இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகின்றனர் இசை ஜாம்பவான்கள். சரி இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். அவரை அறிமுகப்படுத்துபவர் வேறு யாருமல்ல; பிரபுதேவாதான். அதற்கான காரணம்தான் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. சரி தமிழ் சினிமாவில் இப்படி சூப்பர் செய்திகள் வெளியானாலும், தெலுங்கு பக்கம் போனால் அங்கு ஒரு கோல்டு வார் போய்க்கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. இந்த வாரம் என்னென்ன ஹாட் டாப்பிக்ஸ்? பார்க்கலாம்.

இந்தியன்-3க்கு முற்றுபுள்ளி?

பார்ட் 2 படங்களின் மோகம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. இதில் கமல்ஹாசனுடன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியாவதற்கு முன்பு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் ரிலீஸுக்குப் பிறகு கடுமையான அதிருப்தியை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் அப்போதே படத்தின் மூன்றாம் பாகமும் சேர்ந்தே எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தபிறகுதான் இதை வெளியிடவேண்டுமென கமல் கறாராக சொல்லிவிட்டதாக தகவல்கள் கசிந்தன.


இந்தியன் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பில்

இதனிடையே ‘இந்தியன் 3’ஆம் பாகம் ஓடிடி-யில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு எப்படியும் இந்த படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திலிருந்து ஷங்கர் விலகிவிட்டதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தில் ஒரு பெரிய பட்ஜெட் பாடலை வைக்க லைகா நிறுவனத்திடம் ஷங்கர் கேட்டதாகவும், அதற்கு அந்நிறுவனம் நோ சொல்லிவிட்டதால் அதிருப்தியடைந்த ஷங்கர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இசைஞானிக்கு இயக்குநர்கள் வாழ்த்து

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இவர் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருப்பதுடன், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களையும் உருவாக்கியுள்ளார். இவர் கடந்த 8ஆம் தேதி லண்டனில் வைத்து வெகு பிரம்மாண்டமாக ‘வேலியண்ட்’ என்ற சிம்பொனியை அரங்கேற்றம் செய்து, உலக சாதனை படைத்தார். இதனால் மேற்கத்திய சிம்பொனியை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.


சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்துகள்

இவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் இவருக்கு விழா எடுக்கப்படவுள்ள நிலையில், தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் பி. வாசு, ஆர்.வி. உதயகுமார், கே.எஸ். ரவிக்குமார், ஆர்.கே. செல்வமணி மற்றும் பேரரசு ஆகியோர் இளையராஜாவை நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நடிகர் சிவக்குமாரும் குடும்பத்துடன் நேரில் சென்று தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹீரோவாகும் ஷங்கர் மகன்!

பிரம்மாண்டத்துக்கு பெயர்போன இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகையாக அறிமுகமானதைத் தொடர்ந்து அவருடைய மகன் அர்ஜித்தும் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அர்ஜித் நன்றாக நடனமாடக்கூடியவரும்கூட. ஆனால் அவருக்கு திரைக்கு முன் தோன்றுவதைவிட பின்னால் இருப்பதே பிடித்திருப்பதாகக் கூறி ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து முருகதாஸ் இயக்கிவரும் ‘மதராஸி’ படத்தில் அர்ஜித் பணியாற்றி வருகிறார். இதனால் அர்ஜித்தும் தனது அப்பாவை போன்றே இயக்குநராகத்தான் வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் எதிர்பார்த்தது போன்றே அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


ஹீரோவாக அறிமுகமாகவுள்ள இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித்

முதலில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்த பிரபுதேவாதான் அர்ஜித்தை திரைக்கு முன் கொண்டுவரவுள்ளாராம். ஷங்கர், தான் இயக்கிய முதல் படமான ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் பிரபுதேவாவை முதன்முறையாக திரைக்கு முன் கொண்டுவந்து ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். அதன்பிறகு ஹீரோ, இயக்குநர் என பல அவதாரங்கள் எடுத்து பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் பிரபுதேவா இப்போது ஷங்கரின் மகனை ஹீரோவாக்க முடிவெடுத்திருக்கிறார்.

வட அமெரிக்காவில் இசைப்புயல்!

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். இவருக்கு 2 ஆஸ்கர் விருதுகள், 7 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவனை பிரிவதாக ரஹ்மானின் மனைவி சாயிரா அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ரஹ்மானும் அறிவித்தார். தனது மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.


வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஏ.ஆர்.ஆர். அறிவிப்பு

இதனால் ரஹ்மான் ரசிகர்கள் கவலையடைந்திருந்ததால் அவர்களை உற்சாகமூட்டும்விதமாக சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ரஹ்மான். தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருக்கும் அவர், வட அமெரிக்காவில் The Wonderment tour என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாகவும், கோடைகாலத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுகுறித்த விவரங்களுக்கு காத்திருங்கள் என்றும் தனது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறார்.

இப்படியும் ஒரு சாதனையா?

தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு, திரிஷா, பிரகாஷ் ராஜ், சோனு சூட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உருவான திரைப்படம் ‘அத்தடு’. 2005ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் 1500 முறைக்கும் மேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் என்ற புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இதுவரை இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே வேறு எந்த படமும் இந்த அளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கின்னஸ் சாதனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் ‘அத்தடு’ திரைப்படம்

இந்நிலையில் எத்தனை முறை ‘அத்தடு’ திரைப்படம் டிவியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்ற ஆதாரங்களோடு கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு. இந்த படம் தமிழிலும் ‘நந்து’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தமன் - ராம் சரணிடையே கோல்டு வார்!

தமிழில் தனது படம் தோல்வியடைந்ததால் விட்ட இடத்தை எப்படியாவது பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தெலுங்கு பக்கம் சென்றார் இயக்குநர் ஷங்கர். அங்கு ராம் சரணை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை எடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். அவரிடம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் ஹிட் ஆகாததற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக இருந்தாலும் அதற்கு போடப்பட்ட ஸ்டெப்ஸ் நன்றாக இல்லாததுதான் காரணம் என்று கூறினார்.


இசையமைப்பாளர் தமனை சமூக ஊடகங்களில் அன்ஃபாலோ செய்த ராம் சரண்

மேலும் ஹூக் ஸ்டெப்ஸ் எதுவும் இல்லை என்று நடன இயக்குநர்களை குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த படத்தின்மீது ராம் சரணும் அதிக நம்பிக்கை வைத்திருந்த நிலையில், தமனின் இந்த ஸ்டேட்மெண்ட் அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் அவரை சமூக ஊடகங்களில் அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ராம் சரண் மற்றும் தமனிடையே படம் குறித்து கோல்டு வார் இருந்தது இதன்மூலம் தெரியவந்திருப்பதாக தெலுங்கு ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு?

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி 70 வயதைத் தாண்டியும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். ஒரு வருடத்திற்கு குறைந்தது 4, 5 படங்கள் என நடித்துவந்த இவர், சமீபகாலமாக அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துவந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் சினிமாவிலிருந்து சிறிது பிரேக் எடுப்பதாகவும் அவர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கிடையே மம்முட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவருடைய உடல்நிலை குறித்து சமுக ஊடகங்களில் தகவல்கள் பரவின.


மம்முட்டி உடல்நலம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து விளக்கம்

இந்நிலையில் மம்முட்டி ரமலான் நோன்பு இருப்பதால் சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், மற்றபடி அவர் நலமுடன்தான் இருப்பதாகவும் நோன்பு முடித்தபிறகு மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் எனவும் அவருடைய பி.ஆர். டீம் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே மம்முட்டி விரைவில் உடல்நலம் பெறவேண்டி, இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலையில் வழிபாடு மேற்கொண்டுள்ளார் நடிகரும் மம்மூட்டியின் நண்பருமான மோகன் லால்.

Updated On 25 March 2025 12:13 PM IST
ராணி

ராணி

Next Story