
மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் திரைத்துறையில் கிசுகிசுக்களுக்கும் அப்டேட்ஸ்களுக்கும் பஞ்சமே இருக்காது. புதிய படங்கள், டிரெய்லர், போஸ்டர், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை... இப்படி ஏதேனும் ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கும். அப்படி இந்த வாரம் முழுக்க அடுத்தடுத்து வரப்போகிற திரைப்படங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் அதிகம் பகிரப்பட்ட சிலவற்றைப் பார்க்கலாம்.
அடுத்தும் 3 கதாநாயகிகளா?
‘டிராகன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துவருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்து சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் ஹீரோவாக கமிட்டாகி இருக்கிறார்.
டிராகன் படத்தில் பிரதீப்புடன் நடித்த அனுபமா மற்றும் கயாடு
அந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக ‘பிரேமலு’ பட புகழ் மமிதா பைஜூ நடிக்கவிருக்கிறார். அவருடன் அனு இம்மானுவேல் மற்றும் சீரியல் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா ஆகியோரும் நடிக்கவிருக்கின்றனர். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ‘டிராகன்’ படத்தில் 2 கதாநாயகிகளுடன் டூயட் பாடிய பிரதீப் இந்த படத்தில் 3 பேருடன் ஆட்டம்போடவிருக்கிறார் என கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சாம் ரசிகர்கள் ஹேப்பி!
திரைப்படங்களிலிருந்து விலகியிருந்தாலும் சமந்தா குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுண்டு. அந்த வகையில் தற்போது அவர் குறித்த அடுத்தடுத்த செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா. ஏற்கனவே சமந்தா - பிவி நந்தினி ரெட்டி கூட்டணியில் வெளியான ‘ஜபர்தஸ்த்’ மற்றும் ‘ஓ பேபி’ ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் சமந்தாவின் திரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கவிருக்கிறது.
தனது படத்தில் பணிபுரியும் ஆண், பெண் அனைவருக்கும் சம சம்பளம் அறிவித்திருக்கும் சமந்தா
இந்த படத்தில் பணிபுரியவிருக்கும் ஆண், பெண் அனைவருக்கும் எந்தவித பாலின பாகுபாடுமின்றி சம்பளம் வழங்கவுள்ளதாக சமந்தா அறிவித்திருக்கிறார். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக சமந்தா இப்படி ஒரு செயலை முன்னெடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனிடையே ‘சிட்டாடல்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் நிடிமொரு என்பவரை சமந்தா டேட்டிங் செய்துவருவதாக மற்றொரு தகவலும் கசிந்துவருகிறது.
பிரபல நடிகரின் இயக்குநர் அவதாரம்
தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் அடிவாங்கிய நிலையில் திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு மனைவியை பிரிவதாக அறிவித்தார் ஜெயம் ரவி. இதனிடையே தனது பெயரையும் ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்துவந்த இவர் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்துவருகிறார். இப்படி அப்டேட்ஸ் மேல் அப்டேட்ஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் ரவி மோகன், அடுத்தததாக இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
யோகி பாபுவை வைத்து படம் இயக்கவிருக்கும் ரவி மோகன்
நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து இவர் கதையை எழுதியிருக்கிறாராம். இந்த படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக இருக்குமென்றும், குடும்பத்துடன் ரசித்து பார்க்கக்கூடிய காமெடி கலந்த உணர்ச்சிக்கதையாக இருக்குமென்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதில் குறிப்பாக, தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களையும் கதையில் கொண்டுவந்திருக்கிறாராம்.
மாஸாக வெளியான ‘ஜெயிலர் 2’ போஸ்டர்!
ரஜினி - நெல்சன் காம்போவில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல்சாதனை புரிந்த நிலையில், இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக பொங்கலை முன்னிட்டு அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துவரும் ரஜினி, அதன் வேலைகள் முடிந்ததும் அடுத்து ‘ஜெயிலர் 2’-இல் இணைவார் என்று சொல்லப்பட்டது. அதன்படியே தற்போது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ். அதில் ‘முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்’ என குறிப்பிட்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்கப்பட்டிருப்பதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்த சன் பிக்சர்ஸ்
அறிவிப்பு வீடியோவே மாஸ் காட்டிய நிலையில் ரத்தம் தெறிக்க வெளியாகியிருக்கும் போஸ்டரை பார்த்து மிரண்டு போயுள்ளனர் தலைவர் ரசிகர்கள். ‘கூலி’ திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும்மேல் வசூல்சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘ஜெயிலர்’ போன்றே இரண்டாம் பாகத்திலும் பான் இந்தியா ஸ்டார்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் இணையவிருப்பதாக சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜெயிலர் 2’-ஐ தொடர்ந்து அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் ரஜினி.
Muthuvel Pandian's hunt begins! #Jailer2 shoot starts today@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/v72a7wXpDH
— Sun Pictures (@sunpictures) March 10, 2025
இது மட்டும்தான் என்னுடையது!
‘டிராகன்’ படத்தின்மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் நடிகை கயாடு லோஹருக்கு 2கே ரசிகர்தான் மிகவும் அதிகம் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அந்த படம் வெளியானதிலிருந்தே அவரை கொண்டாடி வருகின்றனர். அவரும் அதற்கேற்றாற்போல் சமூக ஊடகங்களில் பிஸியாக இருப்பதுடன், ஹாட் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு பார்ப்போரை கிறங்கடித்துவருகிறார். இந்நிலையில் கயாடுவின் பெயரில் எக்ஸ் தளப் பக்கத்தில் பல போலி கணக்குகள் துவங்கப்பட்டிருப்பதாக அவர் தனது எக்ஸ்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கயாடு லோஹரின் ரீசண்ட் ஹாட் க்ளிக்
அந்த பதிவில், “என்னுடைய பெயரில் இருக்கிற நிறைய கணக்குகளை பார்க்கும் உங்களுக்கு குழப்பம் ஏற்படலாம். ஆனால் இது மட்டும்தான் என்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கு. நான் இங்கு என்னுடைய அப்டேட்ஸ், சிறப்பு தருணங்களை உங்களுக்காக பதிவிடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கயாடு லோஹர் இப்போது அதர்வா ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்துவருகிறார்.
Hey everyone! I’ve seen so many pages out there, and I know it might be confusing but this is my one and only official X (Twitter) page! I’ll be sharing everything with you right here, so stay tuned for all the love, updates, and special moments. Grateful to have you all with me!…
— Kayadu Lohar (@11Lohar) March 12, 2025
கோடிகளில் புரளும் அட்லீ!
தமிழில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற படங்களை இயக்கி வசூல்வேட்டை நடத்திய இயக்குநர் அட்லீ அடுத்து பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்தபோதிலும் அதன்பிறகு வெளியான ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ அடிவாங்கியது. இருந்தாலும் அட்லீ அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு ரூ. 100 கோடி சம்பளமாக வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிக்க சல்மான் கான் நடிக்கவிருந்த படத்திற்கு இவர் இதே சம்பளத்தை கேட்க, அதிர்ச்சியடைந்த சன் பிக்சர்ஸ் பின்வாங்கிவிட்டதாக் செய்திகள் வெளியாகின.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கும் திட்டத்தில் அட்லீ
இதனால் அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து அடுத்து ஒரு படம் எடுக்கவிருப்பதாகவும், அதற்கு அவரும் ஓகே சொல்ல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கும் அட்லீயின் ரூ. 100 கோடி சம்பளம்தான் பிரச்சினையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படம் உறுதியாகலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர் ரஹ்மானுக்கு உடல்நலக் குறைவு!
பிரபல பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான ஏ.ஆர் ரஹ்மானுக்கு மார்ச் 16ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ரஹ்மானின் மகன் அமீன் இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது தந்தைக்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால் உடற்சோர்வின் காரணமாக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றதாகவும், அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தனது கணவர் ரஹ்மான் உடல்நலக் குறைபாடு குறித்து சாயிரா பானு அறிக்கை
ரஹ்மானை பிரிந்து வாழும் அவருடைய மனைவி சாய்ரா பானுவும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஏ.ஆர் ரஹ்மான் விரைவில் குணமடைய வாழ்த்துதல் தெரிவிப்பதாகவும், அவருக்கு ஆஞ்சியோ செய்திருப்பதாக கேள்விப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை அவருடைய முன்னாள் மனைவி என்று அழைக்கவேண்டாம் என்றும், இன்னும் சட்டபடி விவாரத்து பெறவில்லை என்றும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
