இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(23.11.1980 மற்றும் 30.11.1980 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

குரூப் போட்டோ என்றதும், முதலில் ஷோபா, பல்லவி, ஸ்ரீதர், டைரக்டர் எல்லோரும் நின்றார்கள். பிறகு, இரண்டு இரண்டு பேராக நின்று, படம் எடுக்க வேண்டும் என்றார்கள். பாலுமகேந்திரா, ஷோபாவை தன்னோடு நிற்க வைத்து படம் எடுத்தார். அதைப் பார்த்த கதாநாயகி பல்லவி, "நானும் உங்களோடு நின்று படம் எடுக்க வேண்டும்" என்று பாலுமகேந்திராவிடம் கேட்டாள். அதை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

பல்லவி பிடிவாதம்

பல்லவி மீண்டும் மீண்டும் கேட்கவும், "நான் உன்னோடு படம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை" என்று முகத்தில் அடித்தாற்போல கூறினார், பாலு. "ஷோபாவோடு மட்டும் படம் எடுத்துக்கொண்டீர்களே!” என்று பல்லவி கேட்டாள். உடனே பாலு, "ஷோபா என் “நீஸ்” (அண்ணன் மகள்) அதனால் எடுத்துக்கொண்டேன். நீயும் நானும் பிறகு எடுத்துக் கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு, அப்புறமாகப் போய்விட்டார். அதனால் கோபம் அடைந்த பல்லவி, "நீங்கள் இல்லாவிட்டால் என்ன? நான் டைரக்டரோடு எடுத்துக்கொள்கிறேன்” என்று டைரக்டர் சிங்கீதம் சீனிவாசராவோடு நின்று படம் பிடித்துக்கொண்டாள்.

சுத்தமோசம்

ஷோபா என்னிடம் வந்து, "அந்த ஆள்(பாலு) இவ்வளவு மோசமாக நடந்திருக்கக் கூடாது. பல்லவி ஆசைப்பட்டு கேட்டாள். அவளோடு நின்று படம் எடுத்தால் என்ன?" என்று முணுமுணுத்தாள். "நீ பேசாதே! நமக்கு எதற்கு வம்பு" என்று ஷோபாவை நான் சமாதானப்படுத்தினேன். சிந்தப்பள்ளியில் மாம்பழம் மலிவாகக் கிடைத்தது. நான் வீட்டுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க இரண்டு கூடை பழம் வாங்கி வைத்து இருந்தேன். துணி, சாமான்கள் கொண்டுபோன இரண்டு சூட்கேசும் இருந்தது. நாங்கள் புறப்படவும், பாலு என்னிடம் வந்தார். "ஒரு கூடை மாம்பழம் இருக்கிறது. வீட்டில் கொண்டு போய் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். “ஓ...! அதனால் என்ன! கொடுங்கள். கொண்டு போய் கொடுக்கிறேன்" என்று நான் கூடையை வாங்கினேன். நான் பழக் கூடையை வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்றதும். ஷோபா என்னை கடிந்துகொண்டாள். "நாமே, நமக்கு மேலே லக்கேஜ் வைத்து இருக்கிறோம். அந்த ஆள் சொன்னார் என்பதற்காக உடனே வாங்கி வந்துவிட்டீர்களே! யார் சுமப்பார்கள்?" என்றாள். "நாமா சுமக்கப் போகிறோம். ரயில்தான் கொண்டு போகப் போகிறது” என்று அவளை அமைதிப்படுத்தினேன், நான்.


ஷோபாவின் தோழியான நடிகை பல்லவி

அகிலா

“தரமாருந்தி" படத்துக்குப் பிறகு, பாலுமகேந்திரா மனைவி அகிலாவுக்கும் எங்களுக்கும் இருந்த அறிமுகம் அதிகமானது. பாலுமகேந்திரா அதிகம் வெளியூரில் தங்கிவிடுவதால், அகிலா அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள். சில நாள் எங்கள் வீட்டிலே தங்குவது உண்டு. அகிலாவை ஷோபா “ஆண்டி” (அத்தை) என்று அழைப்பாள்.

சித்தி

ஷோபா மீது நாங்கள் உயிரையே வைத்து இருந்தோம். கண் பார்வையில் வைத்தே அவளை வளர்த்தோம். அவளுக்கு அப்போது, தோழி என்று இருந்தது, என் தங்கை ரமாவும் (ஷோபாவின் சித்தி), உஷாவும்தான். உஷாவின் வீடு, எங்கள் வீட்டுக்கு எதிரே சற்று தள்ளியிருந்தது. வீட்டு வாசலில் நின்று பார்த்தால் உஷா வீடு நன்றாகத் தெரியும். அதனால், உஷா வீட்டுக்கு மட்டும் ஷோபாவை தனியாக அனுப்பி வைப்பேன். திரும்பி வரும்போது, உஷாவும் அவள் அப்பா ரவி மேனனும், ஷோபா கூடவே வந்து, "இந்தாருங்கள் உங்கள் மகளை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம்" என்று கூறிவிட்டு போவார்கள். படப்பிடிப்பு இல்லாத நாட்களில், ஷோபா, ரமா, உஷா மூவரும் சேர்ந்து கோவிலுக்குச் செல்வார்கள். கடைக்குப்போவார்கள்.

மணி என்ன?

ஒருநாள் அப்படி அவர்கள் கோவிலுக்குச் செல்லும்போது, ஒரு பையன் ஷோபாவிடம் பேசவேண்டும் என்பதற்காக "மணி என்ன?" என்று கேட்டு இருக்கிறான். ஷோபா மணி பார்த்துச் சொன்னதும், “இந்தக் காலண்டரை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்” என்று கையில் இருந்த காலண்டரை நீட்டியிருகிறான். ஷோபா, "மைன்ட் யுவர் பிசினஸ்” என்று அவனிடம் சண்டைக்குப் போயிருக்கிறாள். இந்தச் செய்தியை அறிந்ததும், "மூன்று பேரும் சேர்ந்து, கோவிலுக்குச் செல்லக்கூடாது" என்று சொன்னேன். இதனால், மம்மி, எனக்கு சுதந்திரம் கொடுப்பது இல்லை என்பாள், ஷோபா.


"தரமாருந்தி” படத்தின் மூலம் ஷோபாவுக்கு அறிமுகமான பாலுமகேந்திரா

குழந்தை

ஷோபாவுக்கு, குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும்! அப்படி, ஷோபாவின் அன்பை முழுமையாகப் பெற்றவள், சிறுமி சபிதா ஆனந்த். (ஆனால் இப்பொழுது சபிதா சிறுமி அல்ல குமாரி). பழம்பெரும் மலையாள நடிகர் ஜே. ஆர். ஆனந்தின் மகள் சபிதா. ஆள் அழகாக இருப்பாள். ஷோபாவைப் போலவே, குழந்தைப் பருவத்தில் இருந்து மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினாள். தனக்கு தங்கையாகவோ, மகளாகவோ யாராவது நடிக்க வேண்டும் என்றால், சபிதாவை ஷோபா சிபாரிசு செய்வாள்! சபிதா என்னைவிட அழகாகவும் இருக்கிறாள்; நன்றாக நடிக்கவும் செய்கிறாள் என்று ஷோபா அடிக்கடி கூறுவாள். ஷோபா அணிந்து சின்னதாகும் துணிகளை போட்டு கிழிப்பதும் சபிதாதான். "தரமாருந்தி” படத்தின் மூலம், எங்களுக்கும் பாலுமகேந்திராவுக்கும் ஏற்பட்ட அறிமுகம், “கோகிலா” என்ற கன்னடப் படத்தின் மூலம் வலுப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பாலுமகேந்திராவின் மனைவி, அகிலா!

பாலு விரித்த பாசவலை

"கோகிலா" என்ற கன்னடப் படத்தில் முதலில் உன்னிமேரி (தீபா) நடிப்பதாக இருந்தது. பிறகு திடீரென்று உன்னி மேரியை நீக்கிவிட்டு வேறு நடிகையைத் தேடிக்கொண்டு இருந்தார், பாலு மகேந்திரா. அந்த நேரத்தில் பாலு மகேந்தராவின் மனைவி அகிலா அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தாள். அப்படி வரும்பொழுது எல்லாம், ஷோபா! "கோகிலா" படத்தில் உன்னையே கதாநாயகியாகப் போட வேண்டும் என்று உன் அங்கிளிடம் (பாலுமகேந்திரா) கூறி வருகிறேன். டாக்டர் பாத்திரத்துக்கு உன் உடம்பு போதாது என்று அவர் சொல்லுகிறார். அங்கிள் படத்தைத் தொடங்குமுன் உடம்பை தேற்றிக்கொள். "கோகிலா" படத்தில் நீயே கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று அகிலா கூறிக்கொண்டு இருப்பாள். நைலக்ஸ் சேலை கட்டுவதற்குப் பதில் "காட்டன்" சேலை கட்டினால், உடம்பு எடுப்பாகத் தோன்றும் என்று, அகிலா ஆலோசனையும் கூறுவாள்.

பிறகு ஒருநாள், "ஷோபாவுக்கு “காட்டன்" சேலை கட்டி "ஸ்டில்ஸ்" எடுக்க வேண்டும். அனுப்பி வையுங்கள்" என்று அகிலா சொல்லி அனுப்பினாள். அப்போது கூட, ஷோபாவை தனியாக பாலு வீட்டுக்கு அனுப்பவில்லை. என் தங்கை ரமாவும் கூடச் சென்றாள். அதன் பிறகு, எப்போதாவது பாலுமகேந்திராவும் எங்கள் வீட்டுக்கு வருவார். பாலு வந்து வீட்டில் உட்கார்ந்ததும், ஷோபா எழுந்து தோழி ஆஷா வீட்டுக்குச் சென்றுவிடுவாள்.


கேரக்டருக்கு ஏற்றார்போல் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஷோபா

மகள் கையில்

ஒருநாள் காலையில் பாலுமகேந்திரா எங்கள் வீட்டுக்கு வந்தார். "கோகிலா" படத்தில் ஷோபாதான் கதாநாயகி. இந்தாருங்கள் "அட்வான்ஸ்" என்று, 1001 ரூபாயை என் கையில் கொடுத்தார். நான் படத்துக்கு எப்பொழுது பணம் வாங்கினாலும், அதை அப்படியே ஷோபாவிடம் கொடுப்பேன். அவள் அதை மீண்டும் என்னிடம் தருவாள். அதில் இருந்து ஒரு சிறு தொகையை எடுத்து கோவில் காணிக்கைக்காக வைத்துவிட்டு, மீதிப் பணத்தை பெட்டிக்குள் வைப்பேன். அதுபோலத் தான் அன்றும் செய்தேன். ஷோபா ஏற்கனவே, மலையாளம், தெலுங்கு படத்தில் நடித்து இருந்தாள். கன்னடத்தில் "கோகிலா" தான் முதல் படம். அதனால், "பாலு மகேந்திராவின் காலைத் தொட்டு வணங்கிக்கொள், அம்மா!" என்று ஷோபாவிடம் சொன்னேன். இந்த ஆளுக்கு எல்லாம் அந்த மரியாதை எதற்கு? என்றாள், ஷோபா. முதன் முதலாக கன்னடப் படத்தில் நடிக்கப் போகிறாயே, அதற்காக என்றேன், நான். ஷோபா நேரே பாலு மகேந்திராவிடம் சென்றாள். ''அங்கிள்! என்னை வாழ்த்துங்கள்" என்று அவர் காலைத் தொட்டு வணங்கினாள்.

அகிலா பெருமை

அன்று மாலையில் அகிலா வந்தாள். "கோகிலா" படத்தில் ஷோபா நடிக்கப்போகிற விஷயத்தை நான் அவளிடம் கூறினேன். "எல்லாம் என் சிபாரிசு தான்" என்று பெருமையோடு சொன்னாள், அகிலா. எப்படியோ, ஷோபா, "கோகிலா" படத்தில் நடிக்கத் தொடங்கினாள். அந்தப் படத்தில் நடிக்க ஷோபா உற்சாகமாக ஒப்புக்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது கமலஹாசன்! ஷோபா சின்ன வயதில் இருந்தே கமலஹாசனின் விசறி. "கோகிலா" படத்தில் கமலஹாசன்தான் கதாநாயகன்! தனக்குப் பிடித்த நடிகரோடு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால் ஷோபா மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்! பெங்களூரில் "கோகிலா" படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஷோபாவோடு என் தம்பி ஜோதி (ஷோபாவின் மாமா) சென்று இருந்தான்!

கமல் விளையாட்டு

ஒருநாள், படப்பிடிப்பின்போது, ஷோபாவிடம் வந்து நடிகை பல்லவி பேசிக்கொண்டு இருந்தாள்! உடனே பாலுமகேந்திரா, "படப்பிடிப்புக்கு வந்தால், ஒழுங்காக இருக்க வேண்டும்" என்று ஷோபாவை அதட்டினார். அதில் இருந்து “உம்" ஒன்று இருந்தாள், ஷோபா. கமலஹாசனுக்கு செட்டில் யாரும் உம் என்று இருந்தால் பிடிக்காது. கேலியும் கிண்டலும் பேசி, அழுகிறவர்களையும் சிரிக்க வைத்துவிடுவார். ஷோபாவையும் சிரிக்க வைத்தார். "சினிமாவில் இதெல்லாம் சகஜம். இதற்கெல்லாம் கோபப்படக் கூடாது" என்று, ஆறுதலும் சொன்னார். ஷோபா நிறைய சாப்பிட வேண்டும்; தடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார், கமலஹாசன். அவள் சாப்பாட்டை அள்ளி சாப்பிடாமல் கொரிப்பதைப் பார்த்து, “குழந்தைக்கு நான் சாப்பாடு ஊட்டி விடட்டுமா?” என்று ஷோபாவுக்கு சாப்பாடு ஊட்டப்போவார்.


"கோகிலா" படத்தில் கமலஹாசனுடன் நடிகை ஷோபா

எப்பொழுதும் ஒரே கேலியும் சிரிப்புமாக இருக்கும். ஷோபா கேலி, கிண்டலை நன்றாக ரசிப்பாள். ஆனால், யாராவது “சினிமா மொழி"யில் ஆபாசமாக பேசினால், கோபப்படுவாள். மலையாள சினிமா உலகில், அப்படி செக்ஸியாக பேசி சிரிப்பவர்கள், ஷோபா வருவதைப் பார்த்தால் தாங்கள் பெற்ற மகளோ, அல்லது ஒரு சகோதரியோ வருவதாக நினைத்து, உடனே பேச்சை மாற்றி விடுவார்கள். ஒருநாள், கமலஹாசனின் கேலி பேச்சில், ஆபாசம் கலந்துவிட்டது. ஷோபா உடனே கமலஹாசனை தனியாக அழைத்து, "கமல்! நான் உங்கள் ரசிகைதான், அதற்காக இந்த ஆபாச கிண்டல் வேண்டாம். என்னிடம் பேசும்போது, ஒரு தங்கையிடம் பேசுவது போல பேசுங்கள்” என்று கேட்டுக்கொண்டாள். ஷோபா! நீ நான் மதிக்கிற நடிகை. உன்னுடைய நேர்மையான குணம் எனக்கு நிரம்ப பிடித்து இருக்கிறது என்று அவளை பாராட்டினார், கமல். "கோகிலா" படத்துக்குப் பிறகு ஷோபாவை எங்கே பார்த்தாலும், "கோகி மாமி" என்றே கமல் அழைப்பார்.

மகள்

"கோகிலா" படப்பிடிப்பின்போது, மற்றவர்களை அழைப்பது போல பாலு மகேந்திராவையும் ஷோபா “அங்கிள்” என்று அழைத்தாள். பாலு மற்றவர்களிடம் சொல்லும் பொழுது ஷோபாவை “என் மகள்” என்பார். அதை உண்மையான பாசம் என்றே நாங்கள் நம்பினோம். அவளைப் பிடிக்க அவர் விரித்த பாசவலை என்பதை அப்போது நாங்கள் அறியவில்லை. பாலுவின் "மகள்" உறவை நாங்கள் நம்பியதற்கு காரணமும் இருந்தது. பாலுமகேந்திராவுக்கு ஒரு மகன்தான் இருந்தான். பெண் குழந்தைகள் இல்லை. வயதிலும் அவர் ஷோபா வயதுடைய பெண்ணுக்கு தந்தையாகும் வயதில் இருந்தார். எனவே, "மகள்" என்று ஷோபாவோடு பழகத் தொடங்கிய பாலு மீது நாங்கள் சந்தேகப்படவில்லை.

குழந்தை போல

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்கள் வீட்டுக்கு பாலு வருவார், பேசுவார், போவார். அகிலாவும் குழந்தையோடு வருவாள்; போவாள். ஒரு குழந்தை தந்தையுடன் எப்படி மரியாதையாகப் பழகுமோ, அப்படி ஷோபாவும் பாலுவிடம் பழகத் தொடங்கினாள். இந்த நேரத்தில் கமலஹாசனிடம் இருந்து ஓர் இனிக்கும் செய்தி வந்தது! ஷோபாவைப் பற்றி டைரக்டர் சங்கீதம் சீனிவாசராவிடம் (தரமாருந்தி) டைரக்டர் பாலசந்தர் விசாரித்து இருக்கிறார். பிறகு பெங்களூரில் "கோகிலா" படப்பிடிப்பில் இருந்த கமலஹாசனிடம், "நிழல் நிஜமாகிறது” படத்துக்கு ஷோபாவிடம் கால்ஷீட் வாங்க முடியுமா? என்று கேட்டு இருக்கிறார்! கமல் உடனே ஷோபாவிடம், "யோகம் உன்னைத் தேடி வந்து இருக்கிறது. அம்மாவிடம் சொல்லி, எப்படியாவது பாலசந்தர் படத்துக்கு ''கால்ஷீட்'' கொடுக்கச் சொல்” என்று கூறியிருக்கிறார். ஷோபா பெங்களூரில் இருந்து எனக்கு “டிரங்கால்" செய்தாள். பெங்களூரில் இருந்து ஷோபா திரும்பியதும், நான், என் தம்பி ஜோதி, ஷோபா மூன்று பேரும் பாலசந்தரைப் பார்க்க கலாகேந்திரா ஆபீசுக்குச் சென்றோம். படத்துக்காக, நாங்கள் ஒரு கம்பெனிக்குச் சென்றது அதுவே முதல் முறை. அதற்குக் காரணமும் இருந்தது!

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்….

Updated On 17 Dec 2024 7:37 AM GMT
ராணி

ராணி

Next Story