திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் வரிசையில் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் புது புது திரைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் சமீப காலமாக பழைய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவது மிகவும் ட்ரெண்டான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இதுவரை திரையரங்குகளில் ‘சுப்ரமணியபுரம்’, ‘கமலின் வேட்டையாடு விளையாடு’, ரஜினியின் ‘பாபா’ போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து1995 இல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான ‘முத்து’ திரைப்படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில் 2001 இல் உலக நாயகனின் மாறுபட்ட நடிப்பில் தீபாவளி ட்ரீட்டாக வெளியான ‘ஆளவந்தான்’ திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்பதிவில் ‘எழிலோடும்.. பொழிலோடும்…விரைவில்…வெள்ளித்திரையில்’ என்று பதிவிட்டு போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் ஆளவந்தான் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


‘ஆளவந்தான்’ திரைப்படத்தின் சில காட்சிகள்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் எஸ்.தாணு தயாரிப்பில் சங்கர்-எஹ்சான்-லாய் ஆகிய மூவரின் இசையில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் விஜய் குமார், நந்தகுமார் என்று இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மேலும் இதில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத் ​​பாபு, அனு ஹாசன் என்று பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் திரையிடப்பட்ட சமயத்தில் அவ்வளவு வரவேற்பை பெறாவிட்டாலும் ஆண்டுகள் போக போக அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்’ என்ற பாடலும், அத்திரைப்படமும் மக்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இப்படம் 1984 இல் கமல்ஹாசன் எழுதிய தாயம் நாவலின் தழுவலாகும். மேலும் இது ஒரு உளவியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகவும் அமைந்திருக்கிறது. இப்படம் தமிழில் ‘ஆளவந்தான்’ என்ற பெயரிலும் இந்தியில் ‘அபய்’ என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம் ஸ்பெஷல் எபக்ட்ஸ்-காக தேசிய விருதும் பெற்றது.

கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் புதிய கதாபாத்திரத்தையும், புதிய கருத்தையும் வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும். அப்படி கமல் முற்றிலும் வித்தியாசமான நடிப்பு திறனை வெளிப்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாக இந்த திரைப்படம் இருக்கும்.

கமலின் ‘இந்தியன் 2’ படத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கும், உலக நாயகனின் ரசிகர்களுக்கும் ‘ஆளவந்தான்’ ரீ ரிலீஸ் செய்யப்படுவது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 1995 இல் வெளியான போது உலகளவில் சுமார் 24 கோடி வசூலை கண்ட இப்படம், ரீ ரிலீஸில் எவ்வளவு வசூலை பார்க்க போகிறது? முன்பை காட்டிலும் இப்போது எவ்வளவு வரவேற்பைப் பெற போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On
ராணி

ராணி

Next Story