இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வெள்ளி திரையில் மட்டுமல்ல, வாழ்க்கை என்னும் திரையிலும் எதற்கும் துணிந்தவர்தான் நடிகர் சூர்யா. ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அவரை பார்த்து தொடக்கத்தில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. நடிக்கத் தெரியாத நீ எல்லாம் எதுக்கு சினிமாவுக்கு வந்தாய் என்று கூறியவர்களுக்கெல்லாம் அப்போது தெரியாது எதிர்காலத்தில் இவர்தான் நடிப்பின் நாயகன் என்று ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களாலும் கொண்டாடப்படுவார் என்பது. கேமராவுக்கு முன்பு நேருக்கு நேர் நிற்க தயங்கிய சூர்யாதான் ‘நந்தா’, ‘பிதாமகன்’, 'காக்க காக்க', 'மௌனம் பேசியதே', ‘பேரழகன்’ என்று தன் திறமையை விரித்து பன்முக கலைஞராக பலரும் பார்த்து ஆச்சரியப்படும் படியாக வானில் உயர பறக்க ஆரம்பித்தார். இன்று வித்தியாசமான கதைக்களமா, நம்ம சூர்யா இருக்கார், அவர் இந்த கதைக்கு சரியாக இருப்பார் என்று தமிழ் திரையுலகமே விழி வைத்து அவரது தேதிக்காக காத்திருக்கும் அளவுக்கு இன்று கொடிகட்டி பறந்து வருகிறார். இவையெல்லாம் சூர்யாவின் வாழ்வில் எப்படி சாத்தியமானது? என்பது நமக்கு ஒரு வியப்பாக இருந்தாலும் “நம் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை மட்டும்தான் நம்மை முழுமையாக காப்பாற்றும்” என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருப்பவர்தான் சூர்யா. தென்னிந்திய சினிமாவின் துணிச்சல் மிக்க நாயகனாக பார்க்கப்படும் நடிகர் சூர்யா இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், கார்மெண்ட்ஸ் தொழிலாளி சரவணன் தொடங்கி, நடிகர் சூர்யாவாக பரிணாமம் பெற்று இன்று தயாரிப்பாளர், ‘அறம்’ என்ற அறக்கட்டளையின் நிறுவனர், சிறந்த கணவர், நல்ல மகன், சிறந்த தந்தை என்று பல பரிமாணங்களில் வெற்றிகரமான நபராக சாதித்துக்காட்டியுள்ள சூர்யாவின் முழு பயணம் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

சரவணன், நடிகர் சூர்யாவாக மாறியது எப்படி?


சிறுவயதில் அப்பா சிவகுமார், அம்மா லட்சுமி, தங்கை பிருந்தா, தம்பி கார்த்தியுடன் சூர்யா

"உழைப்பே உயர்வு தரும், அதுவே ஒளிமயமான வாழ்விற்கு வழிவகுக்கும்" என்ற வார்த்தையை உண்மையாக்கி இன்று திரையுலகில் வெற்றிநடை போட்டு வரும் நடிகர் சூர்யா, 1975-ஆம் ஆண்டு, ஜூலை 23-ஆம் தேதி நடிகர் சிவகுமார் - லட்சுமி தம்பதியருக்கு மூத்த மகனாக சென்னையில் பிறந்தார். இவருடன் பிறந்தது பிருந்தா என்ற தங்கையும், கார்த்தி என்ற தம்பியும் ஆவர். தம்பி கார்த்தியும் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர ஹீரோவாக வலம் வருகிறார். பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற போதிலும் படிப்பில் சுமாரான மாணவரான சூர்யா, மிகவும் சிரமப்பட்டு தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்துள்ளார். லயோலா கல்லூரியில் தட்டுத்தடுமாறி அனைத்து அரியர்ஸையும் சரி செய்து இளங்கலை பட்டத்தை வாங்கியவருக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. தந்தையும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை பிடித்தவர் இல்லை. கிடைக்கும் வேடங்களில் நடித்து அதற்கான ஊதியத்தை மட்டுமே பெறுபவர். குடும்பம் சுமார் என்ற அளவில் இருக்கும் போது நாமும் வேலைக்கு சென்றால்தான் தந்தைக்கு ஏதாவது உதவ முடியும் என்று சென்னையிலேயே தெரிந்த உறவுக்காரர் ஒருவரின் கார்மெண்ட்ஸில் பணிக்கு சேர்கிறார் சூர்யா. அப்போதெல்லாம் அவரது நிஜப்பெயர் சரவணன். எல்லோருக்கும் அவரை சரவணனாகத்தான் தெரியும். எப்போதும் கண்களில் தேடலுடனும், கனவுகளுடன் இருக்கும் சூர்யா அங்கு அனைவரும் பம்பரம் போல் வேலை பார்ப்பதை பார்த்து நாமும் வேகமாக சுழல வேண்டும். கூடிய விரைவில் நாமும் சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் தொடங்க வேண்டும் என்ற கனவோடு ஓட ஆரம்பித்தார். கார்மெண்ட்ஸ் தொடங்கிட வேண்டும் என்றால் கோடி ரூபாயில் பணம் வேண்டும். ஆனால், அவ்வளவு பணம் அப்பாவிடம் இருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு பணத்தை கொடுத்து உதவும் அளவுக்கு உறவினர்களின் பலமும் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கிய போதுதான் மணிரத்தினம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க கேட்டு வாய்ப்பு வருகிறது.


சரவணனாக இருந்து "நேருக்கு நேரில்" சூர்யாவாக பரிமாணம் பெற்ற தருணம்

நடிகனாகும் முன்புவரை பயம், அச்சம் ஆகியவைதான் சூர்யாவின் நண்பன். வந்த வாய்ப்பை ஏற்று நடிப்பதா அல்லது தனது கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்கும் கனவை நோக்கி நகர்வதா என்று தெரியவில்லை. அதேநேரம், தாம் பெரிய கோடீஸ்வரனும் இல்லை. இப்போதைக்கு பணம் மிகவும் அவசியம். அதனால், நீண்ட யோசனைக்கு பிறகு நடிப்பது என முடிவெடுத்தார். ஒருவழியாக வசந்திடம் நடிக்க ஓகே சொன்னார் சூர்யா. அப்படி 1997-ஆம் ஆண்டு வெளிவந்த ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் சூர்யாவாக அறிமுகமானவருக்கு, அப்பெயரே நிலைத்து போனது. தயக்கத்தோடும், கண்களில் ஒருவித பயத்தோடும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய சூர்யாவுக்கு கிடைத்தது என்னவோ அதிகமான விமர்சனங்களும், வலியை ஏற்படுத்தும் கேளிக்கையான வார்த்தைகளும்தான். ஒரு காட்சியை படமாக்கும் போது மிகவும் வலுவானவனாக தன்னை போல்டாக காண்பித்து நடிக்க வேண்டிய காட்சிகளில் சூர்யா நடிக்கும் போது எல்லோரும் சரியாக நடித்துவிடுவார்களாம். சூர்யா மட்டும் டேக் மேல் டேக் எடுப்பாராம். இதனால் நிச்சயம் உன்னால் முடியும்.. நீ சூப்பரா நடிப்ப.. உன்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிய இயக்குநர் வசந்தே கடுப்பாகி, ஒருமுறை சாப்பிடும் இடத்தில், சாப்பாடு நன்றாக இருக்கு சார்… நீங்க சாப்பிடலையா என்று பேச வந்த சூர்யாவிடம் இங்க எல்லாம் வக்கணையா பேசு, பர்ஃபாமன்ஸ்ல மட்டும் கோட்டைவிட்டுடு என்று எல்லோரும் இருக்கும்போது கோபமாக சொல்லிவிட்டு செல்லவும், அவமானத்தில் சாப்பிடுவதா அல்லது அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுவதா என்று தெரியாமல் வெட்கி தலைகுனிந்து, கூனிக்குறுகி போய்விட்டாராம். வாத்தியார் பையன் மக்கு என்று சொல்வதுபோல், சிவகுமாரின் மகனுக்கு நடிக்கத்தெரியவில்லையே என்று எல்லோரும் ஏளனம் செய்வார்களே என்று தன்னை நினைத்து ஒருநாள் முழுவதும் அழுத நிகழ்வுகள் எல்லாம் சூர்யாவின் வாழ்வில் நடந்துள்ளது. அதேபோல், ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது அசதியில் சூர்யா தூங்கிவிட, அவரை தட்டி எழுப்பிய நடிகர் ரகுவரன் எப்படிடா உனக்கு மட்டும் தூக்கம் வருது என்று மனம் வருத்தப்படுவதுபோல் கேட்டுவிட்டாராம். இப்படி படப்பிடிப்பின் போதே இயக்குநர் தொடங்கி, உடன் நடித்தவர்கள் வரை ஒவ்வொருவரும் வைத்த விமர்சனங்கள் வலியை உண்டாக்கினாலும், அந்த வலிதான் சூர்யாவுக்கான அடுத்தகட்ட பாதையையும் உருவாக்கி கொடுத்தது என்பதை அவரே மறுக்கவில்லை.

விமர்சனங்களை ஜெயித்த சூர்யா


'நேருக்கு நேர்' திரைப்படத்தில் விஜய்யுடன் சூர்யா

‘நேருக்கு நேர்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தாலும், எல்லோரும் சூர்யா மீது வைத்த விமர்சனங்களை அவ்வளவு சாதாரணமாக அவரால் கடந்துபோய்விட முடியவில்லை. படம் வெளிவந்த அன்று, உதயம் திரையரங்கிற்கு சென்றிருந்த சூர்யாவை பார்த்த ரசிகர் ஒருவர், வேகமாக ஓடிச்சென்று கைகொடுத்து சூப்பரா சொதப்பிட்டீங்க… இந்த மாதிரி இன்னும் இரண்டு, மூன்று படம் நடுச்சீங்கன்னா ஆளே அட்ரஸ் இல்லாமல் போயிடுவீங்க. அதுக்கு பிறகு நீங்களும் சந்தோஷமா இருக்கலாம். நாங்களும் சந்தோஷமாக இருப்போம் என்று கூறிவிட்டு போனாராம். இந்த விமர்சனம் அதோடு நின்றுவிடவில்லை. கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த இடத்தில் அங்கிருந்த மாணவிகள் எல்லாம் அவரின், நடிப்பு நடனத்தை பார்த்து என்ன டான்ஸ் ஆடுறீங்க. ஆடவும் தெரியவில்லை, நடிக்கவும் தெரியவில்லை என்று கேலி செய்தார்களாம். பற்றாக்குறைக்கு சினிமா விமர்சனம் எழுதும் பத்திரிகை ஒன்றும் தங்கள் பங்குக்கு ‘சூர்யா படத்தில் நடனம் ஆடாமல் இருந்தால் அவருக்கும் நல்லது. நமக்கும் நல்லது’ என்று எழுதினார்களாம். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் கிண்டலும் கேலிகளுமாக விமர்சனங்கள் வந்து குவிய மனமுடைந்து போனாராம் சூர்யா. அப்போது அவரது அப்பாவான நடிகர் சிவகுமார் சூர்யாவை அழைத்து, ஐந்தறிவு படைத்த ஜீவன்களான மாடுகளே பின்வாங்காமல் தங்கள் மீது வைக்கப்படும் பாரம் மிக்க வண்டியை மேடு, பள்ளம் என்று எவ்வளவு தடைகள் வந்தாலும் மிகவும் சிரமப்பட்டு முட்டி, மோதி கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடும். ஐந்தறிவு உள்ள மாடே தனக்கான சவால்களை எதிர்கொண்டு தனது இலக்கை சரியாக அடையும் பொழுது, நாமெல்லாம் சிந்தனை பலம் கொண்ட மனிதர்கள். எப்பேர்ப்பட்ட சவாலான சூழ்நிலைகளையும் நம்மால் போராடி வெற்றி பெற முடியும் என்று சொன்னாராம். அப்பா சிவகுமார் அன்று சொன்ன அந்த வார்த்தைகள்தான், அனைத்தையும் தூக்கிபோட்டுவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்வதற்கான பாதையை அமைத்து கொடுத்ததாம்.


மௌனம் பேசியதே கௌதம் மற்றும் சூரரைப்போற்று நெடுமாறன்

ஒரு விஷயத்தை புதிதாக கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையில்லை என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். அப்படி வயதை பற்றியெல்லாம் யோசிக்காமல், தன்னை நோக்கி வந்த விமர்சனங்களை ஓரம் தள்ளி வைத்துவிட்டு முழு முயற்சியோடு நடனம், ஸ்டண்ட், நடிப்பு என்று ஒவ்வொரு பயிற்சியாக எடுக்க ஆரம்பித்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், எந்த படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. அப்போதும் சூர்யா நடித்து வெளிவரும் படங்கள் திரையில் ஓடுகிறதோ, இல்லையோ, சீக்கிரமே தியேட்டரை விட்டு ஓடிவிடுகிறது என்று அவர் காதுபடவே கமெண்ட் செய்தார்களாம். இந்த நேரம், இயக்குநர் பாலாவின் அறிமுகம் அப்பா சிவகுமார் மூலமாக கிடைக்க அதுவே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்று கொடுத்தது. அப்படி பாலாவின் இயக்கத்தில் ‘நந்தா’ படத்தில் நடிக்க ஆரம்பித்த சூர்யா என்ற நடிகரின் வெற்றிப்பயணம் தன் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்து, ஸ்டைலுக்கு 'காக்க காக்க', திறமைக்கு 'கஜினி', காதலுக்கு 'மௌனம் பேசியதே', நகைச்சுவைக்கு 'பிதாமகன்', மாஸுக்கு 'சிங்கம்', கிளாசுக்கு 'சூரரைப் போற்று' என வெவ்வேறு விதமான கதைக்களங்களில் சூர்யா நடித்து குறுகிய காலத்திலேயே யாரும் தொட்டு பார்க்க முடியாத உயரங்களை தொட்டு புகழ்பெறச் செய்தது. அதிலும், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நெடுமாறன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய சூர்யா, இதன்முலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். எந்த திரையுலகமும், ரசிகர்களும் காணாமல் போய்விடுவீர்கள் என்று கூறியதோ, அதே திரையுலகமும், திரையுலக ரசிகர்களும் சிறந்த நடிப்பிற்காக சூர்யா தேசிய விருதை வென்றபோது அதனை கொண்டாடினர்.

மாஸ் நாயகனின் மாஸான தருணம்


ரோலெக்ஸ் மற்றும் கங்குவா-வாக நடிகர் சூர்யா

சினிமாவில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாஸான ஒரு தருணத்தை அடையத்தான் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாஸான பிம்பத்தை சூர்யா அடைந்த பிறகும் அந்த வட்டத்துக்குள்ளேயே தன்னை சுருக்கிக் கொள்ளாமல் சமூகம் தொடர்பான விஷயங்களிலும் கவனம் செலுத்தி அதற்காக குரல் கொடுக்கவும் ஆரம்பித்தார். அப்படி அவர் ‘நீட்’ தேர்வு ரத்து மற்றும் அதனால் உயிரைவிட்ட மாணவி அனிதாவுக்காக குரல் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் சில பல சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி அவ்வப்போது கவனம் பெற்று வருகிறார். இதோடு நின்றுவிடாமல் ‘அறம்’ என்ற அறக்கட்டளையையும் துவங்கி அதன் மூலம் படிக்க முடியாத பல ஆயிரக்கணக்காக மாணவ, மாணவிகளின் கல்விச்செலவை ஏற்று படிக்க வைத்து வரும் அதே வேளையில், இத்தகைய பொது சேவைகளில் ஈடுபட்டுக்கொண்டே தான் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களிலும் சமூக கருத்துள்ள படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அப்படி த.செ.ஞானவேல் இயக்கத்தில், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் சமூக நீதிக்காக போராடும் வழக்கறிஞராக சந்துரு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு சென்று வந்தார். இதன் பிறகு முற்றிலும் நேரெதிராக கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் கொடூர வில்லனாக வெறும் மூன்று நிமிடமே வந்தாலும் ‘ரோலக்ஸ்’ என்ற பெயர் நினைவில் இருக்கும் அளவிற்கு நடிப்பில் பார்த்தவர்கள் அனைவரையும் நம்ம சூர்யாவா இது என்று அளரவிட்டுப் போயிருந்தார். முதல் படத்தில் கூனி குறுகி நின்ற சூர்யாதான், கூன் முதுகுடன் பேரழகனில் நடித்து பிரேம்குமாராக நம்மையெல்லாம் கலங்கவும், அதே நேரம் சிரிக்கவும் வைத்திருந்தார். அந்த பிரேம்குமார்தான் இன்று ‘கங்குவா’ என்ற படத்தின் மூலமாக பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.


மனைவி ஜோதிகா, மகள் தியா மற்றும் மகன் தேவுடன் நடிகர் சூர்யா

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் மூலம் நல்ல தோழியாக அறிமுகமான நடிகை ஜோதிகாவை காதலித்து நீண்ட காத்திருப்பு, போராட்டங்களுக்கு பிறகு 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ள நிலையில், அவர்களின் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். அவ்வப்போது நடிப்பிற்காக சென்னை வரும் அவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 38 மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதன்மூலம் பான் இந்தியா ஸ்டாராக சூர்யா உருவெடுக்கவுள்ளார். இவருக்கு முன்னரே பிரபாஸ், யாஷ், ராம் சரண், அல்லு அர்ஜுன், விஜய் போன்ற பல தென்னிந்திய நடிகர்கள் பான் இந்தியா நட்சத்திரங்களாக ஒளிர்ந்து வரும் நிலையில், அவர்களின் வரிசையில் சூர்யாவும் இணைந்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஒரு பீரியட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஜமேக்ஸ் மற்றும் 3டி முறையிலும் இப்படத்தை வெளியிட படக்குழு தரப்பு முடிவு செய்துள்ளது என்பதுதான். படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில், படத்தினை வருகிற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அக்டோபர் மாத தொடக்கத்திலேயே பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர மீண்டும் சுதா கொங்கராவுடன் இணைந்து 'புறநானூறு' படத்தில் நடிக்கவுள்ள சூர்யா, இந்த முறை 1950-60களில் நடைபெற்ற இந்தித் திணிப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதை களத்தில் நடித்து மீண்டும் ஒரு தேசியவிருதை பெற்று விடுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள அதே வேளையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘சூர்யா 44’ படத்திற்கான பணிகளும் விரைவில் துவங்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடும் சூர்யா இன்னும் துணிச்சல் மிக்க நாயகனாக பல உயரங்களை தொட வாழ்த்துவோம். பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா சார்.

Updated On 29 July 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story