இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வீக் - எண்ட் ஆனாலே போதும் எப்படியாவது ஒரு படமாவது பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பலருக்கும் ப்ளானாக இருக்கும். அந்த அளவிற்கு நமது தினசரி வாழ்க்கையுடன் ஒன்றி போயிருக்கும் சினிமா மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த செய்திகளுக்கும் பஞ்சமே இல்லை. இந்த வாரம் திரைத்துளியில் அதிகம் பேசப்பட்ட சினிமா செய்திகளை பார்க்கலாம்.

ரஜினிக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ!

‘வேட்டையன்’ படத்திற்கு பிறகு ரஜினி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் ஷோபனா, சௌபின் சாஹிர் மற்றும் ஸ்ருதி ஹாசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படம் லோகியின் எல்.சி.யுவில் இருக்காது என்று அறிவித்துவிட்டதால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது.


ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நாகர்ஜுனா

அதனாலேயே படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு மாஸ் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் மாஸ் இருக்கவேண்டும் என்று விருப்பப்பட்ட லோகி, தனது படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு ஸ்டார் நாகர்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பேசப்படுகிறது. ஆனால் நாகர்ஜுனாவை வில்லனாக மக்கள் பார்ப்பார்களா என கேள்விகள் எழுந்த நிலையில், விஜய் சேதுபதி, சூர்யா போன்றோரை மாஸ் வில்லனாக உருவாக்கிய லோகி. எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட திரையில் கொண்டுவந்துவிடுவார் என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.

அர்ஜுன் தாஸின் காதலி யார்?

2012ஆம் ஆண்டிலிருந்தே திரைப்படங்களில் நடித்துவந்தாலும் ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூக்களில் தன்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வில்லன் டூ ஹீரோவாக உருவாகியிருக்கிறார் அர்ஜுன் தாஸ். இவருடைய கம்பீரமான குரலுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.


தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்ட அர்ஜுன் தாஸ்

சில நாட்களுக்கு முன்பு இவரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையங்களில் வெளியாகி இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனக்கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஐஸ்வர்யா. இந்நிலையில் அர்ஜுன் தாஸ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணின் தோளை பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் லவ் சிம்பளையும் போட்டிருக்கிறார். இதனால் அர்ஜுன் தாஸ், தான் காதலில் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

யாஷுக்கு அக்காவாகும் நயன்!

திருமணம், குழந்தைகளுக்கு பிறகும் தொடர்ந்து ஹீரோயின் அந்தஸ்தை விட்டுக்கொடுக்காமல் நடித்துவருகிறார் நயன்தாரா. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தன்னைவிட 5 வயது குறைவாக இருக்கும் கவினுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதனைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நயன் அவருக்கு அக்காவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.


நடிகர் யாஷுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா

யாஷுக்கு தன்னைவிட ஒரு வயதுதான் குறைவு என்றாலும் அக்காவாக நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி என கேள்விகள் எழுந்த நிலையில், நயனை பொருத்தவரை தனது கதாபாத்திரமும், சம்பளமும்தான் முக்கியம் என்கின்றன திரை வட்டாரங்கள். முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு நயனை அணுகியபோது 20 கோடி சம்பளம் கேட்டாராம். அதனால் அடுத்து தபுவை அணுகியதாம் படக்குழு. இருப்பினும் நயன் நடித்தாலே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் நயனையே லாக் செய்திருக்கிறார்களாம்.

சுந்தர் சியின் அடுத்த ஹீரோ!

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து துவண்டு போயிருந்த தமிழ் சினிமாவை ‘அரண்மனை 4’-ன் வெற்றியால் தூக்கி நிறுத்தியவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் இயக்கம் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் ‘வில்லன்’, ‘கிரி’, ‘நகரம்’ மற்றும் ‘லண்டன்’ போன்ற படங்களில் நடித்திருக்கும் வடிவேலு, மீண்டும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.


சுந்தர் சியின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு

ஏற்கனவே இதுகுறித்து தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த படத்தில் நடிகை ராசி கண்ணாவும் இணைந்திருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி - வடிவேலு காம்போ இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பானது சற்று கூடுதலாகவே இருக்கிறது.

கேரளாவில் சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு

பிற தமிழ் ஹீரோக்களைவிட விஜய், சூர்யா இருவருக்குமே கேரளாவில் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. இருப்பினும் சூர்யாவைவிட விஜய்க்குத்தான் அங்கு மவுசு அதிகம் என்ற பேச்சு எப்போதுமே உண்டு. ஆனால் அந்த கருத்தை மாற்றும்விதமாக ‘கங்குவா’ திரைப்படத்தின் கேரளா ரைட்ஸ் கிட்டத்தட்ட 12 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாம். இதுவரை அதிகபட்சமாக சூர்யா படத்தின் கேரளா ரைட்ஸ் ரூ. 3 கோடி வரைதான் போயுள்ள நிலையில் இதுதான் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.


ரிலீஸுக்கு முன்பே ‘கங்குவா’ திரைப்படத்திற்கு கேரளாவில் கிடைக்கும் வரவேற்பு

ஏற்கனவே விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் ரைட்ஸ் ரூ. 17 கோடிக்கு விலைபோயுள்ள நிலையில் சூர்யாவும் விஜய்யின் இடத்தை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. கடைசியாக வெளியான சூர்யாவின் இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அக்டோபர் மாதம் வெளியாகும் ‘கங்குவா’ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று சொல்லப்படுகிறது.

ஷாருக்கான் உருவம் பதித்த தங்க நாணயம்

பாலிவுட்டின் கிங் கான் என அழைக்கப்படும் ஷாருக்கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை பாரீஸிலிருக்கும் க்ரெவின் மியூஸியம் வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம் தங்க நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய நடிகர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றிருக்கிறார் ஷாருக்கான். இதுவரை சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள ஷாருக், அவற்றில் 5 மதிப்புமிக்க விருதுகளை முதன்முதலாக பெற்ற இந்திய நடிகர் என்ற பெருமையையும் தன்னகத்தே வைத்துள்ளார்.


ஷாருக்கான் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்

சமீபத்தில்தான் இவருக்கு லோகர்னோ ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்க நாணயத்தை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது பாரீஸ் மியூஸியம். இதனால் திரைத்துறையினர் பலரும் ஷாருக்கிற்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ இரண்டுமே ரூ. 1000 கோடிக்கும்மேல் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் அம்பானி - ராதிகாவுக்கு திரைப் பிரபலங்களின் பரிசுகள்

ஜூலை 12ஆம் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட அனைத்து சூப்பர் ஸ்டார்களும் ஒரே இடத்தில் குழுமி மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் புதுமண தம்பதிக்கு முக்கிய பிரபலங்கள் என்னென்ன பரிசுகளை கொடுத்தார்கள்? என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் ஷாருக்கான் ரூ. 40 கோடி மதிப்பில் பாரீஸில் ஒரு அபார்ட்மெண்ட்டை கொடுத்திருக்கிறார்.


ஆனந்த் - ராதிகா தம்பதிக்கு பாலிவுட் நட்சத்திரங்களின் விலையுயர்ந்த பரிசுகள்

சல்மான் கான் ரூ. 15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கையும், பச்சன் குடும்பம் ரூ.30 கோடி மதிப்புள்ள மரகத நெக்லஸையும், ரன்வீர் - தீபிகா தம்பதி ரூ. 20 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரையும், ரன்பீர் - ஆலியா தம்பதி ரூ. 9 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரையும், சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா தம்பதி ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஷாலையும், அக்‌ஷய் குமார் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பேனாவையும், விக்கி - கத்ரீனா தம்பதி ரூ. 19 லட்சம் மதிப்புள்ள தங்க செயினையும் பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

Updated On 5 Aug 2024 10:34 PM IST
ராணி

ராணி

Next Story