இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வரும் ஜான்வி கபூர், அடுத்ததாக தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தமிழில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தவருக்கு விக்னேஷ் சிவன் வாயிலாக அந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஸ்ரீதேவி எப்படி தமிழில் இருந்து பாலிவுட் சென்று முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை பெற்று அங்கு புகழ் கொடி நாட்டினாரோ, அதேபோன்று தற்போது அவரின் மூத்த மகளான ஜான்வியும் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வந்து வெற்றிக்கொடி நாட்ட காத்துள்ளார். தமிழ் சினிமாவில் அவரது அம்மா ஸ்ரீதேவி பாதியிலேயே விட்டு சென்ற இடத்தை ஜான்வி நிரப்புவாரா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

ஸ்ரீதேவியை மறக்க முடியுமா?


நடிகை ஸ்ரீதேவியின் அழகிய தருணங்கள்

தமிழ் சினிமாவில் 'கந்தன் கருணை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கே.பாலசந்தரின் 'மூன்று முடுச்சு' படத்தின் வாயிலாக கதாநாயகியாக உயர்வு பெற்று 80களில் இருந்து 90 வரை அனைத்து மொழிகளிலும் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி. குறிப்பாக தமிழ் சினிமாவில் அப்போதைய உச்ச நட்சத்திரங்களாக இருந்த கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் ஜோடியாக அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பின்னர் தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்தவரை, இந்தி திரையுலக பக்கம் அழைத்து வந்த பெருமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே சேரும். 'சொல்வா சவான்' என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து அங்கேயே கோலோச்சி இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். பின்னர் போனிகபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகள்களுக்கு தாயாகி செட்டில் ஆனவர், இடையிடையே விடாமல் இந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றார். தனது 50 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மரணம் குறித்த உண்மைத்தன்மை இதுவரை யாருக்கும் புலப்படவில்லை. மேலும், இவர் மரணமடைந்த அந்த சமயத்தில்தான், ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். மகளின் முதல் படத்தை கூட பார்க்காமல் ஸ்ரீதேவி இறந்துவிட்டதை நினைத்து அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.

இந்தியில் அறிமுகமான ஜான்வி கபூர்

ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் இந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஜான்வி கபூர் முதன் முதலாக கரண் ஜோஹரின் ‘தடக்’ படம் மூலம் 2018 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தாலும், வணிக ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது. இதன்பிறகு படங்களை தாண்டி நிறைய ஃபோட்டோ ஷுட்கள் மற்றும் விளம்பர படங்களில் கவனம் செலுத்தி வந்த ஜான்வி அவ்வப்போது அது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இதற்கிடையில் மீண்டும் 2020 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் மற்றும் பிற இயக்குநர்கள் இணைந்து சோபிதா துலிபாலா, மிருணால் தாக்கூர், அவினாஷ் திவாரி என ஒரு நட்சத்திர கூட்டத்தையே வைத்து எடுத்த ஹாரர் த்ரில்லர் படமான ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற படத்தில் சமீரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஜான்வி நடித்தார். இதன்பிறகு, போருக்குச் சென்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய முதல் இந்திய விமானப்படை பெண் அதிகாரியான குஞ்சன் சக்சேனாவைப் பற்றிய வாழ்க்கை வரலாறு, படமாக எடுக்கப்பட்டது. சரண் ஷர்மா என்பவரின் இயக்கத்தில், 'குஞ்சன் சக்சேனா-தி கார்கில் கேர்ள்' என்ற பெயரில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் குஞ்சன் சக்சேனாவாக நடித்து எல்லோரின் பாராட்டையும் பெற்றார் ஜான்வி.


ஜான்வி கபூரின் திரைப்பட காட்சிகள்

இதனை தொடர்ந்து ‘ரூஹி’, ‘குட்லக் ஜெர்ரி’, மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கான ‘மிலி’, வருண் தவானுடன் ‘பவால்’ என வரிசையாக இந்தி படங்களில் மட்டுமே நடித்தவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அதன்படி தற்போது ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘தேவரா’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமவுலி, கிளாப்போர்டு அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார்.


‘தேவரா’ திரைப்பட போஸ்டர் மற்றும் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குநர் ராஜமவுலி கிளாப்போர்டு அடித்து தொடங்கி வைத்த நிகழ்வு

தமிழ் சினிமா மீது ஜான்விக்கு இருந்த ஈர்ப்பு

அம்மா ஸ்ரீதேவியின் தாய்மொழி தமிழ் என்பதாலேயோ என்னவோ, ஜான்விக்கும் தமிழ் மொழி மீது அதீத ஆர்வமும், பற்றுதலும் அதிகம் உண்டு. அவர் முழுக்க முழுக்க வளர்ந்தது எல்லாம் மும்பையாக இருந்தாலும், தமிழ் மொழிப்படங்களை பார்ப்பதிலும், அவற்றில் நடிக்க வேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வமாக உள்ளார். இதனை பலமுறை தனது பேட்டிகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். அப்படி 2022-ஆம் ஆண்டில் ஒருமுறை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், ஜான்வி தமிழில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தெலுங்கில் ஜூனியர் ‘என்டிஆர்’ ஆகியோருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக ‘நானும் ரவுடிதான்’ படத்தைப் பார்த்த பிறகு நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக பேசியிருந்தார் ஜான்வி. அப்படி பேசுகையில், “2015-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரவுடிதான்' படத்தை 100 முறை பார்த்துவிட்டேன். அந்த படம் எனக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. அப்படத்தினை 100-வது முறையாக பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் மூலமாக விஜய் சேதுபதியின் ஃபோன் நம்பரை பெற்று, அவருக்கு கால் செய்தேன். எனது ஃபோனை எடுத்து பேசியவரிடம் ‘நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. நீங்கள் நடிக்கும் படத்தில், எனக்கு ஏதேனும் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள். நான் ஆடிஷனில் கலந்து கொள்கிறேன்’ என்று கூறினேன். உடனே அதற்கு அவர் ‘ஐயோ, ஐயோ’ என்று கூறினாரே தவிர, அவர் கோபப்பட்டாரா அல்லது வெட்கப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெளிவாக தெரிந்தது; எனது பேச்சைக் கேட்டு ஆச்சரியமும், ஒருவித வெட்கமும் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்” இவ்வாறு ஜான்வி கபூர் கூறியிருந்தார். எது எப்படியாகிலும் அவர் ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களில் தற்போது ஒன்று நடந்துவிட்டது. அதுதான் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடிப்பது. அடுத்தது நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போதுதான், விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் வாய்ப்பு உடனடியாக கிடைக்கவில்லை என்றாலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.


'நானும் ரவுடிதான்' திரைப்பட போஸ்டர் மற்றும் பேட்டி நிகழ்வின் போது ஜான்வி

ஜான்வியை அறிமுகப்படுத்தும் விக்னேஷ் சிவன்

'போடா போடி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரது இணையில், கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சூர்யாவுடன் இணைந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’, மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை இயக்கியவர், அடுத்ததாக அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இதனை கேள்விப்பட்ட கோலிவுட் பிரபலங்கள் பலரும் ஆச்சரியப்பட்டதுடன், அஜித்தை வைத்து வெற்றிப்படத்தை கொடுத்துவிடுவாரா என்ற கேள்வியையும் எழுப்பினர். இந்த நிலையில், விக்னேஷ் சிவன் சொன்ன கதை, அஜித் மற்றும் அப்படத்தை தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் இருவருக்கும் பெரிதாக திருப்தியளிக்கவில்லை என கூறி திடீரென அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இன்னொருபுறம், கதையின் இரண்டாம் பாதியை கொஞ்சம் மாற்றம் செய்துகொள்ள கேட்டு தயாரிப்பு நிறுவனம் வற்புறுத்தியதாகவும், அதனை விக்னேஷ் சிவன் மறுத்ததாலேயே அப்படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பின்னர் கூறப்பட்டது. எது எப்படியாயினும், அஜித் ‘ஏகே 62’ படத்தில் விக்னேஷ் இல்லை என்று உறுதியான பிறகு, அடுத்ததாக கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று ‘லவ் டுடே’ படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் முக்கியமான இன்னொரு நிகழ்வு என்னவென்றால், யாருமே எதிர்பார்க்காத வகையில், ஒரு பெரிய நிறுவனம் வேண்டாம் என்று விக்கியை வெளியேற்றிய அடுத்த சில நாட்களில், அவரின் கதை மிகவும் பிடித்திருப்பதாக சொல்லி, கமல் அதனை தயாரிக்கப்போவதாக அறிவித்ததுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன்பிறகு படத்தின் நாயகியாக யாரை போடப் போகிறார்கள் என்ற கேள்வி எழ, அநேகமாக நயன்தாராதான் ஹீரோயினாக இருப்பார்.. இதில் என்ன சந்தேகம் என்று கருத்துகள் பரவ ஆரம்பித்தன.


இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் ஜான்வி கபூர்

ஆனால் ஏற்கனவே இப்படம் குறித்து அறிவிக்கப்பட்ட தகவல்கள் அனைத்துமே மாறி, தற்போது, படம் குறித்து வேறு சில புதிய அப்டேட்கள் வெளிவந்துள்ளன. அது என்னவென்றால், இப்படத்தினை முதலில் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக பட்ஜெட் காரணமாக தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தினை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, நயன்தாராதான் இப்படத்தில் ஹீரோயினாக வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக படக்குழு நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை இந்தப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நயன்தாரா இப்படத்தில் பிரதீப்புக்கு அக்காவாகவும், நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. எது எப்படியாகினும் தமிழில் ஹீரோயினாக, அதுவும் முதல் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜான்விக்கு, அவரது ஆசை முழுமையாக நிறைவேறா விட்டாலும், தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற முதல் கனவாவது விக்னேஷ் சிவன் மூலமாக தற்போது நனவாகப் போகிறது என்ற சந்தோஷம் அவருக்கு மனநிறைவை தந்துள்ளது. ஜான்வி இந்த படத்தில் வெற்றி முத்திரையை பதித்துவிட்டால் அடுத்தடுத்த படங்கள் வாயிலாக தனது அடுத்த இலக்கையும் அம்மாவுக்கு நிகராக அடைந்துவிடுவார் என்று நாம் நம்பலாம்.

Updated On 19 Dec 2023 12:14 AM IST
ராணி

ராணி

Next Story