இன்று பெரும்பாலான வீடுகளில் மக்கள் அதிகம் விரும்பி பார்த்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரதானமாக இருப்பது டிவி தொடர்கள்தான். அதிலும் குறிப்பாக, யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் வளர்ந்து எண்டெர்டெயின்மென்ட்டுக்கான விஷயங்கள் அதிகரித்திருந்தாலும் கூட மக்கள் தேடி சென்று பார்ப்பதும் தங்களுக்கு விருப்பமான தொடர்களைத்தான். அப்படி அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த சீரியல்களில் அன்றைய 90-கள் தொடங்கி இன்றைய 2கே வரை மனம் கவர்ந்த நாயகிகள் பலர் வந்து இருந்தாலும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பது நடிகை மீனா குமாரிதான். பெரிய திரையில் தன் திரைப்பயணத்தை தொடங்கி பிறகு ‘மர்ம தேசம்’ தொடர் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட 25-ஆண்டுகளுக்கும் மேலாக அதே துறையில் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார். இன்றும் கயல் சீரியலில் கயலின் அம்மா மீனாட்சியாக திரையில் வந்து தினம்தோறும் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் மீனா குமாரியின் நேர்காணல் தொகுப்பை ஏற்கனவே இரண்டு பகுதிகளாக பார்த்திருக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியை இந்த கட்டுரையில் காணலாம்.
கயலின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒத்துக் கொண்டீர்கள்? அந்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?
கயல் சீரியலில் ஹீரோயினுக்கு அம்மா. நீங்கள் இருவரும்தான் இந்த தொடரில் மெயின். உங்கள் இருவரை வைத்துதான் கதையே நகர போகிறது. அதிலும் நீங்கள் மிகவும் சாதுவான ஒரு அம்மா. உங்கள் பெண்ணாக வரும் ஹீரோயின் கொஞ்சம் துணிச்சலான பெண்ணாக உங்களால் பேச முடியாததை எல்லாம் அவர் பேசுவார் என்று சொல்லியே என்னை சம்மதிக்க வைத்து விட்டார்கள். அதுவரை ஹீரோயினுக்கு மட்டும்தான் அம்மா என்று நினைப்பிலேயே இருந்தேன். பிறகுதான் ஐந்து பேருக்கு அம்மா என்பதே தெரிய வந்தது. சரி, ஓகே சொன்ன பிறகு ஒருத்தருக்கு அம்மா என்றால் என்ன? ஐந்து பேருக்கு அம்மா என்றால் என்ன? என்று நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்படித்தான் கயல் சீரியலில் எனது காமாட்சி வேடம் ஆரம்பித்தது.
கயல் சீரியலில் காமாட்சியாக மீனா குமாரி
தமிழ் திரையுலகில் இத்தனை ஆண்டுகளில் நிறைய மூத்த நடிகர், நடிகையர் கூட இணைந்து பணியாற்றி இருக்கிறீர்கள்? இதில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்றால் யாரை கூறுவீர்கள்?
நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவள். அதனால், யாருடனும் பெரிதாக பேசமாட்டேன். படப்பிடிப்பு தளங்களில் நான் உண்டு, என் வேலை உண்டு என்று அமைதியாக தனியாக இருப்பேன். அதற்காக யாரிடமும் பேசவே மாட்டேன் என்பதெல்லாம் கிடையாது. படப்பிடிப்பு தருணங்களில் மட்டும் பேசுவேன். ஆனால், மற்ற நேரங்களில் நண்பர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் வெளியில் செல்வதோ, நெருக்கமாக பழகுவதோ, அவர்களுடன் நேரம் செலவிடுவதோ எதுவும் கிடையாது. அதற்கான நேரமும் எனக்கு இருந்தது இல்லை. இப்போது கொஞ்சம் அதையெல்லாம் நினைத்து வருத்தப்படுகிறேன். அப்போவே இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியாக நமது வாழ்க்கையை என்ஜாய் செய்து இருந்திருக்கலாமோ என்று.
உங்கள் பள்ளி பருவ அனுபவங்கள் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?
என்னுடைய அப்பா பட்டய கணக்காளர். அதனால் நானும் அவரை போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காகவே பொறுப்பான பிள்ளையாக பள்ளிக்கு செல்வது, படிப்பது என்று இருந்தேன். படிப்பை தாண்டி வேறு எந்த விஷயங்களிலும் நான் கவனம் செலுத்தியது இல்லை. அப்படி இருந்த எனக்கு 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதுதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்பா முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பிறகு என்னுடைய கசின் அதாவது அக்கா முறை, உனக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். நானும் ஓகே சொல்லவும் அப்பாவிடம் பேசி நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன் என்று எப்படியோ சம்மதம் வாங்கிவிட்டார்.
நாணயம் சீரியலில் மீனா குமாரி
உங்களை திரையில் முதல் முறையாக பார்த்த போது வீட்டில் எல்லோரும் சொன்னது என்ன?
அவரகள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். அதேநேரம் எனது எதிர்காலம் குறித்து கவலைப்படவும் செய்தார்கள். படிப்பும் இல்லாமல் போய்விட்டால் இன்னும் சிரமமாகிவிடுமோ என்றெல்லாம் மிகவும் யோசித்து வருத்தப்பட்டார்கள். ஆனால், இப்போதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.
இதுவரை உங்களை பற்றி ஒரு நெகடிவ் கமெண்ட் கூட நாங்கள் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை? அது எப்படி உங்களால் சாத்தியப்படுத்த முடிந்தது?
அதற்கு முழுமுதல் காரணம் என்னுடைய வீட்டில் உள்ளர்வர்கள்தான். நான் எங்கு சென்றாலும் என்னை சுற்றி எப்போதும் அவர்கள் இருப்பார்கள். எனக்கு பிரச்சினை வருவதுபோல் இருந்தாலும் அதை வரவிடாமல் அவர்களே சரி செய்து விடுவார்கள். நான் யாரிடமும் நேரடியாக பேச வேண்டி இருக்காது. என்னுடைய வேலையே. போய் நடிப்பது, மீண்டும் வீட்டிற்கு வருவது அவ்வளவுதான். நண்பர்கள் வட்டம் என்ற ஒன்று இருந்திருந்தால் கூட ஏதாவது ஒன்றில் கமிட் ஆகியிருப்போம். அதுவும் கிடையாது. அதனாலேயே அப்படியே எனது சினிமா வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் பிரச்சினை இல்லாமல் நகர்ந்து விட்டது. திருமணத்திற்கு பிறகும் அது அப்படியே தொடர்கிறது.
'ஸ்ரீராமன் ஸ்ரீதேவி' தொடரில் அழகு பதுமையாக...
எப்படி அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க வந்த பிறகும் கூட அன்று பத்ரி படத்தில் பார்த்த அனிதா அண்ணியாகவே இன்றும் காட்சி அளிக்கிறீங்க?
நான் அப்படி இருப்பதால்தான் கயல் சீரியலில் கூட இன்னும் குழந்தை மாதிரியே முகம் வச்சுக்கிட்டு நடிக்கிறீங்களே என்று வசனம் எழுதி பெரியம்மா கதாபாத்திரத்தை வைத்து பால் வடியிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டால் நம்பிடுவோமா என்று திட்ட வைக்கிறாங்க. அது கடவுள் கொடுத்த வரம் என்றுதான் நான் சொல்லுவேன்.
கயல் டீமில் உள்ளவர்கள் பற்றி கூற முடியுமா? புதிய தலைமுறை நடிகர்கள் உடன் நடிப்பது எப்படி இருக்கிறது?
நான் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த நேரங்களில் நான் யாரிடமும் பேச மாட்டேன். ஆனால், இப்போது இந்த டீமில் எல்லோரிடமும் நான் சகஜமாக பேசுகிறேன். கயலும் என்னுடன் நன்றாக பேசுவாள். மற்ற நபர்களும் என்னிடம் இயல்பாக பேசுவார்கள். நிறைய நிகழ்வுகளை, தகவல்களை பகிர்ந்து கொள்வோம். அதுவொரு ஜாலியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.
சுமங்கலியுடன் நடிப்பது எப்படி இருக்கிறது. திரையில் எலியும், பூனையுமாக இருக்கிறீர்கள்? நிஜத்தில் எப்படி?
சுமங்கலி மேடை நாடக காலங்களில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். திரையில் சண்டை போட்டுக்கொள்ளும் நாங்கள் நிஜத்தில் அப்படி கிடையாது. இருவரும் ஒரே அறையில்தான் தூங்குகிறோம். ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். குடும்ப விஷயங்கள் குறித்து நிறைய பேசுவோம்.
வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கு மீனா குமாரி
வெளியில் உங்களுக்கு கிடைக்கும் பாராட்டு எப்படி இருக்கிறது?
கயல் தொடரில் ஏதோவொரு அம்மா வேடத்தில் ஒரு நான்கு, ஐந்து எபிசோடு வந்தாங்க, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வச்சாங்க என்று இல்லாமல் எனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு மகளுடன் அம்மாவின் பயணம் எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டிட்டு வராங்க. கயல் சீரியல் இவ்வளவு வெற்றிகரமாக செல்வதற்கு இதில் நடிக்கும் எல்லோரும்தான் காரணம். எல்லோருமே நன்றாக நடிக்கிறார்கள். இன்று கயல் காமாட்சியாக, கயலுக்கு அம்மாவாக நிறைய பேர் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் கொடுக்கும் ஆதரவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் தலைமுறை நடிகர்களுக்கும், இப்போதுள்ள நடிகர்களுக்கும் இடையில் நீங்கள் என்ன வித்தியாசம் பார்க்கிறீர்கள்?
இப்போது நடிக்க வருபவர்கள் எல்லோரும் மிகவும் கூலாக இருக்கிறார்கள். மல்டி டேலன்டடாக இருக்கிறார்கள். இந்த வேலை இல்லை என்றால் இன்னொரு வேலை என்று மிகவும் ஜாலியாக வாழ்க்கையை எளிதாக கடத்தி செல்கிறார்கள். ஆனால் எங்களுடைய காலத்தில் அப்படி இல்லை. ஒருவித பயத்துடனேயே வாழ்க்கை சென்றது. அதற்கு காரணம், எந்தவித கிசுகிசுக்களிலும் சிக்கிவிடக்கூடாது. நாம் இதுதான் வேலை என்று முடிவு செய்து வந்துவிட்டோம். அதனால் இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடித்துவிட்டு போய்விட வேண்டும். நன்றாக நடித்துவிட வேண்டும் என்றெல்லாம் யோசித்து செயல்பட்டோம். இப்போது நிறைய படித்தவர்கள் இந்த துறைக்குள் வருகிறார்கள். வந்து வெற்றி கிடைத்தால் தொடருவோம். இல்லை என்றால் வேறு வேலையை பார்த்துக்கொண்டு சென்று விடுவோம் என்று கடந்து போய்விடுகிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் சம்பாதித்துதான் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை. குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்களாக நல்ல வேலையில் இருப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் உனக்கு பிடித்ததை செய் என்று அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுத்து விடுகிறார்கள். என்னுடைய காலத்தில் எல்லாம் என்னுடைய அப்பாவே எதிர்ப்பு தெரிவித்தார். சினிமா என்றால் ஒருவித பயம் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. விருப்பம் இருந்தால் நடிக்கிறார்கள். மீடியாக்களை நேரடியாக சந்தித்து பேசுகிறார்கள். அவர்கள் பிரச்சினையை அவர்களே சந்தித்து சரி செய்து கொள்கிறார்கள். எனக்கு தெரிந்து நான் அப்படி இல்லை. எப்போதும் என்னை சுற்றி குடும்பத்தில் யாராவது நான்கு பேர் இருப்பார்கள். நான் அப்படியே பழக்கப்பட்டுவிட்டேன்.
நடிகை வடிவுக்கரசி மற்றும் கயல் குழுவினருடன் மீனா குமாரி
வேறு சீரியல்கள் ஏதும் கமிட்டாகி இருக்கீங்களா? அடுத்து உங்களை பெரிய திரையிலும் பார்க்க வாய்ப்புள்ளதா?
தமிழில் கயல் மட்டும்தான். தெலுங்கில் ஒரு சீரியல் இப்போதுதான் முடிந்தது. அடுத்த சீரியலுக்கு ஒப்புக்கொள்ள இருக்கிறேன். சினிமாவிலும் எனக்கு ஏற்ற மாதிரியான வேடங்கள் வந்தால் நடிப்பேன். பார்ப்போம் யாருக்கு என்ன எழுதியிருக்கிறது என்று.