இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இனிமேல் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷத்தை பொதுவெளியில் பயன்படுத்தவேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜித்குமார். இனிமேல் தன்னைப்பற்றி தவறான வதந்திகள் பரவினால் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிவிட்டார் சாய் பல்லவி. இப்படி சில நடிகர்கள் தனக்கு எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று நினைக்கும் அதே நேரத்தில், பிரச்சினையை தேடிப்போய் வாங்கிவருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதுபோக, ‘தலைவர் பர்த்டே’ கொண்டாட்டங்களும் கிசுகிசுக்களும் களைகட்டி வருகின்றன. இந்த வாரம் கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான ட்ரெண்டிங் செய்திகள் உங்களுக்காக...

கொதித்தெழுந்த சாய் பல்லவி

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி, ‘ராமாயணா’ படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சீதை வேடத்தில் சாய் பல்லவியும் நடித்துவரும் நிலையில், இந்த படத்திற்காக சாய் பல்லவி அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும், வெளியூர்களுக்கு செல்லும்போது சமையல்காரரையும் கையோடு அழைத்துச்செல்வதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய் என்று மறுத்துள்ளார் சாய் பல்லவி.


தன்னை குறித்து வதந்திகள் பரப்புவோருக்கு சாய் பல்லவி எச்சரிக்கை

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், தன்னைப்பற்றி தவறான வதந்திகள் பரவும்போதெல்லாம் அமைதியாகவே இருக்க விரும்புவதாகவும், ஆனால் தன்னைப்பற்றி ஆதாரமற்ற வதந்திகள், தவறான தகவல்கள் பரவும்போது எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னைப்பற்றி கிசுகிசு என்ற பெயரில் தவறான செய்தி பரப்பும் ஊடகங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சாய் பல்லவி ஒரு வெஜிடேரியன் என்று பல நேர்க்காணல்களில் அவரே கூறியுள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மானுக்கு கிடைத்த கௌரவம்

இந்திய திரையுலகின் இசை ஜாம்பவான்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். ஹாலிவுட் வரை புகழ்பெற்ற இவர், ஆஸ்கர் நாயகன் என்றும் இசைப்புயல் என்றும் எல்லாராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். சமீபத்தில் தனது மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்தாலும் ரஹ்மானுடைய இசைக்காக தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகின் சிறந்த இசைப்பள்ளிகளில் ஒன்றாக டிரினிட்டி லாபன், ஏ.ஆர். ரஹ்மானை தனது இசைப்பள்ளிக்கு கவுரவத் தலைவராக நியமித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.


டிரினிட்டி இசைப்பள்ளியின் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.ஆர் ரஹ்மான்

இந்த பதவியில் இவர் 5 ஆண்டுகளுக்கு பணியாற்றுவார் என்றும் கூறியிருக்கிறது. இதுகுறித்து டிரினிட்டி இசைப்பள்ளியின் எக்ஸ் தளப் பதிவில், 2008ஆம் ஆண்டு ரஹ்மான் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியை நிறுவியபோதிருந்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், இந்த ஆண்டுமுதல் சென்னைக்கும் லண்டனுக்கும் இடையே உறவை உருவாக்கி மாணவர்கள் தங்கள் படிப்புக்கும், கருத்து பரிமாற்றத்துக்கும் வழிவகை செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

ரஜினி பர்த்டே - மாஸ் அப்டேட்!

ரஜினியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது தனது 171வது படமான ‘கூலி’யில் அவர் நடித்துவருவதால், ஜெய்ப்பூரில் நடந்துவரும் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். மேலும் ‘கூலி’ படத்தில் இடம்பெறும் ‘சிகிடு வைப்’ என்ற பாடலின் முன்னோட்டத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது படக்குழு. அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடலை டி. ராஜேந்தர் பாடியிருக்கிறார்.


ரஜினியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அப்டேட்

மேலும் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ‘தளபதி’ படத்திற்கு பிறகு ‘கூலி’ படத்தில் மீண்டும் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்த படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஃபகத் ஃபாசில், சௌபின் சாஹிர், சந்தீப் கிசன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் ஸ்டார் அமீர் கான் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பரவாயில்ல கொடுங்க! - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அப்போதே பல்வேறு பிரச்சினைகள் எழுந்த நிலையில், தற்போது அந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால் அதற்குள் அடுத்த பிரச்சினையை இழுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இவர் பாண்டிச்சேரிக்கு சென்றபோது அங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசியதுடன், கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் சீகல்ஸ் ஹோட்டலை விலைக்கு தருமாறு கேட்டுள்ளார். அது அரசுக்கு சொந்தமான ஹோட்டல் என்பதால், விக்னேஷ் சிவனின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், அப்படி தரமுடியாது என்று மறுத்துள்ளார்.


பாண்டிச்சேரி அரசு ஹோட்டலை விலைபேசியதாக வெளியான செய்திகள் குறித்து விக்கி விளக்கம்

இருப்பினும் அந்த ஹோட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது தரமுடியுமா என விக்னேஷ் சிவன் கேட்டதற்கு அமைச்சர் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம். சினிமா ஒருபுறம் இருந்தாலும் கணவன் - மனைவி இருவரும் பல்வேறு பிசினஸ்களில் கவனம் செலுத்திவரும் நேரத்தில் அரசு ஹோட்டலையே விலைக்கு கேட்ட செய்தி திரையுலகினரையே அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில், தனது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்திற்கு லொகேஷன் பார்க்க பாண்டிச்சேரிக்கு சென்றதாகவும், தன்னுடன் வந்தவர் அவருடைய தனிப்பட்ட தேவைக்காக ஹோட்டல் குறித்து விசாரித்ததை தான் விசாரித்ததாக தவறாக செய்தி பரவிவிட்டதாகவும் விளக்கமளித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. படம் வெளியான முதல் நாளே 294 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் 6 நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இதனால் இந்திய சினிமாவில் குறைந்த நாட்களில் 1000 கோடி வசூலை தாண்டிய திரைப்படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது ‘புஷ்பா 2’. இதுகுறித்து பேசிய அல்லு அர்ஜுன், 1000 கோடி வசூல் என்பது மக்கள் தன்மீது வைத்திருக்கும் அன்பை குறிக்கிறது என்றும், இந்த வசூல் நிரந்தரமல்ல; ஆனால் மக்கள் தன்மீது வைத்திருக்கும் அன்பு மட்டுமே நிரந்தரம் என்றும், இதை என்றும் மறக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.


‘புஷ்பா 2’ திரைப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் கைது

மேலும் மற்ற இந்திய மொழித் திரைப்படங்களும் இந்த சாதனையை விரைவில் உடைக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் கடந்த வாரம் ‘புஷ்பா 2’ பிரீமியர் ஷோவை பார்க்கவந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் அல்லுஅர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் தருவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தபோதிலும் அவர் கைதுசெய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2025-இல் சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் சைதன்யா. இந்நிலையில் சமந்தா ரசிகர்கள் விரைவில் நீங்களும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் அதுகுறித்தெல்லாம் வாய் திறக்காத சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் 2025-இல் தனது ராசிக்கான ஜோதிட பலனை பகிர்ந்திருந்தார். அதில், நேர்மையான, அன்பான பார்ட்னர் அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


அர்ஜுன் கபூருடன் சேர்த்து கிசுகிசுக்கப்படும் சமந்தா

ஏற்கனவே கடந்த சில வாரங்களாக பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கும், சமந்தாவுக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், சமந்தா மும்பைக்கு செல்லும்போதெல்லாம் அர்ஜுன் வீட்டில் தங்குவதாகவும், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்குக்கூட அவருடைய வீட்டிலிருந்துதான் சாப்பாடு போவதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே நடிகை மலைக்கா அரோராவுடனான காதலை முறித்துக்கொண்டு சோகத்தில் இருந்த அர்ஜுன் கபூரும், தனது காதல் கணவனை பிரிந்த சமந்தாவும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என அவர்களுடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Updated On 18 Dec 2024 5:36 AM GMT
ராணி

ராணி

Next Story