
நவராத்திரி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கொலு பொம்மைகள் தான். ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நவராத்திரி என்று சொன்ன உடனேயே நினைவுக்கு வரும் ஒரே முகம், இல்லை இல்லை ஒன்பது முகம் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடையதுதான். ஒவ்வொரு நடிகர்களும் அவர்களது 25 வது, 50 வது மற்றும் 100 வது படங்கள் என்பது மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். அந்த வகையில் சிவாஜியின் 100 வது படமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்து மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியது. அந்த படம் தான் 'நவராத்திரி'. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியுடன் சிவாஜிகணேசன் ஒன்பது வேடங்களில் நடித்து அசத்திய இந்த படம் 100 நாட்களை கடந்து ஓடி வசூல் சாதனை படைத்தது. இப்படம் மற்றும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இந்த பதிவில் காணலாம்…
'நவராத்திரி' படத்தில் என்ன ஸ்பெஷல்
புராணப் படங்களுக்குப் பெயர் போன இயக்குனரான ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - சாவித்திரி நடிப்பில் 1964 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ‘நவராத்திரி’. அம்பிகைக்கு உரிய பண்டிகை திருநாளான நவராத்திரியை மையப்படுத்தி வெளிவந்த இத்திரைப்படம், தற்போது 59 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இப்படத்தில் வி.கோபாலகிருஷ்ணன், நாகேஷ், மனோரமா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் கதை என்று பார்த்தால் கல்லூரி மாணவியாக வரும் சாவித்திரி, தன்னுடன் படிக்கும் மாணவரான சிவாஜியை காதலிப்பார். இந்த நேரம் சாவித்திரியின் தந்தை, மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க, சாவித்திரியோ தன்னை பெண் பார்க்க வரப்போவது தான் காதலிக்கும் சிவாஜிதான் என்பது தெரியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார். அப்படி வீட்டை விட்டு வெளியே வந்த சாவித்திரி, ஒன்பது நாட்களும் விவசாயி, தொழுநோயாளி, மருத்துவர், காவல்துறை அதிகாரி, நாதஸ்வர வித்வான், ஜமீன், என்று ஒவ்வொரு விதமான தோற்றத்தில் வரும் சிவாஜியை சந்திப்பார். பிறகு இறுதியாக தான் காதலித்த சிவாஜி தான் தன்னை பெண் பார்க்க வந்தது என்பதை தெரிந்து அவரை ஓடோடி வந்து சந்திப்பார். பிறகு இருவரது காதலும் திருமணத்தில் முடியும். அந்த திருமணத்திற்கு வீட்டை விட்டு வெளியே சென்று ஒன்பது நாள், தான் சந்தித்த ஒவ்வொரு சிவாஜியையும் அழைத்திருப்பார். பின்பு அவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுப்போவதே படத்தின் கதை. வீட்டை விட்டு பெண் ஓடிவிட்டாள் என்று நெகட்டிவ் விஷயத்தை சொல்லும் கதைதான் இது என்றாலும் அவள் சந்திக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை மிக அழகாக இயக்குனர் சொல்லியிருந்த விதம் நிச்சயம் பாராட்டும்படியாக இருக்கும்.

நவராத்திரி படத்தில் சிவாஜி ஏற்ற ஒன்பது வேடங்கள்
நவரசங்களை வெளிப்படுத்திய சிவாஜி
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். 1952 ஆம் ஆண்டு ‘பராசக்தி’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் வந்த இவர் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டிய சாதனைகள் அபரிமிதமானது. அதிலும் நவரசங்களை காட்டும் சிவாஜியின் 100வது படமான ‘நவராத்திரி’ திரைப்படத்தை வார்த்தைகளால் விவரித்திட முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே நேரம் சவால்கள் நிறைந்த இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்கள் ஏற்று நடித்திருப்பார். இப்படத்தில் காட்சிக்கு காட்சி வித்தியாசம் காட்டி நடிக்கவும், நடக்கவும் என பல பரிமாணங்களை காட்டும் சிவாஜி , ஒரே படத்தில் ஒற்றை ஆளாக கோபம், பயம், சாந்தம், மகிழ்ச்சி, வெறுப்பு, இரக்கம், வீரம், சிங்காரம் என ஒன்பது விதமான நவரசங்களையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் என்றால் அது அவரால் மட்டுமே சாத்தியமானது.

மருத்துவர், தொழுநோயாளி, ரவுடி கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன்
குறிப்பாக இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் ஒன்பது சிவாஜியும் ஒரே நேரத்தில் தோன்றி மணமக்களை வாழ்த்துவார்கள். அப்போது ஒவ்வொரு பிரேமிலும் நடிகர் திலகம் தன் பன்முகத் நடிப்பு திறனை அசாத்தியமாக வெளிக்காட்டி நம்மையே அறியாமல் நம் உடல் சிலிர்த்துப் போகும்படி செய்து விடுவார். அதிலும் டெக்னாலஜி பெரிதாக வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்திலேயே ஒரே காட்சியில் 7 சிவாஜியை ஒரே பிரேமில் வரும்படி கொண்டு வந்து காட்டியிருக்கும் விதத்தை இன்று நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கும். அந்த பிரம்மிப்பையே பின்னுக்கு தள்ளும் விதமாக அந்த காட்சியில் 7 சிவாஜியும் செய்கின்ற வெவ்வேறு ரியாக்ஷன்கள் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான் என்ற உணர்வை நிச்சயம் நமக்கு ஏற்படுத்தும்.
100வது படத்தில் நடந்த குழப்பம்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ‘நவராத்திரி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த அதே வேளையில், பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் ‘முரடன் முத்து’ என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் ரிலீசுக்கு தயாராகி காத்துக் கொண்டிருக்க, எந்த படத்தினை முதலில் வெளியிடுவது என்ற குழப்பம் சிவாஜிக்கு ஏற்பட்டது. ஏனென்றால் அதுவரை 99 படங்களில் நடித்து முடித்திருந்த சிவாஜி, தனது 100வது படமாக எந்த படத்தினை அறிவிப்பது என்ற கேள்வி எழுந்ததால்தான். இதுதவிர தான் நடித்திருக்கும் இரண்டு படங்களின் இயக்குனர்களும் புகழ் பெற்றவர்கள் எனும் போது யார் படம் 100வது படமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது. உடனே அந்த குழப்பத்தைப் போக்க சிவாஜியும், அவரது சகோதரர்களும் தங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்களை அழைத்து இரண்டு படங்களையும் போட்டுக் காண்பித்து, அவர்களிடம் கருத்து கேட்டுள்ளனர்.

திருமண கோலத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி
படத்தினை பார்த்தவர்கள் ‘முரடன் முத்து’ படம் சிறப்பாக வந்திருப்பதாக கூற, சிவாஜியும் ஏ.பி. நாகராஜனை தொடர்பு கொண்டு ‘நவராத்திரி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ஏ.பி. நகராஜனோ தான் சொந்தமாக தயாரித்திருப்பதால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று வர்த்தக காரணங்களைச் சுட்டிக்காட்டி மறுத்துவிட்டாராம். பிறகு இரண்டு படங்களும் ஒரே நாளில் 1964 தீபாவளியன்று வெளியாக, முதல் காட்சியிலேயே சிவாஜியின் முரடன் முத்துவை விட, ‘நவராத்திரி’ ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் அதுவரை குடும்பம் மற்றும் சரித்திர கதைகளில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த சிவாஜியை முதல் முறையாக திரையில் 9 வேடங்களில் பார்த்த ரசிகர்கள், அவரது நடிப்பை கண்டு வியந்து திரையரங்குகளை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கினர். இதன்பிறகு தமிழ் சினிமாவிலும், தனது திரையுலக வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய ‘நவராத்திரி’ படத்தினை 100வது படமாக சிவாஜி அறிவித்தார்.
ஏ.பி.நாகராஜன் டைட்டில் கார்டில் செய்த புதுமை
தமிழ் சினிமாவில் புராண இதிகாச படங்கள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது இயக்குனரும், தயாரிப்பாளருமான ஏ.பி.நாகராஜனாக மட்டும் தான் இருக்க முடியும். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள அக்கம்பேட்டையில் பிறந்த இவர், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக நுழைந்து, பின்னர் திரைக்கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர் என உயர்ந்து பிறகு இயக்குநராகவும் வெற்றி நடை போட்டார். அந்த வகையில், ஒரு இயக்குனராக சிவாஜியை வைத்து 1962ஆம் ஆண்டு தனது முதல் படமான ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தினை இயக்கிய ஏ.பி.நாகராஜன், இரண்டாவதாக ‘குலமகள் ராதை’ என்ற படத்தினையும் இயக்கினார். ஆனால் இவ்விரு படங்களும் சுமாரான வெற்றியையே பெற்ற நிலையில், மூன்றாவதாக மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்த சரித்திரப் புகழ் வாய்ந்த படமான ‘நவராத்திரி’ என்ற படத்தினை இயக்கித் தயாரித்தார். இப்படத்தின் பெயர் ‘நவராத்திரி’என்பதற்கு ஏற்றார் போல் அதே பெயரில் ஒரு பாடலையும் ஏ.பி.நாகராஜன் படத்தில் இடம்பெறச் செய்திருந்ததோடு, அந்த பாடல் காட்சியில் ஏராளமான பொம்மைகளை வைத்தும் படமாக்கியிருந்தார்.

இயக்குனர் ஏ.பி.நாகராஜன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இதில் சிறப்பு என்னவென்றால், அந்த பொம்மைகளை தயாரித்தவர்களின் பெயரையும் டைட்டில் கார்டில் இடம்பெறச் செய்து பெருமைப்படுத்தியிருப்பார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். 1964ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, தீபாவளி வெளியீடாக வெளிவந்த எத்தனையோ படங்களுடன் ‘நவராத்திரி’ படமும் போட்டி போட்டு 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது மட்டுமின்றி, சிவாஜியின் 100 வது படத்தினை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் என்ற பெருமையும் ஏ.பி.நாகராஜனுக்கு கிடைத்தது. இப்படத்தின் கதையை எழுதிவிட்டு, அதனை தனது நண்பர்களிடம் ஏபிஎன் கூறும்போது, அதனை கேட்ட அவர்கள், “இது எப்படி சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பினார்களாம். அதற்கு ஏபிஎன் நடிகர் திலகம் இருக்க எனக்கு என்ன கவலை. எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார் என்று கூறினாராம். அவர் சொன்னது போலவே சிவாஜியும் இப்படத்தில் அசத்தலாக நடித்து சாதித்துக் காட்டினார்.
