தலைவர் படம் என்றாலே யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது? அதுவும் மல்டி ஸ்டார்கள் அதில் இருக்கிறார்கள் என்றால் சொல்லவா வேண்டும்? ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பட ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தலைவர்கூட மோத தயாராக இல்லை என்று கூறி, ரிலீஸ் தேதியை மாற்றி வைத்திருக்கிறது ‘கங்குவா’ படக்குழு. இப்படி சினிமா தொடர்பான பல சுவாரஸ்யங்கள் இந்த வாரமும் காத்திருக்கின்றன. பார்க்கலாம் வாங்க!
லீக்கான ‘கூலி’ காட்சி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘கூலி’ படத்தின் படபிடிப்பானது விறுவிறுவென நடந்துவருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே சொல்லியிருந்ததுபோல வெயிட்டான வில்லனாக நாகர்ஜூனாவை இறக்கினார் லோகி. மேலும் சைபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லோகி படம் என்றாலே கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருக்கும். அதேபோல், ‘கூலி’ பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே இந்த படத்தின் கதையை பற்றி யோசிக்க தொடங்கிவிட்டனர்.
சமூக ஊடகங்களில் லீக்கான ‘கூலி’ திரைப்பட ஷூட்டிங் காட்சி - போஸ்டர்
குறிப்பாக, இந்த படம் LCU-இல் இருக்குமா? என்று கேட்டுவந்த நிலையில், சென்னையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஒரு வீடியோ க்ளிப் இணையங்களில் லீக்காகி இருக்கிறது. நாகர்ஜூனா நடித்துக்கொண்டிருந்த அந்த காட்சி தற்போது லீக்காகி அவருடைய கெட்டப் மக்களுக்கு தெரிந்துவிட்டதால் அதிர்ச்சியில் இருக்கிறது ‘கூலி’ படக்குழு. இதனால் சோகமாக இருந்த லோகியை தனியாக அழைத்து பேசி ஆறுதல் கூறியிருக்கிறாராம் ரஜினி.
Get ready to enjoy the vibrant energy of #FahadhFaasil as PATRICK in VETTAIYAN ️ Brace yourself for an intriguing character! #Vettaiyan ️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/DiZgzWUeH2
— Lyca Productions (@LycaProductions) September 18, 2024
ஜானி மாஸ்டர் கைது
‘அரபிக் குத்து’, ‘ஜாலி ஓ ஜிம்கானா’, ‘ரஞ்சிதமே’, ‘காவாலா’ மற்றும் ‘மேகம் கருக்காதா’ போன்ற ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர் ஜானி (வயது 40). தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த 21 வயதான பெண் நடன கலைஞர் ஒருவர் இவர்மீது ராய்துர்கம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் அவர் 16 வயதாக இருந்தபோது ஜானி மாஸ்டர் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருக்கிறார். அவர்மீது 376, 506 மற்றும் 323 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர்
மேலும் அப்போது அந்த பெண்ணுக்கு 16 வயது என்பதால் போக்சோவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகியிருந்த ஜானி மாஸ்டரை கைதுசெய்ய தேடிவந்த நிலையில் பெங்களூருவில் வைத்து சிறப்பு போலீசாரால் அவரை கைது செய்துள்ளனர். பாலியல் புகாரின் எதிரொலியாக ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணினின் கட்சியிலிருந்து ஜானி மாஸ்டர் நீக்கம் செய்யப்பட்டார். கேரள திரையுலகில் பாலியல் குற்றங்கள் வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகிலும் இதுபோன்ற குற்றங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன.
போட்டியே வேண்டாம்!
‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது ‘கங்குவா’ திரைப்படம். வரலாற்று கதையம்சம்கொண்ட இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் நிலையில், முதலில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. அந்த நாளில் ‘வேட்டையன்’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதால் தலைவருடன் மோத தான் தயாராக இல்லை என வெளிப்படையாகவே கூறிவிட்டார் படத்தின் இயக்குநர் சிவா.
ரஜினி பட ரிலீஸால் மாற்றி அறிவிக்கப்பட்ட ‘கங்குவா’ ரிலீஸ் தேதி
இதனையடுத்து தீபாவளியை முன்னிட்டு படம் ரிலீஸாகலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்போது நிறைய பெரிய தலைகளின் படங்கள் ரிலீஸாகவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் போட்டியே வேண்டாம் என தனியாக படத்தை இறக்க முடிவெடுத்திருக்கிறது படக்குழு. அதன்படி நவம்பர் 14ஆம் தேதி ‘கங்குவா’ ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். கேமியோ ரோலில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
‘தளபதி 69’ வில்லன் இவரா?
விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாகவும், கே.வின்.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. மேலும் படம் முழுக்க முழுக்க கமெர்ஷியலாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்பட்ட நிலையில் படத்தின் கதையை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் விஜய்யின் கடைசி படத்தில் அவருக்கு வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோலை நடிக்கவைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துவருகின்றன.
விஜய்யின் கடைசி படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கவிருப்பதாக தகவல்
ஆனால் ‘கில்லி’ படம்மூலம் வெற்றிக்கூட்டணியாக அறியப்பட்ட விஜய் - பிரகாஷ்ராஜ் காம்போ இந்த படத்திலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவருகின்றனர் விஜய் ரசிகர்கள். மேலும் கதாநாயகியாக சிம்ரன் அல்லது சமந்தா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோட்’ படத்தைவிட ‘தளபதி 69’ ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரியும் என்று இப்போதிருந்தே சொல்லிவருகின்றனர்.
‘வேட்டையன்’ ஆடியோ லாஞ்ச்!
த.செ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில், படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது படக்குழு. அதன்படி வேட்டையனாக ரஜினி, அசோக் என்ற தலைமையாசிரியராக அமிதாப் பச்சன், தாராவாக மஞ்சு வாரியார், நடராஜாக ராணா டகுபதி, பேட்ரிக்காக ஃபஹத் ஃபாசில், சரண்யாவாக துஷாரா விஜயன் மற்றும் ரூபாவாக ரித்திகா சிங் ஆகியோர் தோன்றவிருக்கின்றனர்.
பிரம்மாண்டமாக நடந்த ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா
இந்நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் வைத்து ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் படத்தின் ஸ்டார்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அனிருத் இசையில் முதல் பாடலாக வெளியான ‘மனசிலாயோ’ பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில் மற்ற பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன. பட ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர் தலைவர் ரசிகர்கள்.
நடிகைகள் குறித்த அவதூறு வழக்கு
கேரள சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த அறிக்கை வெளியானதிலிருந்தே பல நடிகைகள் அதுகுறித்து பேசிவருகின்றனர். இதற்கிடையே பெண் நடிகைகள் வாய்ப்புக்காக பாலியல் சமரசங்களை செய்கின்றனர் என்றும், அதனால்தான் ஆரடம்பரமாக வாழ்கின்றனர் என்றும் பிரபல யுடியூபர்களான பயில்வான் ரங்கநாதன் மற்றும் டாக்டர் காந்தராஜ் ஆகியோர் பேசிவந்தனர்.
ரோகிணியின் புகாரைத் தொடர்ந்து பெண் நடிகைகளை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்ட டாக்டர் காந்தராஜ்
இந்நிலையில் பெண் திரைப்பட கலைஞர்களை தரக்குறைவாக பேசியதாகவும், பெண்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தியதாகவும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து நடிகை ரோகிணி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் காந்தராஜ்மீது அளித்த புகாரின்பேரில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், யாரையும் காயப்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும், அவ்வாறு பேட்டி கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் காந்தராஜ்.