தமிழ் திரையுலகின் ஜாம்பவான். அவரது நடிப்பின் மூலம் தமிழகத்தையே கட்டி போட்டவர். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று எண்ணியவர். அரசியலில் தைரியமாக எங்கும் குரல் கொடுத்தவர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நம் கேப்டன் விஜயகாந்த் பற்றி. கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி அன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தியை கேட்டு திரை துறையினர் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழகமும் இடிந்து போனது. அவரது இறுதி சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். ஒட்டுமொத்த தமிழகமுமே விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது. அந்த வகையில், சமீபத்தில் விஜயகாந்தின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் "தி லெகசி ஆஃப் விஜயகாந்த் " என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசன், தேவயானி, ஜெயம்ரவி, ராதா ரவி, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் விஜயகாந்த் செய்த உதவிகளைப் பற்றி நடிகர், நடிகைகள் பேசினர். அதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
கடைநிலை நடிகர்களுக்கு அவர் ஒரு குரலாக இருந்தார் - உலகநாயகன் கமல்ஹாசன்
நடிகர் விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் கேப்டன் இருக்கும் புகைப்படம்
இப்படி நாளை நான் எதிர்பார்க்கவில்லை. அவரை நான் சந்தித்த போது எப்படி அவர் பழகினாரோ அப்படித்தான் அவர் பெரிய நட்சத்திரம் ஆன போதும் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். விஜயராஜ், விஜயகாந்த் பெரிய வித்தியாசம் தெரியாமல் என்னை வைத்து கொண்டது நான் அல்ல அவர். அவரை பற்றி சொல்லவேண்டுமென்றால் பல விமர்சனங்களை அவமானங்களை தாங்கி மேலோங்கி வந்தவர். அதுபோல தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். தான் மேலே வருவது போல் அனைவரும் மேலே வரவேண்டும் என்று எண்ணியவர். அதுமாதிரி ஆரம்ப நடிகர்களுக்கும், கடைநிலை நடிகர்களுக்கும் அவர் ஒரு குரலாக இருந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கு எல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நாம் பார்த்தோம். அது அவர் சேர்த்த சொத்து. அவர் கொடுக்கிறது பலருக்கும் தெரியாது. உங்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறுகின்றேன். 1988-இல் விஜயகாந்தின் பிறந்தநாளன்று தினமணியில் ஒரு செய்தி வெளியானது. என்னவென்றால் இன்ஜினியரிங் சீட்டு கிடைக்காத மூன்று மாணவர்களை பற்றிய செய்திதான் அது. அவர்கள் நல்ல மதிப்பெண் இருந்தும் வசதியில்லாததால் அவர்களால் கல்லூரியில் சேர முடியவில்லை. இதை தினமணி நாளிதழில் படித்த விஜயகாந்த் அந்த மாணவர்களின் கல்வி செலவை ஏற்றார். இது நடந்து 25 வருடங்கள் ஆயிற்று இன்று அந்த இளைஞர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருப்பர். இந்த நிகழ்வை அந்த மாணவர்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள்.
விஜயகாந்த் மறைவின் போது பிரேமலதாவிடம் கமல்ஹாசன் ஆறுதல் கூறிய தருணம்
70, 80 களில் சமூக அரசியல் கோபங்களை எல்லாம் பிரதிபலிக்கும் சினிமாவாக விஜயகாந்த் இருந்தார் என்றால் மிகையாகாது. இரங்கல் கூட்டத்தின் போது கூட அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கூறினேன் "எனக்கு அவரிடம் பிடித்த நல்ல குணங்களில் ஒன்று நியாயமான கோபம்". இன்றைக்கும் கோபம் வந்தால் கிராமத்து இளைஞனை போன்று நாக்கை கடித்து கேக்க வேண்டியதை கேட்டுவிடுவார். அது எந்த அரங்கமாய் இருந்தாலும் அவர் பயப்படமாட்டார். அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவி இருக்கிறது. அதற்கு சாட்சி இங்கிருக்கும் நடிகர்கள். அவர் நடித்த முதல் படம் 'தூரத்து இடிமுழக்கம்' திரைப்படவிழாவிற்கு போக வேண்டிய படம். அங்கிருந்து ஒரு கமர்சியல் ஹீரோவாக பெயர் எடுத்தது அவர் திறமை. ராதா ரவி அவர்கள் பேசும் பொது சொன்னார்கள் "துணை நடிகர்களிடம் கூட எப்படி நடிக்கலாம் என்று கேட்கும் குணம் கொண்டவர் ". இது அவரது எளிய பண்பை காட்டுகிறது. நான் அவருடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன். அங்கு அவர் என்னிடம் காட்டிய அன்பு என்னை வியக்க வைத்தது. தனக்கு பிடிக்காதவர்களை கூட நேரில் அழைத்து பேசிவிடுவார். அந்த தைரியமும் அவருக்கு உண்டு. இந்த மாதிரியான குணாதியசங்களை நாம் எடுத்து கொள்ளலாம், பின்பற்றவும் செய்யலாம். அவர் போல் இல்லையென்று சொல்வது வழக்கம். அவர் போல் இருக்க வேண்டும் என்பதை நாம் முயற்சியாவது செய்வோம். குட்பை விஜயகாந்த், குட்பை கேப்டன்.
அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - நடிகை தேவயாணி
'வால்லரசு' படத்தில் விஜயகாந்துடன் நடிகை தேவயாணி மற்றும் அதே படத்தில் வேறொரு காட்சியில் தேவயாணி
விஜயகாந்த் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் போதுதான் நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினரானேன். அவரே எனக்கு போன் செய்தார். தேவயாணி நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகிடுங்கள் என்று கூறினார். ஒரு தலைவரே ஒரு நடிகரை தனிப்பட்ட முறையில் அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம்! எவ்வளவு நன்றாக இருந்தது நடிகர் சங்கம் அவர் தலைவராய் இருக்கும் பொழுது. இன்றும் நினைவிருக்கிறது அவர் தலைவராய் இருந்தபோது அனைத்து நடிகர்களையும் மதுரைக்கு அழைத்துச்சென்று கார்கில் ஷோ ஒன்று நடத்தினார். கார்கில் போர் நிதி திரட்டுவதற்காக அனைத்து நடிகர்களும் சென்னை- மதுரை ரயிலில் சென்றோம். மிகவும் அருமையான நிகழ்ச்சி அது. அனைத்து நடிகர்களும் ஒரே ரயிலில் ஒரு குடும்பமாக சென்றோம். அது போல் இன்று நடக்குமா?. அது விஜய்காந்த் ஒருவராலே அப்படி ஒரு நிகழ்வு சாத்தியமாகியது. அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை போல் இன்னொரு நிகழ்ச்சியை என்னால் பார்க்க கூட முடியவில்லை. இனிமேலும் முடியாது. அனைவரையும் ஒரு இடத்தில் இனிமேல் சேர்க்க முடியுமா? இது கேள்விக்குறியாக தான் இருக்கிறது?. அது விஜயகாந்தால் மட்டுமே முடிந்தது. ஏனென்றால் அவர் மிகவும் எளிமையான மனிதர். அவருடைய சொந்த கம்பெனியான கேப்டன் சினி கிரியேஷனில் 2 படம் நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. படப்பிடிப்பில் எப்போதும் முதல் ஆளாக உள்ளே இருப்பார். அவரது படப்பிடிப்புகளில் எங்களை நன்கு கவனித்து கொள்வார். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது குடும்பத்தினருக்கு இறைவன் தைரியம் கொடுக்க வேண்டும். அனைத்திற்கும் நன்றி விஜயகாந்த் சார்.
அவரது குணாதிசயங்கள் என்னை வியக்க வைக்கின்றன - நடிகர் கார்த்தி
நிறைய நபர்களை வளர்த்து விட்டிருக்கிறார் நம் கேப்டன் விஜயகாந்த். அவரது குணாதிசயங்களை ஒவ்வொருவரும் சொல்ல சொல்ல மலைப்பாயிருக்கிறது. நம் சரித்திரத்திலும் வரலாற்றிலும்தான் இப்படி மக்கள் இருக்கிறார்கள் என்று படித்திருப்போம். அப்படி நம்முடன் வாழ்ந்த மனிதர் நம் கேப்டன் என்று நினைக்கும்பொழுது ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அவர் இருந்த தமிழ் சினிமாவில் நானும் இருக்கிறேன் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்கு நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை வாழ்ந்து காண்பித்திருக்கிறார். நான் ஒவ்வொரு செயலை செய்யும்பொழுதும் கேப்டனை நினைத்து செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு மனிதன் முற்றும் அன்போடு, பாகுபாடு பார்க்காமல், பணத்தின் மீது ஆசையில்லாமல் நல்லவனாய் இருந்தால் இந்த சமூகம் மதிக்குமா? சமூகம் மதிக்காது என்றுதான் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இப்படி இருந்தால் மக்கள் எப்படி கொண்டாடுவர் என்று வாழ்ந்து காண்பித்திருக்கிறார் நம் கேப்டன். இதனால்தான் இன்றும் எனக்கு மனிதம் மீதும், சமூகத்தின் மீதும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கேப்டன் விஜயகாந்தை நடிகர் கார்த்தி சந்தித்த அழகிய தருணம்
கேப்டன் அளவிற்க்கு ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இன்றுவரைக்கும் இருக்கிறது. அவர் எங்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க்காக இருந்துவிட்டு சென்றுள்ளார். அவரை போல் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் நாங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டுமென்று நினைக்கிறன். அவருடைய ஆசீர்வாதத்தில் சீக்கிரம் நடிகர் சங்க கட்டிடம் முடியும் என்று நம்புகிறேன். கேப்டன் அவர்கள் தராதரம் பார்க்காமல் பழகியிருக்கிறார். அவர் வாழ்ந்த வாழ்க்கையை நான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். கார்கில் நிகழ்ச்சி நடந்து முடிந்து வரும் பொழுது ஒரு ரயிலை நிறுத்தி உள்ளே இருக்கும் நடிகர்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். எப்படி அது சாத்தியம் என்று இன்றளவும் யோசிக்கிறேன். எப்படி அந்த நேரத்தில் உணவை ஏற்பாடு செய்திருப்பார் என்று இன்றும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் இறந்தபோது நிர்வாகிகள் ஊரில் இல்லாமல் போனது மிகப்பெரிய வருத்தம். அப்பாவின் ஆசிர்வாதத்தோடு அவரது இருமகன்களும் பெரிய இடத்திற்கு வரவேண்டும். மக்களுடைய ஆசீர்வாதம் உங்கள் இருவருக்குமே உண்டு. அவரது ஆசீர்வாதத்தில் இந்த நடிகர் சங்கத்தில் நிறைய நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.
குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கமே - விஜயபிரபாகரன்
விஜயபிரபாகரன் தந்தை விஜயகாந்துடன் உள்ள புகைப்படம்
சிறுவயதிலிருந்தே என் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதை விட என் தந்தையைதான் அதிக முறை பார்த்திருப்பேன். கேப்டன் எங்கேயும் செல்லவில்லை நம்முடன்தான் இருக்கிறார். அப்பா இறந்த பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான். இதுவரைக்கும் நானும் என் தம்பியும் எந்த ஒரு நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை. நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இப்படி இருக்கும் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. உண்மையில் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. என்னமோ பேசவேண்டும் என்று நினைத்து கொண்டு வந்தேன். ஆனால் அனைத்தும் உங்கள் அன்பினாலும் பேச்சினாலும் மறந்துவிட்டேன். என் அப்பா எப்போதும் கொடுக்க சொல்லியே பழகிக்கொடுத்துள்ளார். என் அப்பாவின் கனவை நிறைவேற்றவே நானும் என் தம்பியும் இருக்கிறோம். இதை நான் பெருமையுடன் கூறுகிறேன். இந்த 2024-ல் என் அப்பாவின் லட்சியம் கண்டிப்பாக நிறைவேறும். அது என்னவென்று காலம் கண்டிப்பாக பதில் கூறும். பத்து வருட காலம் கேப்டன் உடல்நலம் குன்றி ரொம்ப அவதிப்பட்டார். குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கமே. ஒரு சில யூடியூப் சேனல்கள் பொய்யான தகவலை பரப்புகின்றன. தயவு செய்து அதை நிறுத்திவிடுங்கள். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் நடித்த எல்லா படங்களின் பாடல்களையும் அவர் கேட்டார். இது எனக்கே தெரியாது. எங்களின் டிரைவர் குமார் அண்ணன் தான் எங்களிடம் கூறினார். இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்திய நடிகர் சங்கத்திற்கு நன்றி.