இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வாழ்க்கை எப்போது யாரை எந்த உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணமாக தமிழ் திரையுலகில் பலர் இருந்தாலும், அந்த பட்டியலில் இன்றைய சூழலில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுவது என்னவோ நடிகர் கவின்தான். சினிமா என்ற கனவோடு சென்னை நோக்கி வரும் அத்தனை பேருமே சாதித்து விடுவதில்லை. ஆனால், கவினோ எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் கலைத்துறைக்குள் நுழைந்து, இன்று தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் ஒரு நடிகராக, சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கு நம்பிக்கை நாயகனாக விளங்கி வருகிறார் என்றால், அது எதுவும் அவரது வாழ்க்கையில் மிக எளிதாக நடந்துவிடவில்லை. சரியான வாய்ப்புகள் கிடைக்காமல், கிடைத்த வாய்ப்புகளும் கை கொடுக்காமல், இந்த கலைத்துறையைவிட்டே சென்று விடலாம் என்றிருந்தவருக்கு, இன்று வாய்ப்புகள் வந்து குவிகிறது என்றால் அது அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலமாக பிரபலமடைந்து, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, இன்று ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கவின், வெற்றி என்ற இலக்கை அடைய அவர் கடந்துவந்த கரடுமுரடான பயணங்கள் என்ன? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை


இளமையில் வெவ்வேறு தோற்றங்களில் நடிகர் கவின்

தமிழ் சினிமாவில் ‘டாடா’ என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கவின் திருச்சியில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில், பிரதீப் ராஜ், மேரி தம்பதியருக்கு மகனாக 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி பிறந்தார். அப்பா சவுதியில் ஒரு வெல்டராக பணியாற்றிய நிலையில், அவரது அம்மா மேரி குடும்பத்தையும் குழந்தைகளையும் பராமரித்து வந்துள்ளார். சிறுவயதில் எல்லோரையும் போன்று எந்தவித எதிர்பார்ப்போ, எதிர்காலம் பற்றிய கனவோ எதுவும் இல்லாமல் தனது பள்ளிக்கல்வியை திருச்சியிலேயே தொடர்ந்து முடித்தவர், அங்கேயே கல்லூரியிலும் சேர்ந்து படிக்க ஆரம்பித்துள்ளார். முதலாம் ஆண்டு படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில், அவரது குடும்பத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை நடந்தது. அது என்னவென்றால், கவினின் அம்மா மற்றும் பாட்டி இருவரும் சேர்ந்து சீட்டு பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். அப்போது சீட்டு பணத்தை யாரோ ஏமாற்றி எடுத்துச் சென்றுவிட, அந்த பணத்தை இவர்கள்தான் எடுத்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என பணத்தை கொடுத்து ஏமாந்த அனைவரும் கவினின் அம்மா மற்றும் பாட்டி மீது குற்றம் சாட்ட, போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த பிரச்சினை மிகப்பெரிய பூதாகரமாகி, ஒட்டுமொத்த தமிழ் மீடியாவும் அன்று இந்த செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இருந்தும் மன தைரியத்தோடு போராடிய கவினின் குடும்பம், இந்த பிரச்சினையால் மகன் எந்த வகையிலும் பாதித்துவிடக் கூடாது என்று மகனின் கல்லூரி படிப்பை சென்னையில் தொடர சொல்லி அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னைக்கு வந்த கவினும், லயோலா கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க ஆரம்பித்துள்ளார். இங்குதான் அவரது கலையுலக கனவு தொடங்க ஆரம்பித்தது.

கனா காணும் காலங்கள் டு பிக் பாஸ்

2009 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தபோது கல்லூரிக்கு வருகை தந்த ஹலோ எஃப்.எம்., ரேடியோ ஜாக்கி பணிக்காக மாணவர்கள் மத்தியில் ஆடிசன் நடத்தியபோது தேர்வு செய்யப்பட்ட 10 பேர்களில் கவினும் ஒருவராக இருந்தார். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து பணியாற்றத் தொடங்கியவருக்கு அங்கு இருக்கும் பணிச்சூழல் மிகவும் பிடித்து இனி இதுதான் நமது இலக்கு. இனி இந்த கலைத்துறையில் நாம் பெரிதாக ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்று படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, தன் நட்பு வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டு, அந்த நண்பர்கள் மூலமாக ஷாட் பிலிம்ஸில் நடிப்பது, ஏதாவது தொலைக்காட்சி தொடர்களுக்கு ஆடிசன் நடந்தால் அவற்றில் கலந்துகொள்வது என பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அந்த நேரம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் விதமாக, ஒரு மிகப்பெரிய கார் விபத்து ஏற்பட்டு, சாவின் விளிம்பு நிலைக்குச் சென்று திரும்பினார் கவின். பின்னர் சிலகாலம் ஓய்வுக்குப்பிறகு, தனது முயற்சியை கைவிடாமல் மீண்டும் சென்னை வந்து விஜய் தொலைக்காட்சியின் ‘கனா காணும் காலங்கள்’ ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வாகி இது கல்லூரியின் கதை சீசன் 2-ல் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக ஆரம்பித்தவர், பின்னர் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2-ல் சரவண பெருமாள் (வேட்டையன்) என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டின் செல்லப்பிள்ளையாக மாறினார்.


நண்பர்களுடன் நடிகர் கவின் மற்றும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் பங்கேற்ற அழகிய தருணங்கள்

இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பீட்சா’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதேபோன்று ‘இன்று நேற்று நாளை’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்தவர், ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’? படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவராக முதன்மை பாத்திரத்தில் நடித்தார். ஆனால், இப்படம் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படவே என்ன செய்வதென்று தெரியாமல், பேசாமல் சினிமாத்துறையை விட்டு ஒதுங்கிவிடலாம் என்றிருந்த நேரத்தில், தொடர்ந்து நாம் செய்யும் முயற்சி ஒருநாள் வெற்றி பெரும் என்று இயக்குநர் நெல்சன் கொடுத்த ஊக்கத்தில், அவரிடமே உதவி இயக்குநராக சேர்ந்து பணியாற்றி வந்தாராம். இருப்பினும் 3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 2019ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. அந்த சமயத்தில்தான் பிக் பாஸ் சீசன்-3 ல் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்து போட்டியாளராக களமிறங்கியவர், அந்த நிகழ்ச்சியின் வாயிலாக மக்களின் மனங்களை வென்று போட்டியின் இறுதிவரை சென்றார். பின்னர் ஏனோ தெரியவில்லை வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் 5 லட்சத்திற்கான காசோலையை எடுத்துக்கொண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இங்குதான் அவரது வெற்றிப்பயணம் மேலும் மேலும் வளர ஆரம்பித்தது.

வாழ்க்கையின் லிஃப்ட்டாக மாறிய 'டாடா'

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு, அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடியதற்காக பல தளங்களில் விருதுகளை பெற்றுவந்த கவினுக்கு, பட வாய்ப்புகளும் தேடி வர ஆரம்பித்தன. அப்படி அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து நடித்த முதல் படம்தான் ‘லிஃப்ட்’. வினீத் வரபிரசாத் என்பவரின் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக குருபிரசாத் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ஈர்த்திருந்தார். அமானுஷ்யம், பேய் என தமிழ் சினிமாவின் வழக்கமான பின்னணி கதையை கொண்டு சற்று வித்தியாசமான கோணத்தில் படத்தினை உருவாக்கியிருந்த விதம் அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது. மேலும் இப்படத்தில் பிரிட்டோ மைக்கேல் இசையில் இடம்பெற்றிருந்த 'இன்னா மைலு' பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ‘டாடா’ என்ற படத்தில் நடித்தார் கவின். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருந்த இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். உலகத்துல பாதி பிரச்சினைக்கு காரணமே இந்த 'டாடா' தான் என்ற டைட்டிலோடு வெளிவந்த படத்தின் டீசர் அப்போதே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அதன் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது.


நடிகர் கவினின் 'லிஃப்ட்' மற்றும் 'டாடா' பட காட்சிகள்

அந்த அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம், கணேஷ் கே.பாபு என்பவரின் இயக்கத்தில், கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் கவினோடு சேர்ந்து நாயகி அபர்ணா தாஸ், குழந்தையாக வரும் இளன், கவினுக்குத் தோள்கொடுக்கும் பணக்கார நண்பராக நடித்திருந்த இளைஞர், அலுவலக சகாக்களில் ஒருவராக வரும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் மேலும் படத்திற்கு வலு சேர்த்திருப்பார்கள். இதுதவிர விடலை பருவத்தில் பொறுப்பில்லாமல் இருக்கும் இளைஞன், தனித்து வாழ்வது, ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பது ஆகியவற்றின் மூலம் எப்படி பொறுப்பும், சுயசார்பும் மிக்க மனிதனாக உருவெடுக்கிறான் என்பதனை மிக அழகாக படமாக்கி காட்டியிருந்த விதம் அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது. அதுமட்டுமின்றி மணிகண்டனாக வரும் கவினின் எதார்த்தமான நடிப்பும் பார்த்தவர்கள் அனைவரையும் கலங்க வைத்திருந்தது. இதன் மூலம் கவினுக்கெனத் தனி ரசிகர் வட்டம் உருவானது மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் அவரது மதிப்பு உயர்ந்தது.

திருமணத்திற்கு பின் 'ஸ்டார்' ஆன கவின்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கவின் அங்கு சக போட்டியாளராக இருந்த லாஸ்லியாவை காதலிப்பது போல் நடந்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த இவ்விருவரின் காதல் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகின. நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பிறகும் இருவரிடமும் அதுகுறித்து கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால் இருவரும் அது எங்களது தனிப்பட்ட விஷயம். நாங்கள் இப்போது அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று மழுப்பலான பதில்களை கூறிவந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கவில்லை என்றும் கூறினர். பின்னர் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்த கவின், ‘டாடா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது உங்களுக்கு எந்த மாதிரியான மனைவி வர வேண்டும்? அவரிடம் என்ன மாதிரியான குவாலிஃபிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது, எனக்கு அந்த மாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நமக்கு ஒத்துப்போகும் என்று தோன்றினால் திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான் என்று பதில் அளித்திருந்தார். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அன்று தன்னுடன் 30 வருடங்களாக நல்ல தோழியாக எல்லா தருணங்களிலும் பயணித்து வந்த மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமணம் சமூக ஊடகங்களில் வைரலாகியதுடன், பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.


நடிகர் கவினின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு பல படங்களில் பிஸியாக நடித்துவரும் கவின், தற்போது ‘ஸ்டார்’ என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 'பியார் பிரேமா காதல்' பட புகழ் இயக்குநர் இளன் என்பவர் இப்படத்தினை இயக்கி வருகிறார். கவின் - இளன் கூட்டணியில் உருவாகும் 'ஸ்டார்' படத்தில் அதிதி போஹன்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இப்பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். மதன்கார்க்கி எழுதி, துள்ளல் இசையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ளார். “ரோஜா ரோஜா நீட்டவில்ல.. ஆனாலும் நாங்க ஸ்டாருடா., ராஜா ராஜா மியூசிக் இல்ல.. ஆனாலும் நாங்க ஸ்டாருடா..’, ‘இன்ட்ரோ யாரும் பாடல ஆனாலும் நாங்க ஹீரோடா’, போன்ற வரிகள் நம்மை கவனிக்க வைக்கின்றன. ஜாலியான ‘வைப்’ பாடலான இப்பாடலில் கவினின் நடனம், உடல்மொழி ஆகியவை மிகவும் ரசிக்க வைக்கும்படியாக உள்ளது. அன்று ஒரு சாதாரண கல்லூரி மாணவனாக 'கனா காணும் காலங்கள்' சீரியலில் தனது பயணத்தை துவங்கி இன்று நடிப்பிலும், நடனத்திலும் அசத்தி வரும் கவின், தற்போது நடித்து வரும் 'ஸ்டார்' படம் போலவே மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக பிரகாசிக்க நாம் வாழ்த்தலாம் .

Updated On 26 Dec 2023 1:00 AM IST
ராணி

ராணி

Next Story