
நடிகை சாய் பல்லவிக்கு தேசிய விருது வழங்கவில்லையே என்ற ஆதங்கத்தை கடந்த சில மாதங்களாக வெளிப்படுத்திவந்த ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும்விதமாக சிறந்த நடிகைக்கான சர்வதேச திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோக, தமிழில் இந்த ஆண்டு வெளியான நிறைய படங்களுக்கும் நடிகர், நடிகைகளுக்கும் பல்வேறு பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவிருக்கும் பெரும்பாலான படங்களின் டீஸர் மற்றும் பட ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில சுவாரஸ்யமான துணுக்குகள் இங்கே...
‘இந்தியன் 2’ - மனம்திறந்த ஷங்கர்
ஷங்கர் - கமல் கூட்டணியில் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான ‘இந்தியன் 2’ திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் அடிவாங்கியது. இதனால் அடுத்து ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டுதான் ‘இந்தியன் 3’ ரிலீஸ் குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று கமல்ஹாசன் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து மனம் திறந்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஷங்கர்.
‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் குறித்து இயக்குநர் ஷங்கர்
அவர் பேசியபோது, இந்த படத்திற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை எனவும், அதனால் ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘இந்தியன் 3’ ஆகிய படங்களுக்கு தனது கடின உழைப்பை போட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ‘இந்தியன் 3’ திரைப்படம் திரையரங்குகளில்தான் ரிலீஸாகும் என்று உறுதியளித்துள்ளார். ராம் சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’, 2025 ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
சர்வதேச திரைப்பட விருதுகள்!
ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாவானது இந்த ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. இந்த 22வது திரைப்பட விழாவில் மொத்தம் 26 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் ‘மகாராஜா’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அதேபோல் ‘அமரன்’ படத்திற்காக சிறந்த நடிகை விருது சாய் பல்லவிக்கு கிடைத்திருக்கிறது.
சர்வதேச திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகை சாய் பல்லவி - சிறந்த நடிகர் விஜய் சேதுபதி
சிறந்த படமாக ‘அமரனும்’, அந்த படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி பிரகாஷ் குமாருக்கும் கிடைத்திருக்கிறது. இரண்டாவது சிறந்த படம் என்ற விருதை ‘லப்பர் பந்து’ பெற்றிருக்கிறது. சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது ‘வேட்டையன்’ படத்திற்கு கிடைத்திருக்கிறது. அதுபோக, ஸ்பெஷல் ஜூரி விருதை வென்றிருக்கிறது ‘வாழை’ திரைப்படம். இப்படி இந்த ஆண்டு வெளியாகி மக்கள் மனதில் இடம்பிடித்த பெரும்பாலான படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின்கீழ் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
தனது கணவர் குறித்து ராஷ்மிகா
‘புஷ்பா 2’ படத்தின் மாபெரும் வசூல் வேட்டைக்கு பிறகு இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் ராஷ்மிகாவின் மார்க்கெட் அதிகரித்திருக்கிறது. இப்படி கெரியர் வெற்றி ஒருபுறமிருந்தாலும் நடிகர் விஜய் தேவரகொண்டாவை இவர் காதலிப்பதாக தகவல்கள் பரவிவருகின்றன. அதனை உறுதிப்படுத்தும்விதமாக ‘புஷ்பா 2’ படத்தை தேவரகொண்டா குடும்பத்தினருடன் சென்றுபார்த்த வீடியோ, விஜய் தேவரகொண்டாவுடன் லஞ்ச் டேட் சென்ற புகைப்படங்கள் வெளியாகின. அப்படத்தின் வெற்றி விழாவிலும் தனது காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தியிருந்தார்.
தனது வருங்கால கணவர் குறித்து பேசிய ராஷ்மிகா
இந்நிலையில் தனக்கு வரக்கூடிய கணவர் எப்படியிருக்கவேண்டும் என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார். ஒரு உறவில் அன்பு, அக்கறை, வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மை இருப்பது அவசியம் என்றும், தான் அவ்வாறு இருப்பதால் அதேபோன்ற குணாதிசயங்களைக்கொண்ட ஒருவர்தான் தனக்கு கணவராக வரவேண்டுமென்று தான் விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் நம்முடன் யாரும் இல்லையென்றால் இந்த வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இயக்குநர் பாலா குறித்து சூர்யா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன், பாலாவின் 25 ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, ‘நந்தா’ படத்தில் நடிக்க பாலா தனக்கு வாய்ப்பு கொடுத்ததால்தான் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதன்மூலம்தான் ‘கஜினி’ வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இயக்குநர் பாலா குறித்து மேடையில் மனம்திறந்த நடிகர் சூர்யா
மேலும் பாலாவை அண்ணா என்று கூப்பிடுவது வெறும் வார்த்தை இல்லையென்றும், அது ஒரு நிரந்தரமான உறவு என்றும், இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு தன்னுடைய அன்பும் மரியாதையும் எப்போதும் அவருக்கு இருக்கும் என்றும் கூறியிருந்தார். பாலாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியதாக கூறப்பட்ட நிலையில், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்துகொண்டு இவ்வாறு பேசியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விஜய் கதாபாத்திரம் குறித்து அப்டேட்?
சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு சென்றிருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ குறித்த எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் புரடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பரான தகவல் கிடைத்திருக்கிறது.
விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ குறித்த அப்டேட்
அதன்படி, இந்த படத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் சிறப்பு வழக்கு ஒன்றிற்காக மீண்டும் பொறுப்பேற்கும் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே போக்கிரி, ஜில்லா, தெறி ஆகிய படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த விஜய் இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார். விஜய்யின் கடைசிப்படம் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்
கடந்த ஆண்டு வெளியான ‘ஓப்பன் ஹெய்மர்’ ஹாலிவுட் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது தனது 13வது படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு. பல்வேறு துறைகளில் சாதனை புரிவோர் அல்லது நாட்டுக்காக சேவை செய்வோருக்கு இங்கிலாந்து மன்னர் மற்றும் ராணியால் இப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்படும்.
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம் வழங்கிய இங்கிலாந்து அரசு
கிறிஸ்டோபர் நோலனின் பெரும்பாலான படங்களுக்கு அவருடைய மனைவிதான் தயாரிப்பாளராக இருந்துள்ளார். அதனால் இருவருக்கும் இப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ‘தி டார்க் நைட்’ மற்றும் ‘ஓப்பன்ஹெய்மர்’ போன்ற படங்களை தயாரித்து இயக்கி உலகளவில் சிறப்பு பெற்றதற்காக இப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. பட்டத்தை வழங்கியபோது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக நோலனை பாராட்டியிருக்கிறார் இளவரசர் சார்லஸ்.
