இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய சினிமாவில் இயக்கத்துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும், இன்றும் தனித்துவமாக தெரியக்கூடிய ஒரே இயக்குநர் பாலா மட்டும்தான். தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா என்னும் ஆளுமையை எப்படி மறக்க முடியாதோ அதுபோலதான் அவரின் வாரிசு என்ற அடையாளத்துடன் வலம் வரும் பாலாவும்!. இவரின் படைப்புகள் என்றுமே காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக இன்றும் நம் மனங்களில் பதிந்து போயிருக்கின்றன. பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் ஒரே மாதிரியான சூழலை கொண்ட கதையை எத்தனை விதத்தில் படைத்து காண்பித்திருந்தாலும், அது பாலாவின் இயக்கத்திற்கு இணையாகாது... ஒரு கதைக்கும், காட்சிக்கும் உயிர் கொடுக்கும் தந்திரம் அவருக்கு மட்டுமே சாத்தியமானது. அந்த அளவுக்கு ரசிகர்கள் மெச்சும் கலைஞரான பாலா ‘எளியவனின் வாழ்வை பேசும் வலியவன்’. அதனால்தானோ என்னவோ ‘சேது’ துவங்கி இன்றைய ‘வணங்கான்’ வரை தன்னுடைய படைப்புகளில் எளியவர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டி பாராட்டை பெற்று விடுகிறார். அந்த வகையில், நீண்ட போராட்டங்கள், சர்ச்சைகளுக்குப் பிறகு ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ள பாலா, இதிலும் தன் வெற்றி முத்திரையை பதிவு செய்வாரா..? அண்மையில் வெளிவந்த அப்படத்தின் ட்ரெய்லர் என்ன மாதிரியான தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது..? பாலாவின் படைப்புகள், உலக அரங்குவரை சென்று எப்படியான விமர்சனங்களை, பாராட்டுகளை பெற்றிருக்கின்றன..? அவரின் சினிமா பயணம் எப்படி துவங்கியது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை


இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பாலா பணியாற்றியபோது

வித்தியாசமான கதைக்களங்களால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பாலா தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1966-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தது ஏழு பேர். இதனால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாததால், பாலா மட்டும் அவரது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். பாட்டியின் வீட்டில் தங்கி அங்கேயே படித்து வந்தவருக்கு படிப்பதில் பெரிதாக ஆர்வம் இருந்தது இல்லையாம். மேலும் சிறுவயதில் இருந்தே தலைமை பண்பு என்பது பாலாவுக்கு துளியும் கிடையாதாம். அதாவது, பெரியவர்களை மதிக்காமல் நடப்பது, நிதானமாக செயல்படாது சண்டை போடுவது, பிறரிடம் தன்மையாக நடந்து கொள்ளாமல் கோபப்படுவது, வீட்டிலேயே திருடுவது என எந்த நல்லொழுக்கமும் இல்லாதவராகத்தான் வளர்த்துள்ளார் பாலா. இதனால் ஒவ்வொரு பள்ளியாக மாறி மாறி சென்றவரை அத்தனை பள்ளிகளும் புறக்கணிக்க, படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். அதன்படி தன் வீட்டிற்கு அருகிலேயே ஈயம் பட்டறை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் அறியாமல் செய்த தவறினால் அடித்து வெளியேற்றப்பட வேலை பார்க்கும் கனவும் தகர்ந்து போனது. இந்த நேரம் பாலாவின் அப்பாவிற்கு பணிமாறுதல் கிடைத்து குடும்பம் முழுவதுமாக மதுரைக்கு இடம் பெயர, பிறகு விட்டுப்போன பள்ளிப்படிப்பை மதுரையில் தொடங்கினார். அங்கேயே தனது கல்லூரி படிப்பையும் தட்டு தடுமாறி முடித்தவர் வழக்கம் போல் வீட்டுக்கு அடங்காத பிள்ளையாகவே இருந்துள்ளார். இதனால் மொத்த குடும்பமும் பாலாவின் மீது வெறுப்பை உமிழ, பாலாவோ இதற்கு மேல் இங்கு இருக்கக்கூடாது என்று சென்னைக்கு கிளம்ப தயாரானார்.


நடிகர் விக்ரமை 'சேது'வாக உருவாக்கி வெற்றி கொடுத்த இயக்குநர் பாலா

சென்னைக்கு வர வேண்டும் என்றால் கையில் பணம் அவசியம். அதற்காக நண்பர்களின் உதவியுடன் உணவு விற்பது, வாட்ச் வாங்கி அதனை அடகு வைத்து பணத்தை திரட்டுவது என பல வழிகளை கையாண்டு ஒருவழியாக 8 ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னைக்கு வந்தவர் எல்டாம்ஸ் சாலையில் பாரதிராஜா, பாக்கியராஜ், மணிவண்ணன், சுந்தர்ராஜன், கவுண்டமணி, செந்தில், ராமராஜன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே தங்கியிருந்த மேன்ஷனில் தங்கி, கபார் என்ற சினிமா மேனேஜரின் உதவியுடன் திரையுலகில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார். ஒருவழியாக அலைந்து திரிந்து ஜனகராஜ் கதாநாயகனாக நடித்த ‘பாய்மர கப்பல்’ என்ற படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார். அப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் கவிஞர் அறிவுமதியின் நட்பு கிடைத்து அவர் மூலமாக இயக்குநர் பாலுமகேந்திராவின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. இதன்பிறகு பாலுமகேந்திராவின் மனதிற்கு பிடித்த நபராக மாறிய பாலா, தொடர்ந்து அவருடனேயே ‘சந்தியா ராகம்’, ‘சக்கர வியூகம்’, ‘வண்ண வண்ண பூக்கள்’ ஆகிய படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார். அப்படி பணியாற்றும்போது பாலுமகேந்திராவிடம் இருந்த உதவி இயக்குநர்கள் அனைவரும் அவரை விட்டுபோக பாலா மட்டும் பக்க பலமாக அவருக்கு இருந்தார். இதனால் பாலுமகேந்திராவின் நன்மதிப்பை பெற்ற பாலாவை கவுரவிக்கும் விதமாக தனது ‘வண்ண வண்ண பூக்கள்’ டைட்டில் கார்டில் யார் பெயரையும் சேர்க்காதவர் முதல் முறையாக தனக்காக நின்று உழைத்தவனை கவுரவிக்க வேண்டும் என்று, உதவி இயக்குநர் பாலா என பெயர் போட்டார். இப்படி சிறிதும், பெரிதுமாக பல தவறுகளை செய்து சினிமாவை கற்றுக்கொள்ள துவங்கிய பாலா, ஒருகட்டத்தில் சினிமாவில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தனியாக படம் எடுக்கும் அளவுக்கு உயர்ந்தார். அப்படி அவர் முதலில் எடுத்து இயக்குநராக வெற்றி கண்ட படம்தான் ‘சேது’.

பாலா என்றால் இப்படிதான்?


நந்தா தோற்றத்தில் நடிகர் சூர்யா மற்றும் பிதாமகன் படப்பிடிப்பு தளத்தில் விக்ரமுடன் பாலா

தனது சினிமா குருநாதரான பாலுமகேந்திராவின் அனுமதி மற்றும் ஆசியுடன் இயக்குநராக களமிறங்க முடிவு செய்த பாலா, கதை குறித்து யோசிக்க ஆரம்பித்தார். அப்போது "அணு அணுவாய் சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் சரியான வழிதான்" என்ற அறிவுமதியின் கவிதை வரிகள் பாலாவின் கண்களில் பட அதனையே தனது முதல் படத்துக்கான கதைக் கருவாக எடுத்துக்கொண்டவர் கதையை எப்படி உருவாக்குவது என்று யோசித்தார். அந்த நேரம் அவர் ஏர்வாடி சென்றிருந்த இடத்தில் தர்கா ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த மனநோயாளிகளை காண நேர்ந்து, இவர்கள் ஒவ்வொருவருக்கு பின்னாலும் ஒரு வலி இருக்கும்... அது காதலினால் வந்த வலியாக்கூட இருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து அப்படி உருவாக்கப்பட்டதுதான் ‘சேது’ திரைப்படத்தின் கதை. ஒருவழியாக நண்பர்களின் உதவியுடன் நடிகர் விக்ரம், சிவகுமார் ஆகியோரை வைத்து பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு படமும் எடுக்கப்பட்டு 1999-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதுவரை அப்படியான ஒரு கதை சொல்லல் படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். எளிய மனிதர்களின் வாழ்வில் இப்படியானதொரு காதல் தோல்வியும் இருக்கும் என்பதை தத்ரூபமாக எடுத்த பாலா, படத்தினை பார்த்தவர்கள் அனைவரையும் நொறுங்கிப்போய்விடும்படியாக கலங்க வைத்திருந்தார். முதல் படமே இப்படியென்றால் இவரின் அடுத்தடுத்த படைப்புகளும் நம் மனதை விட்டு அகலாதபடிதான் இருந்தது. காரணம் அவர் கதை சொல்லும் விதம் அப்படியானது என்பதால்தான். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட பாலா, நடிகர் சூர்யா மற்றும் ராஜ்கிரணை வைத்து ‘நந்தா’ என்றொரு படத்தை எடுத்தார். இப்படமும் முதல் படத்தை போலவே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, தொடர்ந்து ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’, ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ‘நாச்சியார், ‘வர்மா’ ஆகிய படங்களை இயக்கினார். இப்படங்கள் அனைத்தும், கதை சொல்லப்பட்ட விதத்திற்காகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதுமட்டுமின்றி பாலா என்றாலே இப்படித்தாம்ப்பா, அவரை தவிர வேற யாராலும் உலகத்தரம் வாய்ந்த இதுபோன்ற படங்களை எடுக்க முடியாது என்று தென்னிந்திய சினிமாவே கொண்டாடும் அளவுக்கு தனித்துவமான இயக்குநராக வலம் வர ஆரம்பித்தார். இருப்பினும் இவற்றில் பல படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்த போதிலும் பாலா மீது இருந்த எதிர்பார்ப்பு மட்டும் குறையவே இல்லை. நடிகருக்காக நான் கதை எழுதவில்லை. என் கதைக்கான நடிகரை மட்டும்தான் நான் தேர்ந்தெடுப்பேன் என்று தமிழ் திரையுலகிற்கு வந்து ஒரு பிடிவாதமான இயக்குநராக 25-ஆண்டுகளை கடந்த நிலையிலும் இதுவரை அவர் இயக்கிய மொத்த படங்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டுமே. இப்படி குறைவான படங்களை அவர் இயக்கி இருந்தாலும் இதுவரை அப்படங்களுக்காக 6 தேசிய விருதுகளையும், 13 மாநில அரசின் விருதுகளையும், 15 பிலிம்பேர் விருதுகளையும், 14 இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவெல் விருதுகளையும் பெற்றுள்ளார்.

யாருக்கும் 'வணங்கான்'


வர்மா திரைப்பட காட்சி மற்றும் வணங்கான்படத்திலிருந்து விலகிய நடிகர் சூர்யா

எப்போதுமே ஒரு கதை அல்லது ஏதாவது ஒரு சம்பவத்தின் பாதிப்பில் இருந்து படம் இயக்கி வெற்றிகொள்வதை வழக்கமாக கொண்டுள்ள இயக்குநர் பாலா, முதல் பட மேக்கிங்கின்போது தனக்கு பலவகையிலும் உதவியாக இருந்த நண்பரும், தன்னால் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும் பெற்ற சியான் விக்ரமுக்கு ஒரு பிரேக்கிங் பாயிண்டை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்தது போலவே, அவரின் மகனுக்கும் ஒரு நடிகருக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர முடிவு செய்தார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படமான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்று அதில் துருவ் விக்ரமை கதாநாயகனாக களமிறக்கினார். எப்போதும் சைக்கோத்தனமாக தனது பாத்திரப்படைப்புகளை உருவாக்கி வெற்றி காணும் பாலா, இதில் எங்கு கோட்டை விட்டாரோ தெரியவில்லை, ‘வர்மா’ படத்தை அவர் எடுத்திருந்த விதம் விக்ரமுக்கு பிடிக்கவில்லை. இதனால் விக்ரமுக்கும் - பாலாவுக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு படம் வெளியிட முடியாமல் அப்படியே நின்று போனது. அதன் பிறகு நடிகர் விக்ரம் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் மீண்டும் படத்தை எடுத்து வெளியிட, பாலாவும் தன் பங்கிற்கு தன்னுடைய 'வர்மா' படத்தை வெளியிட்டார். ஆனால், இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், தற்போது பாலா ‘வணங்கான்’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இந்த ‘வணங்கான்’ படம் தொடங்கியபோது, முதலில் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹீரோ நடிகர் சூர்யாதான். ஆனால், சூர்யாவுடனும் ஏதோ கருத்துமோதல் ஏற்பட்டதாலேயே அவர் இப்படத்தில் இருந்து விலகியதாகவும் அப்போது சொல்லப்பட்டது.


இயக்குநர் பாலாவின் வணங்கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சியில் நடிகர் அருண் விஜய்

எது எப்படியிருந்தாலும் ஒருவழியாக அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து ‘வணங்கான்’ படத்தை எடுத்து முடித்துள்ளார் பாலா. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தில் அருண் விஜய்யுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோஷினி பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். பாலாவின் இயக்கம், ஜி.வி.பிரகாஷின் இசை என மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று வெளியான படத்தின் முதல் பார்வையில் ஒரு கையில் பெரியார் சிலையும், மறு கையில் விநாயகரையும் அருண் விஜய் ஏந்தியிருந்த காட்சி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதனை தொடர்ந்து, அவ்வப்போது படம் குறித்த தகவல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழலில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி அன்று வெளியான ட்ரெய்லர், எப்போது படம் வெளியாகும் என்ற பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில், 1.53 நிமிடங்களுக்கு ஓடும் இந்த படத்தின் ட்ரெய்லரில் கதையின் நாயகனான அருண் விஜய் வழக்கமாக பாலா படங்களில் காட்டப்படுவது போன்ற மாதிரியான தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளார். மேலும் கொலை ஒன்று நடப்பது போன்றும், அதனை நீதிபதியாக வரும் மிஷ்கின் விசாரிப்பது போன்றும் காட்சிகள் நகர்கின்றன. பெரிய அளவில் வசனங்களே இல்லாமல் நகரும் இந்த கதைக்களத்தை பார்க்கும்போது மீண்டும் ஒரு ‘நான் கடவுள்’, ‘பிதாமகன்’ போன்ற தோற்றம் ஏற்படுவதாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் கூறுவதை போன்றே இப்படத்தின் கதைக்களம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன் மனதிற்கு பிடித்த இம்மாதிரியான படங்களை தொடர்ந்து கொடுத்துவரும் பாலா எனும் ‘வணங்கான்’, இப்படத்திலும் பல ஆச்சர்யங்களை செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார் என நம்புவோம்.

Updated On 22 July 2024 5:16 PM GMT
ராணி

ராணி

Next Story