திரைத்துறையில் வாரிசுகள் என்பது இப்போது ஒரு பேசு பொருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக, இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் கோலோச்சியிருக்கிறது. அதேபோன்று தமிழ்த் திரையிலும் வாரிசுகள் காலந்தோறும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதில் சிலர் உச்சம் தொட்டிருக்கிறார்கள், சிலர் வந்த சுவடு தெரியாமல் காணாமலும் போயிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்த் திரையில் தோன்றிய வாரிசு நடிகைகளைப் பற்றி நாம் இங்கு காண்போம்.
மஞ்சுளா வாரிசுகள்
விஜயகுமார்-மஞ்சுளா தம்பதிகளின் மகள்களான வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூவரும் தமிழ்த்திரையில் கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள். இதில் வனிதா விஜயகுமார் மட்டும் இன்னும் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்தா விஜயகுமார் இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டபின் திரைப்படங்களில் நடிக்காமல் விலகிக் கொண்டார். அதேபோன்று ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து வந்தார். இவரும் திருமணமானதும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ‘கூலி’ படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருக்கும் கவிதாவும் விஜயகுமாரின் மகள்தான்.
மஞ்சுளா, வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி
நான்காவது தலைமுறை நடிகை
கொள்ளுப் பாட்டி முதல் பேத்தி வரை என நான்காவது தலைமுறை நடிகையாக தொடரும் வாரிசுக் குடும்பம்தான் நடிகை ஐஸ்வர்யாவின் குடும்பம். இவரது கொள்ளுப் பாட்டியான நுங்கம்பாக்கம் ஜானகி ‘சீதா வனவாசம்’, ‘லலிதாங்கி’, ’மாயா பஜார்’ ஆகிய படங்களில் நடித்தவர். இவருடைய மகள்தான் டி.ஆர்.மகாலிங்கத்துடன் ’ஸ்ரீ வள்ளி’ படத்தில் வள்ளியாக நடித்த குமாரி ருக்மணி. இவர் ‘ஹரிச்சந்திரா’ படத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதால் கதாநாயகி ஆனபிறகும் `குமாரி ருக்மணி’ என்றே அழைக்கப்பட்டார். நடிகை லட்சுமியை அறியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பல்வேறு பாத்திரங்களில் நடித்து அசத்தியவர். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக மத்திய அரசு விருதும் வாங்கியவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்றுவரை நடித்து வருகிறார் லட்சுமி. இவருடைய மகள்தான் ஐஸ்வர்யா. 1990 ஆம் ஆண்டு ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ திரைப்படம் மூலம் நடிகையானார். இப்போதும் அவர் பல மொழிகளில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா, லட்சுமி மற்றும் குமாரி ருக்மணி
உச்ச நடிகர்களின் கலைவாரிசுகள்
தமிழ்த்திரையின் உச்ச நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் வாரிசுகளும் திரைத்துறையில் கால் பதித்துள்ளனர். ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா சமீபத்தில் ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அதேபோன்று அவரது தங்கை செளந்தர்யா ‘கோச்சடையான்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை தொடங்கி, தமிழ், தெலுங்கு, இந்தி என வரிசையாக பல திரைப்படங்களில் கதாநாயகியாகிவிட்டார். அவருடைய சகோதரியான அக்ஷரா ஹாசன் இந்தி திரைப்படமான ‘ஷமிதாப்’பில் அறிமுகமாகி ‘விவேகம்’, ‘கடாரம் கொண்டான்’ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசனின் மகள் சுஹாசினி நடிகையாக மட்டுமல்ல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் நீடித்து வருகிறார்.
அக்ஷராஹாசன், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, சுஹாசினி
சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி ‘போடா போடி‘ திரைப்படம் மூலம் தமிழ்த்திரைக்கு அறிமுகமானார். இப்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சுழன்று கொண்டிருக்கிறார். நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ திரைப்படம் மூலம் 2013-இல் திரையில் தோன்றினார். அதன்பிறகு ‘பிரேமா பரஹா’ என்ற ஒரு கன்னடப் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.
போராடும் வாரிசுகள்
நடிகை ராதாவின் மகள்களான கார்த்திகா, துளசி இருவருமே நாயகிகளாகி உள்ளனர். மூத்த மகள் கார்த்திகா தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் ‘கோ’, ‘அன்னக்கொடி’ ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். மணிரத்னம் மூலம் ‘கடல்’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட துளசியோ அதற்கடுத்து ஜீவாவோடு ‘யான்’ என்ற படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்தபோதும் அவரது மகள்கள் இன்னும் அந்த இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கார்த்திகா மற்றும் துளசி
கவர்ச்சி நடிகையாக தமிழ்த்திரையில் வலம் வந்த ஜோதிலட்சுமியின் மகள் ஜோதி மீனா, அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ ஆகியோரும் குத்துப்பாடல்கள் மற்றும் துணைப் பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தனர். ‘அன்பே சிவம்’, ‘மௌன குரு’, ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் நடித்த உமா ரியாஸ், சிறுவயதிலிலேயே அம்மா நடிகையாக வலம் வந்த கமலா காமேஷின் மகள்.
வாரிசு குழந்தைகள்
நடிகர் பார்த்திபன்-சீதா ஜோடியின் மகளான கீர்த்தனா ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ மூலம் குழந்தை நட்சத்திரமாக இயக்குநர் மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்டார். அதேபோன்று நடிகை மீனா தனது மகள் நைனிகாவை ‘தெறி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்திலும் நைனிகா நடித்திருந்தார். இனி வருங்காலத்தில் அவர் கதாநாயகியாகக் கூட ஆகலாம்.
கீர்த்தனா மற்றும் நைனிகா
நகைச்சுவை வாரிசு
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மோகன்ராமின் மகள் வித்யுலேகா அப்பா பாணியை பின்பற்றி நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வருகிறார். பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தியான வைஷ்ணவி தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி பின்னர் தமிழ்த்திரையுலகில் கால் பதித்தார். 80-90 காலக்கட்டங்களில் கதாநாயகி, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
திறமையே கைகொடுக்கும்
தமிழ்த் திரையுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் என்பது பெரிய தாக்கத்தை உண்டாக்கியதில்லை. அந்தக் காலத்தில் தொடங்கி இந்தக் காலம்வரை வாரிசுகள் வந்தாலும் போனாலும் அவர்களுடைய திறமைக்கே இங்கு அங்கீகாரம் கிடைத்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. வாரிசு என்பதை திரைத்துறைக்குள் நுழைவதற்கு வேண்டுமானால் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர நீடித்து நிலைப்பதற்கு திறமை மட்டுமே கைகொடுக்கும்.