வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய தன்னம்பிக்கையால் அந்த துன்பங்களை இன்பங்களாய் மாற்றியிருக்கிறார் ஜனா என்கிற பாசிட்டிவ் ஜனா. இவரின் முழுப்பெயர் ஜனார்தனன். இவர் தற்போது வாய் ஓவியராகவும், வரைகலை வடிவமைப்பாளராகவும், குறும்பட இயக்குனர் மற்றும் வீடியோ எடிட்டராகவும் இருக்கிறார்.
நம்பிக்கை ஒளி வீசிய தருணம்
ஜனாவுக்கு 8 வயதாக இருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது வீட்டு மாடியில் ஏற்பட்ட மின்சார விபத்தில் அவருடைய உடலில் 99% தீக்காயம் ஏற்பட்டது. அதற்காக ஓராண்டு சிகிச்சை பெற்றார் ஜனா. ஒரு வருடத்தில் 8 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டபோதிலும் இரண்டு கைகளையும் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. துறுதுறுப்பாக பள்ளிக்கு செல்லும் வயதில் கைகளை இழந்த வருத்தத்தில் இருந்த ஜனாவிற்கு, `வாயினால் ஓவியம் வரைகிறார்கள்; நீயும் அதை போல் செய்யலாம்’ என்று நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார் சீனிராஜ் என்ற மருத்துவர். பல மருத்துவர்களால் கைவிடப்பட்டு நம்பிக்கையற்ற நிலையில் இருந்த ஜனாவிற்கு சிகிச்சையளித்தவர் இவரே. மருத்துவரின் வார்த்தைகளை தனக்காக வழிகாட்டுதலாக எடுத்துக்கொண்ட ஜனா, அன்று இரவே வாயினால் பேனாவைப் பிடித்து எழுத முயற்சி செய்தார். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர் முயற்சியால் அவரது எண்ணம் நிறைவேறியது. படிப்படியாக வாயினால் வரையும் பயிற்சியை பெற்றார்.
அது மட்டுமின்றி ராமபுரத்திலுள்ள SRNM பள்ளியில் தனது பள்ளி படிப்பையும் முடித்தார். 2001 இல் விக்டோரியா தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஓவியப்போட்டியில் முதல் பரிசை அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த ஏபிஜே அப்துல் கலாமிடமிருந்து பெற்றார். அவருடைய கைகளிலிருந்தே தேசிய அளவில் தமிழ்நாடு சார்பில் ‘பெஸ்ட் கிரியேட்டிவ் சைல்ட்’ என்னும் விருதினையும் பெற்றார். அதுமட்டுமின்றி 2011இல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து ‘சிறந்த தனிப்பட்ட திறன்’ (best individual ability) கொண்டவர் என்ற விருதையும் பெற்றார். வீடியோ எடிட்டிங்கில் உலக சாதனையும் புரிந்துள்ளார். இப்படி பல விருதுகளையும் சாதனைகளையும் புரிந்த ஜனா முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
ஜனா மவுத் பெயின்டிங் செய்தபோது...
சோதனையே சாதனையாய்!
சிறுவயதிலே தன்னுடைய கைகளை இழந்திருந்தாலும்கூட, அது தன்னை மனதளவில் பெரிதும் பாதிக்கவில்லை என்று கூறுகிறார் தன்னம்பிக்கை மனிதர் ஜனா. அந்த சிறு வயதிலேயே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஆழமாக பதிந்திருந்ததாகவும் கூறுகிறார். இதற்கு உதாரணமாக தான் நெகிழ்ந்த ஒரு தருணத்தை நினைவுகூர்கிறார் ஜனா. ஒருநாள் தனது அப்பாவை யாரோ தொலைபேசியில் அழைத்து “உங்களுடைய மகனால்தான் நான் இன்று உயிர் வாழ்கிறேன்” என்று கூறினாராம். எதுவும் புரியாத ஜனாவின் தந்தை வியப்பில் ஆழ்ந்திருக்க அந்த நபர், “நான் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, எங்கு வேலை தேடியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் நம்பிக்கை இழந்த நான் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தேன்.இறப்பதற்கு முன்பு எனக்கு பிடித்த பரோட்டாவை சாப்பிட ஆசையாக இருந்ததால் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டேன். சாப்பிட்ட பார்சலை தூக்கியெறிந்தபோதுதான் உங்கள் மகன் பற்றிய கட்டுரை ஒன்று என் கண்ணில் பட்டது. அதன்பிறகே வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அப்படி நான் வாழ்க்கையில் ஜெயித்துக்காட்டினால் ஜனாவிற்கு நிச்சயம் என் பணத்தில் ஒரு பரிசளிப்பேன் என்றும் உறுதியெடுத்தேன்” என்று கூறினாராம். அதேபோல் ஜனாவிற்கு அவர் சொன்னபடி பரிசும் அனுப்பினாராம். “கவலைகளை கடந்தால் வாழ்க்கையில் வெற்றி காணலாம்” என்பதே ஜனாவின் தாரக மந்திரமாக இருக்கிறது. அதுவே இவரை இந்த நிலைக்கு உயர வைத்துள்ளது.
ஏ.ஆர் ரகுமான் மற்றும் அப்துல் கலாமிடம் பரிசு பெற்ற தருணம்!
இது என்னோட ஸ்டைல்!
‘உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே’ என்ற வரிகளுக்கிணங்க ‘முடியாது முடியாது’ என்று பலர் கூறினாலும் அவற்றை முடித்து காட்டுவது தான் ஜனாவின் தனி ஸ்டைல். அப்படித்தான் ஒருமுறை தானே கார் ஓட்டவேண்டும் என்ற ஆசை ஜனாவிற்கு வந்தது. அதை கேட்டு பலரும் சிரித்த நிலையில், ‘என்னால் முடியும்’ என்று மனதிற்குள் தீர்மானித்து, வெறும் 2 நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்று, தற்போது அசத்தலாக கார் ஓட்டுகிறார் ஜனா. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சாதித்தது மட்டுமல்லாமல் தொழில் துறையிலும் தான் விரும்பியதை சாதித்து வருகிறார். ஊடகத்தில் வரைகலை வடிவமைப்பாளராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம். அதற்கு தேவையான பயிற்சியைப் பெற்று, 2011 லிருந்து மெய்நிகர் தொகுப்பு வடிவமைப்பாளராக அசத்தி வருகிறார். இதுமட்டுமில்லாமல் மவுத் பெயிண்டிங், கிராபிக் டிசைனிங், வீடியோ எடிட்டர், டைரக்டர் என பல திறமைகளை வளர்த்துக்கொண்ட ஜனாவிற்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பவர் நிக் வுஜிசிக்.
இரண்டு கைகள் மற்றும் கால்களை இழந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நிக் வுஜிசிக், கால்பந்து, நீச்சல் மட்டுமல்லாமல் ஓவியக் கலைஞராகவும், பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்துபவராகவும் விளங்குகிறார். ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் திகழ்கிறார். அப்படிப்பட்ட வுஜிசிக்தான் ஜனாவின் முன்னுதாரணம். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் ஆகியோரும் ஜனாவின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள்.
ஜனாவின் குடும்பத்தார்
இவர்களே என் பக்கபலம்!
ஜனாவின் ஒவ்வொரு சாதனைக்குப் பின்னரும் அவரின் தாய், தந்தை, தங்கை, காதலி என பலரும் ஊக்கம்ளித்து வருகின்றனர். குறிப்பாக அவருடைய தாய், தந்தை இருவரும் ஜனாஆசைப்பட்டு கேட்ட எடிட்டிங், கிராபிக் படிப்புகளை தட்டிக்கழிக்கமால் படிக்க வைத்துள்ளனர். ’என்னை போலவே மற்ற ஸ்பெஷல் சைல்டுகளின் பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகளை ஊக்கப்படுத்தினால் அவர்களிடமிருக்கும் திறமைகளையும் நிச்சயமாக வெளிக்கொண்டுவர முடியும்’ என்கிறார் ஜனா.
பெற்றோரின் அன்பும் ஆதரவும் ஒருபுறம் இருந்தாலும், தனது காதலியைப் பற்றி சொல்கையில் ஜனாவின் முகத்தில் மகிழ்ச்சி கலந்த பரவசம். கொரோனா காலத்தில் சமூக ஊடகத்தின் வாயிலாக மலர்ந்தது ஜனாவின் காதல். மலேசியாவைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலிக்க தொடங்கிய ஒரு மாதத்திற்கு பின்னரே ஜனா ஒரு ஸ்பெஷல் சைல்ட் என்ற உண்மை அந்த பெண்ணுக்கு தெரியவந்ததாம். அப்படி தெரிந்தும்கூட அவர் தன்னை வெறுக்காமல் மேலும் அதிகமாக காதலித்ததாகவும், தன்னுடைய ஒவ்வொரு செயலையும் ஊக்கப்படுத்தி வருவதாகவும் காதலுடன் குறிப்பிடுகிறார் ஜனா. இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் மகிழ்ச்சி செய்தியினை தெரிவித்தார்.
இப்படி தனது திறமையையும், படிப்பையும் மட்டுமே நம்பி தன்னம்பிக்கை மிக்க மனிதராக வாழும் ஜனா, பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.