இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒருவரின் தோற்றத்தை வைத்து விமர்சிப்பது தவறு என்றாலும் அதை பலரும் செய்யாமல் இருப்பதில்லை. இந்நிலையில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதற்காக மிகவும் விமர்சிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் தனது தோற்றம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு நெற்றியடி பதிலை கொடுத்திருக்கிறார். அதுபோக ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ரவி மோகன் போன்ற முன்னணி நடிகர்களின் படம் குறித்த அப்டேட்ஸும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறது. இந்த வாரம் கோலிவுட்டில் ட்ரெண்டிங்கில் என்னென்ன இருக்கின்றன? பார்க்கலாம்.

‘மதராஸி’யில் உதவி இயக்குநரா?

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்திற்கு ‘மதராஸி’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக டைட்டில் டீஸர் வெளியானது. விஜய்யின் 65வது படமாக எடுக்கவிருந்த இந்த கதையைத்தான் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிவருகிறார் முருகதாஸ். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிவருகிறார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகனான அர்ஜித். நல்ல நடனம் ஆடக்கூடிய இவர், அடுத்து ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், அப்பாவை போன்றே கேமராவிற்கு பின்பு இருக்கத்தான் தனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டாராம்.


சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் விநாயக் சந்திரசேகரன்

ஆனால் இதுபோன்று இயக்குநராக பயணத்தைத் தொடங்கிய பலர் தற்போது நடித்துவரும் நிலையில், அடுத்து அர்ஜித்தும் நடிக்க வரலாம் என்று சொல்லப்படுகிறது. ‘மதராஸி’ என தலைப்பு வைத்தது குறித்து முருகதாஸ் கூறுகையில், வட இந்திய மக்கள் தென்னிந்தியர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இப்படத்தை உருவாகி இருப்பதாகவும், படத்தை பார்க்கும்போது டைட்டில் பொருத்தமாக இருக்குமென்றும் கூறியுள்ளார். இந்த படத்தைத் தொடர்ந்து ‘எஸ்.கே 23’ படத்தை இயக்குவதை உறுதி செய்திருக்கிறார் ‘குட் நைட்’ பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.

‘குட் பேட் அக்லி’யில் கேமியோ!

‘விடாமுயற்சி’யை அடுத்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெளியாகவிருக்கிறது. இந்த படத்திலும் திரிஷா ஜோடியாக நடிக்க, பிரசன்னா, சுனில் பிரபு மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே அறிவித்தபடி ஏப்ரம் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. மைத்ரீ மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.


‘குட் பேட் அக்லி’ திரைப்பட போஸ்டர்

இந்த படத்தில் அஜித்தின் கெட்டப்பே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் நிலையில், மற்றொரு சூப்பர் அப்டேட் இப்படம் குறித்து கிடைத்திருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் சிம்ரன். ‘குட் பேட் அக்லி’யில் கேமியோ ரோலில் இவர் தோன்றவிருப்பதாக சொல்லப்படுகிறது. ‘வாலி’, ‘அவள் வருவாளா’ மற்றும் ‘உன்னை கொடு என்னை தருவேன்’ போன்ற படங்களால் பெரிதும் ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் இணையவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தனுஷை ரீப்ளேஸ் செய்த ரவிமோகன்!

ஜெயம் ரவியின் ‘சைரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்கள் சரியாக ஓடாததால் அடுத்து ஒரு தரமான படத்திற்காக காத்திருக்கிறார். இதனிடையே தனது பெயரை ரவி மோகன் என்றும் மாற்றிவிட்டார். இந்நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். மேலும் ‘டாடா’ பட இயக்குநருடன் ‘கராத்தே பாபு’ என்ற படத்திலும், அறிமுக இயக்குநரின் ‘ஜெனி’ என்ற படத்திலும் நடித்துவருகிறார்.


தனுஷ் நடிக்கவிருந்த கதையில் கதாநாயகனாகும் ரவி மோகன்

மேலும் வெற்றிமாறன் எழுதிய கதையில் கௌதம் மேனன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். தனுஷிற்காக வெற்றிமாறன் எழுதிய ‘சூதாடி’ என்ற படத்தின் கதைதான் இது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த கதையை தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கத் தொடங்கி ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தவிர்க்கமுடியாத காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த கதையில் ரவி மோகன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் ஹெக்டே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் ‘கூலி’ படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர் தலைவர் ரசிகர்கள். இந்நிலையில் சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்திருக்கிறது. பொதுவாகவே பெரிய ஹீரோக்களின் படம் என்றால் ஸ்டார் நடிகைகளை சிங்கிள் பாடலுக்கு குத்தாட்டம் போடவைப்பது வழக்கம். அதுபோல் ‘கூலி’ படத்தில் சிங்கிள் பாடலுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.


‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் பூஜா ஹெக்டே

ஏற்கனவே ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா இதுபோல் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அந்த வரிசையில் தற்போது பூஜாவும் இணைந்திருக்கிறார். இவர் விஜய்யின் கடைசிப்படமான ‘தளபதி 69’, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ மற்றும் ராகவா லாரன்ஸுடன் ‘காஞ்சனா 4’ போன்ற படங்களில் நடித்துவரும் நிலையில் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். ஏற்கனவே இந்த படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இருக்கிற நிலையில், இவர்களில் யாருடன் சேர்ந்து பூஜா ஆடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பானது அதிகரித்திருக்கிறது.

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஸ்ருதி

நடிகைகள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள உதடு, மூக்கு மற்றும் தாடை என பல்வேறு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்வதுடன் ஃபில்லர்ஸும் செலுத்திக்கொள்கின்றனர். இது சிலருக்கு அழகை மேம்படுத்திக்காட்ட உதவினாலும் சிலரை கடுமையான விமர்னங்களுக்கு ஆளாக்கிவிடுகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டது குறித்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் ஸ்ருதிஹாசன். இருந்தாலும் அதுகுறித்தெல்லாம் கவலைப்படாத அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப்படங்களில் நடித்துவருகிறார்.


அழகு அறுவைசிகிச்சைகள் குறித்து ஸ்ருதி ஹாசன் காட்டம்

இந்நிலையில் அழகு அறுவைசிகிச்சைகள் குறித்து ஸ்ருதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த அவர், தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடக்கூடாது என்றும், அதேசமயம் அறுவைசிகிச்சைகள் மூலம் உடலில் மாற்றங்கள் செய்துகொள்வது தவறு இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் அது மற்றவர்களின் கட்டாயமின்றி செய்யப்படவேண்டுமெனவும், ஒருவருடைய உடலையோ, அழகையோ அல்லது தோற்றத்தையோ வைத்து விமர்சிப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.

கிருத்திகா - விஜய் சேதுபதி காம்போ!

அரசியல் குடும்பத்தில் இருந்தாலும் தொடர்ந்து தனக்கு பிடித்த சினிமாத்துறையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் கிருத்திகா உதயநிதி. இவருடைய முதல் படமான ‘வணக்கம் சென்னை’ சூப்பர் ஹிட்டடித்த நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகள் இடைவெளி எடுத்து ‘காளி’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவு வெற்றிபெற்ற நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி மிகவும் பீக்கில் இருந்த சமயத்தில் ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடரை இயக்கினார்.


விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கும் கிருத்திகா உதயநிதி

அதனையடுத்து சமீபத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் இவர் இயக்கத்தில் வெளியானது. ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அடுத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கிருத்திகா. விஜய் சேதுபதியிடம் அவர் ஒரு கதையை சொன்னதாகவும், அவருக்கும் கதை பிடித்துப்போக உடனே ஓகே சொல்லிவிட்டார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது.

Updated On 25 Feb 2025 9:46 AM IST
ராணி

ராணி

Next Story