இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சிறிய பட்ஜெட் படங்கள் ஒருபுறம் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றிபெற, பெரிய பட்ஜெட் படங்கள் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன. அதுபோக, அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகிவரும் படங்களின் ட்ரெய்லர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. ஒருபுறம் திரைப்படங்கள் சுவாரஸ்யத்தை கொடுத்தாலும் மற்றொரு புறம் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான உயிர்கள் போயுள்ளன. அங்குள்ள மக்களுக்கு பணம் மற்றும் பொருள் உதவிகளை செய்ய அனைத்துமொழி நடிகர் நடிகைகளும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வாரம் சினிமா உலகில் ட்ரெண்டிங் செய்திகளை பார்க்கலாம்.

மருமகனை தொடர்ந்து மாமனாருக்கும் மனைவியாகிறாரா?

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி போன்ற பான் இந்தியா ஸ்டார்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் ரஜினிக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்திருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். இதனால் மருமகன் தனுஷுக்கு மனைவியாக நடித்த மஞ்சு, இப்போது மாமனார் ரஜினிக்கும் மனைவியாகிறாரா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்கும் மஞ்சு வாரியர்

ஏற்கனவே ஸ்ரியா சரண், நயன்தாரா போன்றோர் ரஜினி மற்றும் தனுஷ் இருவருக்கும் ஜோடியாக நடித்திருக்கும் நிலையில் சினிமாவில் இதெல்லாம் சகஜம்தான் என்று சொல்லிவருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புரமோஷனுக்கு 3 லட்சம் கேட்ட நடிகை

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற டிவி ஷோவில் கலந்துகொண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய முடியாமல் அடைந்த ஏமாற்றத்தால் விரக்தியின் உச்சத்திற்கே போனவர்தான் அபர்ணதி. ஆனால் அதன்மூலம் ஆர்யா கிடைத்தாரோ இல்லையோ சினிமா வாய்ப்பு நன்றாகவே கிடைத்தது. அப்படி ‘தேன்’, ‘ஜெயில்’ மற்றும் ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக, முதல் இரண்டு படங்களிலேயே தனது ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளையும் பெற்றார். இதனையடுத்து தற்போது இவர் நடிப்பில் ‘நாற்கரப்போர்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.


நடிகை அபர்ணதி குறித்து காட்டம் தெரிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இப்படத்தின் டீஸரே கவனம்பெற்ற நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பட புரமோஷனில் கலந்துகொள்ள அபர்ணதி ரூ. 3 லட்சம் கேட்டதாகவும், அதுபோக பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாகவும், அவர் கூறியவற்றையெல்லாம் வெளியே சொன்னால் சர்ச்சையாகிவிடும் என்றும் கூறினார். குறிப்பாக, இப்படிப்பட்ட நடிகை சினிமாவுக்கு தேவையா? என்று கடுமையாக சாடினார். இதனால் அபர்ணதிக்கு பட வாய்ப்புகள் குறைய வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

‘ராயன்’ வசூல் இத்தனை கோடிகளா?

தனுஷ் இயக்கி நடித்த திரைப்படமான ‘ராயன்’, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. வட சென்னையில் தம்பிகள், தங்கை என குடும்பத்துடன் வாழும் இளைஞனான ராயனின் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை ரத்தம் தெறிக்க, உணர்ச்சிப்பூர்வமாக கதையாக்கி இருக்கிறார் தனுஷ். இருப்பினும் படத்தின் கதை குறித்து விமர்சனங்கள் வந்தவண்ணமே உள்ளன. குறிப்பாக, தனுஷின் தங்கை துர்காவாக நடித்திருக்கும் துஷாரா விஜயனின் நடிப்பிற்குத்தான் பாராட்டுகள் வந்து குவிகின்றன.


வசூல் வேட்டையில் தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்

இந்நிலையில் படத்தின் வசூலானது 6 நாட்களிலேயே ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷின் கெரியரிலேயே குறுகிய நாட்களில் இத்தனை கோடி வசூல் சாதனை புரிந்த திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் கூட விலைபோகாத ‘இந்தியன் - 2’

கமல் - ஷங்கர் கூட்டணியில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘இந்தியன் - 2’. இந்த படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 7 வருட உழைப்பால் கடந்த ஜூலை -12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதுதான் உண்மை.


‘இந்தியன் - 2’ திரைப்படத்தின் ஓடிடி உரிமைத் தொகை குறைப்பு

இந்தியாவில் முதல் நாளில் சுமார் 26 கோடியை வசூல் செய்திருந்த இப்படம், இதுவரை ரூ.150 கோடிதான் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே டிஜிட்டல் உரிமையை ரூ. 120 கோடிக்கு நெட்ஃப்ளிக்ஸிடம் லைகா நிறுவனம் பேசியிருந்தது. படம் எதிர்பார்த்த வெற்றிபெறாததால், தொகையை குறைக்குமாறு நெட்ஃப்ளிக்ஸ் கண்டிஷன் போட்டுவிட்டதாம். இதனால் ரூ. 50 கோடி வரை நஷ்டம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து சிம்புவா?

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்து பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். தற்போது இவர் நடிப்பில் அடுத்து ‘ரகுதாத்தா’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்தி திணிப்பு பற்றிய கருத்து தெரிவித்து சமீபத்தில் ட்ரோல்களுக்கு ஆளானார் கீர்த்தி. இந்நிலையில்தான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிம்புவுடன் சேர்ந்து நடிப்பதற்கு தனக்கு இருக்கும் ஆசை குறித்து மனம்திறந்திருக்கிறார்.


சிம்புவுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

அந்த பேட்டியில், “நாங்கள் இணைந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய ரசிகர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. நிறையப்பேர் இருக்கிறார்கள். அவரிடம் போனில்தான் பேசியிருக்கிறேன், நேரில் சந்தித்தது இல்லை” என்று கூறியிருந்தார். இதனால் விரைவில் இருவரையும் திரையில் ஒன்றாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையிலேயே இவர் ‘மகாராஜா’தான்!

விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ‘மகாராஜா’ கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அப்பா - மகள் உறவைப் பற்றிய ஆழமான கதையை வித்தியாசமான திரைக்கதைமூலம் ரசிகர்களை இழுத்துவிட்டார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், முனீஷ்காந்த், நட்டி நடராஜன், சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து, வெறும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ.100 கோடிக்கும்மேல் வசூலித்திருக்கிறது.


‘மகாராஜா’ திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த விஜய் சேதுபதி!

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி உண்மையிலேயே மகாராஜாதான் என புகழ்ந்துவருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

வயநாடு நிலச்சரிவு - உதவிக்கரம் நீட்டிய நடிகர் நடிகைகள்

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கடுமையான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வெள்ள பாதிப்பு மற்றும் உறவுகளை இழந்து தவிப்போருக்கு அரசாங்கம் ஒருபுறம் உதவிகளை செய்துவந்தாலும் நடிகர், நடிகைகள் பலர் தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ. 50 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளனர்.


வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரை பிரபலங்கள் உதவி

மலையாள நடிகையான நிகிலா விமல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை கொடுத்துவருகிறார். நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார், நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார். மேலும் பல நடிகர், நடிகைகள் தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர்.

Updated On 12 Aug 2024 6:32 PM GMT
ராணி

ராணி

Next Story