இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அழகு, அறிவு, திறமை, கடின உழைப்பு போன்ற அனைத்து குணாதிசயங்களையும் ஒருவரிடம் பார்ப்பது அரிது. ஆனால் ஒருசிலர் இந்த அத்தனை குணங்களையும் இயல்பாக கொண்டிருந்தாலும் அதுகுறித்த பெருமையோ, அகம்பாவமோ அவர்களிடம் துளியும் இருக்காது. அதற்கு சிறந்த உதாரணம் நடிகை சிம்ரன். அறிமுகமான முதல் படத்திற்கே சிறந்த நடிகைக்கான விருது, மூன்று முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கியிருந்தாலும் அதுகுறித்தெல்லாம் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாத நடிகை இவர். தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நடிகர்களில் ஒருவரான விஜய்கூட, சிம்ரனுடன் டான்ஸ் ஆடும்போது மிகவும் டஃப் கொடுப்பார் என்று இவருடைய நடனத்திறமையை புகழ்ந்திருக்கிறார். இப்படி நடிகை, தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகத்தன்மைக்கொண்ட சிம்ரனுக்கு தமிழ் மட்டுமல்லாமல், தென்னிந்தியா முழுக்கவே மவுசு அதிகம். 90களின் கனவுக்கன்னியாக வலம்வந்த இவர், இடையே நடிப்புக்கு சற்று இடைவெளி எடுத்திருந்தபோதிலும், மீண்டும் கம்பேக் கொடுத்து இப்போது சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல நடிகைகள் வயதான தோற்றத்தை மறைக்க, சர்ஜரிஸ், ஃபில்லர்ஸ் என போகிற இந்த காலகட்டத்தில் வெளியே செல்லும்போதுகூட பெரும்பாலும் மேக்கப் போட்டு மறைக்காமல் முகத்தில் சுருக்கங்களுடனும், நரைமுடியுடனும் ஏஜிங்கை ஆறத்தழுவி என்ஜாய் செய்துவரும் சிம்ரன், ஏப்ரல் 4ஆம் தேதி தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் சிம்ரனின் மறக்கமுடியாத தருணங்களை சற்று திரும்பி பார்க்கலாம்.

டிவி தொகுப்பாளினி டூ நடிகை!

மும்பையில் ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்தில் 1976ஆம் ஆண்டு மூத்த மகளாக பிறந்தவர் ரிஷிபாலா நேவல். இவருக்கு இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி. அப்பா - அம்மா இருவரும் சிறிய அளவில் துணி வியாபாரம் செய்துவந்த நிலையில், ரிஷிபாலாவுக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘சூப்பர் ஹிட் முகாப்லா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்த பாலிவுட் நடிகை ஜெயா பச்சன், சிம்ரனுக்கு சினிமா வாய்ப்பை பெற்றுத்தந்தார். இப்படி தனது 18 வயதில் ‘சனம் ஹர்ஜாய்’ என்ற படத்தில் சிம்ரன் என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானார் ரிஷிபாலா. எந்தவொரு திரைப் பின்னணியும் இல்லாமல் திடீரென சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எந்த பெற்றோருக்குதான் பயம் இருக்காது? அப்படித்தான் சிம்ரனின் அப்பாவும் முதலில் பயந்திருக்கிறார். தனது திரை அறிமுகம் குறித்து சிம்ரன் ஒரு நேர்காணலில் பகிர்ந்தபோது, “நான் ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்திலிருந்து வந்தவள். 1994இல் மிஸ் வேர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் போன்ற பட்டங்களை இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் போன்றோர் பெற்ற சமயத்தில் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் என் பெற்றோருக்கு என்னை சினிமாவுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுப்பதில் மிகவும் கடினமாக இருந்தது. என் அப்பா எப்படி இது சாத்தியமாகும்? என்று யோசித்துக்கொண்டிருந்தபோது என் அம்மா, நான் நடிக்க போவதற்கு சம்மதம் தெரிவித்தார். என்னுடைய பள்ளி, கல்லூரி காலத்திலிருந்தே எனக்கு டான்ஸ் ஆட மிகவும் பிடிக்கும். அதுபோக, டிராமா, ஃபேஷன் ஷோ, ஸ்போர்ட்ஸ் என அனைத்திலும் கலந்துகொள்வேன். அப்படி ஒரு ப்ரோகிராமில் என்னை பார்த்து ‘சூப்பர் ஹிட் முகாப்லா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார்கள். அந்த நிகழ்ச்சியை Mrs. பச்சனின் ஏபிசிஎல் குழு டிவியில் பார்த்து, ‘தேரே மேரே சப்னே’ படத்தில் ஆங்க் மாரே பாடலில் ஆடவைத்தனர். அதன்மூலம்தான் ‘சனம் ஹர்ஜாய்’ என்ற பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வெளியானபிறகுதான் நான் முதலில் ஆடிய பாடல் வெளியானது. இப்படித்தான் என்னுடைய சினிமா பயணம் தொடங்கியது” என்று கூறியிருந்தார்.


90களில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த சிம்ரன்

பாலிவுட் டூ தென்னிந்திய சினிமா!

என்னதான் முதலில் பாலிவுட் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அடுத்தடுத்து தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தார் சிம்ரன். 1995ஆம் ஆண்டு நடித்த முதல் படம் ஓரளவு வெற்றிபெற்றதால் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுமார் 4 படங்களில் நடித்தார். அவற்றில் ஒருசில அடிவாங்கினாலும் சிம்ரனின் நடிப்பு மற்றும் நடனத்திறமை பெருமளவு பேசப்பட்டது. அதைவைத்து தென்னிந்திய படங்களுக்கு ஆடிஷன் கொடுத்தார். அதன்மூலம் 1996ஆம் ஆண்டு ‘இந்திரபிரஸ்தம்’ என்ற மலையாளப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு தமிழில் ‘விஐபி’ மற்றும் ‘ஒன்ஸ்மோர்’ என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. அதே நேரத்தில் தெலுங்கிலும் ‘பிரியா ஓ பிரியா’, ‘மா நானாக்கு பெல்லி’ போன்ற படங்கள் ரிலீஸாகின. இப்படி தமிழ்நாடு, ஹைதராபாத், மும்பை என தொடர்ந்து அடுத்தடுத்த ஷூட்டிங்குகளில் பிஸியானார். அதே ஆண்டு வெளியான ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் சிம்ரனின் கெரியரில் பெயர்சொல்லும் படமாக அமைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழில் வெளியான ‘அவள் வருவாளா’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’ போன்ற படங்கள் சிம்ரனின் பெயரை உச்சத்திற்கு கொண்டுசென்றன. அதன்பிறகு விஜய் - சிம்ரன் ஜோடி தமிழ் திரையுலகில் மிகவும் சூப்பர் ஹிட் ஜோடியாக பார்க்கப்பட்டது. அதனாலேயே ‘பிரியமானவளே’, ‘உதயா’ போன்ற படங்களில் இந்த ஜோடி இணைந்து நடித்ததுடன், ‘யூத்’ படத்தில் விஜய்க்காக ஒரு பாடலுக்கு ஆடி அசத்தினார் சிம்ரன். ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலில் விஜய்யால்கூட சிம்ரனுடன் ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை என்று சிம்ரனின் திருமணத்திற்கு எடுக்கப்பட்ட சிறப்பு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் விஜய். குறிப்பாக, இவருடைய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட கதாநாயகியாக வலம்வந்தார் சிம்ரன். அதுவரை கொஞ்சம் சப்பியாக இருக்கும் ஹீரோயின்களைத்தான் தமிழ் ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற கான்சப்டையே மாற்றியமைத்தவர் என்றால் அது சிம்ரன்தான் என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டன. குறிப்பாக, 90களின் காலகட்டத்தில் ஒவ்வொரு நடிகைகளுக்கும் சிரிப்பழகி, தொடை அழகி என ரசிகர்களால் சிறப்பு பட்டம் சூட்டப்பட்டது. பெரும்பாலான பாடல்களில் லைட்டான ஹிப் மூவ்மெண்ட் ஸ்டெப் இடம்பெற்றதாலேயே ‘இடுப்பழகி சிம்ரன்’ என்று அன்பாக அழைக்கப்பட்டார்.


‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தில் கமல்ஹாசனுடன் டூயட் பாடியபோது...

தமிழ் ரசிகர்கள்தான் என்றுமே நம்பர் 1

இந்தியை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் ரசிகர்களிடமிருந்து தனக்கு கிடைத்த அன்பையும், ஆதரவையும் இன்றும் மனதில் வைத்திருப்பதாக சிம்ரன் அடிக்கடி கூறுவதுண்டு. தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்ததால் இந்தி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட சிம்ரன் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் இருப்பதையே பெரிதும் விரும்பினார். அதற்கான காரணத்தையும் அவரே கூறியிருக்கிறார். “தமிழ் ரசிகர்கள் எனக்கு கொடுக்கும் அன்பை நினைக்கும்போது நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன். நான் முதலில் தமிழில் நடிக்க வந்தபோது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது கேரவன் இருக்காது. அந்த சமயத்தில் நடித்த எல்லா ஹீரோயின்களுக்குமே கடினமான காலகட்டம் அது. அப்போது பெரும்பாலான பாடல்களை மலைப்பகுதிகளில்தான் எடுப்பார்கள். அங்கு டிரெஸ் மாற்றக்கூட இடம் இருக்காது. பெண் நடனக்கலைஞர்கள் எல்லாரும் ஒரு ஓரத்திற்குச் சென்று நிறையப்பேர் புடவைகளை விரித்து ஒரு கூடாரம்போன்று பிடித்துகொள்வார்கள். அதற்குள் நாங்கள் அனைவருமே சௌகர்யமாக உடைமாற்றுவோம். இதற்காக அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்றுவரை தமிழ் மக்கள் எனக்கு அதே அன்பை மாறாமல் கொடுத்துவருகின்றனர். அதனாலேயே எனது சொந்த ஊரான மும்பை மற்றும் என் கணவரின் ஊரான டெல்லியைத் தவிர சென்னையில் மட்டும்தான் நான் வீடு வாங்கியிருக்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்திருந்தார்.


சிம்ரனுக்கு சூப்பர் டூப்பர் கம்பேக்காக அமைந்த ‘வாரணம் ஆயிரம்’

கம்பேக்கில் கலக்கிவரும் சிம்ரன்!

திரையுலகில் அறிமுகமான 10 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிம்ரன், அடுத்து படங்களை தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கினார். ஆனால் அவை பெரிதளவில் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தாலும் அடுத்தடுத்து ஒருசில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் 2003ஆம் ஆண்டு தனது பால்யகால நண்பரான தீபக் பாகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகைகளுடைய மார்க்கெட் குறைந்துவிடும் என்ற ஸ்டீரியோடைப்பை இப்போதுள்ள நடிகைகள் உடைத்துகாட்டி வந்தாலும், அதில் பலத்த அடிவாங்கியவர்களில் சிம்ரனும் ஒருவர் என்பதை மறுக்கமுடியாது. திருமணமான ஓரிரு வருடங்களில் இவருக்கு மார்க்கெட் இல்லாததால் ‘சேவல்’, ‘ஐந்தாம் படை’ போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். அவை இவருக்கு கைகொடுக்கவில்லை. அதன்பிறகு, 2008ஆம் ஆண்டு வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம்தான் சிம்ரனுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்திற்காக சில விருதுகளும் இவருக்கு கிடைத்தன. தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்தாலும் 90களின் அளவுக்கு மார்க்கெட் கிடைக்கவில்லை. இதனிடையே இரண்டு மகன்கள் பிறந்துவிட்டதால் குடும்பத்திலும் கவனம் செலுத்தவேண்டுமென அவ்வப்போது மட்டுமே சிறுசிறு ரோல்களில் நடித்துவந்தார். 2018ஆம் ஆண்டு ‘சீமராஜா’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரனுக்கு அடுத்த ஆண்டே ரஜினிக்கு ஜோடியாக ‘பேட்ட’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் சிம்ரனின் கெரியரில் சிறப்பான கம்பேக்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ‘பாவக்கதைகள்’ என்ற ஓடிடி தொடரில் நடித்ததோடு, டிவி ஷோக்களிலும் கலந்துகொண்டார். என்றும் தமிழ் ரசிகர்களின் எவர்க்ரீன் ஃபேவரிட் நடிகையாக வலம்வரும் சிம்ரன், நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில பாடல்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்துவருகிறார். தமிழ் ரசிகர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் நன்றிக்கடன்பட்டிருப்பதாக கூறும் இவர், சென்னையில் குடும்பத்தோடு செட்டிலாகிவிட்டார். தற்போது விக்ரமுடன் இவர் சேர்ந்து நடித்திருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இந்த மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் அடுத்தடுத்த படங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சிம்ரன்.

Updated On 1 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story