சில நடிகர்கள் அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கான இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துவிடுவார்கள். இவர் திரையுலகில் மிக உயரத்துக்கு போவார் என்ற எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே உருவாக்கினாலும் திடீரென காணாமல் போய் ஏமாற்றத்தை கொடுத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் ஸ்ரீதேவி விஜயகுமார். கோலிவுட்டின் மிகப்பெரிய திரைக்குடும்பத்திலிருந்து வந்த இவர் தமிழில் மிகக்குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த ஸ்ரீதேவி, தனது அப்பா, அம்மாவைப் போன்று தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்திற்கு பிறகு திரையுலகிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். குடும்பம், குழந்தை என செட்டிலாகிவிட்ட நிலையில், மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு அவ்வப்போது ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் நேர்க்காணல்களில் பங்கேற்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துவந்த இவர், உடல் எடையை குறைத்து பழையபடி மாறியதுடன், தனது அக்கா மகன் இயக்கிய ஷார்ட் ஃபிலிமிலும் நடித்தார். தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாகவும் களமிறங்கினார். மீண்டும் கேமரா வெளிச்சம் படத் தொடங்கிய அவரிடம் நடிப்பு பற்றி கேட்டபோது, நல்ல கதைகள் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் என கூறியிருக்கிறார். இன்றும் இளமை மாறாமல் அதேபோன்று இருக்கும் ஸ்ரீதேவி இன்று (29.10.24) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஸ்ரீதேவியின் திரை அனுபவங்களை இந்நாளில் திரும்பி பார்க்கலாம்.
குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஸ்ரீதேவி!
பிரபல நட்சத்திரங்களான விஜயகுமார் - மஞ்சுளாவின் கடைசி மகளான ஸ்ரீதேவி, 1992ஆம் ஆண்டு வெளியான ‘ரிக்ஷா மாமா’ படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பாசத்திற்கு ஏங்கும் புவனா என்ற சிறுகுழந்தையின் கதாபாத்திரத்தை ஏற்று, அதனை உணர்ச்சிப்பூர்வமாக திரையிலும் கொண்டுவந்தார். 5 வயதிலேயே தனது அசாத்திய நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்த ஸ்ரீதேவிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடிவந்தன. அதே ஆண்டில் ‘அம்மா வந்தாச்சு’, ‘டேவிட் அங்கிள்’, ‘தெய்வ குழந்தை’, ‘சுகமான சுமங்கலி’ மற்றும் ‘ஆவாரம்பூ’ ஆகிய படங்களில் நடித்து ஒரே ஆண்டில் அதிக படங்கள் நடித்த குழந்தை நட்சத்திரம் என்ற பெயரை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீதேவி பகிர்கையில், “முதன்முதலில் வாசு அங்கிள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது, வீட்டில் கடைசி மகள் என்பதால் அம்மாவும் என்னுடன் ஷூட்டிங்கிற்கு வருவார். ஆரம்பத்தில் சில நாட்கள் நான் கொஞ்சம் பயந்துகொண்டே இருந்தேன்.
‘ரிக்ஷா மாமா’ படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி
அப்போதெல்லாம் அம்மாவுக்கு நான் நடிப்பேனா என்ற சந்தேகம் இருந்ததாம். ஆனால் ஓரிரு நட்களிலேயே கேமிரா எனக்கு பழகிவிட்டது. நான் நடிப்பதைப் பார்த்து, எப்படியாவது இவள் சினிமாவில் கால் ஊன்றிவிடுவாள் என நம்பிக்கை அம்மாவிற்கு வந்துவிட்டது. முதல் படமாக இருந்தாலும் அந்த படத்தில் முதல் நாள் ஷூட், முதல் ஷாட் என ஒவ்வொன்றுமே இன்றும் நினைவில் இருக்கிறது. முதல் படம் என்றுமே ஸ்பெஷல்” என்று சமீபத்திய நேர்க்காணலில் தெரிவித்திருந்தார். ஒரே ஆண்டில் 6 படங்கள் நடித்திருந்தாலும் அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதன்பிறகு 1997இல் தெலுங்கில் ‘ருக்மணி’ என்ற படத்தில் நடித்து, டோலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு இப்படம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாகும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. மீண்டும் 5 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காதபோதிலும் தனது அம்மாவை போன்றே மிக இளம்வயதிலேயே கதாநாயகி வாய்ப்பு ஸ்ரீதேவிக்கு கிடைத்தது.
ஓரிரு படங்களில் கிடைத்த உயரம்!
கிட்டத்தட்ட 15 வயதாக இருந்த ஸ்ரீதேவி தமிழில் ‘காதல் வைரஸ்’ படத்தில் நடித்துமுடித்தார். அதன்பின்பு தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‘ஈஸ்வர்’ என்ற படத்திலும் நடித்தார். ஆனால் ‘காதல் வைரஸ்’ வெளியாவதற்கு முன்பே ‘ஈஸ்வர்’ படம் வெளியானதால் முதலில் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழ்ப்படமும் ரிலீஸானது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இருப்பினும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டாகின. அதற்கடுத்து வெளியான படம்தான் ‘பிரியமான தோழி’. அசோக் கதாபாத்திரத்தில் மாதவனும், அவருடைய நெருங்கிய தோழியாக ஜூலி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். அந்த படம் பார்த்த அனைவருக்குமே ஜூலி மாதிரி ஒரு ஃப்ரண்ட் இல்லையே என்பது இன்றளவும் ஏக்கமாக இருக்கிறது. அந்த அளவிற்கு ஆண் - பெண் இடையே நட்பு இருந்தால் அது காதலாக மட்டும்தான் இருக்கவேண்டுமா என்ன? அது உண்மையான நட்பாகவும் இருக்கலாம் என்ற நட்பின் ஆழத்தை எடுத்துரைத்தது அப்படம். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக ஃபிலிம்ஃபேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
‘ஈஸ்வர்’ படத்தில் பிரபாஸ் - ஸ்ரீதேவி ஜோடி அறிமுகம்
அதனைத் தொடர்ந்து ஜீவா ஜோடியாக ‘தித்திக்குதே’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்காக ஃபிலிம்ஃபேர் விருது ஸ்ரீதேவிக்கு கிடைத்தது. அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘நின்னே இஷ்டபன்னு’ படத்திற்கும் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். இப்படி 2003ஆம் ஆண்டு ஸ்ரீதேவியின் கெரியரில் ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது. இதனால் அடுத்த ஆண்டே ‘காஞ்சனா கங்கா’ என்ற படத்தின்மூலம் கன்னடத்திலும் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என மாறி மாறி கமிட்டான ஸ்ரீதேவிக்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்தது தனுஷுடன் ஜோடிசேர்ந்த ‘தேவதையை கண்டேன்’. இந்த படத்திற்கு பிறகு தமிழில் உச்ச நாயகியாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முற்றிலும் தமிழிலிருந்து விலகி தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். இதனால் தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். தமிழில் வெறும் 4 படங்களே நடித்திருந்தாலும் அவற்றில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.
திருமணமும் அம்மாவை இழந்த சோகமும்
தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துவந்த ஸ்ரீதேவி ஓரிரு ஆண்டுகளில் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ஓரிரு தெலுங்கு படங்களில் நடித்த இவர், அதன்பிறகு முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சினிமா உலகில் விஜயகுமாரின் குடும்ப பாசமும் பிணைப்பும் அனைவரும் நன்கு அறிந்ததே. ஸ்ரீதேவி, அவருடைய அக்கா பிரீத்தா, அண்ணன் அருண் விஜய் என அனைவருமே திரைத்துறையில் இருந்தாலும் எப்போதும் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தவறமாட்டார்கள். கடைசி பெண்ணான ஸ்ரீதேவிக்கு குடும்பத்தின்மீது பிணைப்பு சற்று அதிகம் என்று அவரே பலமுறை நேர்க்காணல்களில் தெரிவித்திருக்கிறார். வீட்டில் அனைவரும் அவரை செல்லமாக பாப்பா என்றுதான் அழைப்பார்களாம். இப்படி கடைகுட்டி செல்லமாக வளர்ந்த ஸ்ரீதேவி, தனது தாயார் மஞ்சுளாவிற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகி அவருடன் நேரம் செலவழித்தார்.
ஸ்ரீதேவி - ராகுல் திருமண புகைப்படம்
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2013ஆம் ஆண்டு மஞ்சுளா இறந்துவிட, அவருடைய குடும்பமே துக்கத்தில் மூழ்கியது. அந்த நேரத்தில் தனக்கு அம்மாவின் வெற்றிடத்தை நிரப்பியது அக்கா பிரீத்தாதான் என்று ஸ்ரீதேவி பலமுறை கூறியிருக்கிறார். அதன்பிறகு ராகுல் - ஸ்ரீதேவி தம்பதிக்கு ரூபிகா என்ற ஒரு மகள் பிறந்தார். தனது அம்மாவே மீண்டும் தனக்கு மகளாக வந்து பிறந்திருப்பதாக ஸ்ரீதேவி கூறுவதுடன், தனது உலகமே தனது அப்பாவும், தனது மகளும்தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் நிறைய இடங்களில் தனது மகளின் பேச்சு மற்றும் பாவனைகள் அம்மாவை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கம்பேக்கிற்கு தயாராகும் ஸ்ரீதேவி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய ரியாலிட்டி ஷோக்களில் கெஸ்ட்டாக கலந்துகொண்ட ஸ்ரீதேவி, மீண்டும் நடிக்க ரெடியாகிவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தனது அக்கா பிரீத்தாவின் மகன் ஸ்ரீராம் இயக்கி நடித்த ‘ஹம்’ என்ற ஷார்ட் ஃபிலிமில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த ஷார்ட் ஃபிலிம் வெளியானதிலிருந்தே மீண்டும் வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார். குடும்பம், குழந்தை என பிஸியாக ஓடிக்கொண்டிருந்த இவர் சற்று உடல் எடை கூடியிருந்த நிலையில், எடையை குறைத்து இப்போது மீண்டும் ஃபிட்டாகவும், மாடர்னாகவும் வலம்வருகிறார். ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் கிளாமர் ரோல்களில் நடிக்கவேண்டாம் என அம்மா ஸ்ட்ரிக்டாக கூறியதாக தெரிவித்த ஸ்ரீதேவி, இப்போது நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிக்க தயார் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
ஸ்ரீதேவியின் சமீபத்திய ஃபோட்டோஷூட்ஸ்
அதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கும் ‘சுந்தரகாண்டா’ என்ற படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவி நடிப்பது குறித்து பகிர்ந்த பிரபாஸ், முதன்முதலாக ‘ஈஸ்வர்’ படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவி எப்படியிருந்தாரோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார் என்றும், அவருடைய கேரக்டர் கொஞ்சமும் மாறவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் இவ்வளவு பெயர், புகழ் இருந்தாலும் அவருடைய குணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான ஜோடி நம்பர் ஓன்னிலும் ஜட்ஜாக இருக்கும் இவர், அவ்வப்போது சூப்பர் ஹிட் பாடல்களுக்கு மேடையில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்துவருகிறார். தெலுக்கு பட ரிலீஸுக்கு பின்பு தமிழிலும் ஸ்ரீதேவி செகண்ட் ரவுண்ட் வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவருடைய ரசிகர்கள். நாமும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.