இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ், இந்தி, தெலுங்கு என எக்கச்சக்க அப்டேட்ஸ்... குறிப்பாக, தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் படங்கள், பூஜை போடப்படும் படங்கள் என லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. குறிப்பாக, பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் வசூல்வேட்டை நடத்தும் என சொல்லப்படும் நிலையில், அதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதுபோக, பெரிய ஸ்டார்கள் குறித்த சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. இந்த வார சினிமா செய்திகளை பார்க்கலாம்.

கோபித்துக்கொண்டாரா திரிஷா?

இடையில் சற்று சறுக்கிய திரிஷா, ‘பொன்னியன் செல்வன்’ மற்றும் ‘லியோ’ படங்களுக்கு பிறகு மீண்டும் தனது மார்கெட்டை பிடித்திருக்கிறார். அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துமுடித்த இவர், தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’யும் இணைந்து நடித்து வருகிறார். இதுபோக கமலுடன் ‘தக் லைஃப்’ படத்திலும் நடித்திருக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்தரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பானது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.


விளம்பர படத்தில் நடிக்க அஜித் பட ஷூட்டிங்கிலிருந்து வந்த திரிஷா

அஜித், திரிஷா, பிரசன்னா ஆகியோர் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், திரிஷா மட்டும் திடீரென சென்னைக்கு திரும்பிவிட்டார். இதனால் படக்குழுவுடன் திரிஷாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்காகத்தான் திரிஷா சென்னை வந்திருப்பதாகவும், அந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு பறந்துவிடுவார் என்றும் அவர்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறொருவருடனா? நோ சொன்ன சூர்யா!

சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தின் புரமோஷனானது வட இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ‘கங்குவா’ தவிர பிற படங்கள் குறித்தும் சூர்யாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ‘சில்லுனு ஒரு காதல்’ குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து மனம்திறந்த சூர்யா, முதலில் தனக்கு அந்த படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என சந்தேகம் இருந்தது.


ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பது குறித்து சூர்யா கொடுத்த அப்டேட்

ஆனால் ஜோதிகா அந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று சொன்னதால், அவர் வேறொருவருடன் அப்படி ரொமான்ஸ் செய்யவேண்டாம் என்று நினைத்து, உடனே அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜோதிகாவின் கம்பேக்கிற்கு பிறகு இதுவரை இருவரும் சேர்ந்து நடிக்காதது குறித்து கேட்டபோது, அதற்காக கதைகளை கேட்டுவருவதாகவும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணமா?

‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன்மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் கல்யாணி பிரியதர்ஷன். அதனைத் தொடர்ந்து ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, ‘ஹலோ’ படத்திற்காக SIIMA-வின் சிறந்த அறிமுக நடிகை, தெலுங்கு மற்றும் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றிருக்கிறார்.


விளம்பரத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் குறித்து பரவிய திருமண வதந்தி

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் கல்யாணி, சீரியல் நடிகரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. மேலும் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததால் அவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் அது ஒரு நகைக்கடையின் விளம்பர ஷூட்டிங் என்ற விவரம் பின்னர்தான் தெரியவந்திருக்கிறது. அதன்பின்னர்தான் கல்யாணியின் ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

சிம்புவின் அடுத்த படம்

கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்திருக்கும் சிம்புவின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானபோதிலும் அதுகுறித்து எந்த தகவலும் இல்லை. இதனிடையே ‘தம் + மன்மதன் + வல்லவன்+ விண்ணைத்தாண்டி வருவாயா ஆகியவற்றின் ஜென்சி ரகம் = நம்ம அடுத்த படம்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் படம் குறித்த எந்த விவரத்தையும் அவர் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், சிம்புவின் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் தெரிவித்திருக்கிறார். ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர். சிம்புவின் 49வது படமான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிவிப்பை பகிர்ந்திருக்கும் சிம்பு, ‘கட்டம் கட்டி கலக்குறோம்’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமலின் அதிரடி முடிவு!

நீண்ட இடைவெளிக்குப் பின்பு இணைந்த ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், அதன் அடுத்த பாகத்தை இப்போதைக்கு ரிலீஸ் செய்யவேண்டாம் எனவும், அடுத்து ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டுதான் ரிலீஸ் செய்யவேண்டுமெனவும் கமல் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘தக் லைஃப்’ படத்தின்மீது கமல் தனது முழு நம்பிக்கையையும் வைத்திருப்பதாக படக்குழு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.


கதைகளை தேர்ந்தெடுப்பதில் கமல் எடுத்திருக்கும் முடிவு

இதுபோக, இனிமேல் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க கமல் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனக்கு ஜோடி இல்லாமல் உருவான ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கமல் அதே பாணியை பின்பற்றுவார் என்று சொல்லப்படுகிறது.

தயாராகும் ‘கஜினி 2’

2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘கஜினி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு இந்தியிலும் அமீர்கானை வைத்து அப்படத்தை ரீமேக் செய்தார் ஏ.ஆர். முருகதாஸ். சமீப காலமாக இரண்டாம் பாக மோகம் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், ‘கஜினி’ இரண்டாம் பாகத்தை எடுக்க ஏ.ஆர். முருகதாஸும் திட்டமிட்டிருக்கிறாராம். முதலில் தமிழில் எடுத்துவிட்டு பின்னர் இந்தியில் எடுக்கலாம் என்று அவர் சொல்ல, இப்போது அனைத்து படங்களுமே பான் இந்தியா படங்களாக உருவாவதால் இந்தியில் வசூல் அடிவாங்கும் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்டதாக தெரிகிறது.


‘கஜினி’ இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன அமீர்கான் மற்றும் சூர்யா

மேலும் ரீமேக் என்றால் அதில் நடிக்க சூர்யா, அமீர்கான் இருவருக்குமே உடன்பாடு இல்லை என்பதால், ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் படம் எடுக்கப்பட்டு ஒரே நாளில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். இப்படத்தை தமிழில் அல்லு அரவிந்தும், இந்தியில் மது மான்டெனாவும் தயாரிக்கவிருக்கின்றனர். இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் தங்களுக்கும் ஹேப்பி என்று சூர்யாவும், அமீர்கானும் சொல்லிவிட, படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On 5 Nov 2024 12:07 AM IST
ராணி

ராணி

Next Story