சினிமாவில் பன்முகக்கலைஞர்களாக பார்க்கப்படும் ஒவ்வொருவருமே ஏதோவொரு வகையில் அவர்களின் தனித்துவமான திறமைக்காக கொண்டாடப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள். அப்படியொரு தனித்துவமான திறமைக்காக கொண்டாடப்படுபவர்தான் ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன். திரைப்படக்கல்லூரி மாணவர் என்ற அடையாளத்துடன் ‘காத்திருந்த காதல்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்த இவர், ஒளிப்பதிவாளராக 37 படங்கள், இயக்குநராக 8 படங்கள் என ஒரு நீண்ட பயணத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். தான் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் ஒரு கொள்கையோடு பயணிக்கும் விஜய் மில்டன் தற்போது நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியை வைத்து ‘மழை பிடிக்காத மனிதன்’ என்றொரு படத்தை இயக்கி அதன் வெளியீட்டிற்காக காத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இப்படம் குறித்தும், இதுவரை இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் விஜய் மில்டன் கொடுத்துள்ள வெற்றி திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
ஆரம்பகால வாழ்க்கை
ஒளிப்பதிவாளராக விஜய் மில்டனின் முதல் திரைப்படமான ‘காத்திருந்த காதல்’ படத்திலிருந்து ஒரு காட்சி
எப்போதும் தன்னுடைய வேலையில் தனித்துவமாக தெரியும் இயக்குநர் விஜய் மில்டன், 1971-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி சென்னையில் விஜயராஜ் என்பவருக்கு மகனாக பிறந்தார். விஜய் மில்டனின் தந்தை விஜயராஜ், சினிமாவில் பல தளங்களில் பணியாற்றியவர். அதனால்தானோ என்னவோ தந்தையை பார்த்து வளர்ந்த மில்டனுக்கு, சிறு வயதில் இருந்தே சினிமா மீதான ஆர்வம் என்பது ஒட்டிக்கொண்டது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவிச்சி உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தவர், ‘ஊமை விழிகள்’ படத்தை பார்த்துவிட்டு தானும் மேற்படிப்பை சினிமா தொடர்பாக படிக்க வேண்டும் என்று தந்தை விஜயராஜிடம் கூறியுள்ளார். மகனின் விருப்பங்களுக்கு எப்போதும் பச்சைக்கொடி காட்டும் தந்தையும் மகனை உடனே அப்போது கானகம் என்ற பெயரில் இயங்கி வந்த அடையாறு எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் சேர்த்துள்ளார். ஒரு இயக்குநர் எதை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறானோ இல்லையோ ஒளிப்பதிவு அதாவது கேமராவை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது மில்டனின் தந்தை விஜயராஜின் கருத்து. அதன்படி மகனை ஒளிப்பதிவு பாடப்பிரிவில் சேர்த்துவிட்டு, இதை நீ படி, இயக்கம் மற்றவை பற்றி நானே சொல்லித்தருகிறேன் என்று கூறினாராம். தந்தை சொல்படி கேமரா தொடர்பாக படித்தவர், அங்கு படித்துக்கொண்டிருக்கும் போதே திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார். இப்படி படிக்கின்ற காலங்களிலேயே திரைத்துறையில் நுழைந்து ஒரு ஒளிப்பதிவாளருக்கான அத்தனை அனுபவங்களையும் நன்கு கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்ற மில்டன் ‘காத்திருந்த காதல்’ என்ற படத்தின் மூலம் கேமராமேனாக அதாவது ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். விஜயேஸ்வரன் என்பவரது இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்ததோ இல்லையோ அவரின் இரண்டாவது படமான ‘பிரியமுடன்’ திரைப்படத்தின் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.
ஒளிப்பதிவாளராக கவனம்
‘காத்திருந்த காதல்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான விஜய் மில்டனுக்கு இரண்டாவது படமே ஜாக்பாட் அடித்ததுபோல் வந்து அமைந்தது. அதற்கு மிகமுக்கிய காரணம், தனது நண்பரான வின்சென்ட் செல்வாதான். வின்சென்ட் செல்வாவும், விஜய் மில்டனும் ஒன்றாக எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். அதன் அடிப்படையில், வின்சென்ட் செல்வா முதல் முறையாக இயக்குநராக களமிறங்கி ‘பிரியமுடன்’ திரைப்படத்தை இயக்க முடிவு செய்தபோது, அதற்கு ஒளிப்பதிவாளராக தனது நண்பனான மில்டனை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியுடன் தேர்வு செய்திருக்கிறார். இப்படி இருவரும் இணைந்து பணியாற்றி 1998-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன், விஜய்க்கும் நல்லதொரு நட்சத்திர அந்தஸ்தை பெற்று கொடுத்தது. முதல் முறையாக நெகட்டிவ் கலந்த ஹீரோவாக விஜய் நடித்திருந்த இப்படத்தில் ஒளிப்பதிவு காட்சிகள் வெகுவாக கவனிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மூன்றாவதாகவும் விஜய்யின் ‘நெஞ்சினிலே’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்த மில்டன் தொடர்ந்து ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘ஹலோ’, ‘சாக்லேட்’, ‘தோஸ்து’, ‘சாமுராய்’, ‘காதலுடன்’ என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலரது படங்களிலும் பணியாற்றினார். ஓரளவு வெற்றிப்படங்களாக அமைந்திருந்த இப்படங்கள் அனைத்திலுமே கேமராவை பயன்படுத்தி இருந்த விதம் பலராலும் பாராட்டப்பட்டது. மேலும், செய்யும் வேலையை மிகவும் சுத்தமாகவும், தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடாது என்று ‘பிரியமுடன்’ படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லிக்கொடுத்ததை பின்பற்றி தன் பணியை மிகவும் கவனமுடன் செய்யும் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு வேலையும் தனித்துவமாக கவனிக்கப்பட்டது.
விஜய் மில்டன் பணியாற்றிய விஜய்யின் ‘பிரியமுடன்’ மற்றும் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படங்கள்
இப்படி ஒவ்வொரு படத்திலும் விஜய் மில்டன் பணியாற்றும் விதம் பிடித்து போய்தான் இயக்குநர் சேரன், தான் அப்போது இயக்கி வந்த ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்திற்கு அவரை ஒளிப்பதிவாளராக நியமித்தார். சேரன் - மில்டன் இருவருக்கிடையிலும் அவ்வப்போது நிறைய கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் தங்களது வேலையில் மட்டும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துக்கொள்ள மாட்டார்களாம். அப்படி பணியாற்றியதால்தான் ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதிலும் மில்டனின் ஒளிப்பதிவு அனுபவத்தில் அப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமைந்தது. இதற்கு பிறகு, ‘போஸ்’, ‘காதல்’, ‘தீபாவளி’, ‘பழனி’, ‘காதலில் விழுந்தேன்’ என தொடர்ந்து வந்த நேரத்தில் விருதுகளுக்கு தேர்வாகும் அளவுக்கு வந்து அமைந்த திரைப்படம்தான் ‘வழக்கு எண் 18|9’. சிறந்த படத்திற்கான தேசிய விருது, தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளிக்குவித்த இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், முதல் முறையாக விஜய் விருதுகள், சைமா விருதுகள், 2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என பலவற்றிற்கும் தேர்வானார். ஆனால், எந்த விருதுகளும் இவரின் கை நுனியைக்கூட தொட்டு பார்க்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.
சறுக்கிய முதல் படம்; சாதித்த 'கோலிசோடா'
இயக்குநராக விஜய் மில்டன் கொடுத்த முதல் வெற்றி திரைப்படம்தான் 'கோலிசோடா'
திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே தனது இயக்குநர் கனவுக்கு வித்திடும் வகையில் முதல் படியை எடுத்து வைத்தார் மில்டன். அப்படி 2006-ஆம் ஆண்டுவரை ஒளிப்பதிவாளராக மட்டுமே பயணித்து வந்த மில்டன் முதல் முறையாக ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்கிற படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். ஆனால், முதல் முயற்சி அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை என்றபோதிலும் மனம் தளராமல் ஒளிப்பதிவில் கவனம் செலுத்திக்கொண்டு பொறுமையாக கதை ஒன்றையும் எழுத ஆரம்பித்தார். அப்படி அவர் எழுதி 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குநராக தனது வெற்றியை பதிவு செய்த திரைப்படம்தான் ‘கோலி சோடா’. இப்படத்தில் கதைக்காக மட்டுமல்ல நடிகர், நடிகைகளுக்கான தேர்வுகளிலும் அதிகமான மெனெக்கெடல்களை எடுத்துக்கொண்டார் மில்டன். இயக்குநர் பாண்டிராஜின் உதவியுடன் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தேர்வு செய்த மில்டன், படத்தை மிக நேர்த்தியாக எடுத்து முடித்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்ப்பவர்களின் வாழ்வியல் எப்படியிருக்கும் என்பதை மிகவும் அழுத்தம் நிறைந்த எதார்த்தத்தோடு விஜய் மில்டன் எடுத்துக்கூறி இருந்த விதம், பலராலும் பாராட்டப்பட்டது மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. 2014-ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்பெற்ற இப்படத்திற்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது. இதனை தொடர்ந்து, தன் இயக்குநர் பயணத்தை தொடர நினைத்த போதுதான் நடிகர் விக்ரமிடம் இருந்து அழைப்பு வர, அடுத்த ஆண்டே அவருடன் இணைந்து ‘பத்து எண்றதுக்குள்ள’ என்றொரு படத்தை இயக்கினார். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன்பிறகு நடிகர் பரத்தை வைத்து ‘கடுகு’, பின்னர் ‘கோலி சோடா 2’ ஆகிய படங்களை எடுத்தவர், அதோடு நின்று விடாமல் தமிழை தாண்டி கன்னடத்திலும் துருவா சர்ஜாவை வைத்து ‘போகரு’, ‘பைராகி’ ஆகிய படங்களையும் இயக்கினார். ஆனால், ‘கோலி சோடா’ முதல் பாகம் வெற்றி பெற்ற அளவுக்கு வேறு எந்த படங்களும் ஒரு இயக்குநராக வெற்றி கொடுக்கவில்லை. இந்தநிலையில்தான், நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தை இயக்கி அதன் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார் விஜய் மில்டன்.
விஜய் ஆண்டனியுடன் கூட்டணி
விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்பட காட்சிகள்
தமிழில் ‘கோலி சோடா 2’ திரைப்படத்திற்கு பிறகு படம் இயக்காமல் இருந்த விஜய் மில்டன் தற்போது நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியை வைத்து ‘மழை பிடிக்காத மனிதன்’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவரவுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், மேகா ஆகாஷ் நாயகியாகவும், சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி என்பவருடன் இணைந்து விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஆண்டனி மற்றும் நடிகர் சரத்குமாருடன் விஜய் மில்டன்
விஜய் ஆண்டனி நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு வெளிவந்த ‘ரத்தம்’, ‘ரோமியோ’ ஆகிய படங்கள் வெற்றி பெறாத நிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லர் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் வரும் “உறவுகள் தொடர்கதை” என்ற பாடலுடன் ஆரம்பிக்கிறது. இதில் குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஆண்டனி என்ற மனிதனின் உண்மையான அடையாளத்தை மறைக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதுபோல் காட்டப்படுகிறது. மாதுரியாக வரும் மேகா ஆகாஷை சந்திக்கும்போது அவரது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதுபோன்றும், அதனால் உண்டாகும் சவால் மற்றும் பிரச்சினைகளை விஜய் ஆண்டனி எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது போல்தான் காட்சிகள் காட்டப்படுகின்றன. ட்ரெய்லரில் அமைதியான பின்னணியில் வரும் இசை கேட்பதற்கு நன்றாக இருப்பதோடு, இறுதியில் வரும் அதிரடியான ஆக்சன் காட்சி விஜய் மில்டனின் முத்திரையை பதிக்கின்றது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், நல்ல நண்பர்களான விஜய் ஆண்டனிக்கும் சரி, விஜய் மில்டனுக்கும் சரி, நல்லதொரு வெற்றி சரித்திரமாக அமைந்திடும் என நம்புவோம்.
His Identity is a Mystery, But his Vision is Clear ! #Ithadevaru song from #Toofan is OUT NOW
— vijayantony (@vijayantony) July 17, 2024
https://t.co/BRpJmGLc0i
A @vijayantony Music and Voice!#ToofanFrom2ndAug
@vijaymilton@realsarathkumar #Sathyaraj @akash_megha @dhananjayaka @ambarpruthvi…