இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்னும் இரண்டு ஆளுமைகள் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்துவந்த அதே காலகட்டத்தில், அவர்களே பார்த்து பொறாமைப்படும்படியான ஹீரோவாக ஒருவர் உச்சத்தில் வலம் வந்தார் என்றால் அது நடிகர் ராமராஜனாக மட்டும்தான் இருக்க முடியும்.மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வரை எத்தனையோ பேர் மக்கள் விரும்பும் நாயகர்களாக இருந்தாலும், இன்றும் படங்களே நடிக்காவிட்டாலும், முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் எங்கே எங்கள் மக்கள் நாயகன்? என்று ரசிகர்கள் தேடும் நாயகனாக ராமராஜன் இருக்கிறார் என்றால் அது அவரால் மட்டுமே சாத்தியமானது. நாடக நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர், வெற்றிகரமான கதாநாயகன் என்று பன்முகங்களை கொண்ட இவர் கொடுக்காத வெற்றிப்படங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கொண்டாடும் வசூல் சக்கரவர்த்தியாக, நாயகனாக வலம் வந்த இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு ‘சாமானியன்’ என்றொரு படத்தில் நாயகனாக நடித்தார். கடந்த மே மாதம் 23-ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், ராணி நேயர்களுக்காக தன் திரை அனுபவம் குறித்து நடிகர் ராமராஜன் நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

குமரேசன் என்ற நிஜ பெயரில் இருந்து ராமராஜனாக மாற்றம் பெற்றது எப்படி?

எஸ்.எம். குமரேசன் என்ற புகழ்பெற்ற நாடக நடிகர் இருக்கிறார். சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களில் ஹீரோவாக நடித்தவர். குமரேசன் என்ற பெயரில் அவர் இருக்கும்போது நாமும் அதே பெயரில் இருந்தால் நன்றாக இருக்காதே என்று என்னுடைய இயற்பெயரை மாற்ற முடிவு செய்தேன். என்ன பெயரை வைக்கலாம் என்று யோசிக்கும் பொழுது என்னுடைய வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருந்த முதல் வார்த்தை ராமர். நான் பிறந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். அப்பா பெயர் ராமையா. எனக்கு தொழில் கற்றுக்கொள்ள வழிகாட்டியவர் மாமா ராமசாமி. என் சினிமா குருநாதர் ராம நாராயணன். இவற்றையெல்லாம் தாண்டி என் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை மிகவும் பிடிக்கும். இப்படி என் முதல் விஷயங்கள் எல்லாமே ராமா ராமா என்று வந்ததால் ராம என்ற முதல் வார்த்தையை எடுத்துக்கொண்டேன். அடுத்ததாக நான் முதல் முதலாக வேலை பார்த்த ராஜா டைல்ஸ். பாரதிராஜா, இளையராஜா இவர்களையும் பிடிக்கும் என்பதால் அதில் இருந்து ராஜா என்ற வார்த்தையை எடுத்து ராமராஜ என்பதோடு “ன்” சேர்த்து "ராமராஜன்" என மாற்றினேன். இப்படித்தான் என் பெயர் மாற்றம் நிகழ்ந்தது.


‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் ராமராஜன், ரேகா - ராமராஜனுக்கு பிடித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா

‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தை தேர்ந்தெடுத்தது எப்படி?

சங்கிலி முருகனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் மூலமாகத்தான் இந்த கதை எனக்கு வந்தது. என்னிடம் முதல் பாகத்தின் கதையை சொல்லும் போது பால் கறந்து மாட்டை அடக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. எனக்கும் அது புதிதாக இருந்தது. ஓகே என்று சொன்னேன். ஆனால் இரண்டாம் பாதி கதையில் ஹீரோயின் இறந்த பிறகு சென்னை வருவது, பாட்டு பாடி பெரிய ஆளாக வருவதுபோன்ற கதைக்களம்தான் இருந்தது. இதுமாதிரியான கதை நடிகர் மோகன் நிறைய நடித்துவிட்டார். நமக்கு வேண்டாம். இரண்டாம் பாதி கதையை கொஞ்சம் மாற்றுங்கள் என்று நான் கூறினேன். அப்போதுதான் கே.ஆர்.விஜயா அம்மா நடித்த ‘கற்பகம்’ படத்தின் தழுவல் என்று வேறொரு கதையை கூறினார்கள். அந்த இரண்டாம் பாகத்தின் கதைதான் இப்போது படத்தில் இருக்கும் கதை. கூடுதல் சிறப்பு இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தது. படத்தின் டைட்டில் பாடலானா ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பாடலிலேயே நான் மயங்கி விட்டேன். இந்த படத்தில் அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் அனைத்தையுமே பாடகர் மனோதான் பாடியிருப்பார். அப்படியொரு புகழ் அவருக்கு இந்த படத்தின் மூலமாக கிடைத்தது.

இந்த படத்தில் மாட்டுடன் நடித்துவிட்டு அதை பிரிய மனம் இல்லை என்று வருத்தப்பட்டீர்களாமே? உண்மையா?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா ஏதாவது சொல்லிவிடுவார்கள். பாட்டுபாடிக்கொண்டே பால் கறப்பது மாதிரியான காட்சிகள் எல்லாம் நமக்கு பழக்கம் இருந்ததால் அசால்டாக நடிக்க முடிந்தது. அதில் நான் நிஜமாகவே பால் கறந்து நடித்திருப்பேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். உலகம் இருக்கும் வரைக்கும் ஊரு இருக்கும். ஊரு இருக்கும் வரைக்கும் வீடு இருக்கும். வீடு இருக்கும் வரைக்கும் மாடு இருக்கும். பசு மாடு இருக்கும் வரைக்கும் பால் கறக்கும்போது இந்த ராமராஜன் நியாபகம் வருது இல்லையா. அது போதும்.


‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் நடிகர் ராமராஜன் பாட்டுபாடிக்கொண்டே பால் கறக்கும் காட்சி

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு 1980-களின் இறுதிவரை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 20 முதல் 25 படங்களில் நடித்தீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

எதுவும் பிளான் செய்து நடித்தது இல்லை. எல்லாம் தானாக அமைந்தது. 1988-ல் 8 படங்கள், 1989-ல் கரகாட்டக்காரன் உட்பட 8 படங்கள், 1990-ல் 4 படங்கள் என மொத்தம் 20 படங்கள் நடித்தேன். அத்தனையும் வெற்றி அடைந்தன. ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் இருந்து 26-வது படம் வரைக்கும் தயாரிப்பாளருக்கோ, தியேட்டர் உரிமையாளருக்கோ எந்தவித நஷ்டமும் இல்லை. லாபம்தான். எல்லோருமே நன்றாக சம்பாதித்தார்கள். அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். காலங்கள் மாறும்போது படங்கள் ஏதும் அமையவில்லை. அப்படியே நடிப்பது நின்று விட்டது.

தொடர்ந்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் உங்களை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது கரகாட்டக்காரன் திரைப்படம்தான். அதில் உங்களை கங்கை அமரன் ஒப்பந்தம் செய்தது எப்படி?

இளையராஜாவின் தம்பி என்ற அடிப்படையில் ஏற்கனவே கங்கை அமரன் எனக்கு அறிமுகம். அப்படி ஒருமுறை கோயில் ஒன்றில் நடைபெற்ற நாடகத்திற்கு தலைமை தாங்க என்னை அழைத்திருந்தார்கள். அதற்கு அவரும் வந்திருந்தார். அப்போதுதான் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் கதை குறித்து இருவரும் விவாதித்தோம். இந்த படம் எப்படியும் வெற்றியடையும் என்பது தெரிந்திருந்ததால் எப்போதும் சென்னை நகரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மட்டும் தியேட்டர் உரிமையை பெரும் நான், அப்போது கூடுதலாக கோயம்புத்தூருக்கும் தியேட்டருக்கான உரிமையை வாங்கி விட்டேன். இப்படித்தான் இப்படம் தொடங்கியது.


'கரகாட்டக்காரன்' படத்தில் நடிகர் ராமராஜன் மற்றும் பாடல்களில் அப்போது கலக்கிய இளையராஜா-வைரமுத்து ஜோடி

கனகாவை ஹீரோயினாக இப்படத்திற்கு கொண்டுவந்தது எப்படி?

நான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே அதாவது ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ திரைப்படத்திலேயே கனகாவை கதாநாயகியாக்க முயற்சி செய்தேன். ஆனால், அப்போது அவர் சிறு பிள்ளையாக இருந்ததால் சினிமாவில் நடிக்க வைக்கும் யோசனை இல்லை என்று கூறி அவரின் அம்மா தேவிகா மறுத்துவிட்டார். அதற்கு பிறகு ‘கரகாட்டக்காரன்’ படம் தொடங்கியபோது கங்கை அமரன் இருந்த தெருவிலேயே தேவிகாவின் வீடும் இருந்ததால் அவர் கனகாவை பார்த்திருந்தார். என்னிடம் வந்து சொன்னார். நானும் சரி என்று சொன்னேன். பிறகு இருவரும் தேவிகாவை சந்தித்து பேசினோம். அப்போது கனகாவின் பெயர் கனக மகாலட்சுமி. நான்தான் சுருக்கி கனகா என்றே இருக்கட்டும் என சொன்னேன். அந்த பெயர் அப்படியே அவருக்கு நிலைத்துவிட்டது. அவருடன் நடித்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்துவிட்டன.

பெரும்பாலும் உங்களின் படங்களில் கவுண்டமணி, செந்தில்தான் இருப்பார்கள். ‘கரகாட்டக்காரன்’ படத்திலும் அவர்கள் இருவரின் காமெடி மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது. அவர்கள் பற்றி ஓரிரு வார்த்தைகள்?

எல்டாம்ஸ் சாலையில் வாடகைக்கு தங்கியிருந்த காலங்களில் இருந்தே செந்தில் நல்ல பழக்கம். பக்கத்து பக்கத்து அறைகளில்தான் தங்கியிருந்தோம். அப்போது பார்த்திபன், ஜனகராஜ் எல்லோரும் வருவார்கள். அனைவருடனும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். நான் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ முதல் படம் இயக்கம் போதே அதில் கவுண்டமணி, செந்தில் இருவரும் நடித்திருந்தார்கள். அடுத்து இயக்கிய ‘ஹலோ யார் பேசுறது’ படத்தில் இருவருக்குமே சோலோ பாடல் எல்லாம் கூட வைத்து நடிக்க வைத்தேன். அந்த அளவுக்கு இருவருமே மிகவும் நெருக்கமானவர்கள். எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.


'கரகாட்டக்காரன்' பட நாயகி கனகா - 'கரகாட்டக்காரன்' படத்தில் வரும் செந்தில், கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி காட்சி

எனக்கு சரியான காம்பினேஷன் என்றால் அது இளையராஜாதான். அவருடன் இணைந்த அத்தனை படங்களிலுமே பாடல்கள் ஹிட். இதில் என்ன ஒரு அற்புதமான விஷயம்னா என்னோட முதல் படம் துவங்கி இப்போது வெளிவந்த சாமானியன் வரை அனைத்து படங்களுமே பிரம்மாண்ட இயக்குநரோ, தயாரிப்பாளரோ, நடிககைகளோ கிடையாது. விளம்பரம் கிடையாது. இப்படி எல்லாமே பிரம்மாண்டம் இல்லாமல் வெளிவந்து அத்தனை படங்களுமே நல்ல வசூல் சாதனை படைத்தன. காரணம், மக்களின் மனதை கவரும் வகையிலான கதை, கதைக்கு தகுந்த இசை ஆகியவைதான்.

கிராமத்து சூழலுக்கான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்ததற்கான காரணம் என்ன?

நானும் கொஞ்சம் வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்று நினைப்பதற்குள்ளாக நிறைய படங்கள் வந்து குவிந்துவிட்டன. நானும் வந்த அத்தனை படங்களுக்கும் ஓகே சொல்லி கையெழுத்து போட்டுவிட்டேன். எல்லாமே குறைந்த பட்ஜெட் படங்கள். வழக்கறிஞர், போலீஸ் என மாறி மாறி முயற்சி செய்திருக்கிறேன். ஆனாலும் மக்களிடம் என்னை அதிகமாக கொண்டு சேர்த்தது கிராமத்து கதைகள்தான்.

‘கரகாட்டக்காரன்’ உங்களுக்கு முக்கியமான படம் என்று எல்லோரும் கூறினாலும், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்த படம் என்றால் எது?


இரு வெவ்வேறு கெட்-அப்களில் ராமராஜன்

நான் ஹீரோவாக அறிமுகமான ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படம்தான் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த ஒரு படத்திலேயே காதல், சிலம்பம் சண்டை, விட்டுக்கொடுத்து போதல், மாணவர்கள் பிரச்சினை என அத்தனை விஷயங்களும் வந்துவிடும். முதல் படத்தினுடைய கதாபாத்திரம்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது. நடிப்புக்கு குருநாதர் வி.அழகப்பன்னா, இயக்குநருக்கு குருநாதர் ராம நாராயணன், இப்படி சினிமாவில் எனக்கு இரண்டு குருநாதர்கள் இருக்கிறார்கள். இருவருமே தங்கமான மனிதர்கள். ஈகோ என்பது துளியும் இருக்காது. இப்படியான மனிதர்களால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். அதேபோல் கரகாட்டக்காரன் படமும் என் வாழ்க்கையில் முக்கியமான படம்தான். இதற்கு முன்பு சொன்னது போல உலகம் இருக்கும்வரை, ஊரு இருக்கும், ஊரு இருக்கும்வரை கோயில் இருக்கும், கோயில் இருக்கும்வரை திருவிழா இருக்கும், திருவிழா இருக்கும்வரை கரகம் இருக்கும், கரகம் இருக்கும்வரை இந்த ராமராஜன் நினைவு இருக்கும். அதுபோதும் எனக்கு.

Updated On 1 July 2024 6:27 PM GMT
ராணி

ராணி

Next Story