இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

( 5-1-1997 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ரஜினிகாந்துக்கு கிரிக்கெட்டு ஆடத் தெரியாது. ரஜினிகாந்துக்கு பிடித்த விளையாட்டு எது... இதையெல்லாம் நேரில் பார்க்கவும், கேட்கவும், தமிழ்நாட்டிலேயே ராணி' வார இதழுக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைத்தது!

ஆந்திர மாநில புயல் நிவாரணத்துக்கு நிதி திரட்ட, ஐதராபாத்தில் போட்டி நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபுதேவா, அப்பாஸ், ராதாரவி, விஜயகுமார், தியாகராஜன், பிரசாந்த், பார்த்திபன், சரத்பாபு, தயாரிப்பாளர் ரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களை அழைத்து வரும் பொறுப்பை பத்திரிகை தொடர்பாளர்கள் நெல்லை சுந்தரராசன், டைமண்ட் பாபு ஏற்றிருந்தார்கள். நடிகைகள் மட்டும் வடக்கு தெற்கு என்று வேறுபாடு இல்லாமல் ரோஜா, மதுபாலா, மனிசா, ரம்யா கிருஷ்ணன், ஜெயப்பிரதா, சவுந்தர்யா, ரவளி, ராணி, பிரேமா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

ரஜனி


1997-ல் ஐதராபாத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர் சிரஞ்சீவியுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அத்தனை நட்சத்திரங்களிலும் விடிவெள்ளியாக மின்னியவர் வேறு யாருமல்ல, ரஜினிதான். நீங்கள் கிரிக்கெட் ஆடியது உண்டா? என்று ரஜினியிடம் ராணி நிரூபர் கேட்டார். ரஜினி சிரித்துக் கொண்டே 'கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து பிடிக்கும். ஆனால், நான் விரும்புவது கூடைப்பந்துதான். பள்ளி நாட்களில் தொடர்ந்து விளையாடுவேன். கிரிக்கெட் இப்போதுதான் விளையாடுகிறேன்" என்றார்.

முதன்முறையாக மட்டையைக் கையில் பிடித்த ரஜினி, மறுமுனையில் இருந்து அமிதாப் பச்சன் பந்தை வீச, முதல் பந்தையே மைதானத்தின் எல்லைக்கு அடித்து விரட்டி ஓட்டம் எடுத்தார். அந்த மகிழ்ச்சியில் மைதானத்திலேயே சின்ன ஆட்டமும் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். அதன்பிறகு அமிதாப் பச்சனுக்கு பந்தை வீசி “கிளீன் போல்டு“ ஆக்கியதும் ரஜினிதான்.

பாட்சா… பாட்சா…!


ஆந்திர மாநில புயல் நிவாரண நிதிக்காக ஐதராபாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட தமிழ் நடிகர்கள்

ரஜினி விளையாட வரும்போது வர்ணனை செய்த பாடகர் பாலசுப்ரமணியன் பாட்சா… பாட்சா… என ஒலிபெருக்கியில் கூற, மைதானமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அப்போது பாலசுப்ரமணியம் “ரஜினி… நீங்கள் ஒரு ரன் எடுத்தால், நூறு ரன் எடுத்த மாதிரி... அடித்துநொறுக்குங்கள்..." என்று கூறினார். அப்போது ரஜினி தனக்கே உரிய பாணியில் கையை உயர்த்திக்காட்டி, மீண்டும் ஆரவாரத்தை அலைமோத வைத்தார். ரஜினி கவலை இல்லாத மனிதனாக உல்லாசமாக இருந்தார். ஒரே சிரிப்பு தான் - ஆரவாரந்தான். வந்திருந்த எல்லோருடனும் கலகலப்பாகப் பேசினார். வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 இலட்சமும் கொடுத்தார், ரஜினி.

6 அணி


நடிகர்கள் பார்த்திபன், சரத்பாபு, விஜயகுமார் மற்றும் சரத்குமார் கை முறிவுடன் கிரிக்கெட்டில் கலந்துகொண்ட போது

வந்திருந்த நடிகர் நடிகைகளை ஆறு அணியாகப் பிரித்து, அணிக்கு 6 "ஓவர்” விளையாட வைத்தனர். ரஜினி, அமிதாப்பச்சன், சரத்குமார், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சிரஞ்சீவி ஆகியோர் ஒவ்வொரு அணிக்கும் தலைமை தாங்கினார்கள். ரஜினி அணியை அடுத்து விளையாட வந்தார் சரத்குமார். ஏற்கனவே ஒரு கையில் கட்டு. அதைப் பொருட்படுத்தாமல் சரத்குமார் பந்தை துரத்தி துரத்தி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

அதேபோல் பந்து வீசும்போது வேகமாக வீசினார். ஒற்றைக்கையால் மட்டையைப் பீடித்து ஆடிய சரத்குமாருக்கு, சிறந்த ஆட்டக்காரருக்கான விருது கிடைத்தது. தெலுங்கு நடிகர் ஒருவர் அடித்து உயரப் பறந்துவந்த பந்தை தாவிப் பிடித்து மதுபாலா சிறந்த ஆட்ட நாயகி விருத்தைப் பெற்றார். அதற்காக ரூ.1 இலட்சம் பரிசு கொடுத்தார்கள். அந்த தொகையை புயல் நிவாரண நிதிக்கு மதுபாலா கொடுத்துவிட்டார்.

Updated On 11 March 2024 6:13 PM GMT
ராணி

ராணி

Next Story