இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ரஜினிக்கு உடல்நலம் சரியில்லை என்று வருத்தத்தில் அவருடைய ரசிகர்கள் இருக்க, சமந்தாவை பற்றி தரக்குறைவாக பேசி பலரின் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார் தெலங்கானா அமைச்சர் சுரேகா. இதுபோக, விஜய், அஜித் என பல முக்கிய ஸ்டார்களின் படங்கள் குறித்த அப்டேட்ஸ்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. கோலிவுட்டின் சில சுவாரஸ்யங்களை ஷார்ட்டாக பார்க்கலாம்.

விவாகரத்து குறித்து நாக சைதன்யா

காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், தங்களது விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்துவந்தனர். இதற்கிடையே மையோசிட்டிஸால் பாதிக்கப்பட்ட சமந்தா ஒருபுறம் சிகிச்சை, சினிமா என ஓடிக்கொண்டிருக்க, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் நாக சைதன்யா. இந்நிலையில் சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவரான கே.டி ராமாராவ்தான் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் தெலங்கானா அமைச்சரான சுரேகா.


சமந்தா - நாக சைதன்யா பிரிவு குறித்து சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் சுரேகா

இதனால் கொதித்தெழுந்த சமந்தா, தனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என்றும், அதில் அரசியல் சதி இல்லை என்றும் கூறிய நிலையில், நாக சைதன்யாவும் இதுகுறித்து பேசியிருக்கிறார். இருவருடைய லட்சியங்களும் வெவ்வேறாக இருந்ததால் நிறைய யோசித்து கலந்து பேசித்தான் இந்த முடிவை எடுத்ததாகவும், மீடியா ஹெட்லைனுக்காக அமைச்சர் இவ்வாறு பேசுவது வெட்கக்கேடானது என்றும் கடுமையாக சாடினார். மேலும் தங்களது குடும்பத்தின் நற்பெயரை கெடுப்பதாக நாகர்ஜூனா மற்றும் அமலா ஆகியோரும் பேசிய நிலையில், நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக கூறியிருக்கிறார் அமைச்சர் சுரேகா.

டிலே ஆகும் விடாமுயற்சி ரிலீஸ்!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பானது ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட இருப்பதால் தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அடுத்த ஆண்டு பொங்கல் வரவாகத்தான் இப்படம் வெளியாகும் என்று ஒருதரப்பினர் சொல்லிவருகின்றனர்.


தள்ளிப்போகும் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி

இதற்கிடையே இப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி எல்லா வேலைகளையும் மிகவும் மெதுவாகத்தான் செய்வார் என்றும், அவரிடம் அஜித் வசமாக மாட்டிக்கொண்டார் என்றும் ஒரு பிரபல சினிமா விமர்சகர் கூறி, அஜித்தின் ரசிகர்களை கவலையடையச் செய்திருக்கிறார். 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘துணிவு’ படத்திற்கு பிறகு இதுவரை அஜித் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

‘தளபதி 69’இல் ஜிவிஎம்

விஜய்யின் கடைசிப்படமான ‘தளபதி 69’-ஐ ஹெச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் படத்தில் யார் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து கேள்வி எழுப்பிவந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோலும் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், ஏற்கனவே விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்திருந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி ஆகியோர் இப்படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


விஜய்யின் கடைசி படத்தில் அவருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

இந்த படத்தில் இளம் நடிகை மமிதா பைஜுவும் இணைந்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் இணையவிருப்பதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. பிரபல டோலிவுட் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரடக்‌ஷன்ஸ் விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்கிறது.

படத்தின் பெயர் ராசி அப்படி!

ரஜினியின் 171வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது விசாகப்பட்டினம் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினி இல்லாத காட்சிகளை லோகி படமாக்கிவருகிறார். இதனிடையே, 1983ஆம் ஆண்டு வெளியான ‘கூலி’ என்ற படத்தில் நடித்தபோது அமிதாப் பச்சனுக்கும் இதேபோல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, கடுமையான சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தாராம்.


லோகேஷ் கனகராஜின் படபிடிப்பின்போது ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு

அதேபோல் இப்போது இந்த ‘கூலி’ படபிடிப்பிலும் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட படத்தின் பெயர்தான் காரணம் என்றும், ராசியில்லாத பெயரை லோகி தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் பேசி அவரை சர்ச்சையில் சிக்கவைத்து வருகின்றனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள். ஏற்கனவே இதே பெயரில் சரத்குமார் படம் ஒன்று வந்திருக்கும் நிலையில் படத்தின் டைட்டிலை வெளியிட்டபோதே விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தார் லோகி.

இந்தியன் 3 ஓடிடியிலா?

‘இந்தியன்’ என்ற படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்தனர். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்து படமும் வெளியானது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் அதிகப்படியான வசூல்சாதனை புரியும் என்று படக்குழு தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் தோல்வியடைந்தது. இருப்பினும், படத்தின் மூன்றாம் பாகம் சிறப்பாக இருக்கும் என்றும், இரண்டாம் பாகத்தில் இழந்த வசூலை மூன்றாம் பாகம் அள்ளும் என்றும் கூறப்பட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் பரவிவருகின்றன.


நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘இந்தியன் 3’

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு, மூன்றாம் பாகம் தியேட்டர்களில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், நேரடியாக ஓடிடிக்கு செல்வது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே ராம் சரணை ஹீரோவாக வைத்து முதன்முதலாக தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை இயக்கிவருகிறார் ஷங்கர். படத்தின் முதல் இரண்டு சிங்கிளுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருவதால் ‘இந்தியன் 2’ இழப்பை இதன்மூலம் ஷங்கர் சரிகட்டி வருவதாக பேசிவருகின்றனர்.

அஜித்துடன் இணைந்த பிரசன்னா

அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் போஸ்டரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில் மற்றும் ராகுல் தேவ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


‘குட் பேட் அக்லி’ படம் மூலம் அஜித்துடன் இணைந்த பிரசன்னா

ஏற்கனவே ‘மங்காத்தா’ படத்திலேயே அஜித்துடன் பிரசன்னா சேர்ந்து நடிக்கவிருந்த நிலையில், சில காரணங்களால் அது தடைபட்டது. இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’யில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் பிரசன்னா. இதன்மூலம் தனது நீண்டகால கனவு நிறைவேறியதாகவும், கடவுளுக்கும், அஜித்துக்கும், ஆதிக்கிற்கும் நன்றி எனவும் தெரிவித்திருகிறார். மைத்ரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Updated On 14 Oct 2024 10:00 PM IST
ராணி

ராணி

Next Story