிதையான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானாலும் அந்த படத்திற்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னதான் பாலிவுட் படங்களில் நடித்தாலும் தமிழ் மொழி என்றால் வித்யா பாலனுக்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் தமிழ் கலாச்சாரத்தின்மீது தனக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பதாக கூறும் இவர், 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதன்பிறகு, பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம்வரும் வித்யா பாலன்

ராசியற்ற நடிகை!

தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கிவரும் வித்யா பாலன் ‘தோ ஔர் தோ பியார்’ என்ற இந்தி பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவரிடம் நிருபர்கள் கடந்த கால அனுபவம் பற்றி கேட்க, மிகவும் வெளிப்படையாகவே தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த பேட்டியில், “சினிமா வாய்ப்புகள் தேடி அலைந்தபோது, நிறைய நிராகரிப்புகளால் நான் மூன்று வருடங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். நொறுங்கிப்போனேன். ஒவ்வொரு இரவிலும் அழுதுகொண்டே தூங்கப்போவேன். இருந்தாலும் அடுத்த நாள் எழுந்தவுடன் சினிமா ஆசை எனக்குள் வந்துவிடும். மோகன்லால் படம் கிடப்பில் போடப்பட்டபிறகு நான் கமிட்டான மற்றொரு படமும் கிடப்பில் போடப்பட்டது. அதனால் மலையாளத்தில் ராசியற்ற நடிகை என என்னை ஓரம்கட்டிவிட்டனர். இதனால் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களிலும் ஹீரோயின்களை மாற்றிவிட்டனர். அதன்பிறகு ஒரு தமிழ் படத்தில் கமிட்டானேன். ஓரிரு காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, மலையாள திரையுலகில் என்னை நிராகரித்தது குறித்து கேள்விப்பட்டு அவரும் என்னை வேண்டாம் என சொல்லிவிட்டார். உடனே நான் எனது பெற்றோருடன் சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அப்போது அவர் எனது பெற்றோரிடம் ‘இவளை பாருங்கள், எந்த கோணத்தில் ஹீரோயினைப் போன்று தெரிகிறாள்?’ என்று கேட்டார். அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. என் இதயமே நொறுங்கிப்போனது. அதன்பிறகு நான் சுமார் 6 மாதங்கள் கண்ணாடியில் எனது முகத்தையே பார்க்கவில்லை. நான் மிகவும் அசிங்கமாக இருக்கிறேன் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அதிலிருந்து வெளிவர மிகவும் கஷ்டப்பட்டேன்.


‘லகே ரஹோ முன்னா பாய்’ படம் குறித்து மனம்திறந்த வித்யா பாலன்

ஒருவழியாக மும்பைக்கு வந்து பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கியபோது, ‘லகே ரஹோ முன்னா பாய்’ வெளியான சமயத்தில் ஏர்போர்ட்டில் அந்த தயாரிப்பாளரை மீண்டும் சந்தித்தேன். அப்போது அவர், தான் ஒரு பெரிய பட்ஜெட் படம் செய்துகொண்டிருப்பதாகவும், அதில் என்னை நடிக்கவைக்க விரும்புவதாகவும் கூறினார். நான் எனது மேனேஜரின் நம்பரை கொடுத்து அவரை தொடர்புகொள்ளுமாறு கூறிவிட்டு வந்தேன். முதலில் நான் நிராகரிக்கப்பட்டபோது எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை புரிந்துகொண்டேன்” என்று கூறியிருந்தார். திரைப்படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்தாலும் இடையே உருவ கேலிக்கு ஆளானார் வித்யா பாலன். இதுகுறித்து கேட்கப்பட்டபோது, முதலில் தன்னை படத்திற்காக அணுகும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எடையை குறைக்குமாறு கூறியிருக்கிறார்கள் எனவும், ஆனால் நீண்டகாலமாக தனக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் உடற்பயிற்சி செய்து உடலை குறைக்கமுடியாத சூழ்நிலை இருப்பதாகவும் கூறியிருந்தார். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை தோல்வியில் முடிந்தாலும் போராடும் குணம்கொண்ட இவர், தற்போது உடற்பயிற்சி இல்லாமலே எடையை குறைத்து பழையபடி மாறியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஒருவரின் உதவியுடன் பிரத்யேக டயட் முறையை பின்பற்றுவதாகவும், தனக்கு இருக்கும் ஒவ்வாமைகளுக்கு ஏற்ப அவர் உணவை மாற்றிக் கொடுத்திருப்பதால் தற்போது உடல் எடை கணிசமாக குறைந்திருப்பதாகவும் வித்யா பாலன் தெரிவித்திருக்கிறார்.

Updated On 11 Nov 2024 6:00 PM GMT
ராணி

ராணி

Next Story