ஒளிப்பதிவு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக பயணித்து வருபவர்தான் எஸ்.டி.விஜய் மில்டன். ‘காத்திருந்த காதல்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவருக்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது ‘கோலி சோடா’ திரைப்படம். இப்படமே இரண்டு பாகங்களாக உருவான நிலையில், கடைசியாக விஜய் ஆண்டனியை வைத்து ‘மழை பிடிக்காத மனிதன்’ என்றொரு படத்தினை எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து ‘கோலி சோடா ரைசிங்’ என்ற வெப்தொடரை எடுத்து வெற்றிகண்ட விஜய் மில்டன் சமீபத்தில் தன் திரை அனுபவங்கள் குறித்து ராணி நேயர்களுக்கு அளித்திருந்த நேர்காணலின் இரண்டாம் பகுதியை இந்த கட்டுரையில் காணலாம்.
சினிமாவுக்குள் வர வேண்டும் என்ற ஆர்வம் எங்கிருந்து எப்படி வந்தது?
அப்பா ஒரு இயக்குநர். அவரை பார்த்துதான் நானும் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக கல்யாண வீடியோ எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த வீடியோ ரோலை டெவலப்பிங்கிற்காக கொடுக்கச் செல்லும்பொழுது கவரில் மில்டன் என்று பெயர் எழுதி கொடுத்துவிட்டு வருவேன். மீண்டும் டெலிவரி எடுக்கச் செல்லும்பொழுது மில்டன் வரவில்லையா என்று கேட்பார்கள். நான்தான் அந்த மில்டன் என்றால் எனக்கும் அந்த பேருக்கும் சம்பந்தம் இல்லாதது போல் மேலும் கீழும் பார்ப்பார்கள். எனக்கு மில்டன் என்ற பெயரை ஏன் வைத்தீர்கள் என்று அப்பாவிடம் கேட்டேன். அது பாரடைஸ் லாஸ்ட், பாரடைஸ் ரீகெய்ன்ட் என்ற இரண்டு ஃபெமிலியரான புத்தங்களை எழுதிய ஒரு புகழ்பெற்ற ஆங்கில கவிஞரின் பெயர் என்று கூறினார். நானும் அவரைப்போன்று வரவேண்டும் என்றுதான் அந்த பெயரை வைத்திருக்கிறார் அப்பா என்று 6-ஆம் வகுப்பிலேயே கவிதை எழுத ஆரம்பித்தேன். அப்பா நான் சிறுவனாக இருக்கும்போதே நிறைய மேடை நாடகங்கள் நடத்துவார். அதை சென்று பார்ப்பேன். அப்பா மேடையில் ஒரு ஓரத்தில் நின்று ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்குமான டயலாக்கை எடுத்து கொடுப்பார். அது ஒரு பெரிய வேலையாக இருக்கும். இவை அனைத்தையும் சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்ததால் இயக்கத்தின் மீதான ஆர்வம் என்பது அப்போதே இருந்தது. அதில் நான் தெளிவாகவும் இருந்தேன்.
பாலுமகேந்திராவின் சிபாரிசில் திரைப்பட கல்லூரியில் சேர்ந்த விஜய் மில்டன்
அதற்காக நான் சரியாக படிக்க மாட்டேன் என்றெல்லாம் இல்லை. நன்றாக படிக்கக்கூடிய மாணவன்தான். ஆனால் எங்கள் வீட்டில், என்னை மருத்துவர், இன்ஜினியரிங்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. 12-ஆம் வகுப்பு முடித்தவுடனே நான் நேராக திரைப்பட கல்லுரிக்குதான் செல்ல வேண்டும் என்று அப்பாவிடம் சொன்னேன். அப்போதெல்லாம் திரைப்பட கல்லூரி குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாது. எனக்கும் அது எங்கு இருக்கிறது என்று தெரியாது. ஆனால், என்னுடைய அப்பா எதுவும் சொல்லாமல் வா, அது எங்க இருக்குன்னு கேட்டுட்டு போயிட்டு வரலாம் என்று அழைத்து போனார். அங்கு சீட் கிடைப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஆனால், எனக்கு அப்போது தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களாக இருந்த பாலுமகேந்திரா, ஆர்.பி.விஸ்வம், நட்ராஜ் போன்றவர்கள் ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுத்தார்கள். நான் எனக்கு நல்ல மார்க் இருக்கிறது. யாரிடமும் ரெக்கமண்டேஷன் போகாதீர்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். அவரோ, “அதெல்லாம் இல்லை, நீ இந்த வாய்ப்பை தவறவிட்டு விடக்கூடாது” என்று அழைத்து திரிந்து சீட் வாங்கி கொடுத்துவிட்டார். இதில் ரெக்கமண்டேஷனுக்காக ஒவ்வொருவரையாக சென்று சந்தித்த போது பாலுமகேந்திரா உடனான சந்திப்பு மட்டும் சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலுமகேந்திரா
எல்லோரையும் சந்திக்க, என்னுடன் வந்த அப்பா, பாலுமகேந்திராவை சந்திக்க போகும்போது மட்டும் “நீயே தனியாக சென்று பார்த்துவிட்டு வா. அவர் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர். அவரிடம் நான் போய் கேட்க முடியாது. நீயே கேட்டுக்கோ” என்று கூறிவிட்டார். நான் ஒருநாள் காலை 6.30 மணிக்கெல்லாம் அவர் வீட்டு கேட்டை தட்டினேன். அவர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார். சாதாரணமாக ஒரு லுங்கி பனியனில் தலையில் தொப்பி இல்லாமல் நின்று கொண்டிருந்தார். அதனால், எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவரிடமே சென்று நான் சாரை பார்க்கணும் என்று கேட்கவும் பதிலுக்கு அவர் எந்த சாரை பார்க்கணும் என்று கேட்டார். பாலுமகேந்திரா சாரை பார்க்கணும் என்ற உடன் என்ன விஷயமாக என்று கேட்டார். நான், திரைப்பட கல்லூரியில் சேருவதற்கு அவரிடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும். அது தொடர்பாக சந்தித்து பேச வேண்டும் என்று சொல்லவும், சரி போயிட்டு 10 மணிக்கு வா என்று சொல்லி அனுப்பிவிட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த பிறகுதான் எனக்கு சிறு பொறி தட்டியது. ஐயோ தப்பு செய்துவிட்டோமோ. இவ்வளவு நேரம் நாம் பாலு சரிடம்தான் பேசிவிட்டு வந்து இருக்கோமா. அவரது குரல் மாதிரியே இருக்கிறதே என்று. பின்னர், அவர் சொன்னது போல் ஒருவித பயத்துடனேயே 10 மணிக்கு சார் வீட்டுக்கு மீண்டும் சென்றேன். ஆனால், அவர் எதுவும் சொல்லவில்லை. லெட்டர் எழுதி தயாராக வைத்திருந்தார். “ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தி அனுப்பினார். அதன் பிறகு, கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது அவர் எங்கள் திரைப்பட கல்லூரிக்கு வந்திருந்த போதுதான் சந்தித்தேன். அவரது ரெக்கமண்டேஷனில்தான் கல்லூரியில் சேர்ந்தேன் என்பது அவருக்கு அப்போது நியாபகம் இல்லை.
அப்போது நீங்கள் சொல்லவில்லையா உங்கள் அனுமதி கடிதத்தில்தான் இந்த கல்லூரியில் சேர்ந்தேன் என்று?
'காதல்' திரைப்படத்தில் மில்டனின் ஒளிப்பதிவை பாராட்டிய பாலுமகேந்திரா
இல்லை… அப்போது நான் அதுபற்றி அவரிடம் பேச முடியவில்லை. எப்போது மீண்டும் சந்தித்தேன் என்றால் ‘காதல்’ படம் வெளிவந்த பிறகுதான். அப்படத்தில் எனது ஒளிப்பதிவு வேலைகள் மிகவும் பிடித்துப்போய் அழைத்து பேசினார். அந்த சந்திப்பு கூட எப்படி நிகழ்ந்தது என்றால், ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கான பணிகள் சென்று கொண்டிருந்த சமயம், ஒருநாள் இயக்குநர் சேரன் சார் அலுவலத்தில் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு டிவி சேனலில் பாலுமகேந்திரா சாரின் நேர்காணல் போய்க்கொண்டிருந்தது. அந்த நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு என்னை பற்றியும், காதல் படத்தில் எனது கேமரா பணிகள் பற்றியும் பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். அதாவது இந்த படத்தில் நான் பணியாற்றி இருந்தால் என்ன செய்திருப்பேனோ அதைவிட அதிகமாகவே சிறப்பாக பணியாற்றி இருக்கிறான் என்று பேசியிருந்தார். அவரின் அந்த பேச்சை கேட்ட அடுத்த நிமிடமே எனது வண்டியை எடுத்துக்கொண்டு நேராக பாலுமகேந்திரா சாரை பார்க்கச் சென்றுவிட்டேன். அவரிடம், சார் நேர்காணலில் நீங்கள் பேசிய ஒளிப்பதிவாளர் நான்தான். உங்கள் அனுமதி கடிதம் வாங்கிதான் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படித்தேன் என்று சொன்னதும், அப்படியா! என்று மிகவும் சந்தோஷப்பட்டது மட்டுமின்றி நிஜமாகவே நான் உனக்கு லெட்டர் கொடுத்தது எல்லாம் நியாபகம் இல்லை என்று கூறினார். அதன் பிறகு நான் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன். எனக்கு நன்றாக எழுதும் பழக்கம் இருப்பது தெரிந்து நான் எழுதும் கவிதை புத்தகங்களை வாசிப்பது மட்டுமின்றி அவர் எனக்கு நிறைய புத்தகங்களை படிக்க சொல்லி அறிவுறுத்துவார். அப்படி தொடர்ந்து டச்சிலேயே இருக்கும் அளவுக்கு இருவரும் நெருக்கமாகிவிட்டோம்.
படிக்கும் போதே சினிமாவில் ஒளிப்பதிவாளராக உங்கள் பயணத்தை தொடங்கிவிட்டீர்கள். ஒளிப்பதிவு மீதான ஆர்வம் ஏற்பட உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது யார் என்று கூற முடியுமா?
'நாயகன்' படத்தின் மூலம் பலருக்கும் இன்ஸ்பிரேஷனான ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் - விஜய் மில்டன்
அந்த சமயம் எனக்கு மட்டுமில்லை எல்லோருக்குமே இன்ஸ்பிரேஷனாக இருந்தது கண்டிப்பாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் சார்தான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே ‘நாயகன்’ படம் வெளிவந்து விட்டது. அந்த படம்தான் என்னுடைய நேரத்தில்வந்த இயக்குநர்கள் எல்லோருக்குமே மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் மூவி. அதை பார்த்து விட்டுதான் நிறைய பேர் சினிமாவுக்கே வந்து இருப்பார்கள். மணிரத்னம் - பி.சி சார் கூட்டணியில் தொடர்ந்து வந்த ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’ போன்ற படங்கள் அனைத்துமே நம் மனதை ஏதோ செய்யும். அதனால் நான் திரைப்பட கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே பி.சி சாரை தேடிச்சென்று சார் நான் உங்களிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று கேட்டபோது, அவர் அப்படியே பார்த்துவிட்டு ஒருவருடம் கழித்து வா என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு ஒருவருடம் கழித்து சென்று பார்த்தேன். என்னை பார்த்ததும் அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் கல்லூரி இறுதி ஆண்டு முடித்துவிட்டேன். அதற்கிடையில் நான்கு, ஐந்து படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிவிட்டேன் என்று சொன்னதும்; அவ்வளவுதான் டா, பேசாம இனிமே கேமராமேன் ஆகிடு என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு நான் கேமராமேன் வாய்ப்பு தேட ஆரம்பித்து அப்படித்தான் ஒளிப்பதிவாளராக சினிமாவில் களமிறங்கினேன்.
பாலுமகேந்திரா சாரை போலவே, பிசி சாரும் ஒரு தனியார் பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில், இப்போது உள்ள கேமராமேன்களில் உங்களுக்கு பிடிச்சது யாரு என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, சமீபத்தில் ‘காதல்’ படம் பார்த்தேன். அந்த படத்தின் கேமராமேன் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார் என்று கூறினார். அதன் பிறகு நான்தான் அந்த கேமராமேன். பேர் விஜய் மில்டன் என்று சொல்லவும் என்னுடன் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார்.
ஒரு படத்தை பார்க்கும்போது இது பாலுமகேந்திரா படம், பி.சி ஸ்ரீராம் படம் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுடைய தனித்துவம் தெரியும். ஆனால், உங்கள் படங்கள் அப்படியில்லை. கதைக்கு ஏற்றமாதிரி ஒளிப்பதிவு செய்து இருப்பீர்கள். இது எபப்டி சாத்தியமானது?
சில ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் இந்த கேமரா ஒர்க் நம்முடையது என்று தனித்துவமாக தெரிய வேண்டும் என்று சொல்லுவார்கள். நான் எப்போதுமே ஒரு கதை சொல்லி, அதாவது ஸ்டோரி டெல்லர் என்ற அடிப்படையில்தான் எனது பணியை பார்க்கிறேன். ஒருவரின் கதையை பார்வையாளர்களுக்கு கடத்தும்போது இயக்குநர் இடத்தில் இருந்துதான் எனது பார்வையும், கேமரா தொடர்பான வேலைகளும் இருக்கும். அதனால் ஒரு கதைதான் போட்டோகிராஃபி எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு எனது படங்களிலேயே ‘கோலி சோடா’ படத்தில் பணியாற்றிய கேமராமேன்தான் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பதை, பார்த்தவர்கள் யாரும் நம்பமாட்டார்கள்.
விஜய் மில்டனுக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்த 'கோலி சோடா' பாகம் ஒன்று
உங்களுக்கும் இயக்குநர் சேரனுக்குமான உறவு எப்படிப்பட்டது?
ஆட்டோகிராஃப் படத்தில் எனக்கும் சேரனுக்கும் செட்டே ஆகல, இருவரும் நிறைய சண்டை போட்டுக்கொள்வோம் என்று தைரியமாக சொல்ல முடிகிறது என்றால் அந்த அளவுக்கு இருவருமே நல்ல புரிதலோடு இருக்கிறோம் என்று அர்த்தம். படப்பிடிப்பு ஆரம்பித்து முடியும் வரைதான் எங்களுடைய அந்த சண்டை இருக்கும். 6 மணிக்குமேல் நாங்கள் இருவரும் ஜாலியாக சினிமா பற்றியோ அல்லது வேறு ஏதாவது பற்றியோ நிறைய கதைகள் பேசிக்கொண்டிருப்போம். அதனால்தான் நான் இயக்குநராக களமிறங்கும் போது அவர் எனக்கு பிரேக் கொடுத்தார். அப்போது கூட எனது கதையில் தலையிட்டு நிறைய சொல்லுவார். நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். மறுத்து பேசுவேன். சமீபத்தில் வெளிவந்த ‘கோலி சோடா ரைஸ்’ என்ற என்னுடைய வெப் தொடரிலும் அவர் நடித்திருக்கிறார். இப்படி எங்களுக்குள் மாறி மாறி என்ன சண்டை நடந்தாலும் இப்போது வரை எங்கள் உறவு சமூகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இயக்குநர்கள் சேரனும் பாலாஜி சக்திவேலும் எனக்கு நல்ல நண்பர்கள் - விஜய் மில்டன்
அதேபோன்றுதான் காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேலுடனும் எனது உறவு. அவரையும் நிறையவே சீண்டுவேன். ஆனாலும், எங்கள் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருக்கும். யாரையும் முதுகுக்கு பின்னால் குத்தும் பழக்கம் அவருக்கு கிடையாது. மிகவும் அமைதியான நபர். இன்னும் சொல்லப்போனால் குழந்தை மாதிரிதான் அவர். சேரன் சாரிடம் சண்டைபோட்டு 6 மணிக்கு மேல் நண்பராவேன் என்றால், இவரிடம் 5 நிமிடத்தில் சமாதானமாகிவிடுவேன். அவ்வளவுதான் இருவருக்கும் வித்தியாசம். சமீபத்தில் கூட எனக்கு ஃபோன் செய்து “மில்டன், பொதுவாக நான் எடுத்த படங்களை மீண்டும் பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. ஆனால், வழக்கு எண் படம் டிவியில் போட்டார்களே என்று பார்த்தேன். என்னமா படம் வந்துருக்கு. எப்படியெல்லாம் நீ காட்சி படுத்தியிருக்க. எவ்ளோ ஒர்க் பண்ணி இருக்கோம் என்று பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.