தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடி தீர்த்த ஒரு இயக்குநர் யார் என்றால் அது வி.சேகராக மட்டும்தான் இருக்க முடியும். இவர் படங்கள் வெளிவருகிறது என்றாலே குடும்பமாக சேர்ந்து சென்று பார்க்கலாம். மகிழ்ச்சியடையலாம் என்ற எண்ணம் எல்லோருக்குமே உண்டாகும். காரணம் ஒரு குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை மிகவும் எதார்த்தத்தோடு எடுத்து ரசிக்க வைக்கும் அந்த பாங்குதான். இவர் இயக்கிய முதல் படம் பெரிதாக கை கொடுக்காவிட்டாலும் அடுத்தடுத்து வந்த ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ போன்ற படங்கள் பெரிய ஹீரோக்களின் படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு வெற்றி வாகை சூடின. அப்படிப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் வி.சேகர் தனது திரை அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட நேர்காணலின் ஒரு பகுதியை இந்த கட்டுரையில் காணலாம்.
நாயகிகளை முன்னிறுத்தி எப்போதும் படங்களை எடுத்திருக்கும் நீங்கள் பெண்ணுரிமை என்ற விஷயத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
எதுவுமே வாழ்க்கை அனுபவம்தான். என்னுடைய அப்பா நல்ல வசதி வாய்ப்புகள் நிறைந்த பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சொத்துக்கள் இருந்தது. பண்ணையார் என்ற பணியில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துவிட்டார். அதனால், என்னுடைய அம்மா மிகவும் சிரமப்பட்டுதான் என்னை வளர்த்தார். அம்மாவுக்கு உதவியாக என்னுடைய சித்தி, பாட்டி என ஒரு ஏழு பெண்கள் இருந்தார்கள். நான் வீட்டிற்கு முதல் பிள்ளை என்பதால் மிகவும் செல்லமாக என்னை வளர்த்தார்கள். இப்படி முழுக்க முழுக்க பெண்கள் சூழ அவர்கள் பராமரிப்பில் வளர்ந்ததால் எனக்கு அந்த மாதிரியான சிந்தனைகளிலேயே படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆண்கள் மனைவி இல்லையென்றாலோ அல்லது அவள்மீது ஏற்பட்ட வெறுப்பிலோ அவளை விட்டுவிட்டு வேறொரு திருமணம் செய்துகொண்டு போய்விடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. பிள்ளைகளுக்காக விரதம் இருந்து போராடி அவர்களை பேணி காப்பார்கள். இதையெல்லாம் நன்கு விவரம் அறிந்து தெரிந்து கொண்ட பிறகு என்னை அறியாமலே பெண்களை உயர்த்தி படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. என்னுடைய தாத்தா மிகப்பெரிய பண்ணையாராக இருந்தாலும், சொத்து சேர்ப்பதில்தான் மிகுந்த கவனமாக இருந்தார். ஆனால், அவரை விட எனது பாட்டி நிறைய அன்னதானம் வழங்குவது, ஒரு 50 குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது என்று மிகவும் டெடிகேட்டடான பெண்ணாக இருந்தார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோக்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் நடிகை ராதிகா
அதேபோன்று என் அப்பாவைவிட அம்மா பயங்கர டெடிகேட்டிவ், என்னைவிட என் மனைவி டெடிகேட்டிவ். இப்படி குடும்பத்தில் பெண்கள் அனைவரும் பொறுப்புமிக்கவர்களாக இருப்பதால்தான் எனது படங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இப்போதுவரை எனக்கு என்று ஒரு தனி கோட்பாடுகள் உண்டு. அதில் முக்கியமானது எனது படங்களில் பெண்களுக்கு அதிகமான சம்பளம் வழங்குவது. உதாரணத்திற்கு ரஜினி, கமல் போன்றவர்களின் படங்களில் அவர்களுக்கு 100 கோடி சம்பளம் என்றால் உடன் நடிக்கும் ஹீரோயினுக்கு 10 கோடி கூட இருக்காது. ஆனால், என்னுடைய படங்களில் ஹீரோயினுக்கு என்ன சம்பளமோ அதுதான் ஹீரோவுக்கு. வியாபாரத்தை பற்றியெல்லாம் கவலை படமாட்டேன். அதனால்தான் என்னுடைய ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ திரைப்படத்தில் கூட நடிகை ராதிகாவுக்கு என்ன சம்பளமோ அதேதான் ஹீரோவான நாசருக்கு கொடுத்தேன். இந்த இன்ஸ்பிரேசன் எனது மகளிடம் இருந்துதான் எனக்கு வந்தது. அது எப்படி என்றால் எங்கள் வீட்டில் கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கும் பொழுது அங்கு வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் இருவரையும், என் பெண் கவனித்து வந்துள்ளார். அப்போது ஆண் வேலையாட்கள் அடிக்கடி தம் அடிக்க செல்வது, அவ்வப்போது ரெஸ்ட் எடுப்பது, வேலை முடிய ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே குடிக்க சென்றுவிடுவது என்று இருப்பதை பார்த்துவிட்டு இங்க பெண்கள்தான் காலையில் இருந்து பொறுப்பாக வேலை செய்கிறார்கள். சம்பளம் கொடுப்பதாக இருந்தால் இருவருக்கும் சமமாக சம்பளம் கொடுங்கள். இல்லையென்றால் கொடுக்காதீர்கள் என்று பிரச்சினை செய்துவிட்டார். அதில் இருந்து எங்கள் குடும்பத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது. ஆணாதிக்க சமுதாயத்தை ஒழிக்க வேண்டும், எல்லோரும் சமம் என்பதை வலியுறுத்தும் நல்ல படங்கள் வர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

'வெள்ளிக்கிழமை நாயகன்' நடிகர் ஜெய்சங்கர்
நீங்கள் இயக்குநராக எந்த அளவுக்கு வெற்றி கொடுக்கிறீர்களோ அதே அளவுக்கு தயாரிப்பாளராகவும் நிறைய வெற்றிகள் கொடுத்து இருக்கிறீர்கள். உங்கள் படங்களில் நடித்த வடிவுக்கரசி போன்றவர்கள் சொல்வதெல்லாம் வி.சேகர் படமா அப்போ சம்பள பிரச்சினையே இருக்காது. நல்ல சம்பளம் கொடுப்பார் என்பதுதான். அது எப்படி சாத்தியம் ஆச்சு?
என்னுடைய தயாரிப்பில் நடிக்கும் போது பெண்களுக்கான பாதுகாப்பு, முக்கியத்துவம் என்பது அதிகமாக இருக்கும். அதிலும் நடிக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஆடை, ஆபரணங்களை கூட அப்படியே அவர்களை எடுத்துக் கொள்ளச் சொல்லி விடுவேன். வெளியிடத்தில் மற்ற படங்களில் கூட சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால், எனது படத்தில் நேரத்திற்கு வந்துவிடுவார்கள். சண்டை போட மாட்டார்கள். என்னுடைய படம் நன்றாக முடிய வேண்டும் என்று பிரார்த்தனை கூட செய்து கொள்வார்கள். ஒருமுறை பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் என்னுடைய படத்தில் நடிக்கும் பொழுது என்னுடைய குணநலன்கள், நடவடிக்கைகளை பார்த்துவிட்டு இப்படியொரு இயக்குநரை நான் பார்த்ததே இல்லையே. வெகு இயல்பாக எந்த பந்தாவும் இல்லாமல் இருக்கிறீர்கள் என்று கூறினார்.
நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் என்றால் எதை சொல்லுவீர்கள்?
‘வரவு எட்டணா செலவு பத்தணா’ திரைப்படம்தான் எனக்கு மிகவும் பிடித்த படம். ஏனென்றால் என்னுடைய குடும்பத்தில் நடந்த பல நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுதான் அந்த படத்தை இயக்கினேன்.

'வரவு எட்டணா செலவு பத்தணா' திரைப்படத்தில் ராதிகா மற்றும் நாசர்
அந்த படத்திற்கான கதாபாத்திர தேர்வுகள் எப்படி செய்தீர்கள்?
மிகவும் யோசித்துதான் தேர்ந்தெடுத்தேன். பெரும்பாலும் என் சொந்த பந்தங்கள், என் மனைவி, நான் என எங்கள் அனைவருடைய செயல்பாடுகளை வைத்துதான் இதற்கு யார் சரியாக இருப்பார் என்று யோசித்து தேர்ந்தெடுத்தேன். இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ராதிகா மிகவும் ஒத்துழைப்பு தந்தார். அந்த சமயம்தான் அவருக்கு குழந்தையும் பிறந்திருந்தது. அப்போது அவர் கூறினார் “சார்… பொதுவாக குழந்தை பிறந்துவிட்டால் யாரும் நடிக்க அழைக்க மாட்டார்கள். பாரதிராஜாவுக்கு பிறகு நீங்கள்தான் என்னை நடிக்க அழைத்திருக்கிறீர்கள்” என்று.
கமர்சியல் படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்ததா? ஏன் அப்படியான படங்கள் நீங்க எடுக்கவில்லை?
அப்படியான படங்கள் எடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது இல்லை. கமர்சியல் படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால், எதார்த்தமான நல்ல கருத்துக்களை சொல்ல முடியாமல் போய்விடும்.
அரசியலில் மிகுந்த ஈடுபாடு உள்ள மனிதர் நீங்கள். இன்றைய அரசியல் சூழலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
லஞ்சம் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள். அரசியல்வாதிகள் அடுத்தடுத்த தேர்தல்களை மனதில் வைத்து நிறைய பணங்களை சம்பாதித்து வைத்துக்கொள்கிறார்கள். மக்களுக்கு தேவையானதை சரியான நேரத்திற்கு செய்வதில்லை. அப்படி செய்ய தவறும் போதுதான் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது.

நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் - வி.சேகர்
ஒரு இயக்குநராகவும், அரசியல் ஆர்வமிக்கவராகவும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?
நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் தவறில்லை. அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். விஜய் எடுத்த உடன் வெற்றி மிக்க ஹீரோவாக மாறிவிடவில்லை. நிறைய விமர்சனங்களையும், போராட்டங்களையும் கடந்துதான் வெற்றி ஹீரோ என்ற அந்தஸ்தை அடைந்தார். அதேபோன்றுதான் அரசியலும். மக்களை நேரடியாக சென்று சந்திக்க வேண்டும். களத்தில் இறங்கி வேலை செய்தால் நிச்சயம் வரலாம்.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களோடு உங்களின் படங்களும் வெளிவந்து போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளது? அதுபற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?

பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் கே.பாக்கியராஜ்
நல்ல கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால் நிச்சயம் வெற்றிபெறும். நாமும் அதற்காக அதிகம் உழைக்க வேண்டும். ஒருவருடம் வரை நன்கு யோசித்து கதை - வசனம் எழுதித்தான் படமே எடுப்பேன். உதாரணத்திற்கு ரஜினி கூட பாபா படத்திற்கு பிறகு ஒருவருடம் வரை வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அப்போது அவரிடம் எல்லோரும் கேட்டார்கள் ஏன் படங்கள் ஏதும் நடிக்கவில்லை என்று. பதிலுக்கு அவர் ஹீரோ இல்லை, பிசினஸ் இல்லை என்று கூறினார். உடனே எல்லோரும் நீங்கள்தான் ஹீரோ. உங்களுக்கு இல்லாத பிசினஸா என்று சொல்ல, அதற்கு அவர் இங்கு ஹீரோ, பிசினஸ் எல்லாம் முக்கியம் இல்லை. கதைதான் முக்கியம். நல்ல கதையை தேடிக்கொண்டிருக்கிறேன், என்று சொன்னார். சொன்னது போல் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியும் கொடுத்தார். அதனால், நல்ல கதை இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இதெல்லாம் உதாரணம். பாக்கியராஜ், டி. ராஜேந்தர் போன்றவர்கள் எல்லாம் கதையை நம்பித்தான் வந்தார்கள். அதேபோன்று எனக்கும் கதைதான் கை கொடுத்தது.
