இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சூரியனை நெருங்கிட முயற்சிக்கும் ஃபீனிக்ஸ் பறவை போல நானும் முயற்சிக்கிறேன்... நான் பொசுங்கி கீழே விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுவேன். இந்த வரிகளை கேட்ட உடனேயே நமக்கெல்லாம் முதலில் நினைவிற்கு வரக்கூடிய நபர் இவராகத்தான் இருக்கும். காரணம் இவர் தொடாத உச்சமும் இல்லை, வீழாத பள்ளமும் இல்லை. வீரத்தை பெயரிலும், விவேகத்தை செயலிலும் கொண்ட நடிகராக வலம்வரும் இவர், கமலுக்கு இணையான நடிப்பையும், ரஜினிக்கு நிகரான மாஸையும் திரையில் காட்டுவதில் வல்லவர். சொல்லப்போனால் இவரும் ஒரு எம்.ஜி.ஆர் தான். காரணம் அவரை போலவே திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் இவருக்கும் அடையாளம் இங்கு கிடைத்தது. தமிழ் திரையுலகில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு, எந்த வேடங்களை ஏற்று நடித்தாலும் அதில் அப்படியே பொருந்திப் போய்விடும் பெருமைமிகு கலைஞனான விக்ரம், வருகிற ஏப்ரல் 17 அன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அந்த வகையில் அவரை சிறப்பிக்கும் விதமாக இந்த தொகுப்பில் விக்ரமின் விடாமுயற்சி குணம் குறித்தும், அவர் கண்ட வெற்றி தோல்விகள் குறித்தும், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் ‘வீர தீர சூரன்’ ஆக எப்படி வலம் வருகிறார் என்பது குறித்தும் விரிவாக இங்கே காணலாம்.

விடா முயற்சி நாயகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவரது தந்தை ஜான் விக்டர், திரைப்பட நடிகரும் ஆங்கில மொழி ஆசிரியரும் ஆவார். அதேபோல் இவரது தாயார் ராஜேஸ்வரி ஒரு துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றியவர். ஓரளவுக்கு கலைத் துறையுடன் நெருக்கமான குடும்பப் பின்னணியை கொண்டிருந்தாலும், துவக்கத்தில் விக்ரம் தனது கல்விக்கே முதன்மை அளித்தார். சென்னை டான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், சென்னை லயோலா கல்லூரியில் இங்கிலீஷ் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அதற்கு பிறகு MBA படிக்க விரும்பினாலும், அவரது கலை ஆர்வம் அதனை தடுத்து திரையுலகிற்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. இருப்பினும் துவக்கத்தில் திரைப்படத் துறையில் நுழைவதற்காக விக்ரம் நீண்ட காலம் கடுமையாக போராடினார். இதற்காகவே மாடலிங் மற்றும் விளம்பரங்களில் தோன்றி பரிச்சயமான முகமாகவும் மாறினார். இந்த சூழ்நிலையில்தான் 1990ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விக்ரம். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தோல்வியையே சந்தித்தது. தொடர்ந்து பி.சி. ஸ்ரீராம், விக்ரமன், எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இயக்கிய படங்களில் நடித்தும், எதிர்பார்த்த வெற்றியைப் பெற விக்ரமுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது.


என் காதல் கண்மணி பட போஸ்டர் மற்றும் தங்கலான் கெட்டப்பில் நடிகர் விக்ரம்

பின்னர் ஒருகட்டத்தில் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக “விக்ரம்” என மாற்றிய பிறகும் கூட அவரின் வாழ்க்கையில் எந்த ஒரு திருப்பமும் ஏற்படவில்லை. இந்த நேரத்தில் ஒரு மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய விக்ரம், பல மாதங்கள் படுக்கையிலேயே கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் மருத்துவச் செலவுகள் மற்றும் சிகிச்சைகள் அவரை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கிய போதிலும், தன் கனவுகளை துறக்காமல் தொடர்ந்து போராடினார் விக்ரம். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த காலகட்டத்தில், தனது தனித்துவமான குரலுக்கு கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி டப்பிங் கலைஞராக மாறினார். இதனால் பல ஹீரோக்களின் கதாபாத்திரங்களுக்கு தன் குரல் மூலம் உயிர் கொடுத்துவந்த விக்ரம், அதிலும் தனது திறமையை நிரூபித்தார். இப்படி பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து பயணித்து வந்த சமயத்தில்தான் 1999 ஆம் ஆண்டு, இயக்குநர் பாலா இயக்கிய ‘சேது’ திரைப்படம் விக்ரமின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. இப்படத்திற்காக தனது உடல் தோற்றத்தை மாற்றி, முழு ஈடுபாட்டுடன் நடித்த விக்ரம், சீயான் கதாபாத்திரத்தை காலத்தால் மறக்க முடியாத காவிய தோற்றமாக மாற்றினார். மேலும் ‘சேது’ திரைப்படம் தேசிய அளவில் அவருக்கு புகழையும், ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்ததோடு, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக அவரை உயர்த்தியது.


'சேது' சியான் மற்றும் 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' விக்ரம்

என்றுமே நடிப்பின் சிகரம்

‘சேது’ திரைப்பட வெற்றிக்கு பிறகு, விக்ரம் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட வகை கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது சினிமா வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்துக் கொள்வது தவறு என்பதை உணர்ந்தார் விக்ரம். இந்த மாற்றத்திற்கு பிறகு காதல், குடும்பம், ஆக்ஷன், திரில்லர் என பலவகை படங்களில், சவாலான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையை அவருக்கு உருவாக்கியது. 2001ல் வெளியான தில் திரைப்படம், விக்ரமை மாஸ் ஹீரோவாக மாற்றியது. அதன்பின் ‘தூள்’, ‘ஜெமினி’, ‘சாமி’ போன்ற படங்களும் அவரை சூப்பர் ஹீரோவாக மாற்ற, அவர் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றார். ‘சாமி‘ படத்தில் அவர் ஏற்ற போலீஸ் வேடம், மாசாகவும் அதேநேரம் நேர்மையை பின்பற்றும் அதிகாரியின் தன்மையை வெளிப்படுத்திய விதத்தில் கிளாஸாகவும் அமைந்த விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதேபோல் ‘அந்நியன்’ திரைப்படத்தில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என்ற மூன்று வேறுபட்ட பாத்திரங்களை தனித்துவமாகவும் நம்பவைக்கும் விதமாகவும் நடித்து அசத்தியிருந்தார். குறிப்பாக இப்படத்தில் அவர் வெளிப்படுத்திய முகபாவனை, குரல் வித்தியாசம் உடல்மொழி ஆகியவை பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. அதேபோல் இதற்கு முன் வெளிவந்த ‘பிதாமகன்’ படத்தில் சுடுகாட்டில் வளர்ந்த பெரியளவில் பேசாத மனிதராக நடித்த விக்ரம், மௌனத்தின் வழியே உணர்வுகளை வெளிப்படுத்தி பலரையும் கலங்க வைத்திருந்தார். இந்த படத்திற்காக விக்ரமிற்கு தேசிய விருதும் கிடைத்தது.


'பிதாமகன்' சித்தன் மற்றும் '10 எண்றதுக்குள்ள' ஜேம்ஸ் பாண்ட் விக்ரம்

மேலும் ‘தெய்வத் திருமகள்’ படத்தில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம், அறிவுத்திறன் குறைவுடன் குழந்தைப் போல் வந்து, தன் மகளுக்கான அன்பை நிரூபிக்க சமூகத்தோடும் நீதிமன்றத்தோடும் போராடி தூய்மையான இதயத்தின் பாசத்தை நிரூபித்திருப்பார். அப்படிப்பட்ட அதே விக்ரம் மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்தில் வில்லனாக தோன்றி ஆழமான மனநிலைகள், வெளிப்பாடுகள், உரையாடல்கள் மூலம் நம்மை பிரம்மிக்கவும் வைத்திருந்தார். பின் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் ‘ஐ’ திரைப்படத்தில் அவர் மேற்கொண்ட உடல் மாற்றமும், மெனக்கெடல்களும் இதுவரை இந்திய சினிமாவில் எவரும் செய்திடாத பெரும் சாதனை என்றே சொல்லலாம். இந்த படத்தில் அவர் மூன்று வேறுபட்ட தோற்றங்களிலும், மூன்று தனித்துவமிக்க மனநிலைகளிலும் நடித்திருப்பார்: ஒரு ஆணழகனாகவும், சாமானிய மாடலாகவும், ஒரு சூழலில் நோயினால் பாதிக்கப்பட்ட வினோத மனிதனாகவும் என வரும் விக்ரம், அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்ததோடு, அதற்காக அவர் செய்திருந்த உடல் மாற்றங்கள் ஆச்சரியத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இருந்தும் இப்படம் எதிர்பார்த்ததை விட சுமாரான வெற்றியையே பெற்றது. இதேபோல் ‘மஜா’ , ‘கிங்’, ‘தாண்டவம்’, ‘ராஜாபாட்டை’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘சாமி ஸ்கொயர்’, ‘ஸ்கெட்ச்’ என பல படங்கள் விக்ரமிற்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், அதற்காக ஒருநாளும் மனசோர்வடைந்து நின்றுவிடாத விக்ரம், இப்போதும் தொடர்ந்து ஓடி கொண்டேதான் இருக்கிறார்.

நிஜமான ‘வீர தீர சூரன்’


'வீர தீர சூரன்' காளியாக ஆக்ஷனில் கலக்கிய விக்ரம்

‘கடாரம் கொண்டான்’ படத்தில் மவுனமான தோற்றத்தில் வந்து உளவாளியாக அசத்தல், ‘கோப்ரா’ படத்தில் ஏழு வேடங்கள் ஏற்று எதிர்பார்ப்பை பொய்யாகிய தருணம் என தனது பயணத்தில் எப்போதுமே ஏற்ற இறக்கங்களை சந்தித்துவரும் விக்ரம், மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தில் ‘ஆதித்ய கரிகாலன்’ எனும் வீரனாக வந்து கோபம், காதல், தவிப்பு, போர் போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்தி மீண்டும் தன்னை நிரூபித்திருந்தார். விக்ரமின் திரை வாழ்வில் முக்கியமான மைல் கல்லாக அமைந்த 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களுக்கு பிறகு சமீபகாலமாக விக்ரம் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மகான்’ படத்தில் தனது மகனுடன் இணைந்து நடித்த அவர், சட்டம், மதம், வாழ்க்கை குறித்து வியக்க வைக்கும் உளவியல் அடிப்படையிலான ஒரு மனிதனாக மாறி ரசிக்க வைத்திருந்தார். அதேபோல் ப.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் வறுமை, வலி, புரட்சிக்கு இடையிலான கதையமைப்பில், ஒரு சக்தி வாய்ந்த சமூக போராளியாக தோன்றி தன் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருந்தார். ஏன் இப்போதும் இயக்குநர் அருண்குமாரின் 'வீர தீர சூரன்' படத்தில் இன்னொரு உருமாற்றத்தின் வடிவமாக வந்து, ஆக்ஷனிலும் அசத்தி வெற்றி கண்டுள்ள விக்ரம், அடுத்ததாக ‘மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஷ்வினுடன் இணைந்து ஒரு புதிய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இப்படி எத்தனை படங்கள்! எத்தனை வேடங்கள்! எத்தனை உருவங்கள்! என்றாலும், விக்ரம் என்ற நடிகரின் உண்மையான புகழ் மற்றும் அவரது திறமைக்கான முழுமையான பாராட்டு இன்றுவரை கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் விக்ரம் என்றால், வெறும் ஒரு நடிகர் பெயர் அல்ல. அது ஒரு தன்னம்பிக்கை. உழைப்பின் அடையாளம் என்பதை தனது ஒவ்வொரு படங்களின் வாயிலாகவும் நிரூபித்து வரும் விக்ரம், இன்று தமிழ் சினிமாவின் வரலாற்றில் காலத்தை வென்ற ஒரு மிகச் சிறந்த கலைஞனாக மாறி நிற்கிறார். இப்படிப்பட்ட மிகச் சிறந்த நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறது ராணி.

Updated On 15 April 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story