இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த சில வாரங்களாக புதுப்படங்கள் குறித்த அப்டேட்ஸும், அப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டிவந்த நிலையில், பொங்கல் ரிலீசில் எந்தெந்த படங்கள் ரசிகர்களை கவரப்போகின்றன என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில், இந்த வாரம் சில பிரபலங்களின் மனம்திறந்த கருத்துகள் பெரிதளவில் பேசப்படுவதுடன், அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்டும் வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

பிரபல பாடகர் மரணம்

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன், தனது 80-வது வயதில் காலமானார். மலையாள பாடகரான இவர், மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் சுமார் 16 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பாக, தமிழில் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே, இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ, பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே, ஒரு தெய்வம் தந்த பூவே, மயங்கினேன் சொல்ல தயங்கினேன், ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, காத்திருந்து காத்திருந்து, என்மேல் விழுந்த மழைத்துளியே, சொல்லாமலே யார் பார்த்தது என்பது போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.


பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மரணம்

தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற இவர் உடல்நலக்குறைவால் திருச்சூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சைதன்யாவை மிரட்டிய சமந்தா!

சமந்தாவை விவாகரத்து செய்தபிறகு நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இருப்பினும், சாம் - சாய் காதல் குறித்த பழைய வீடியோக்கள் இன்னும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி தனது காதலை வீட்டில் சொன்னது குறித்து நாக சைதன்யா பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையங்களில் வலம்வருகிறது.


சமந்தா - நாக சைதன்யா காதல் குறித்து பரவும் வீடியோக்கள்

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து வந்தபோது தங்களுடைய காதல் குறித்து வீட்டில் சொல்லாவிட்டால் ராக்கி கட்டி அண்ணன் ஆக்கிவிடுவேன் என்று சமந்தா மிரட்டியதாகவும், அவர் அப்படி செய்தாலும் செய்துவிடுவார் என்ற பயத்திலேயே வீட்டில் தனது காதலை ஓப்பன் செய்ததாகவும் நாக சைதன்யா ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்து, எப்போதும் ஒரு காதலில் பெண் அதிகம் நேசித்தால் அந்த காதல் கண்டிப்பாக இப்படித்தான் முடியும் என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர் சாம் ரசிகர்கள்.

இளையராஜா பற்றி ஏ.ஆர்.ஆர்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர். ரஹ்மான். அவர் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு பல பிரபல இசையமைப்பாளர்களிடம் கீபோர்டு ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிந்துவந்தார். எம்.எஸ்.விஸ்வநாதனின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறியவர், இளையராஜா குறித்து கூறுகையில், இசை என்ற கலைக்கே மரியாதையை கொண்டுவந்தவர் அவர்தான் என்றும், அவருடன் பணியாற்றுவதே மரியாதையான விஷயம் என்றும் கூறினார்.


இளையராஜா குறித்து மனம்திறந்த ஏ.ஆர். ரஹ்மான்

மேலும் இசையை தாண்டி அவரிடம் இதை கற்றுக்கொண்டதாகக் கூறினார். அவரிடம் வாழ்க்கை என்றால் என்ன? என்று கேட்டதற்கு, முதலில் இந்த வாழ்க்கை ஒரு நிரந்தமில்லை என்று பதில் கூறிய அவர், தொல்லைகளும் தொடர்ச்சியாக இருக்காது, நல்லதும் நிரந்தமாக இருக்காது, எனவே எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவேண்டும் என்று கூறினார்.

பிரபல மலையாள நடிகை புகார்

மலையாள நடிகை ஹனிரோஸுக்கு பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டதில், பாபி செம்மனூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அவர்மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.


நடிகை ஹனிரோஸை பாலியல்ரீதியாக துன்புறுத்திய தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது

இந்நிலையில் பாபி செம்மனூரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹனி ரோஸ் 14 வயதிலேயே மலையாள திரையுலகில் அறிமுகமானார். தமிழிலும் ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’ மற்றும் ‘மல்லுக்கட்டு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் ‘நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்து அங்கு மிகவும் பிரபலமானவர் ஹனிரோஸ்.

யு/ஏ சான்றிதழ் வாங்கிய படங்கள்

‘விடாமுயற்சி’ திரைப்படம் ஒருவழியாக பொங்கலுக்கு வெளியாகும் என்ற மகிழ்ச்சியில் இருந்த அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது ரிலீஸ் தேதி மாற்றிய தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் நிறைய காட்சிகளில் பீப் வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இதற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ஜனவரி மாத இறுதிக்குள் ‘விடாமுயற்சி’ வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.


யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் ‘விடாமுயற்சி’ திரைப்படங்கள்

அதேபோல் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஜெயம் ரவியின் கடைசி சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இப்படத்தின்மீது அவர் அதீத நம்பிக்கை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இப்படத்தின் ‘இழு இழு’ பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் படம் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் குறித்து வருந்திய மீனாட்சி!

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் மீனாட்சி சௌத்ரி, கடந்த ஆண்டு ‘கோட்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே வசூல்ரீதியாக மாபெரும் வெற்றிபெற்ற நிலையிலும் ‘கோட்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக, அந்த படத்தில் மீனாட்சி சௌத்ரியின் கதாபாத்திரம் குறித்து அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டது. அதுகுறித்து சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் மனம்திறந்திருக்கிறார் மீனாட்சி.


தன்னை ட்ரோல் செய்தது குறித்து வருந்திய மீனாட்சி சௌத்ரி

‘கோட்’ படத்தில் நடித்ததற்காக தான் வருந்தியதாகவும், அந்த படத்தால் தன்னை அதிகளவில் ட்ரோல் செய்ததாகவும் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களின் கோபத்தை தூண்டியிருக்கிறது. ‘கோட்’ படத்தில் மட்டும் நடிக்கவில்லை என்றால் மீனாட்சி சௌத்ரி யார் என்றே தமிழ் ஆடியன்ஸுக்கு தெரிந்திருக்காது என்று கூறிவருகின்றனர்.

Updated On 14 Jan 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story