இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான கிராமத்து கதாநாயகியாக 1989 ஆம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 90-களில் பரபரப்பாக பேசப்பட்டவர்தான் நடிகை கனகா. பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகளான இவர் பார்த்தவுடன் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும் படியான அழகாலும், கிராமத்து தேவதையாக பாவாடை தாவணியில் தன் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர். ஒரு புகழ்பெற்ற நடிகையின் மகளாக இருந்தும் ஏனோ தெரியவில்லை இவர் வாழ்க்கை மட்டும் நிறைய மர்ம முடிச்சுகள் நிறைந்ததாகவும், பிரச்சினைகள் உடையதாகவுமே இன்றுவரை இருந்து வருகிறது. கடைசியாக தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்திலும், அதன்பிறகு 2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நரசிம்மம்’ படத்திலும் நடித்திருந்த இவர், பின்னர் திரைத்துறையிலிருந்து முழுமையாக விலகி கனகா என்ன ஆனார் என்று அனைவரும் தேடும் அளவுக்கு, இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை குட்டி பத்மினியுடன் இணைந்து கனகா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு காலம் கனகா எங்கிருந்தார்? எப்படியிருந்தார்? திரையுலகில் இருந்து முழுமையாக விலகியது ஏன்? போன்ற ரசிகர்களிடத்தில் இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கான விடையை இந்த தொகுப்பில் காணலாம்.

அம்மா தந்த அரவணைப்பு

1950 மற்றும் 60களில் ரசிகர்களை தன் நடிப்பால் மகிழ்வித்த அழகு தேவதையான பழம்பெரும் நடிகை தேவிகாவிற்கும், துணை இயக்குநராக அறியப்பட்ட தேவதாஸ் என்பவருக்கும் மகளாக 1973-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்தான் நடிகை கனகா. தனிமையோடுதான் இவரது வாழ்க்கை போராட்டம் இருக்கப்போகிறது என்பதை கடவுள் அவர் கருவில் இருக்கும் போதே கணித்துவிட்டார் போலும். ஏனென்றால் தாய் தேவிகாவின் கருவறையில் இரட்டை குழந்தையாக வளர்ந்த கனகா, தனித்து விடப்பட்டவர் போன்று ஒருவரை இழந்து, தனி ஒருவராகத்தான் இப்பூமியில் பிறந்தார். அம்மாவின் கருவறையில் இருந்து ஆரம்பித்த அந்த பிரிவு என்ற தனிமை, கனகாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிகழ்வுகளில் தொடங்கி தந்தை, அம்மா என தொடர்ந்து இன்றுவரை தொடர்கதையாகத்தான் உள்ளது. கனகா பிறந்து மூன்றரை வயது ஆனபோது, தேவிகா, தேவதாஸ் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் மனமொத்து பிரிந்து விட, இதனால் கனகாவும் தந்தையை பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, முழுக்க முழுக்க அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளர ஆரம்பித்துள்ளார்.


நடிகை தேவிகா மற்றும் மகள் கனகா

அப்படி அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தாலும் தந்தை பாசத்திற்கு ஏங்கிய கனகாவிற்கு, அந்த குழந்தை பருவத்தில் இருந்தே தனது அப்பாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போக, எந்த தந்தை பாசத்திற்கு ஏங்கினாரோ அதே தந்தையை வெறுக்கவும் தொடங்கியுள்ளார். காரணம் சிறுவயதில் இருந்தே அவர் கனகாவுக்கும், தேவிகாவுக்கும் கொடுத்த தொந்தரவுகள் அப்படி. இதனால் மிகவும் மனமுடைந்து போன தேவிகா, மகளின் பாதுகாப்பையும், மனநிலையையும் கருத்தில்கொண்டு பள்ளிக்கு நேரில் சென்று படிப்பதை நிறுத்திவிட்டு, 6 ஆம் வகுப்பிற்கு பிறகு ஆசிரியர்களை ஏற்பாடு செய்து வீட்டிலேயே இருந்து படிக்க வைத்துள்ளார். அதனால் கனகாவுக்கு அம்மா என்ற ஒரு உலகத்தை தாண்டி வெளியுலகம் பற்றிய அனுபவமோ, நண்பர்கள் வட்டமோ இல்லாமல் மிகவும் அமைதியான குழந்தையாக, தாயின் அன்பில் பத்திரமாக வளர்ந்துள்ளார். அப்படி 10ஆம் வகுப்பவரை வீட்டில் இருந்தே படித்து வந்த சமயத்தில்தான் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்துள்ளது.

கரகாட்டக்காரனில் அறிமுகம்

தந்தை தேவதாஸ் கொடுத்த நெருக்கடிகளால் வீட்டில் இருந்தே படித்து வந்த கனகா 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க கேட்டு அழைப்பு வந்துள்ளது. இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு நடிகர் ராமராஜன்தான் படத்தின் நாயகன் என அறிவிக்கப்பட்டபோது, அவருக்கு ஜோடியாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற பேச்சு எழுந்துள்ளது. அப்போது படத்தின் நாயகி வேடத்திற்கு பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் சரியாக இருப்பார் என்ற கருத்தினை நடிகர் ராமராஜன் முன்வைக்க, அதற்கு இயக்குநர் கங்கை அமரனும் ஓகே கூறியுள்ளார் . ஆனால் ராமராஜன் இன்னொரு தகவலையும் அங்கு தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் நான்கு வருடங்களுக்கு முன்பு தேவிகாவின் மகளை பார்க்க நேர்ந்து, எனது ‘மருதாணி’ படத்தில் நாயகியாக நடிக்க வைக்க அனுமதி கேட்டேன். ஆனால் அவள் மிகவும் சின்ன பெண். இப்போதைக்கு நடிக்க வைக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். இப்போது நாம் சென்று கேட்டால் என்ன சொல்லுவார் என்று தெரியாது. இருந்தும் முயற்சித்து பார்ப்போம் என்று கூறினாராம். அதன்படி மனதில் ஒருவித தயக்கத்துடனே நடிகர் ராமராஜனும், கங்கை அமரனும் நேரில் சென்று நடிகை தேவிகாவிடம் பேச, அவரோ முதலில் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். பின்னர் இருவரும் சேர்ந்து விடாபிடியாக பேசி சம்மதம் வாங்கியதை அறிந்த கனகாவின் தந்தை தேவதாஸ், சிறு குழந்தையாக இருக்கும் தனது மகளை நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாராம். வழக்கை விசாரித்த நீதிமன்றமோ சிறுகுழந்தையை நடிக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்று தீர்ப்பளித்ததாம்.


'கரகாட்டக்காரன்' பட காட்சியில் நடிகர் ராமராஜனுடன் கனகா

இதன் பிறகே, கனகா தனது அம்மாவின் விருப்பப்படி சந்தோசமாக நடிக்க தயாரானார். தந்தை கொடுத்த பிரச்சினைகளையும் தாண்டி கனகா முதல் முறையாக 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் நடிப்பில் வெளிவந்த ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காமாட்சி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரின் எதார்த்தமான நடிப்பும், அழகும் முதல் படத்திலேயே ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கிட்டத்தட்ட இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடம் கடந்து ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஒரு சிறந்த நடிகையாக மகளுக்கு கிடைத்த இந்த முதல் வெற்றி, அம்மா தேவிகாவுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், தந்தை தேவதாஸிற்கு கோவத்தை ஏற்படுத்தியது. அதனால், அதுவரை கனகா தனது தந்தையிடம் இருந்து அனுபவித்திராத மன கஷ்டங்களையும், கேட்காத வார்த்தைகளையும் கூட கேட்க ஆரம்பித்தார். இருந்தும் அம்மா கொடுத்த தைரியத்திலும், நம்பிக்கையிலும் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து நடிக்க முடிவு செய்தார் கனகா.

அடுத்தடுத்த வெற்றிப் பயணம்

முதல் படம், அதுவும் அறிமுகப்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தேர்ந்த நடிப்பால் ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடிகை கனகா, ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரே வருடத்தில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்தார். அதன்படி இரண்டாவதாக மீண்டும் நடிகர் ராமராஜனுடனே ‘தங்கமான ராசா’, ரஹ்மானுடன் ‘சீதா’, அர்ஜூனுடன் ‘பெரிய இடத்து பிள்ளை’, கார்த்திக்குடன் ‘பெரிய வீட்டு பண்ணக்காரன்’ என நடித்தார். ஆனால் இப்படங்கள் அனைத்தும் முதல் படம் அளவிற்கு இவருக்கு பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இருப்பினும் அதே 1990ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த ‘அதிசயப் பிறவி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதில் கௌரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கனகாவிற்கு இப்படம் மற்றுமொரு புகழ் வெளிச்சத்தை பெற்று தர, அதே வேகத்தில் 'கரகாட்டக்காரன்' படத்தின் போது எழுத முடியாத 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, 'அதிசயப்பிறவி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது எழுதி முடித்து அசத்தினார்.


வித்தியாசமான கதாபாத்திர தோற்றங்களில் நடிகை கனகா

அதேபோல் தமிழில் இவரது முதல் படம் வெற்றி பெற்றது போலவே மலையாளத்திலும் இவர் நடித்த ‘God father’ என்ற திரைப்படம் கிட்டத்தட்ட 400 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெறவே, அங்கும் புகழ் பெற்ற நடிகையாக மாறி தமிழ், மலையாளம் என மாறி மாறி நடிக்கத் தொடங்கினார். அப்படி இவர் ‘அம்மன் கோவில் திருவிழா’, ‘வெள்ளைய தேவன்’, ‘கும்பக்கரை தங்கய்யா’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘கோயில் காளை’, ‘சக்கரைத் தேவன்’, ‘ஜல்லிக்கட்டு காளை’ என தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இயங்கினார். இப்படி தொடர்ந்து நடிக்க வேண்டியவருக்கு 1999ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன், மறைந்த நடிகர் விவேக், வடிவேலு ஆகியோர் நடித்து வெளிவந்த ‘விரலுக்கேத்த வீக்கம்’ திரைப்படம் கடைசி தமிழ் படமாக அமைந்து போனது. இப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக மாலு என்னும் கதாபாத்திரத்தில் தனக்கே உரிய உடல் மொழியோடு நடித்திருந்த கனகா, இப்படத்திலும் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.


நடிகை கனகாவின் திரைப்பட காட்சிகள்

பிரிந்த தேவிகா... தள்ளாடிய வாழ்க்கை

அம்மா-அப்பாவின் சண்டை, அதனால் அப்பா தேவதாஸ் தனக்கு கொடுத்த டார்ச்சர் என எல்லாவற்றையும் கனகா சகித்துக் கொண்டு வாழ்ந்ததே அம்மா தேவிகாவிற்காக மட்டும்தான். தனது அம்மாவைத் தவிர வேறு யாரும் தன்னை அளவுகடந்து நேசித்துவிட முடியாது என்று, அவரின் அன்பிற்காக மட்டுமே வாழ்ந்து வந்த கனகாவுக்கு, வாழ்க்கையே முடங்கிப் போகும் விதமாக திடீரென்று யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பேரிடியாக ஒரு நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வுதான் அம்மா தேவிகாவின் மறைவு. 2002-ஆம் ஆண்டு நடிகை தேவிகா திடீர் மாரடைப்பால் இறந்து போக, உலகமே இருண்டு போனது போல் ஆனது கனகாவுக்கு. அந்த இருண்டு போன உலகத்திற்குள் இருந்து வெளியே வர அவர் எந்தவித முயற்சியும் மேற்கொள்ள தயாராக இல்லை. காரணம் எல்லா இடங்களுக்கும் அம்மாவுடனையே சென்று, அவர் மூலமாகவே திரையுலகில் எல்லோரையும் சந்தித்து வந்தவரால், அம்மாவின் மறைவிற்கு பிறகு தனியாக சென்று யாரிடமும் பேசவோ, வாய்ப்புகள் கேட்கவோ, நட்பு பாராட்டிக்கொள்ளவோ விருப்பம் இல்லாததுதானாம். படபிடிப்பு தளத்தில் அம்மா தேவிகாவுடன் இருக்கும் போதே கனகா தன்னுடன் நடிப்பவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ சகஜமாக பழகவே மாட்டாராம். யாராவது தானாக வந்து பேசினால் கூட, அப்போதும் அவர்கள் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுவாராம்.


நடிகை கனகா

இப்படி கலகலவென்று யாரிடமும் சரியாக பேசாமல் இருக்கும் குணம் கொண்ட கனகா, அம்மாவின் மறைவிற்கு பிறகு முழுமையாக அவர் வாழ்ந்து சென்ற வீட்டிற்குள் முடங்கினார். காரணம் அம்மாவே உலகம் என்று வாழ்ந்தவரை எங்கு வெளி நபர்கள், சுற்றி இருப்பவர்கள் ஏமாற்றிவிடுவார்களோ, அதிலும் தனது தந்தையான தேவதாஸ் எங்கு சொத்திற்காக மீண்டும் தன்னை தொந்தரவு செய்வாரோ என்றெல்லாம் எண்ணியதால்தான். இருந்தும் காலம் யாரை விட்டது என்பதுபோல், கனகாவிற்கும் தோழி ஷர்மிளா என்பவர் மூலமாக பிரச்சினை தேடி வந்தது. இறந்து போனவர்களின் ஆவியுடன் பேச வைக்கும் வல்லமை ஆவி அமுதா என்பவருக்கு உள்ளது. உனது அம்மாவின் ஆவியுடன் அவர் உன்னை பேச வைப்பார். ஒருமுறை அவரை சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறி அழைத்துச் சென்ற போது, அங்கு கனகா தனது அம்மாவின் ஆவியுடன் பேசினாரோ இல்லையோ அவர்களால் மனதளவில் நிறைய பிரச்சினைகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்ததாக சொல்லப்பட்டது.

மேலும் இந்த கும்பலின் சதியால் காதலில் விழுந்து, திருமணம் வரை சென்றதாகவும், பின்னர் அந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றும்படி காவல்துறையின் உதவியை கனகா நாடியதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்சினைகள் தொடர்பாக அன்றைய மீடியாக்களும் மாறி மாறி செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையில் கனகாவின் தந்தை தேவதாசும் மகளை விடாமல் துரத்தியடிக்கும் விதமாக, அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது, அதனால்தான் இப்படி பேசிக்கொண்டு திரிகிறாள் என்று தன் பங்கிற்கு கொஞ்சத்தை கிளப்பி விட, கனகா இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், ஒரு கட்டத்திற்கு பிறகு இனி யாரும் வேண்டாம், எந்த உறவும் வேண்டாம் என்று உதவிக்காக இருவரை மட்டும் வேலைக்கு அமர்த்திவிட்டு, முழுமையாக வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போனார். பிறகு அவரைப்பற்றி எந்த தகவலும் வெளி உலகத்திற்கு தெரிய வரவே இல்லை.


நடிகை கனகாவின் இல்லம்

மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த கனகா

அம்மாவின் மறைவு, தந்தையின் தொல்லை போன்ற காரணங்களால் வீட்டுக்குள் முடங்கிய கனகா, தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவர் வழியில் வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான், சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் அவரை நினைவுப்படுத்தும் விதமாக கனகா புற்று நோயால் இறந்துவிட்டார் என்று தொலைக்காட்சிகள் பரபரப்பு செய்தியை வெளியிட, மொத்த டிவி சேனலும் ராஜா அண்ணாமலைபுரத்தில் கனகாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது. சிரித்த முகத்தோடு வெளியே வந்த கனகாவும், தான் மிகவும் ஆரோக்கியமாகவும், நல்ல உடல் நலத்தோடும் இருப்பதாக கூறிய பிறகே எல்லோரும் அமைதியாகினர். இதன் பிறகு அவரைப்பற்றி எந்த பரப்பான செய்திகளும் வெளியாகாமல் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கனகா வீட்டில் திடீர் தீ விபத்து என்ற செய்தி பரவி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கனகா வீட்டின் பூஜையறையில் ஏற்பட்ட அந்த தீ அணைக்கப்பட்டது.


குட்டி பத்மினியுடன் தோன்றி ஆச்சரியப்படுத்திய நடிகை கனகா

இந்நிலையில், திடீரென அண்மையில் நடிகை குட்டி பத்மினி, கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமின்றி அதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து “பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகா அம்மாவின் மகளும், என் அன்புக்குரிய சகோதரியுமான கனகாவை சந்தித்தேன். எங்களது இந்த சந்திப்பு அளவிட முடியாத மகிழ்ச்சியை அளித்தது” என பதிவிட்டிருந்தார். இருவரும் இடம் பெற்றிருந்த அந்த புகைப்படத்தில் கனகாவுக்கு நடிகை குட்டி பத்மினி முத்தம் கொடுப்பது போன்றும், அதில் அடையாளம் தெரியாத வகையில் உருவமாற்றம் பெற்று இருக்கும் கனகாவை பார்த்து “நம்ம கனகவா இது!” என்று ஆச்சர்யத்துடன் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இருவரிடையேயும் நடந்த உரையாடல்கள் தொடர்பாகவும் தனது யூடியூபில் வீடியோ பதிவு ஒன்றையும் குட்டி பத்மினி வெளியிட்டிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகை கனகா எந்த வித மன சிக்கலிலும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், குறிப்பாக அவருடைய தந்தை தேவதாஸிற்கும் அவருக்கும் இடையே இருந்த மன கசப்பு முடிவுக்கு வந்து, ஓரளவு இருவரும் பரஸ்பர உறவில் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். குறிப்பாக அவர் பகிர்ந்திருந்த அந்த புகைப்படத்தில் கனகா அடையாளம் தெரியாத அளவுக்கு உருவமாற்றம் கண்டிருந்தாலும், குட்டி பத்மினி கூறியது போல அவரது அகமகிழ்ச்சி பளீரென முகத்தில் தென்படுகிறது. மிகவிரைவில் கூண்டுக்குள் இருந்து வெளிவந்து, கனகா, மகிழ்ச்சியோடு சிறகடித்து பறப்பார் என நம்பலாம்.

Updated On 27 March 2024 3:50 PM IST
ராணி

ராணி

Next Story