தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. அது அன்றைய சிவாஜி காலம் தொட்டு இன்றைய விஜய் சேதுபதி காலம் வரை ஒவ்வொரு நடிகர்களும், ஒவ்வொரு காலகட்டங்களிலும் தங்களது தனித்திறமையை வித்யாசமாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற பல நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று அதற்கென்று பெரிதும் மெனெக்கெட்டு முயற்சி எடுப்பவர்களாக இருக்கிறர்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ப படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ரசிகர்களிடத்தில் அவர்களின் முயற்சிக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைத்துவிடும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில், எந்தெந்த நடிகர்கள் தங்களின் படங்களுக்காக நிஜமாகவே மொட்டை அடித்து கொண்டு ரசிகர்களிடத்தில் பெரும் கவனத்தை பெற்றனர் என்ற தகவலை கீழே காணலாம்....
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் கவனம் பெறாத 'மொட்டை கெட்டப்'
பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகர் மொட்டையடித்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான முடிவல்ல. காரணம் அது அழகு சம்பந்தப்பட்டது, ஒவ்வொரு நடிகர்களுமே தாங்கள் திரையில் தோன்றும் போது பார்ப்பதற்கு அழகாகவும், நம்பிக்கைக்குரிய பிம்பமாகவும் தெரிய வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இருந்தும் நடிகன் என்பவன் அழகுக்கு அப்பாற்பட்டவன், தனது பன்முகத்திறமையை காட்டும் நடிப்பு களமே அவனது தொழில் என்பதால் இங்கு பெண் வேடம் போடுவது துவங்கி மொட்டை அடித்துக் கொள்வது வரை எல்லாமே சர்வ சாதாரணம் தான். இதனாலேயே 1950-60 காலகட்டமான எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் எம்.என் நம்பியார் போன்ற வில்லன் நடிகர்கள் துவங்கி ஹீரோக்கள் வரை படத்தின் தேவைக்காக பல நடிகர்கள் மொட்டையடித்துக் கொண்டாலும், அது பெரிய அளவில் கவனம் பெறவில்லை. குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'திருவருட்ச்செல்வர்', 'பாபு' போன்ற படங்களில் தலையில் குறைவான முடியோடு தோன்றி நடித்திருந்தாலும், அவர் நடிக்காத வேடங்களே இல்லை எனும் போது இத்தகைய தோற்ற மாற்றங்கள் எல்லாம் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. ஏன், நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே ''எங்கள் தங்கம்'' என்ற படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் கிட்டத்தட்ட மொட்டை அடித்து குடுமி வைத்தது போன்ற கெட்டப்பில் தோன்றி காலட்சேபம் செய்வது போல் பாடும் போது, அந்த சமயம் அந்த பாடலில் பேசப்பட்ட கருத்துக்களே பெரிய அளவில் கவனிக்கப்பட்டதே தவிர... அவரது கெட்டப் மாற்றம் அல்ல...
மொட்டை கெட்டப்பில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன்
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான காலம் தொட்டு இன்று வரை, தன்னுடைய படங்களில் சிறிய கெட்டப் சேஞ்ச் அவர் செய்தலே அது ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய கவனம் பெறக்கூடிய நிகழ்வாகவே மாறிவிடும். இதற்கு உதாரணமாக 'முரட்டுக்காளை' காளையன், 'மூன்றுமுகம்' அலெக்ஸ் பாண்டியன், 'தில்லு முள்ளு' இந்திரன் கதாபாத்திரங்களை சொல்லலாம். இருந்தும் அவர் மாஸ் ஹீரோ என்பதால் பெரியளவில் கெட்டப் சேஞ்ச் இல்லாமலே பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் மொட்டையடித்து நடித்த ஒரே படம் என்றால் அது 'சிவாஜி தி பாஸ்' திரைப்படம் தான். அப்படத்தின் முதல் பாதியில் அழகான சிகையுடன் வரும் ரஜினி, திருப்புமுனையாக வரக்கூடிய கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர் என கூறிக்கொண்டு மொட்டைத் தலையுடன் ஹெலிகாப்டரை விட்டு அவர் இறங்கி வரும்போது அன்று திரையரங்கமே அதிர்ந்து போனது. குறிப்பாக தனது தலையை தட்டியவாறே “பாஸ்..மொட்ட பாஸ்..”என்று பேசி அவர் செய்கின்ற ஸ்டைல் அப்போதே கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பொதுவாகவே ரஜினி எதை செய்தாலும் அதையே ஃபாலோ செய்யும் அவரது ரசிகர்கள், இவரின் இந்த மொட்டை கெட்டப்பையும் அப்போது ஃபாலோ செய்தனர்.
''சிவாஜி தி பாஸ்'' திரைப்படத்தில் ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி, அதற்காக தன்னுடைய முழு உழைப்பையும் போடுபவர்களில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் உலகநாயகன் கமல்ஹாசன். அந்த வகையில் இவரை பொருத்தவரை நடிப்புக்காக மொட்டையடித்துக் கொள்வது எல்லாம் சர்வ சாதாரணமான நிகழ்வுதான். இருந்தும் துவக்க காலத்தில் பெரியளவில் மொட்டை கெட்டப்பில் நடிக்காத கமல்ஹாசன் 'சத்யா' படத்தில் தலையில் குறைவான முடியோடும், 'குணா' படத்தில் மொட்டையடித்து முடி வளர்ந்த மாதிரியான தோற்றத்திலும் நடித்திருந்தார். பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆளவந்தான்' திரைப்படத்தில் தான் தலை முடியை முழுவதுமாக எடுத்துவிட்டு மொட்டைத் தலையுடன் நடித்தார். இதில் சைக்கோ வில்லனாகவும், இராணுவ வீரராகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்த கமல், சைக்கோவாக வரும் நந்து கதாபாத்திரத்திற்காகத்தான் மொட்டையடித்து நடித்திருந்தார். அந்த சமயத்தில் இந்த படம் அந்த சமயம் சரியாக போகவில்லை என்றாலும், நந்து கெட்டப்பிற்கு நல்ல வரவேற்பு அப்போதே கிடைத்தது. இதேபோல் 'விருமாண்டி' படத்திலும் மொட்டையடித்து நடித்திருந்த கமல் ஜெயில் காட்சிகளில் நம்மை மிரள வைத்திருப்பார்.
'ஆளவந்தான்' திரைப்படத்தில் கமல்ஹாசன்
சத்யராஜ், சரத்குமார்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ''மொட்டை கெட்டப்'' என்று சொன்ன உடனேயே முதலில் நினைவுக்கு வருகிற நடிகர் யார் என்றால் அது நிச்சயம் சத்யராஜ் தான். காரணம், அன்று தொட்டு இன்று வரை பல படங்களில் எந்த தயக்கமும் இல்லாமல் மொட்டையடித்து நடித்த ஒரே நடிகர் இவர் மட்டும் தான். அதிலும் குறிப்பாக 1978 காலகட்டத்திலேயே இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், இவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது 'நூறாவது நாள்' திரைப்படம் தான். இந்த படத்தில் மொட்டைத் தலையுடன் வில்லத்தனம் செய்த சத்யராஜின் பாத்திரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டதோடு, அவரது திரை வாழ்க்கையையும் இப்படம் அடுத்தக் கட்டத்த்திற்கு அழைத்துச் சென்றது. இதே போல் சத்யராஜின் மற்றுமொரு மைல்கல் படமான ‘அமைதிப்படை’ திரைப்படத்திலும் கிளைமாக்ஸில் மொட்டையடித்து அதகளம் செய்திருந்த சத்யராஜ் தொடர்ந்து 'ராமச்சந்திரா', 'பூஜை', 'பாகுபலி' என பல படங்களில் இதே மொட்டை கெட்டப்பில் நடித்திருந்தார்.
இவரைப் போலவே வில்லனாக அறிமுகமாகி பின்னர் உச்ச நட்சத்திரமாக மாறிய சரத்குமாரும் 'சூரியன்' படத்திற்காக மொட்டையடித்து நடிப்பில் மிரள வைத்திருந்ததோடு, இப்படம் இந்திய அளவில் அவருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது. இதில் பாதுகாப்பு அதிகாரியாக நடித்திருந்த சரத்குமார், தான் செய்யாத குற்றத்திற்காக ஓடி ஒளிந்து தன் அடையாளங்களை மறைக்க தண்ணீரில் நின்றவாறு அவர் மொட்டையடித்துக் கொள்ளும் காட்சியை இன்று பார்த்தாலும் மெய்சிலிர்க்கும்.
மொட்டை கெட்டப்பில் சத்யராஜ், சரத்குமார்
விக்ரம், சூர்யா
சினிமாவுக்காக எந்தவிதமான ரிஸ்க்கையும் எடுக்கத்துணிந்த ஒரு முக்கிய நடிகர் என்றால் அது நம் 'சீயான்' விக்ரம் தான். தனது முதல் படம் துவங்கி இப்போது வரை தான் நடிக்கும் ஓவ்வொரு படங்களிலும் அபரிமிதமான உழைப்பையும், நடிப்பையும் வெளிப்படுத்தி வரும் விக்ரம், துவக்ககாலத்தில் பல சறுக்கல்களை சந்தித்து வந்த நேரத்தில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம்தான் 'சேது'. இதில் படத்தின் இரண்டாவது பாதியில் மனநலம் குன்றியவராக மொட்டை அடித்து நடித்திருந்த விக்ரம் பல இடங்களில் நம்மை கலங்க வைத்ததோடு, கிளைமாக்ஸில் வரும் 'வார்த்தை தவறிவிட்டாய்' பாடலின் போது நம் மனங்களையும் சேர்த்தே ரணமாக்கிச் சென்றிருப்பார்.
இவரை போலவே மற்றும் ஒரு சிறந்த நடிகரான சூர்யாவும் 'கஜினி' படத்தில் மொட்டையடித்து நடித்திருந்தார். இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு இந்திய அளவில் மிகப்பெரிய அடையாளத்தை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி ஆல் டைம் ஹிட் ஆகிய இப்படத்தில் சூர்யா மொட்டைத் தலையுடன் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நடந்தவற்றை எல்லாம் மறக்கும் ஒரு மனநோயாளியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சேது படத்தில் விக்ரம், கஜினி படத்தில் சூர்யா
மொட்டை அடிக்க தயங்காத இன்றைய நடிகர்கள்
இவர்கள் தவிர ''மாநகரகாவல்'' படத்தில் ஆனந்தராஜ், 'மாஞ்சாவேலு' படத்தில் அருண்விஜய், 'சூரி' படத்தில் விக்னேஷ், 'சகலகலா வல்லவன்' படத்தில் விவேக் என அன்று முதல் இன்றுவரை பல நடிகர்கள் மொட்டை கெட்டப்பில் நடித்து அசத்தி வருகின்றனர். பல நட்சத்திர நடிகர்களும் முழுமையாக மொட்டை அடிக்கவிட்டாலும், மொட்டை அடித்து முடி வளர்ந்தது போன்ற கெட்டப்பில் தோன்றி பல வருடங்களாகவே கவனம் பெற்று வருகின்றனர். இதற்கு உதாரணமாக 'மன்மதன்' சிம்பு, ‘ஆயுத எழுத்து’ மாதவன், ‘ரெட்’ மற்றும் 'வேதாளம்' படத்தில் வரும் அஜித் கதாபாத்திரம், "பிரெண்ட்ஸ்" படத்தின் கிளைமாக்ஸில் வரும் விஜயின் தோற்றம், "காஞ்சனா 3" மற்றும் "மொட்ட சிவா கெட்ட சிவா" படத்தில் வரும் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரங்களை சொல்லலாம்.
மொட்டை கெட்டப்பில் நடிகர்கள் தனுஷ், அதர்வா, விஷால், கார்த்தி, பகத் பாசில்
இது தவிர, தற்போது இந்த ''மொட்டை கெட்டப்'' என்பது தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் ஆகி வரும் சூழலில், பல இளம் நடிகர்களும் தங்களது வெற்றிக்காக மொட்டையடித்துக் கொள்ள தயங்குவது இல்லை. இதற்கு உதாரணமாக 'காஷ்மோரா' படத்தில் வரும் கார்த்தி, 'பூமராங்' படத்தில் மொட்டை அடிக்காமலேயே மொட்டை கெட்டப்பில் தோன்றும் அதர்வா, 'புஷ்பா' படத்தில் வரும் பகத் பாசில், ஏன் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பலரது கவனத்தை பெற்றுள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் கிளைமாக்ஸில் தோன்றும் விஷாலின் கெட்டப் போன்றவைகளையும் சொல்லாம். இதில் நடிகர் விஷால் ஏற்கனவே 'சத்யம்' படத்தின் கிளைமாக்ஸில் மொட்டையடித்து நடித்து சறுக்கி இருந்தாலும், தற்போது 'மார்க் ஆண்டனி' படத்தில் அதே முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்நிலையில், நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்துக்காக கடந்த ஓராண்டாக நீண்ட தாடி மற்றும் அடர்ந்த தலைமுடியுடன் வலம் வந்த நிலையில், கடந்த மாதம் திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்து விட்டு வந்துள்ளதால், இது அடுத்தப் படத்திற்கான கெட்டப் சேஞ்ச்சாக இருக்குமோ என அவரது ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.