
அழகு என்று ஒரு பெண்ணை வர்ணித்தாலோ அல்லது கேலி செய்தாலோகூட ‘உனக்கு என்ன சினிமா நடிகை ஸ்ரீதேவி என நினைப்பா?’ என்றுதான் கேட்பார்கள். அந்த அளவிற்கு 1970 - 80களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம்வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். அப்போதிருந்த பெரும்பாலான நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் ஸ்ரீதேவியைத்தான் சொல்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி, இங்கு உச்சத்தில் இருந்தபோதே திடீரென இந்தி பக்கம் சென்றார். பொதுவாக வடக்கிலிருந்து தெற்குநோக்கித்தான் நடிகைகள் வருவார்கள். ஆனால் ரேகாவிற்கு பிறகு தமிழிலிருந்து பாம்பே சென்று அங்கு உச்ச நட்சத்திரமாக உருவான நடிகை என்றால் அது ஸ்ரீதேவிதான். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு நடிக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்தார். இது இவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தாலும் எப்போதும் ஸ்ரீதேவிக்கென்று தனி மரியாதையும் வரவேற்பும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலுமே இருக்கத்தான் செய்தது. அதன்மூலம் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்க்லீஷ் விங்க்லிஷ்’ படத்தின்மூலம் கம்பேக் கொடுக்க, அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இப்படி இந்திய சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென அவர் இறந்துவிட்டதாக வெளியான செய்தி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்ரீதேவி உலகைவிட்டு பிரிந்து பிப்ரவரி 24ஆம் தேதியுடன் 7 ஆண்டுகள் நிறைவாகின்ற நிலையில் அவருடைய நினைவலைகள் உங்களுக்காக...
பல மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக...
இன்றளவும் இந்திய சினிமாவில் தனக்கென பிரத்யேக இடத்தை பிடித்த ஒரு நடிகை ஸ்ரீதேவி. இவருடைய அப்பா அய்யப்பன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், அம்மா ராஜேஸ்வரி ஆந்திராவைச் சேர்ந்தவர். அய்யப்பன் மதராசப்பட்டினத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில் ராஜேஸ்வரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பிறந்தார் ஸ்ரீதேவி. விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டி கிராமத்தில் இவர் பிறந்திருந்தாலும் அப்பா மற்றும் குடும்பத்தினர் பலரும் அடிக்கடி வேலைநிமித்தமாக மெட்ராஸுக்கு சென்றுவந்ததால், அதன்மூலம் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் அறிமுகம் கிடைக்க, சினிமா வாய்ப்பு குழந்தையாக இருந்த ஸ்ரீதேவிக்கு கிடைத்தது. 4 வயதில் ‘துணைவன்’ படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து கடவுள் வேடத்திலேயே நடித்துவந்த ஸ்ரீதேவிக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற 60களின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அசாத்திய நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கமல்ஹாசனை போன்றே ஸ்ரீதேவியும் குழந்தைப்பருவத்திலேயே தனது உயிரோட்டமான நடிப்பால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். இதனால் தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் ஆண், பெண் என பலதரப்பட்ட சிறுவர் கதாபாத்திரங்களில் நடித்தார்.
தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி
கிறங்கடித்த மயிலு!
70களின் நடுவில் கமல்ஹாசன் ஹீரோவாக வளர்ந்துவந்த சமயத்தில் ஸ்ரீதேவியும் கதாநாயகியாக காலடி எடுத்துவைத்தார். கே. பாலசந்தர் 50க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அவர்களில் ஸ்ரீதேவியும் ஒருவர். 13 வயதாக இருந்த ஸ்ரீதேவியை ‘மூன்று முடிச்சு’ படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இந்த படம்தான் ரஜினி - கமல் - ஸ்ரீதேவி ஆகிய மூவரின் கெரியரிலும் ஒரு முக்கியப்படமாக அமைந்தது. இந்த படத்தில் கமல், ஸ்ரீதேவியைக் காட்டிலும் வில்லனாக நடித்த ரஜினி குறைந்த சம்பளம் வாங்கியதாக ஸ்ரீதேவியே கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் தன்னுடைய ஸ்டைலுக்காகவே வில்லன்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற நடிகராக பார்க்கப்பட்டார் ரஜினி. ரஜினி - கமல் காம்போ எப்படி பிரபலமோ அப்படியே இவர்கள் இருவரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் ஸ்ரீதேவியுடன் நடித்த மற்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக கமல் - ஸ்ரீதேவி ஜோடிக்கு அப்போது திரையரங்குகளில் விசில் சத்தமும் கைதட்டல்களும் எகிறின. ஒரு கட்டத்தில் ரஜினி ஹீரோவான பிறகு, அவருக்கு சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டார் ஸ்ரீதேவி. இவர்கள் இருவரும் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக பணியாற்றியிருக்கின்றனர். அதேபோல் கமலுடனும் 22 படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியை புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்ற ‘மயிலு’ கதாபாத்திரம் (சப்பாணி கதாபாத்திரத்தில் கமல்)
குறிப்பாக, ‘16 வயதினிலே’ திரைப்படம் மூவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக, கமல் - ரஜினியைவிட மயிலு கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரீதேவி பெருமளவில் பேசப்பட்டார். இப்படி ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்குமே சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்ட ஸ்ரீதேவியை இருவருமே காதலிப்பதாக அப்போதைய பத்திரிகைகளில் எழுதப்பட்டன. கமலை ‘காதல் மன்னன்’ என்று அப்போதிருந்தே சொல்லிவந்த நிலையில், அவரும் ஸ்ரீவித்யாவும் காதலிப்பதாக பேசப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவிமீது ரஜினிக்கு அதீத காதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ரஜினி தனது நண்பரை வைத்து ஸ்ரீதேவியின் அம்மாவிடம் அவரை பெண் கேட்ட நிலையில், ஸ்ரீதேவிக்கு அப்போது திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறி ரஜினியின் புரபோசலை நிராகரித்துவிட்டார். குறிப்பாக, அவர் அப்போதுதான் திரையுலகில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்ததால் அவருடைய அம்மாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் அந்த சமயத்தில் இருவரையும் வைத்து நல்ல காதல் கதைகள் எடுக்கப்பட்டன. ரஜினிகாந்தின் புரபோசலை நிராகரித்த சமயத்தில் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வந்தார் ஸ்ரீதேவி. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தென்னிந்திய திரையுலகில் நம்பர் 1 ஹீரோயினாக கோலோச்சிய ஸ்ரீதேவி இங்கு 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
பாலிவுட்டிலும் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதேவி
பாலிவுட்டின் தண்டர் ரைஸ்!
தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து வியந்துபோன பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அவரை இந்தியில் அறிமுகப்படுத்த ஆசைப்பட்டார். தென்னிந்திய படங்களில் 15 முதல் 18 லட்சம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கு 22 லட்சத்திற்கும் மேல் சம்பளம் தருவதாக போனி கபூர் கூற உடனே அங்கு அவரை அறிமுகப்படுத்த ஸ்ரீதேவியின் அம்மா ஓகே சொல்லிவிட்டார். ஏற்கனவே ‘ராணி மேரா நாம்’ மற்றும் ‘ஜூலி’ போன்ற படங்களில் பாலிவுட்டிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஸ்ரீதேவி ‘சால்வா சாவான்’ படத்தின்மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். எப்போதும் மும்பை வரவுகளுக்குத்தான் தென்னிந்திய திரையுலகில் மவுசு என்ற கருத்தை மாற்றியமைக்கும்விதமாக ஸ்ரீதேவியின் பாலிவுட் என்ட்ரி அமைந்தது. முதல் ஓரிரு படங்களே ஸ்ரீதேவிக்கு வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், 1983-ஆம் ஆண்டு வெளியான ‘ஹிம்மத்வாலா’ திரைப்படம் பாலிவுட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டின் ‘தண்டர் ரைஸ்’ என்று வடக்கு ரசிகர்களால் அழைக்கப்பட்டார் ஸ்ரீதேவி. பாலிவுட்டை பொருத்தவரை நடிகைகளுக்கு எப்போதும் பாதுகாப்பு தேவைப்படும் என்பதாலும், ஸ்ரீதேவிக்கு இந்தி தெரியாது என்பதாலும் போனி கபூர் அவருக்கு பாதுகாப்பாக எங்கும் கூடவே சென்றதுடன், ஒரு கட்டத்தில் அவருடைய வீட்டிலேயே தங்கவைத்தார். மேலும் போனி கபூரின் சகோதரர்களான அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோருடன் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஆரம்பத்தில் போனி கபூரை இவர் அண்ணா என்று அழைத்ததால் அவருடைய முதல் மனைவி மோனா இவர்களுடைய உறவு குறித்து சந்தேகிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே ஸ்ரீதேவி கர்ப்பமானார். அதனால் போனி கபூர் - மோனா தம்பதிக்கிடையே சச்சரவு ஏற்பட்டு பிரியும் சூழல் ஏற்பட்டது. முதல் மனைவியை பிரிந்த கையோடு ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார் போனி கபூர்.
தனது காதல் கணவர் போனி கபூருடன் ஸ்ரீதேவி
திடீரென மரணம் - இன்றுவரை அவிழாத மர்மம்
பாலிவுட்டுக்கு சென்ற பிறகு கால்ஷீட் மற்றும் பயண சிக்கல்களால் தமிழ்ப்படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திக்கொண்ட ஸ்ரீதேவி, ஒரு கட்டத்தில் தெலுங்கில் நடிப்பதையும் நிறுத்தினார். முழுக்கமுழுக்க இந்தியில் மட்டுமே கவனம் செலுத்திவந்த இவர், போனி கபூரை திருமணம் செய்த சமயத்தில் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருந்தார். இப்படி மார்க்கெட் குறையாமல் புகழின் உச்சத்தில் இருந்த ஸ்ரீதேவி, திருமணம், குழந்தைகள் என்றான பிறகு நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தார். இதனால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே வருத்தமடைந்தது. இருந்தாலும் கணவருடன் சேர்ந்து படம் தயாரிப்பது, விருது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, குடும்பத்துடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணித்து புகைப்படங்களை வெளியிடுவது, பார்ட்டிகளில் கலந்துகொள்வது என கேமரா முன்பு அவ்வப்போது வந்துபோனார். தென்னிந்திய படங்களில் நடித்தபோதே மது அருந்தும் பழக்கம் வைத்திருந்த ஸ்ரீதேவிக்கு, பாலிவுட் பக்கம் சென்றபின்பு, குறிப்பாக அவருடைய அம்மாவின் இறப்புக்கு பின்பு அந்த பழக்கம் இன்னும் அதிகமானதாக சொல்லப்படுகிறது. மேலும் தனது அழகை பராமரிக்கவேண்டும் என்பதற்காக உதடு, மூக்கு உட்பட கிட்டத்தட்ட 6, 7 பிளாஸ்டிக் சர்ஜரிகளை அவர் செய்திருக்கிறார். அதனாலேயே ஸ்ரீதேவிக்கு அழகின்மீது மோகம் ஏற்பட்டிருப்பதாக பேசப்பட்டது. சினிமாவிலிருந்து விலகியிருந்தாலும் அவ்வப்போது ஒருசில படங்களில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றிய ஸ்ரீதேவி, 2012ஆம் ஆண்டு ‘இங்லிஷ் விங்லிஷ்’ படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார். அந்த படம் ஸ்ரீதேவியின் கெரியரில் மிக முக்கிய படமாக பார்க்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் ஓரிரு ஆண்டுகள் இடைவெளிக்குபிறகு ‘மாம்’ என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையே தனது மூத்த மகள் ஜான்வி கபூரை எப்படியாவது கதாநாயகியாக்க வேண்டுமென பல கதைகளை கேட்ட ஸ்ரீதேவி, அதற்காக அவரை தயார்படுத்தியும் வந்தார். இப்படியிருக்கையில்தான், 2018ஆம் ஆண்டு துபாயிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது கணவருடன் தங்கியிருந்த ஸ்ரீதேவி, குளிக்கும்போது பாத் டப்பிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகி திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 54 வயதில் ஸ்ரீதேவி திடீரென இறக்க காரணம் என்ன? என பல்வேறு தரப்புகளிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், உடன் இருந்த கணவர்மீதே சந்தேகம் இருப்பதாக ஊடகங்களில் பேசப்பட்டது. ஆனால் அதிகப்படியாக மதுப்பழக்கம் மற்றும் அழகை மேம்படுத்த செய்யப்பட்ட அறுவைசிகிச்சைகள் மற்றும் ஊசிகளே ஸ்ரீதேவியின் இளம்வயது மரணத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. வருகிற பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஸ்ரீதேவி இறந்து 7 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இன்றும் அவர் மரணத்திற்கான காரணம் என்பது முழுமையாக தெரியவில்லை என்பதே பலரின் வருத்தம்!
