![ஆசிரமத்தில் தான் நிம்மதி என்ற ரஜினி! கைதி 2ல் கமல்ஹாசன்! - சினிபிட்ஸ்! ஆசிரமத்தில் தான் நிம்மதி என்ற ரஜினி! கைதி 2ல் கமல்ஹாசன்! - சினிபிட்ஸ்!](https://www.ranionline.com/h-upload/2025/02/10/386429-cine-bits-dp.webp)
இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸாகியிருக்கிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருமே படத்திற்கு ஆதரவு கொடுத்துவருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ‘குட் பேட் அக்லியும் வெளிவரவிருப்பதால் நீண்ட நாட்களாக காத்திருந்த அஜித்தின் ரசிகர்கள் இப்போது தொடர் செலிப்ரேஷன் மோடில் இருக்கின்றனர். சரி, இந்த படம் இருக்கட்டும், மற்றொரு புறம் திரும்பி பார்த்தால் 14 வருடங்கள் கழித்து ராஞ்சியிலுள்ள ஆசிரமத்திற்கு சென்றுவந்த ரஜினி, குருவின் அறையில் ஒரு மணிநேரம் கிரியா என்ற தியானம் செய்தபிறகு தனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்திருப்பதாகவும், தன்னை பார்ப்பவர்கள் வைப்ரன்ட்டாக இருப்பதாக சொல்லுகிறார்கள் எனவும் கூறியிருக்கிரார். இப்படி ஆர்ப்பாட்டம் ஒருபுறம் அமைதி ஒருபுறம் என பேசப்படும் இந்திய சினிமாவில் வாட் ஈஸ் நியூ? பார்க்கலாம்.
‘கைதி 2’-ல் இவரா?
லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எல்.சி.யு குறித்த எதிர்பார்ப்பானது ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கும். விஜய்யின் ‘லியோ’ படத்திற்கு பிறகு, தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கிவருகிறார் லோகி. இந்த படம் எல்.சி.யுவில் வராது என அவர் சொல்லிவிட்டதால் என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள். மேலும் ஏற்கனவே அவர் சொல்லியிருந்தது போலவே ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
‘கைதி 2’-ஆம் பாகத்தில் இணையும் கார்த்தி - கமல் காம்போ
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதுகுறித்து லோகி கமலிடம் கேட்டபோது தேதியை முடிவு செய்துகொள்ளுங்கள், நான் வந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலானது கார்த்தி - கமல் காம்போ எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் படத்தில் அதிரடி மாற்றம்
‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘எஸ்.கே 23’ படத்தில் நடித்துவந்த சிவகார்த்திகேயன், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் கமிட்டாகி நடித்துவருகிறார். இதனிடையே ‘டாண்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘எஸ்.கே 24’ படத்தில் கமிட்டாகி இருந்தார். முருகதாஸின் படப்பிடிப்பு 70% முடிவடைந்த நிலையில், அவர் சல்மான் கான் படத்தை முடிப்பதில் பிஸியாக ஓடிக்கொண்டிருப்பதால் இடையே ‘பராசக்தி’க்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி
இதன் படப்பிடிப்பு ஜூலை மாதத்திற்குள் முடியும் என்பதால் அடுத்து முருகதாஸின் மீதமுள்ள பகுதியில் நடிக்கவுள்ளாராம். இப்படி 24வது படத்தின் படப்பிடிப்பு தொடங்காமலே நின்றுவிட்டதால் சிபி சக்ரவர்த்தி நானியை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ‘குட் நைட்’ பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர். அவர் சொன்ன கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதால் சிவகார்த்திகேயனும் ஓகே சொல்லிவிட்டாராம்.
புது வைப்ரன்ட்டுடன் ரஜினி!
70 வயதைத் தாண்டியும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆன்மிக பற்று மிகவும் அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆண்டுதோறும் இமயமலைக்கு சென்றுவரும் இவர், இந்த ஆண்டு ராஞ்சியிலிருக்கும் யோகதா சத்சங்கா ஆசிரமத்திற்கு சென்றுவந்திருக்கிறார். 2002ஆம் ஆண்டு முதன்முதலில் அங்கு சென்ற ரஜினி தற்போது மூன்றாவது முறையாக சென்றுவந்துள்ளார்.
கிரியா தியானம் குறித்து பகிர்ந்த ரஜினிகாந்த்
ஆசிரமத்திற்கு சென்றுவந்த அனுபவத்தை பகிர்ந்த அவர், 2 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆசிரமத்தை சுற்றிபார்த்ததாகவும் குருவின் அறையில் ஒரு மணிநேரம் தியானம் செய்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் தன்னை பார்ப்பவர்களுக்கு பாசிட்டிவ் வைப் வருவதாக சொல்லக் காரணமே தொடர்ந்து தான் கிரியா செய்துவருவதுதான் எனவும், கிரியா செய்ய தொடங்கியபிறகுதான் தனக்குள் நிறைய மாற்றங்கள் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக, தனக்குள் ஒரு நிம்மதி எப்போதுமே இருப்பதாக கூறியுள்ளார்.
தொடரும் ட்ரோல்கள்
தமிழில் அவ்வப்போது நடித்தாலும் தெலுங்கில் படுபிஸியாக இருக்கிறார் சாய் பல்லவி. ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரூ. 3 கோடியாக இருந்த தனது சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்திவிட்டாராம். தற்போது நாக சைதன்யா ஜோடியாக இவர் நடித்திருக்கும் ‘தண்டேல்’ படத்திற்கு கூட ரூ. 5 கோடிதான் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். தனது படம் நன்றாக ஓடாவிட்டால் சம்பளத்தை திருப்பி கொடுக்கும் சாய் பல்லவிக்கு பண ஆசை வந்துவிட்டதாக அவரை வறுத்தெடுக்கின்றனர் தெலுங்கு நெட்டிசன்கள்.
சம்பளத்தை உயர்த்தியதால் ட்ரோல்களுக்கு ஆளாகும் சாய் பல்லவி
குறிப்பாக, ‘படி படி லேச்சே மனசு’ திரைப்படம் தோல்வியடைந்ததால் அந்த படத்திற்கு இவர் சம்பளம் வாங்கவில்லை. இதை வைத்து தற்போது சாய் பல்லவியை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்துவருகின்றனர். இருந்தாலும் வெற்றி கதாநாயகியாக இருக்கும் ஒருவர் தனது சம்பளத்தை உயர்த்துவதில் தவறு ஏதுமில்லை என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர் ஒருசிலர்.
இணையும் சுந்தர் சி - நயன் காம்போ!
12 வருடங்கள் கழித்து வெளியான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் ரூ. 50 கோடி வசூலை அள்ளியெடுத்ததைத் தொடர்ந்து, எப்படியாவது சுந்தர் சி, விஷாலுக்கு அடுத்து ஒரு பட வாய்ப்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடிவேலுவுடன் ஏற்கனவே இயக்கிக்கொண்டிருக்கும் படத்தை தொடர்ந்து, அடுத்து ‘வின்னர் 2’ படத்திற்கான பேச்சுவார்த்தைகளும் போய்க்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறர் சுந்தர் சி.
நயன்தாராவை வைத்து படம் இயக்கும் சுந்தர் சி
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் வெகு பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது இப்படம். தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் சாமி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரலாற்று கதையும் கலந்து வருவதால் பெரிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக சுந்தர் சி இதுகுறித்து கூறியிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த படத்திற்காக சுந்தர் சிக்கு ரூ.20 கோடியும், நயனிற்கு ரூ.10 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
பொறாமையா? எனக்கா?
உடல்நல பிரச்சினைகளால் சிறிதுகாலம் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ப்ரேக் எடுத்திருந்த சமந்தா மீண்டும் படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். இதனிடையே சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவை திருமணம் செய்துகொண்டதையடுத்து சமந்தா வருத்தத்தில் இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
முன்னாள் கணவர் நாக சைதன்யா திருமணம் குறித்து பேசிய சமந்தா
இந்நிலையில் தனது முன்னாள் கணவர் வேறொரு உறவில் சென்றபோது பொறாமை அடைந்தீர்களா? என்று அவரிடமே கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் சோகமாகவும், தனிமையாகவும் இருக்கிறேன் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. மேலும் நான் எப்போதும் விலகியிருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமை. எல்லா மோசமான விஷயங்களுக்கும் பொறாமையே வேராக இருப்பதால் அது என்னிடம் இருப்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார்.
இமயமலையில் ஹோட்டல்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாகியிருக்கும் நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துபோகிற இமயமலையில் தற்போது புதிய ஹோட்டல் ஒன்றை கட்டியிருக்கிறார் கங்கனா. மலைகளின் அழகை ரசித்தபடி சாப்பிடும்படியாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில், இமாச்சலின் பாரம்பரிய உணவுகள் நவீன முறையில் வழங்கப்படுமென கூறியுள்ளார்.
இமயமலையில் ஹோட்டல் திறக்கும் நடிகை கங்கனா
காதலர் தினத்தை முன்னிட்டு இந்த ஹோட்டல் வருகிற 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. பல நடிகைகள் ரியல் எஸ்டேட், நகைக்கடைகள், ஜிம் என தங்களது வருமானத்தை முதலீடு செய்துவரும் நிலையில் கங்கனாவும் தனக்கு பிடித்த ஹோட்டல் பிசினஸில் இறங்கியிருப்பதாகவும், இதன்மூலம் தன்னுடைய சிறுவயது கனவு உயிர் பெறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)