
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி திரையுலகங்களிலும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இந்த வாரம் அரங்கேறியிருக்கின்றன. தனது மகள் இறந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, அவருடைய பெயரிலேயே ஆர்கெஸ்ட்ரா ஒன்றை தொடங்கியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அப்படியே தெலுங்கு பக்கம் போனால், வீடு முழுக்க பெண் பிள்ளைகளாக இருப்பதாகவும், பரம்பரை தொடர ஆண் வாரிசு வேண்டுமென சர்ச்சை கருத்தை பொதுவெளியில் தெரிவித்து விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. நெகிழ்ச்சியும், விமர்சனங்களும் ஒருபுறமிருக்க, மாலை விற்க போன எனக்கு ஹீரோயினாகும் வாய்ப்பு உங்களால்தான் கிடைத்தது என புன்னகையுடன் நன்றி தெரிவிக்கிறார் கும்பமேளா பேரழகி மோனலிசா. இந்த வாரம் அதிகம் பேசப்பட்ட சில சுவாரஸ்யங்கள் சினி பிட்ஸ் பகுதியில்...
இளம் ஹீரோக்களுக்கு பஞ்சமா?
தனுஷ் இயக்கியிருக்கும் 3வது படமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின்மூலம் தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார் தனுஷ். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உட்பட பல இளம் நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம் வருகிற 21ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியானது சமீபத்தில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களின் நிலை குறித்து எஸ்.ஜே. சூர்யா
அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் எஸ்.ஜே. சூர்யா, திரைத்துறையில் இளம் ஹீரோக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்தான் தனுஷ் ஒரு இளம் பட்டாளத்தையே தயார் செய்து இப்படத்தின்மூலம் கொடுத்திருப்பதாகவும் கூறினார். மேலும் ஒரே சமயத்தில் இருவேறு கதைக்களங்கள் கொண்ட படங்களை இயக்குவதுடன், ஹாலிவுட் வரையிலும் நடித்துவருகிறார் தனுஷ் என பாராட்டியுள்ளார்.
ஐஸ்வர்யாவின் அடுத்த ப்ளான்!
தனது முன்னாள் கணவர் தனுஷை வைத்து ‘3’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குழந்தைகளுக்கு பிறகு திரைத்துறையிலிருந்து விலகியிருந்த இவர், கணவரை பிரிந்தபின் மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தனது அப்பாவை வைத்து ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கியதுடன், அந்த படம் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
படம் தயாரிப்பது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திட்டம்
அதற்கு படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் காணாமல் போனதே காரணம் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கவேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும், தனது முன்னாள் கணவரைப் போன்றே சிறிய பட்ஜெட்டில் படத்தை தானே இயக்கி, தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுபோல் தானே படத்தை இயக்கி, தயாரிப்பது விபரீத முடிவு எனவும், ரஜினிகாந்தே தயாரிப்பாளராக களமிறங்கி வெற்றிபெற முடியவில்லை எனவும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர் நெருங்கிய வட்டாரங்கள்.
மகளுக்காக... - இளையராஜா நெகிழ்ச்சி!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார். அவர் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியானது பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்றது. அதில் இளையராஜாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு, பவதாரிணியுடனான தங்களுடைய நினைவலைகளை பகிர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மகளின் ஆசையை நிறைவேற்றும்விதமாக அவருடைய பெயரிலேயே 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய ஆர்கெஸ்ட்ரா குழுவை தொடங்கவிருப்பதாக அறிவித்தார் இளையராஜா.
மகள் பவதாரிணியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா
மேலும் பவதாரிணியின் பிறந்தநாளும், அவர் இறந்த திதியும் ஒரே நாளில் வந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த அவர், பவதாரிணி கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ என்ற படத்தின் இசைத்தட்டையும் வெளியிட்டார். புதுமுக இயக்குநர் ஈசன் இயக்கியிருக்கும் இப்படத்தின்மூலம் விஷ்ணு பிரகாஷ் மற்றும் அர்ச்சனா சிங் ஆகியோர் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
‘எஸ்.கே 23’ படத்தின் டைட்டில்!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயேனின் 25வது படமான ‘பராசக்தி’ படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தற்போது வேகம் எடுத்திருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தனர் அவருடைய ரசிகர்கள்.
முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23வது படத்தின் டைட்டில் வெளியீடு
இந்நிலையில் படத்தின் டீசர் 17ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்திற்கு ‘மதராஸி’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஆக்ஷன் கதையை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராத், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அரசியலுக்கு டாட்டா!
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிரஞ்சீவி 2008ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதுடன், அடுத்த ஆண்டே தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவிவகித்தார். அரசியலில் ஈடுபட்ட சில வருடங்களில் சினிமாவிலிருந்து விலகியிருந்த நிலையில் ஒருசில பிரச்சினைகளால் அரசியலிலிருந்து விலகி, மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘பிரம்மானந்தம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தான் அரசியலுக்கு திரும்புவேன் என சிலர் நினைப்பதாகவும், ஆனால் அரசியலிலிருந்து தான் வாழ்நாள் முழுவதும் விலகி இருக்கப்போவதாகவும், தனது மனதுக்கு பிடித்த சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் தனது 2 மகள்களுக்கும் தலா 2 பெண்குழந்தைகளும், மகன் ராம் சரணுக்கும் ஒரு மகள் இருப்பதால் வீட்டில் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் போன்று இருப்பதாக தோன்றுவதாகவும், பரம்பரையை தொடர ராம் சரண் அடுத்து ஒரு மகனை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் கூறியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
குடும்பத்தாருடன் நடிகர் சிரஞ்சீவி
விளம்பரத்திலும் கும்பமேளா அழகி!
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஊசி, பாசி மாலை விற்ற மோனாலிசா என்ற 16 வயது சிறுமி சமூக ஊடகங்களில் தனது காந்த கண்களால் ஈர்க்கப்பட்டு, ப்ரவுன் பியூட்டி என பிரபலமானதையடுத்து அவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சனோஜ் மிஸ்ரா இயக்கும் ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோனலிசா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக அவருக்கு ரூ.21 லட்சம் சம்பளமாக தருவதாக பேசப்பட்டதுடன் ரூ. 1 லட்சம் அட்வான்ஸும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மோனலிசாவிற்கு நிறைய விளம்பர வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.
நகைக்கடை விளம்பரத்தில் கும்பமேளா அழகி மோனலிசா
குறிப்பாக, ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க இவருக்கு ரூ.15 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கமிட்டான முதல் படமே இன்னும் துவங்கப்படாத நிலையில் விளம்பர படத்தில் இவர் நடித்துவருவது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், தான் மாலை விற்கத்தான் கும்பமேளாவிற்கு சென்றதாகவும், ஆனால் விதி வேறு மாதிரி திட்டம் வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் சிறுவயதில் தனக்கு ஹீரோயின் ஆகவேண்டுமென்ற கனவு இருந்ததாகவும், அந்த கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
