இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் இந்திய நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். 'தளபதி’ என்று அன்போடு அழைக்கப்படும் விஜய்யின் டான்ஸ் மற்றும் சிரிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. என்னதான் விஜய்யின் ஒவ்வொரு படமும் வசூல் சாதனை படைத்தாலும், படத்தில் சர்ச்சை இருக்கிறதா? அல்லது சர்ச்சைக்காகத்தான் படம் உருவாக்கப்படுகிறதா? என்று கேட்கும் அளவிற்கு ஒவ்வொரு முறை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பும் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ‘லியோ’ படம் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய்யை துரத்தும் சர்ச்சைகள் குறித்து ஒரு தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆரம்பகால திரைவாழ்க்கையும் மாஸ் ஹிட் படங்களும்

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரின் மகனான விஜய், ஹீரோவாக நடிக்கவந்த ஆரம்பத்தில் அவரது தோற்றம் மற்றும் நடிப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். என்னதான் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை பொருத்தவரை திறமை இருந்தால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி கிட்டத்தட்ட 10 படங்களுக்குப் பிறகுதான் விஜய்க்கும் தமிழ்த் திரையுலகில் அங்கீகாரம் கிடைத்தது. ஸ்டைல், டான்ஸ் மற்றும் ஸ்மைல் என 90-களின் இளசுகளுக்கு விஜய் ஒரு ரோல் மாடலாக திகழ்ந்தார். குறிப்பாக, விஜய் நடிப்பில் வெளிவந்த, ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘மின்சாரக் கண்ணா’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘குஷி’, ‘பிரியமானாவளே’ போன்ற 90ஸ் - களின் ஆரம்பத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.


90 ஸ் மற்றும் 20 -களின் தொடக்கத்தில் வெளியான விஜய் திரைப்படங்கள்

அதனைத் தொடர்ந்து 20-களின் ஆரம்பங்களில் வெளிவந்த ‘பிரெண்ட்ஸ்’, ‘ஷாஜகான்’, ‘யூத்’, ‘பகவதி’, ‘வசீகரா’, ‘திருமலை’ போன்ற படங்களும் பாடல்கள் மற்றும் விஜய்யின் நடனங்களால் பிரபலமடைந்தன. அதன்பிறகு வெளிவந்த ‘கில்லி’ திரைப்படம்தான் விஜய்யின் கேரியரில் மைல்கல்லாக அமைந்தது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் சீன்கள் என அனைத்துமே இஞ்ச் இஞ்சாக ரசிகர்களால ரசித்து கொண்டாடப்பட்டது. அடுத்தடுத்து வெளியான ‘மதுர’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘சச்சின்’, ‘போக்கிரி’ போன்ற படங்கள் விஜய்க்கு கோலிவுட்டில் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா என தென்னிந்திய அளவில் ரசிகர்களை பெற்றுத்தந்தது. அதன்பிறகு சில படங்கள் கைகொடுக்காவிட்டாலும், கவனிக்கத்தக்க சர்ச்சை ஆரம்பித்தது என்னவோ ‘துப்பாக்கி’ திரைப்படத்திலிருந்துதான்.

சர்ச்சைகளுக்கு நடுவே அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உருவான விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்தது ‘துப்பாக்கி’. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, எதிர்ப்புகள் கிளம்பின. அதனைத் தொடர்ந்து சில வசனங்களும், காட்சிகளும் நீக்கப்பட்ட பிறகே படம் வெளியிடப்பட்டதாகக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் படக்குழு. தொடர்ந்து 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘தலைவா’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் வசனங்களும் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற வதந்தியைக் கிளப்பின. ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவரவிருந்த அந்த திரைப்படமானது தமிழ்நாடு தவிர உலகம் முழுவதும் வெளியானது. அப்போது தமிழகத்தை ஆட்சிசெய்துவந்த ஆளும் கட்சியான அதிமுக-வின் எதிர்ப்பால் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு பிறகு ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழகத்தில் வெளியானது ‘தலைவா’. குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘Time to Lead' போன்ற கேப்ஷன்களும்கூட நீக்கப்பட்டன.


விஜய் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியும் சர்ச்சைகளும்

ஒருபுறம் நடிகர் விஜய்யின் ரசிகர்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட ‘விஜய் மக்கள் இயக்கம்’ வளர வளர விஜய் திரைப்படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புகளும் வளர்ந்துகொண்டே சென்றது. 2014-ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’ திரைப்படத்தின் கதை மற்றும் தயாரிப்பாளர் குறித்து சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின. தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ‘புலி’ திரைப்படம் வெளியானபோது விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. 2017 - இல் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பாஜக மற்றும் மருத்துவர்கள் என பல்வேறு பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகளை சந்தித்தது. இந்தப் படம் வெளியாவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு வரை சென்சார் சர்டிபிகேட் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சில காட்சிகள் நீக்கப்பட்டுத்தான் படம் ரிலீஸ் ஆனது.

‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸுடன் மீண்டும் விஜய் இணைந்த திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியான ‘சர்கார்’. படத்தின் கதை திருடப்பட்டதாகக் கூறி படம் வெளியாவதில் தடைகள் ஏற்பட்டு, ஒருவழியாக படம் வெளியானது. இருப்பினும் அரசின் இலவசங்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வரின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி எதிர்ப்புக் கிளம்பியது. 2020ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸானது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளால் தள்ளிப்போனது. ஒருவழியாக 2021ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று வெளியானது ‘மாஸ்டர்’. இதன் படப்பிடிப்பின்போதும் விஜய் வருமான வரித்துறையினரால் காரில் அழைத்து வரப்பட்டு பல மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


‘மெர்சல்’ பட வெளியீட்டு சர்ச்சை

2022ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறித்த வன்முறை காட்சிகள் மற்றும் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, கத்தார் மற்றும் குவைத் நாடுகள் அந்த படத்திற்கு தடைவிதித்தன. மேலும் முஸ்லீம் கட்சிகளும் தமிழகத்தில் அந்தப் படத்தை வெளியிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒருவழியாக ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது ‘பீஸ்ட்’. இந்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருந்தபோதிலும் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இருப்பினும் இந்த படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

அரசியல் பேச்சுக்களும் சர்ச்சைகளும்

தனது ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு நடத்தப்படும் ஆடியோ லாஞ்ச் விழாக்களில் அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதையும், குறிப்பாக ‘குட்டி ஸ்டோரீஸ்’ சொல்வதையும் விஜய் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அப்படி தான் சொல்லும் ஒவ்வொரு குட்டி ஸ்டோரியிலும் தன்மீதான புகார்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கான பதில்களை ‘நச்’சென கொடுத்துவிடுவார். மேலும் அரசியல் குறித்த கருத்து ஒன்றையும் கட்டாயம் பதிவிடுவார். இதனாலேயே எப்போதெல்லாம் விஜய் திரைப்பட ஆடியோ லாஞ்ச் குறித்த அறிவிப்புகள் வெளியாகிறதோ அப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் தங்களின் எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் பதிவிட்டு கொண்டாட தொடங்கிவிடுவார்கள். அதனாலேயே விஜய் திரைப்படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒருபுறம் திரைப்படங்களில் இடம்பெறும் வசனங்களும் பாடல்களும் கட்டாயம் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துவருகின்றன.


ஆடியோ லாஞ்ச்களில் விஜய் ‘குட்டி ஸ்டோரீஸ்’ சொன்ன தருணங்கள்

சூப்பர் ஸ்டார் பட்டமும் ‘லியோ’ சர்ச்சையும்

குறிப்பாக அக்டோபர் 19ஆம் தேதி வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் வெளியான ‘நா ரெடிதா வரவா’ என்ற பாடல் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக விஜய் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்விதமாக ஆடியோ லாஞ்ச் நடைபெறவில்லை என அறிவித்தது ‘லியோ’தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ். மேலும் ரசிகர்களின் பாதுகாப்பை கருதிதான் ஆடியோ லாஞ்ச் வைக்கவில்லை என்றும், இதில் எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லை என்றும் அறிவித்தது.

இதற்கு முன்பாக ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு விஜய் ஆசைப்படுகிறார் என்ற விவாதங்கள் சமூக ஊடகங்களில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. எப்போதும் தனது திரைப்படங்களின் வெற்றி விழாக்களில் மட்டுமே கலந்துகொண்டு பேசும் ரஜினி, இந்த சர்ச்சைக்குப் பிறகு, ‘ஜெயிலர்’ திரைப்பட ஆடியோ லாஞ்சிலேயே கலந்துகொண்டு ‘காக்கா கழுகு’ கதை ஒன்றை சொன்னார். அவர் விஜய்யைத்தான் தாக்கிப் பேசியதாக அதற்கும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவின. மேலும் ‘லியோ’ ஆடியோ லாஞ்ச் வைக்கப்பட்டால் கட்டாயம் ‘காக்கா-கழுகு’ கதைக்கு விஜய் பதில் கதை சொல்வார் என்றும், அதனாலேயே நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் பரவின.


சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சையும் நடிகர் விஜய்யும்

ஆனாலும் 2019-இல் நடந்த ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் தாக்கப்பட்டதும், ஏ.ஆர். ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ கான்சர்ட்டில் நடந்த சொதப்பலுமே ‘லியோ’ ஆடியோ லாஞ்ச் நடைபெறாததற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. மேலும் போலி டிக்கெட்டுகளும் அதிக அளவில் பரவியதாகவும் சொல்லப்பட்டது. எப்படியாயினும் விரைவில் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்பது ரசிகர்களின் எகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On 31 Oct 2023 12:11 AM IST
ராணி

ராணி

Next Story