என் அன்பு நெஞ்சங்கள் காட்டும் அன்புக்கு நிகராக, எனது தோலை செருப்பாக தைத்து போட்டாலும் அது ஈடாகாது என்று நடிகர் விஜய் உணர்ச்சிபூர்வமாக பேசியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்துள்ளது.
‘லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி….’ என்ற பாடலின் வரிகளை பின்பற்றும் விதமாக நடிகர் விஜய் தான் நடித்து வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி கதையை சொல்வதை வழக்கமாக பின்பற்றி வருகிறார். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், விஜய்யின் அசத்தலான நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளிவந்த 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி படம் வெளியான 4 நாட்களிலேயே உலக அளவில் ரூ.400 கோடிக்கும் மேல் நல்ல வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. கடந்த 2 வாரங்களில் மட்டும் இப்படம் ரூ.540 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் போய்விட்டதே, விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க முடியாமல் ஏமாற்றமாகிவிட்டதே என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அதன் வெற்றி விழா நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகி அதற்கான ஏற்பாடுகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் 'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 6 மணிக்கு நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு, நடிகர் விஜய் 2 மணிக்கே வந்தது மட்டுமின்றி அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளார்.
'லியோ' சக்ஸஸ் மீட்டில் நடிகர் விஜய் கலந்துகொண்டு மேடையில் பேசிய தருணம்
இவ்விழாவில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் என படத்தில் பங்குபெற்ற ஒட்டுமொத்த படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக நேற்று மேடையில் ஒரு குட்டி ஸ்டோரியை கூறினார். அப்போது பேசிய நடிகர் விஜய், என் அன்பு நெஞ்சங்கள் எனக்கு காட்டும் அன்புக்கு நிகராக என் உடலிலிருக்கும் தோலை செருப்பாக தைத்து போட்டாலும் அது ஈடாகாது என்று உணர்ச்சிபூர்வமாக தனது பேச்சை தொடங்கினார். பின்னர் அவர் கூறிய குட்டி ஸ்டோரியில், “காட்டிற்கு வேட்டையாட இரண்டு பேர் சென்றனர். அதில் ஒருவன் வில் அம்பையும், இன்னொருவன் ஈட்டியையும் கொண்டிருந்தான். காட்டில் மான், மயில், முயல், யானை, காக்க, கழுகு என பல விலங்குகள் இருந்தன. வில் அம்பு உடையவன் வெற்றிகரமாக முயலை வேட்டையாடி விட்டான். ஆனால் ஈட்டியை வைத்திருப்பவனோ யானையை குறிவைத்து வேட்டையாட முயற்சித்து தோற்றுப்போனான். ஊருக்குள் வரும்போது ஒருவன் கையில் முயல் இருக்கிறது. ஆனால் இன்னொருவன் கையில் வெறும் ஈட்டி தான் இருக்கிறது” என்று கூறி இதில் யார் வெற்றியாளர் என்று நினைக்கிறீர்கள் என்று ஒரு கேள்வியையும் முன்வைத்தார். பிறகு அவர் எதில் எளிமையாக வெற்றி காண முடியுமோ, அதில் வெற்றி பெறுவது வெற்றியல்ல. நம்மால் எதில் வெற்றிக்கான முடியாதோ, அதில் வெற்றி காணுவதே உண்மையான வெற்றி என்று கூறி காணும் கனவை பெரிய கனவாக காணுங்கள் என்று தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த குட்டி கதை கூறியதைத் தொடர்ந்து தளபதி விஜய் பாரதியார், காந்திஜி மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ஒரு சில வரிகளையும் கூறினார்.
மோட்டிவேஷனல் பேச்சாக தொடங்கி தனது படத்தின் பாடலுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு நச்சென ‘சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்’ என்று சரியான பதிலடி கொடுத்தார். இறுதியாக அவர், “புரட்சி கலைஞர் என்றால் ஒருவர் தான். கேப்டன் என்றால் ஒருவர் தான். உலக நாயகன் என்றால் ஒருவர் தான். சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர் தான். தல என்றால் ஒருவர் தான்” என்று கூறி தளபதி என்பவன் மன்னனுக்கு கீழ் வேலை செய்பவன். அவனுடைய வேலை மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவது தான். அதுபோல எனக்கு மன்னனாக விளங்குபவர் மக்கள் நீங்கள் தான். ஆணையிடுங்கள் அதை நான் செய்து விட்டு சென்று கொண்டே இருக்கிறேன்” என்று சொன்னதுடன் தனது உரையை முடித்துக் கொண்டார். இவ்விழாவில் அவர் பேசியதோடு நா ரெடி தான் வரவா.. என்ற பாடல் வரிகளை பாடியும் இரண்டு ஸ்டெப் ஆடியும் உள்ளார். விஜய்யின் இந்த அசத்தலான பேச்சால் மகிழ்ந்துபோன அவரது ரசிகர்கள், மேலும் அவரது அதிரடியான டயலாக் மற்றும் பதில்களாலும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிப்போயினர்.