இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமாவில் கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது என்பார்கள். ஆனால் கடந்த சில வாரங்களில் கிசுகிசுக்களை தாண்டி, நாட்டின் ஒவ்வொரு துயர மற்றும் பேரிடர் சம்பவங்களிலும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய ஆதரவு கரங்களை நீட்டிவருகின்றனர். குறிப்பாக, கடந்த வார ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றுவிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார் வினேஷ் போகத். ஆனால் திடீரென தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் நாடே கொதித்தெழுந்தது. வினேஷிற்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் உட்பட பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இந்த வார திரைத்துளியில் சினிமா அப்டேட்ஸுடன் வினேஷ் போகத் குறித்து நடிகர், நடிகைகளின் கருத்துகளையும் காணலாம்.

சன்டே என்றால் சிம்பு இதை தவறாமல் பண்ணுவாராம்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிம்புவையும் சர்ச்சைகளையும் பிரித்து பார்க்கவே முடியாது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து ஹீரோவாகவும் ஜொலித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்க, உடல் எடை கூடி நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்துவந்த சிம்பு குறித்தும், ஷூட்டிங்கிற்கு அவர் சரியாக வருவதில்லை என்றும் பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. இதனால் ஓரிரு ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த சிம்புவை ‘மாநாடு’ திரைப்படம் கைதூக்கிவிட்டது. இப்போது மீண்டும் உடல் எடையை குறைத்து திரைப்படங்களில் ஆக்ட்டிவாக சுற்றிவருகிறார்.


ஞாயிற்றுக்கிழமைகளில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ள சிம்பு

இப்போதெல்லாம் சிம்பு ஷூட்டிங்கிற்கு டைமிற்கு வந்துவிடுவதாகவும், ஷூட்டில் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், அவரால் எந்த பிரச்சினை இல்லை எனவும் பிரபல ஒளிப்பதிவாளர் கோபிநாத் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஆனால் கண்டிப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என சிம்பு அடம்பிடிப்பாராம். அதனால் எங்கு ஷூட்டிங்கிற்கு சென்றாலும் படக்குழுவிலிருந்து ஒரு டீமை உருவாக்கி அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக கிரிக்கெட் விளையாடுவதை சிம்பு வழக்கமாக வைத்திருக்கிறாராம்.

பிக் பாஸுக்கு நோ சொன்ன கமல்!

தமிழில் மிகவும் பிரபலமான டிவி ஷோக்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’. பிற மொழிகளில் ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சியானது 2017ஆம் ஆண்டிலிருந்து தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாலேயே எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமானதுடன், ஒவ்வொரு சீசனிலும் வீக்-எண்டில் போட்டியாளர்களுக்கு கமல் கொடுக்கும் கமெண்டுகளை கேட்பதற்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்தனர்.


படங்களில் பிஸியாக இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நோ சொன்ன கமல்

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என கமல் தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியை சிம்பு அல்லது விஜய் சேதுபதி அல்லது சரத்குமார் தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கியிருப்பதால் அவர்தான் அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் என்ற பேச்சு அடிபடுகிறது.

அடுத்த ஆண்டு எதிர்பாருங்க!

சமீபத்தில் ‘இந்தியன் - 2’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரியா பவானி சங்கர் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் நெகட்டிவ் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்துள்ள அவர், ரசிகர்களின் இதுபோன்ற செயல்களால் தான் வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கல்லூரி காலத்திலிருந்தே பெற்றோர் சம்மதத்துடன் ராஜ் என்பவரை காதலித்துவரும் பிரியா எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பது குறித்து ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பும் நிலையில், இதுபற்றி அவரிடம் கேட்டபோது, காலேஜ் முடித்தவுடனேயே திருமணம் செய்திருக்க வேண்டும்.


தனது காதலன் குறித்து மனம்திறந்த பிரியா பவானி சங்கர்

இப்போது சோம்பேறித்தனமாக இருக்கிறது. அதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளலாம் என்றிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் பிரியாவைவிட அவருடைய அம்மாவிற்குதான் ராஜை ரொம்ப பிடிக்குமாம். அதனால் அவரைத்தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என பிரியாவின் அம்மா ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.

ஃபகத்துக்கு பதில் பாலகிருஷ்ணா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ‘ஆவேஷம்’ அடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. ஜித்து மாதவன் இயக்கிய இப்படத்தில் ரங்கா என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டார் ஃபகத் ஃபாசில். படம் முழுக்க ‘எடா மோனே’ என பல மாடுலேஷன்களில் கூப்பிட்டு அசத்தியிருப்பார்.


‘ஆவேஷம்’ தெலுங்கு ரீமேக்கில் ஃபகத் கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணா

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஃபகத் கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாதாரண கதாபாத்திரத்தையே மாஸாக மாற்றி நடிக்கும் பாலைய்யா கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

‘கோட்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி முடிவு

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. படத்தில் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் இருப்பதாக படக்குழு ஒருபுறம் ஹைப் கொடுத்துவருகிறது. மற்றொருபுறம் யுவனின் இசையில் இதுவரை வெளியாகியிருக்கும் இப்படத்தின் மூன்று பாடல்களுமே மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் பின்னணி இசையில் யுவன் தனது கைவரிசையை காட்டுவார் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.


முடிவு செய்யப்பட்ட ‘கோட்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ஏற்கனவே ‘லியோ’ படத்திற்கு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நடைபெறாததால் ‘கோட்’ படத்திற்கு கண்டிப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் அரசியல் கட்சி வேலையில் பிஸியாக ஓடிக்கொண்டிருப்பதால் ஆடியோ லாஞ்ச் இருக்காது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு தயாரித்து இருப்பதாகவும், அதை விஜய்யிடம் காட்டி ஓகே வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வினேஷ் போகத்திற்கு சினிமா பிரபலங்கள் ஆதரவு

இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அதிக கவனம் ஈர்த்தவர் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியனை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் கண்டிப்பாக இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தருவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அவர் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக் கூறி, போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ஆலியா பட், சமந்தா, பார்வதி திருவோத்து, டாப்ஸி, பீரித்தி ஜிந்தா, நயன்தாரா, கரீனா கபூர், விக்கி கௌஷால் போன்றோர் வினேஷிற்கு ஆதரவு தெரிவித்து தங்களது சமூக ஊடகங்களில் போஸ்ட் செய்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த தேசத்துக்கும் நீங்கள் ஒரு முன்னுதாரணம். உங்களுடைய துணிச்சலையும் தைரியத்தையும் யாராலும் பறித்துவிட முடியாது, நீங்களே தங்கம்தான், கடினமான நேரம் நீண்டகாலத்திற்கு நீடிக்காது என்பது போன்ற வரிகளை ஆறுதலாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மல்யுத்தத்திலிருந்து ஓய்வுபெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவையுமே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

Updated On 19 Aug 2024 6:04 PM GMT
ராணி

ராணி

Next Story