தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மலையாள திரைப்படம்தான் "ப்ரேமலு". ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் மமிதா பைஜூ. மலையாள சினிமாவில் தற்போது தொடர் வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பும் அதிகம் பேசப்படுகிறது. ப்ரேமலு படத்தில் வரும் ரீனு கதாபாத்திரமாகட்டும், அதன்பிறகு சூப்பர் சரண்யாவாக வரும் சோனா கதாபாத்திரமாகட்டும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் பல மொழிகளிலிருந்து இவருக்கு வாய்ப்பு வந்தது. அப்படி வந்ததுதான் இயக்குநர் பாலாவின் வணங்கான். சூர்யா மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த படம், ஆனால் பல காரணங்களுக்காக சூர்யா, க்ரித்தி ஷெட்டி, மமிதா என்று எல்லோரும் விலகினர். அதன்பிறகு இயக்குநர் பாலா, அருண் விஜயையை வைத்து படத்தை எடுத்தார். தற்போது ப்ரேமலு படத்தின் ப்ரொமோஷனில் இயக்குநர் பாலா என்னை அடித்தார் அதனாலேயே படத்தை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார் மமிதா பைஜூ. இது தற்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. யார் இந்த மமிதா பைஜூ ? அவரது சினிமா பயணம் பற்றியும், இயக்குநர் பாலாவுடனான பிரச்சினை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.
மமிதா பைஜூவின் தொடக்ககாலம்
நடிகை மமிதா பைஜூ துவக்கக் கால புகைப்படங்கள்
22 ஜூன் 2001 ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டத்திலுள்ள கிடங்கூரில் பிறந்தார் மமிதா. இவரது தந்தை பெயர் கே. பைஜூ. இவரது தாயார் பெயர் மினி பைஜூ. இவருக்கு மிதுன் என்கிற சகோதரரும் இருக்கிறார். இவரது பெற்றோர்கள் இருவருமே டாக்டர்கள். அதனாலேயே மமிதாவும் நன்றாக படித்தார். தனது 16 வயதில் இவருக்கு அனூப் மேனனின் சர்வபொரி பாலக்காரன் என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சாலபல்லியின் மகளாக ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறிய கதாபாத்திரம் என்பதால் பெரிதாக தெரியவில்லை. அதன்பிறகு மமிதா மீண்டும் தனது பள்ளிப்படிப்பை தொடர சென்றுவிட்டார். அவ்வப்பொழுது சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டே வந்தார்.
திருப்புமுனையாக அமைந்த கோ-கோ
'கோ-கோ' திரைப்படத்தில் டீம் கேப்டனாக வரும் நடிகை மமிதா பைஜூ
சிறிய சிறிய வேடங்களில் நடித்துவந்த மமிதாவை மக்களிடம் கொண்டு சென்ற படம் "ஆபரேஷன் ஜாவா". இதில் அல்போன்சா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சாதாரண நர்ஸாக, வருங்காலத்தை எண்ணி பயப்படும் பெண்ணாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மக்களை வெகுவாக ஈர்த்தது. அதன்பின் இவர் நடித்த கலர் கலர் என்கிற குறும்படம் இவரை உலகமெங்கும் கொண்டு சேர்த்தது. கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாவை மையமாக வைத்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டது. இதன்மூலம் இவருக்கு ராகுல் ரிஜி நாயர் இயக்கத்தில் கோ-கோ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம்தான் மமிதாவை மலையாள சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அஞ்சு என்கிற பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் கோ- கோ விளையாடும் காட்சிகள் பயங்கரமாக இருக்கும். இந்த படம் மமிதாவை கேரளா முழுவதும் கொண்டு சென்றது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு கேரள அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது.
உச்சத்திற்கு கொண்டு சென்ற ப்ரேமலு
'ப்ரேமலு' திரைப்பட காட்சியில் மமிதா பைஜூ
கோ- கோ படத்திற்கு பிறகு வரிசையாக பல படங்களில் நடித்தார். அதுமட்டுமில்லால் துணை நடிகையாக இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் துணை நடிகையாக நடித்தாலும் தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலம் மக்களை வெகுவாக ஈர்த்தார். அப்படித்தான் இவருக்கு சூப்பர் சரண்யா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த படத்தின் கதாநாயகி அனஸ்வரா ராஜன். இவரை சுற்றி தான் படம் நகரும். ஆனால் இந்த படத்தில் அதிக இடத்தில் ஸ்கோர் செய்தது மமிதாதான். சோனா என்கிற கதாபாத்திரத்தில் வரும் மமிதா ஆரம்பத்தில் இருந்து படம் இறுதிவரை நம்மை சிரிக்க வைக்கிறார். இந்த படத்திற்கு பிறகு நிகில் முரளி இயக்கத்தில் "ப்ரணய விலாசம்" என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் மமிதா கதாநாயகியாக நடித்தார். போன படத்தின் கதாநாயகி அனஸ்வரா இந்த படத்தில் துணை நடிகையாக நடித்தார். அந்த அளவிற்கு மமிதாவின் வளர்ச்சி வேகமாக இருந்தது. அதன்பின் நிவின் பாலி உடன் இணைந்து ராமச்சந்திர பாஸ் அண்ட் கோ என்கிற படத்தில் நடித்தார். அப்பாவி திருடியாக வரும் இவரது காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்கின. இப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மக்களை ஈர்த்து கொண்டே வந்தார். அதன்பிறகு தண்ணீர் மாதத்தின் தினங்கள், சூப்பர் சரண்யா ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் மீண்டும் மமிதா, நஸ்லன் ஆகியோரை வைத்து ப்ரேமலு என்கிற படத்தை எடுத்தார். இந்த படத்தில் ரீனுவாக வரும் மமிதா ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளை அடித்தார். ரொமாண்டிக் காமெடி படமாக வெளியாகி தற்போது 100 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கிறது ப்ரேமலு. அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழிலும் களமிறங்கி இருக்கிறார் மமிதா. ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து தற்போது ரெபெல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
வணங்கான் பட பிரச்சினை
'வணங்கான்-ல்' அருண் விஜயுடன் மமிதா பைஜூவுக்கு பதிலாக நடித்துள்ள நடிகை - நடிகை மமிதா பைஜூ
இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘ப்ரேமலு’ படத்தில் நடித்திருந்த நடிகை மமிதா பைஜூ, தான் விலகிய வணங்கான் திரைப்பட அனுபவங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். “வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அந்த படத்தில் வில்லுப்பாட்டு தொடர்பான காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் இசைக்கருவி ஒன்றை வாசித்தபடி பாட வேண்டும். பயிற்சி எடுத்துக்கொள்ள போதிய நேரம் எனக்கு கிடைக்கவில்லை. திடீரென பாலா சார் என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை. அதனால் ரீடேக் எடுத்துக்கொண்டேன். அப்போது எனக்கு பின்னாலிருந்த பாலா சார் என்னை தோள்பட்டையில் அடித்தார் என்று கூறியிருந்தார்". மமிதா பைஜூ பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் இயக்குநர் பாலாவிற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், வணங்கான் படத்தில் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலையும் நான் அனுபவிக்கவில்லை. தொழில்ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே அந்தப் படத்திலிருந்து நான் விலகினேன். செய்தியை வெளியிடும் முன் சரிபார்க்க என்னை தொடர்பு கொண்ட ஊடக நிறுவனங்களுக்கு நன்றி என தெரிவித்து பாலா மீதான விமர்சனத்திற்கு முற்றிப்புள்ளி வைத்திருக்கிறார் மமிதா.