
‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் தான் தற்போது தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.
அமெரிக்காவில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் இருபது ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. இப்படி பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் இந்த 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 30 சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இத்தகவல்களை அறிந்த விஜய் ரசிகர்கள், "எங்கள் தளபதியின் குட்டி கதைக்காக காத்திருக்கிறோம்" என்று இணையத்தில் மாஸ் காட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில், "இசை வெளியீட்டு விழாவிற்கானபாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் 'லியோ' ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். இதற்கு பின்னணியில் அரசியல் அழுத்தமோ மற்ற காரணங்களோ இல்லை!" என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவல்களை கேட்ட விஜய் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த சம்பவம் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடத்திலும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளன.
