இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காதல் தோல்வி, பிரிவு, பிரச்சினைகள் உள்ளிட்டவை எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கும். சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை இன்னும் அதிகமாகவே இருக்கும். கடந்த சில நாட்களில் திரையுலகில் பரவலாக பேசப்படுகிற சில டாப்பிக்குகளை ஷார்ட்டாக பார்க்கலாம்.

முடிவுக்கு வந்த 4 வருட காதல்!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில் இருவரும் ப்ரேக்-அப் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிசெய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் சாந்தனுவை unfollow செய்ததுடன் அவருடன் சேர்ந்து பதிவிட்டிருந்த புகைப்படங்களையும் நீக்கிவிட்டார் ஸ்ருதி. தங்களது பிரிவுக்கான காரணம் என்னவென்று இருவரும் வெளிப்படையாக பேசாத நிலையில், சாந்தனுவிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘அதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என தெரிவித்துவிட்டார்.


காதலன் சாந்தனுவை பிரிந்த நடிகை ஸ்ருதி ஹாசன்

இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேற்பாடுதான் பிரிவுக்கு காரணம் என அவர்களுடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல நடிகர்களுடன் ஸ்ருதி கிசுகிசுக்கப்பட்டாலும் ‘3’ படத்திற்கு பிறகு தனுஷுடன் நெருக்கம் காட்டி வந்ததை ஊடகங்கள் உறுதி செய்தன. அதன்பின்பு லண்டனைச் சேர்ந்த நடிகரும் பாடகருமான மைக்கேல் கோர்சல் என்பவரை அவர் காதலித்து அவருடனும் முறிவு ஏற்பட்டது. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து நடித்து ‘இனிமேல்’ ஆல்பம் பாடலை வெளியிட்ட ஸ்ருதி, ஐபில் உட்பட சில இடங்களில் அவருடன் சேர்ந்து சுற்றிவந்தார். இந்நிலையில் தனது 4 வருட காதலை ஸ்ருதி ப்ரேக்-அப் செய்திருக்கும் செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணாமலையாக விஷால்?

பயோபிக் மோகம் தற்போது அதிகரித்துவரும் நிலையில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்படுகின்றன. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் அண்ணாமலை. தற்போது தமிழக பாஜக தலைவராக பதவி வகித்துவரும் இவர், தமிழகத்தில் பாஜக வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவிருப்பதாகவும் அதில் விஷால் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன.


பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிகர் விஷால் நடிக்கவிருப்பதாக தகவல்

சாமானிய குடும்பத்தில் பிறந்து ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலை புரிந்த சாதனைகள் மற்றும் அரசியல் பிரவேசம் என அவருடைய வாழ்க்கையை இப்படத்தில் காட்டவிருப்பதாக சொல்லப்படுகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என விஷால் கூறியிருந்த நிலையில் இவர் மற்றொரு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி திரையுலகில் பேசுபொருளாகியிருக்கிறது. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ரத்னம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், அடுத்து ‘துப்பறிவாளன் - 2’ மற்றும் முத்தையா இயக்கத்தில் மற்றொரு படம் என கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கிறார்.

விஜய்க்கு நோ... அஜித்துக்கு எஸ்!

சமீப காலமாக தென்னிந்தியாவின் சென்சேஷனல் நாயகி என பெயர் எடுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. வெறும் 22 வயதேயான இவருடைய நடனத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்துவரும் இவர் விரைவில் தமிழில் அறிமுகமாவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ திரைப்படத்தின் கடைசிகட்ட ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஸ்ரீலீலாவை ஒரு ஐட்டம் பாடல் ஒன்றில் இறக்க படக்குழு முடிவுசெய்து அவரை அணுகிய நிலையில் நோ என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.


‘கோட்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட மறுத்த நடிகை ஸ்ரீலீலா

அதற்கு காரணம், தமிழில் ஹீரோயினாகத்தான் அறிமுகமாக ஆசைப்படுவதாகவும் கூறிவிட்டார். விஜய் படத்தில் ஒரு காட்சியில் வந்தால்கூட போதும் என ஏங்குகிற பல நடிகைகளுக்கு மத்தியில் ஸ்ரீலீலாவின் இந்த முடிவு கொஞ்சம் ஷாக்கிங்காக இருந்தாலும், அடுத்த அதிர்ஷடம் அவரை தேடிப்போய் இருக்கிறது. அஜித்தின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஹீரோயின் இவர்தான்.

25 வருடங்களுக்கு பின் மீண்டும் கூட்டணி!

1994ஆம் ஆண்டு வெளியான ‘காதலன்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது பிரபுதேவா - ஏ.ஆர் ரகுமான் கூட்டணி. பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை Behindwoods நிறுவனம் மனோஜ் NS தயாரித்து இயக்கவிருக்கிறார். இப்படம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே Behindwoods அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், இப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ இருக்காது எனவும், படம் முழுக்க இசை, நடனம், பாடல்கள் மற்றும் நகைச்சுவை இடம்பெற்றிருக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.


பிரபுதேவா - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் ஷூட்டிங் அறிவிப்பு போஸ்டர்

மேலும் இப்படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும், இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தபடியே மே-2ஆம் தேதி தொடங்கியது. #ARRPD6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பான் இந்தியா படமாக ரிலீஸாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. அனூப் வி.எஸ். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

மீண்டும் கமலுக்கு சிக்கல்?

கமல் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘உத்தம வில்லன்’. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து இருந்தது. ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்ததால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்துக்கு உள்ளானது. இதனால் இந்நிறுவனம் தயாரிப்பதையே சிலகாலம் நிறுத்தியிருந்தது. இதனால் ‘உத்தம வில்லன்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக மற்றொரு படம் நடித்துத்தருவதாக கமல் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கமல் தனது வார்த்தையை காப்பாற்றவில்லை என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்திருக்கிறது.


இயக்குனர் லிங்குசாமியின் நிறுவனம் தயாரித்த ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் சர்ச்சை

மேலும் தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கமல் ஒப்புகொண்டபடி ஒரு படம் நடித்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறது. கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இந்தியன் - 2’ திரைப்படம் ஜூன் மாதம் ரீலீஸுக்கு தயாராகி வருகிறது. அதேபோல் ‘தக் லைஃப்’ திரைப்படமும் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த சர்ச்சையால் இவ்விரு படங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரசியலுக்கு வருகிறாரா ஜோதிகா?

தமிழ், இந்தி என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் ஜோதிகா இப்போது குடும்பத்துடன் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் இந்தியில் இவர் நடிப்பில் ‘ஷைத்தான்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் ‘ஸ்ரீகாந்த்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பிரஸ் மீட்டில் ஜோதிகா கலந்துகொண்டபோது, அவரிடம் ஏன் வாக்களிக்க வரவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் ஆண்டுதோறும் ஓட்டு போடுகிறேன். சில நேரங்களில் வெளியூரில் இருப்பதால் வரமுடியாத சூழல் ஏற்படலாம், சில நேரங்களில் உடல்நிலை சரியில்லாமல் போகலாம், எல்லா நேரமும் வீட்டிலேயே இருக்க முடியாது. எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதற்கு மதிப்பு கொடுக்கவேண்டும்” என்று கூறினார்.


அரசியல் வருகை குறித்து ஜோதிகா பேட்டியளித்த தருணம்

தொடர்ந்து அவரிடம், அரசியலுக்கு வருகிற எண்ணம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, “யாரும் என்னை கேட்கவில்லை. இப்போது பிள்ளைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும், கெரியரையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால் அரசியலுக்கு வருகிற எண்ணம் இல்லை” என்று கூறிவிட்டார். விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது, ‘out of the topic' என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனால் ஒருவேளை அழைப்பு வந்தால் ஜோதிகா அரசியலுக்கு வருவாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Updated On 13 May 2024 11:23 PM IST
ராணி

ராணி

Next Story