(15.03.1981 மற்றும் 22.03.1981 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
ஷோபாவும், அவள் அப்பாவும், கள்ளிக் கோட்டையில் இருந்து ஜனவரி 22-ந் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரையும் அழைத்து வர, நான் கார் அனுப்பி வைத்தேன். கார் சென்ற சிறிது நேரத்தில், "மூடுபனி" படத் தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் எங்கள் வீட்டுக்கு வந்தார். வந்தவர் சும்மா இருக்கவில்லை. "என்னம்மா, இந்த பாலு இப்படி செய்கிறார். சொன்னபடி நடந்து கொள்ள மாட்டேன் என்கிறார், அவரை வைத்து எப்படித்தான் படத்தை முடிக்கப் போகிறேனோ, தெரியவில்லை" என்று பேசிக் கொண்டே போனார். "இதை ஏன் என்னிடம் வந்து சொல்லுகிறீர்கள்? நீங்கள் தயாரிப்பாளர். பாலுவிடம் நேரடியாகப் பேசுவதுதானே!" என்று பாலகிருஷ்ணனுக்கு பதில் சொல்லிவிட்டு, எனது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.' பாலகிருஷ்ணன் எங்கள் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்த அதே நேரத்தில், பாலுமகேந்திரா வேறு ஒரு காரில் சென்ட்ரல் ஸ்டேசனுக்குச் சென்றார்.
கூட்டம் கூட்டினார்
மங்களூர் ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்தது! அதற்கு இடையில் பாலுவின் கார் டிரைவர் கருப்புசாமி. (இவர் என் மகள் கார் டிரைவராக இருந்தவர், போக்கு சரி இல்லாததால், வேலையில் இருந்து நீக்கியிருந்தோம். அவரை உடனே தன் பக்கம் இழுத்துக்கொண்டார், பாலு.) அங்கு நின்றவர்களிடம் எல்லாம் "மங்களூர் மெயிலில் நடிகை ஷோபா வருகிறார். அதோ, அது தான் ஷோபாவின் கார்" என்று எங்கள் காரையும் காட்டிவிட்டார். அப்போது "பசி" படம் வெளிவந்து ஷோபா பிரபலமாக இருந்தாள். அதனால், ஷோபாவின் காரைச் சுற்றி கூட்டம், கூடியது. ரயில் வரவும் கூட்டம் இன்னும் அதிகம் ஆனது! ஷோபா இறங்கி காரில் ஏறும் முன் பெரும்பாடு ஆகிவிட்டது. ஷோபாவும் அவள் அப்பாவும் கூட்டத்தைக் கடந்து, காருக்குள் ஏறி, கண்ணாடியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள்.
கண்களில் வியப்புணர்ச்சியை வீசும் ஷோபா
டிரைவரும், வேலைக்காரப் பெண் வசந்தியும் ஷோபாவுக்கு உரிய "லக்கேஜ்"களை இறக்கிக் கொண்டு இருந்தார்கள். அப்போது ஷோபாவிடம் குப்புசாமியை பாலு அனுப்பினார். அம்மா, உங்கள் கார் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இப்பொழுது இதில் சென்றால், கூட்டம் மொய்த்துவிடும். ஒழுங்காக வீடு போய் சேர முடியாது. அங்கிள் காரில் ஏறி வீட்டுக்குச் சென்று விடலாம். உங்கள் கார் "லக்கேஜ்”களை ஏற்றிக்கொண்டு வரட்டும்” என்று கதவைத் திறந்தார். “நீங்களும் வாருங்கள்” என்று ஷோபா அப்பாவையும் குப்புசாமி அழைத்தார். ரசிகர் கூட்டத்தைப் பார்த்து ஷோபாவும், அவரும் பாலு கொண்டுவந்த காரில் ஏறினார்கள். வீட்டில் வந்து ஷோபாவும், அவள் அப்பாவும் இறங்கிய பிறகுதான் பாலு ஸ்டேஷனுக்குப் போயிருந்தது தெரியவந்தது.
ஜேசுதாஸ் ரசிகை
ஏறத்தாழ 22 நாளைக்குப் பிறகு நாங்கள் சந்திக்கிறோமே! ஷோபா ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டாள். ஷோபா வீட்டுக்குள் நுழையவும், “மூடுபனி” தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன், "ஷோபாம்மா! இன்று ஜெமினியில் ஜேசுதாஸ் ரெக்கார்டிங் இருக்கிறது. அரை மணி நேரம் வந்துவிட்டுப் போங்கள். உடனே திரும்பிவிடலாம்” என்று அழைத்தார். ஷோபா சின்ன வயதிலேயே ஜேசுதாஸ் ரசிகை! ஜேசுதாஸ் பாட்டு என்றால், ஷோபாவுக்கு நிரம்பப் பிடிக்கும். அவள் நடிக்கும் படம் என்றாலும் சரி, வேறு படத்தில் என்றாலும் சரி, ஜேசுதாஸ் பாட்டு என்றால், உடனே புறப்பட்டு விடுவாள். ஜேசுதாஸ் ரெக்கார்டிங், அதுவும் அவள் நடிக்கும் "மூடுபனி" படத்துக்கு என்றதும், “மம்மி! அரை மணி நேரம் போய்விட்டு வந்து விடுகிறேன்” என்று என்னிடம் கேட்டாள். “சரி, முதலில், குளித்து ஆடை மாற்றிக் கொள் என்றேன், நான். “வேண்டாம், மம்மி இந்த சேலை போதும் வந்து குளிக்கிறேன். பாலகிருஷ்ணன் எனக்காக காத்து இருக்கிறார்” என்று ஓடிப்போய் முகத்தை மட்டும் கழுவி துடைத்துக் கொண்டாள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு, கையால் தலை முடியை சரி செய்தாள். "ரமா! நீயும் வா!” என்று என் தங்கையை துணைக்கு அழைத்தாள்.
ஜெமினியில் ஜேசுதாஸ் ரெக்கார்டிங் என்று நினைத்து ஏமாந்துபோன நடிகை ஷோபா
மேக்கப் எதற்கு?
'இருடி! வேறு சேலை கட்டிக் கொள்கிறேன்” என்று ரமா அறைக்குள் ஓடினாள். "நானே இந்த கோலத்தோடு போகிறேன்; உனக்கு எதுக்குடி "மேக்கப்" என்று, ரமாவை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாள், ஷோபா. அதுவரை பாலு வெளியே காரில் இருந்தார். எங்கள் கார் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து அது வரை வரவில்லை. எனவே, பாலுவின் வண்டியில் ஷோபாவும் ரமாவும் ஜெமினி ஸ்டூடியோவுக்குப் புறப்பட்டார்கள். ஷோபா அப்பா அப்போதுதான் வேறு ஆடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார். "ஷோபா எங்கே?" என்று கேட்டார். நான் விஷயத்தைச் சொன்னேன்! "அவ்வளவு என்ன அவசரம்? குழந்தை தூக்கம் இல்லாமல் வந்தது?” என்று என்னை கடிந்து கொண்டார். "அரை மணி நேரத்தில் திரும்பி விடுவாள்" என்று நான் அவரை சமாதானப்படுத்தினேன்.
ஏமாற்றம்
ஷோபா, ஆசையோடு ஜெமினி ரெக்கார்டிங் தியேட்ருக்குச் சென்றாள். ஆனால், அங்கே ஜேசுதாஸ். இல்லை. வேறு யாரோ இருந்து இருக்கிறார்கள். “அங்கிள் ஜேசுதாஸ் ரெக்கார்டிங் இல்லையா?” என்று ஷோபா கேட்டாள். “பேசாமல், இங்கே உட்கார்ந்து இரு” என்று சிடுசிடு என்று கூறிவிட்டு, அங்குமிங்கும் ஓடினார், பாலு. அப்போது, ஷோபாவுக்கு பழக்கமான ஒரு ஸ்டில் போட்டோ கிராபர் வந்தார். அவர்கூட எதற்கோ வந்து இருக்கிறார் என்று தான் ஷோபா நினைத்தாள். சிறிது நேரம் நின்று பேசிவிட்டு, அவரும் அப்பால் போய்விட்டார். அடுத்து, வேறு சில பத்திரிகை நிருபர்கள் வந்து கொண்டு இருந்தார்கள். "என்ன, இது? ஏதும் விசேஷமா?" என்று ரமாவிடம் ஷோபா கேட்டாள். "எனக்குத் தெரியாது" என்று ரமா சொன்னாள். பத்திரிகை நிருபர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்றது. ஷோபாவும் ரமாவும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார்கள்.
மிக இளம் வயதிலேயே நடிப்பில் அசாத்திய திறன் பெற்றிருந்த ஷோபா
ஆமா போடு
அப்போது, பாலு வந்து, ஷோபாவை மட்டும் வேறு ஓர் அறைக்கு அழைத்துப் போனார். ரமாவும் எழுந்து ஷோபா பின்னால் சென்றாள். பாலுவும் ஷோபாவும் ஓர் இடத்தில் அமர்ந்தார்கள். ரமாவை ஷோபாவிடம் விடாமல் பாலு காலை நீட்டி வைத்து இருந்தார். ரமா, பாலுவின் காலை தள்ளிக் கொண்டு போய் ஷோபா அருகே அமர்ந்து கொண்டாள். பாலு, ஷோபாவிடம் மெதுவாக 'நாம் இருவரும் ஜுலை மாதம் திருமணம் செய்து கொண்டதாக நிருபர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்கள் உன்னிடம் கேட்பார்கள். நீ “ஆமாம்" என்று மட்டும் கூறவேண்டும்" என்று சொன்னார். உடனே ஷோபாவுக்கு முகம் வெளிறியது. "அங்கிள்! இது தப்பு. வீட்டுக்கு தெரிந்தால், என்ன ஆகும்? என்னை விடுங்கள் நான் வீட்டுக்குப் போகிறேன்" என்று ஷோபா எழப் போனாள்.
ரமாவும், “வாடி நாம் போகலாம். ஏதோ சதி நடக்கிறது” என்று ஷோபாவின் கையைப் பிடித்தாள். “வீட்டில் தெரிந்தால் என்ன செய்வார்கள்? என்னை கொலை பண்ணுவாங்க, அவ்வளவுதானே! நான் செத்துப் போகிறேன்” என்று கத்தினார், பாலு. “என் சொல்படி கேட்கவில்லை...?” என்று மிரட்டவும் செய்திருக்கிறார். ஷோபா பித்துப்பிடித்தவள் போல எழுந்தாள்! அடுத்த அறையில் பத்திரிகை நிருபர்கள் இருந்தார்கள். ஒரு மாலைப் பத்திரிகையின் நிருபர் “ஷோபா, உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார். "எதற்கு?" என்பது போல ஷோபா, பாலுவைப் பார்த்தாள்.
ஷோபா திரும்பிப் பார்க்கவும், இன்னொரு நிருபர். "பாலுமகேந்திராவும் நீங்களும் திருமணம் செய்துகொண்டது உண்மையா?" என்று கேட்டார். அவள் விழித்தாள். உடனே பாலு, "அவங்க கேட்கிறாங்கல்ல, பதில் சொல்லு" என்று அதட்டினார். அதன்பிறகே ஷோபா, "ஆமா" என்பது போல தலை அசைத்தாள். ஷோபா தலை அசைக்கவும், என் தங்கை ரமா, எனக்கு (தாயார் பிரேமா) போன் செய்தாள். ரமா எனக்குப் போன் செய்ததை, பாலுவிடம் ஒருவர் சொல்லிவிட்டார். பாலு உடனே, "எல்லோரும் சோழா ஓட்டலுக்கு வாருங்கள்" என்று பத்திரிகை நிருபர்களிடம் கூறிவிட்டு, ஷோபாவை அழைத்துப் போய் காரில் ஏற்றினார். "நீயும் வாடி” என்று ஷோபா, ரமாவை அழைத்தாள். அதனால், பாலு அழைக்காமலே, ரமாவும் காரில் ஏறிக்கொண்டாள்!
வெவ்வேறு தருணங்களில் ஷோபா
ஓட்டலில்
சோழா ஓட்டலில் உள்ள ஒரு படக் கம்பெனி அறைக்குள் ஷோபாவை அழைத்துப் போனார், பாலு. ரமா "ஓ!" என்று கத்தி அழுது இருக்கிறாள்! "பாவி! மகள் மகள் என்று கொஞ்சினியே! இப்போ அவளை மனைவி என்கிறீயே! உனக்கு வெட்கமாக இல்லையா? மகளை, மனைவி என்று கூறும் நீ மனிதனா, மிருகமா?” என்று எல்லாம் பாலுவோடு ரமா, சண்டை போட்டு இருக்கிறாள். அங்கே வந்த நிருபர்களிடம், "சார்! உங்களிடம் எல்லாம்தானே பாலு சொன்னார், ஷோபா என் மகள் என்று. இப்போ அந்தக் குழந்தையை, என் மனைவி என்கிறாரே, நீங்கள் கேட்கக்கூடாதா?" என்று அழுது இருக்கிறாள். அதற்கு நிருபர்கள், "எங்களுக்கு எதுவும் தெரியாது, அம்மா! "ஷோபா உங்களை சந்திக்க விரும்புகிறார்" என்று பாலு போன் செய்தார். ஷோபா படம் எதுவும் டைரக்டு செய்யப் போகிறாரோ, என்னவோ, அதைச் சொல்லத்தான் அழைக்கிறார் என்று வந்தோம். இங்கே வந்த பிறகுதான், இந்த விஷயமே தெரிய வந்தது" என்று சொன்னார்கள்.
மாலை வந்தது
இதற்கு இடையில், இரண்டு மாலையும் பூச்செண்டும் வந்தன! ஒரு மாலையை ஷோபாவின் கழுத்தில் பாலு போட்டார். இன்னொரு மாலையை ஷோபாவின் கையில் கொடுத்து, “எனக்குப் போடு' என்று சொல்லியிருக்கிறார். இயந்திரம் போல இயங்கிய ஷோபா அப்படியே செய்திருக்கிறாள். புகைப்படங்கள் எடுக்கப்பட்டன! இதைப் பார்த்து, ரமா ஒப்பாரி வைத்து அழுது இருக்கிறாள். பாலுவை வாயில் வந்தபடி எல்லாம் திட்டியிருக்கிறாள். உடனே, மூன்று பேர் சேர்ந்து, ரமாவைப் பிடித்து இழுத்து வாயைப் பொத்தி, மேலே இருந்து “லிப்ட்” வழியாக கீழே கொண்டு வந்தார்கள். தயாராக நின்ற ஒரு காருக்குள் ரமாவைத் தள்ளி, “இனிமேல் அழுது பிரயோஜனம் இல்லை. எதாவது குடிக்கிறீயா?" என்று கேட்டு இருக்கிறார்கள். "எனக்கு ஒண்ணும் வேண்டாம்" என்று கத்தினாள், ரமா. 'அப்படியென்றால், கொஞ்ச நேரம் உள்ளே இரு" என்று, அவள் அழும் சத்தம் வெளியே கேட்காதபடி, கார் கண்ணாடியை தூக்கிவிட்டு, பூட்டிவிட்டு, அவர்கள் போய்விட்டார்கள். ஆனால், காரின் ஒரு கதவு திறந்து இருந்து இருக்கிறது. அதன் வழியாக வெளியேறி, அழுது கொண்டு ரோடு வழியே ஓடியிருக்கிறாள்! தகவல் வந்தது! இதற்கு இடையில், ரமா என்ன ஆனாள் என்பதை அறிய, எங்களுக்கு பழக்கமான பத்திரிகை நிருபர் கீழே வந்து பார்த்து இருக்கிறார். ரமாவை காணாததால் ஓர் ஆட்டோவில் எங்கள் வீட்டுக்கு வந்தார்!
ஷோபாவை இயந்திரம் போல் இயக்கிய பாலு மகேந்திரா
அவர் வீட்டுக்கு வந்த பிறகுதான், ஷோபாவை பாலு சோழா ஓட்டலுக்குக் கொண்டுபோய் மாலை மாற்றிக் கொண்ட விவரம் எங்களுக்குத் தெரிய வந்தது. என் தங்கை ரமா, ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து "போன்” செய்த போது, என் தம்பி ஜோதி வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தான். ஷோபா அப்பா வயிற்று வலி என்று படுத்து இருந்தார். சென்டிரல் ஸ்டேஷனுக்குப் போன காரும் திரும்பி வரவில்லை. என்ன செய்வது என்று, நாங்கள் அழுது கொண்டு இருந்தபோது தான், அந்த நிருபர் வந்தார். எங்களில் யாராவது ஒருவர் சோழா ஓட்டலுக்குச் சென்றால், தகராறுதான் எழும். ஆனால், ரமா என்ன ஆனாள் என்று தெரியவில்லையே!. எனவே, நிருபர் வந்த அதே ஆட்டோவில் ஷோபா அப்பாவும், அந்த நிருபரும் சோழா ஓட்டலுக்குச் சென்றார்கள்.
அவர்கள் ஓட்டலுக்கு சென்றபோது, பத்திரிகை நிருபர் யாரும் இல்லை. ஓட்டலின் கீழ்ப் பாதியில் தேடிப் பார்த்தார்கள். ரமாவும் இல்லை. ஷோபா அப்பா அதே ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பினார். ஷோபா அப்பா சென்ற சிறிது நேரத்தில் எங்கள் கார் வந்தது. அதையும் ரமாவைத் தேட அனுப்பி வைத்தேன். ரமா பீச்ரோட்டில் தலைவிரிகோலமாக அழுது கொண்டு சென்று இருக்கிறாள். எங்கள் கார் டிரைவர் கண்டு, அவளை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அகிலாவும் உடந்தையா?
இதற்கு இடையில், அகிலாவுக்கு மாலை மாற்றிய செய்தி எட்டியிருக்கிறது. அவள் அழுதுகொண்டு என் வீட்டுக்கு வந்தாள். தாலி மீது சத்தியம் செய்தார். இப்படி ஏமாற்றிடாரே! என்று கண்ணீர் வடித்தாள்.! அப்போது, பத்திரிகை நிருபர்கள் வந்தார்கள். "அகிலா சம்மதத்தோடுதான், இந்த திருமணம் நடக்கிறது” என்று பாலு சொல்கிறாரே, அது உன்மையா?” என்று என்னிடம் கேட்டார்கள்.
“இதோ அகிலாவே இருக்கிறாள். அவளிடம் கேளுங்கள், சொல்லுவாள்” என்று நான் சொன்னேன். நிருபர்கள் அகிலாவிடம் கேட்டார்கள். “எனக்கு எதுவுமே தெரியாது. இன்று காலை கூட ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போகிறேன் என்று சொல்லி' விட்டுத்தான் சென்றார். இந்தத் திருமணம் பற்றி என்னிடம் பேசவே இல்லை. ஷோபாவை ஒரு மகளாகத்தான் நான் பாவித்து வந்தேன்” என்று சொன்னாள், அகிலா. எப்படியோ, பாலு நினைத்ததை நடத்தி விட்டார். ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அன்று நடந்த மாலை மாற்று நாடகத்தில் ஷோபா தன் உணர்வுடன் கலந்துகொள்ளவில்லை.
முன்னேற்பாடு
'முள்ளும் மலரும்' படப்பிடிப்பின் போது படக்குழுவுடன் ஷோபா, பாலு மகேந்திரா
ஷோபா கள்ளிக்கோட்டையில் படப்பிடிப்பில் இருந்தபோது, 19-ந் தேதி சென்னைக்கு வந்த பாலு, இந்த மாலை மாற்று நாடகத்துக்கு ஒத்திகை நடத்தியிருக்கிறார்! இந்த கூத்துக்கு, அப்போது பாலு டைரக்டு செய்த படத் தயாரிப்பாளர்களும் உடந்தையாக இருந்து இருக்கிறார்கள். இந்தத் திருமணத்துக்கு ஷோபா உடந்தை என்றால், அல்லது மாலை மாற்றும் திட்டம் ஏற்கனவே தெரியும் என்றால் அவள் குளிக்காமல், ரயிலில் கட்டிய அழுக்கு உடையோடு சென்று இருக்க மாட்டாள். ஷோபா, பூஜை அறைக்குள் செல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டாள். அன்று பூஜை அறைக்கு செல்லாமலே ஜெமினி ஸ்டூடியோவுக்குச் சென்றாள்.
இப்படி மாலை மாற்று நாடகம் நடப்பது தெரிந்து இருந்தால், அதற்கு அவளும் சம்மதித்து இருந்தால், துணைக்கு ரமாவை அழைத்துப் போயிருக்கவே மாட்டாள்! எப்படியோ, என் மகளை பாலு வசப்படுத்தி விட்டார். ஆனால், அவர் எப்படி வசப்படுத்தினார் என்பது எங்களுக்கு கடைசி வரை தெரியாமல் போய்விட்டது! "ஷோபா என்னிடம் வந்து, "எனக்கு வீட்டில் நிம்மதி இல்லை. எனக்கு எல்லாமே நீங்கள் தான்" என்று சொன்னாள். அதன் பிறகே, ஷோபாவை திருமணம் செய்துகொள்ள "முடிவு செய்தேன்" என்று பாலுமகேந்திரா சொன்னார். நான் பாலுமகேந்திராவைக் கேட்கிறேன்...
(இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்…)