
(14.06.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
நட்சத்திர நடிகை என்றாலும், ஸ்ரீதேவி நான் கிழித்த கோட்டை தாண்ட மாட்டாள்" என்று பெருமையோடு கூறுகிறார், அம்மா ராஜேஸ்வரி. ஸ்ரீதேவியின் அப்பா அய்யப்பன் வக்கீல் ஆக இருப்பவர். கலப்புத் திருமணம் செய்து கொண்ட அய்யப்பன் ராஜேஸ்வரி தம்பதிகளின் முந்த மகள் ஸ்ரீதேவி. பூர்வீகம், மதுரை. ஸ்ரீதேவிக்கு ஒரு தங்கை இருக்கிறாள். பெயர் லதா.
ஸ்ரீதேவி எப்படி நடிகை ஆனார்? அம்மா ராஜேஸ்வரி கூறினார்:
ஆசை பிறந்தது
சிறுவயதில், ஸ்ரீதேவிக்கு ஓட்டலில் சாப்பிடுவது என்றால் கொள்ளை இன்பம். அதனால், அடிக்கடி அவளை ஒட்டலுக்கு அழைத்துச் செல்வோம். ஓட்டலில் ரேடியோ பாடினால், அந்தப் பாட்டுக்கு ஏற்ப ஸ்ரீதேவி ஆடுவாள். அதைப் பார்த்தவர்கள், "இந்தக் குழந்தையை சினிமாவில் சேர்த்தால், சிறந்த நடிகை ஆவாள்" என்று கூறினார்கள். அதனால், எங்களுக்கும் ஸ்ரீதேவியை நடிக்க வைத்துப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

தனது அப்பா அம்மாவுடன் ஸ்ரீதேவி
எதிர்ப்பு
அந்த முயற்சியில் இறங்கினோம். ஆனால், எங்கள் பெற்றோர்களும் உறவினர்களும் ஸ்ரீதேவி நடிப்பதை விரும்பவில்லை. அதனால், ஸ்ரீதேவிக்கு 4 வயது நடக்கும் பொழுது நாங்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறினோம். ஸ்ரீதேவியின் அழகும் சுறுசுறுப்பும் எல்லோரையும் கவர்ந்தது! அவள் குழந்தை நட்சத்திரம் ஆனாள்!
குழந்தைதான்!
என் மகள் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்பொழுது எப்படி இருந்தாளோ, அதுபோல்தான் இப்போதும் நடந்து கொள்கிறாள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிப்படங்களிலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தாலும் இன்னும் அவளிடம் குழந்தைத்தனம் மாறவில்லை.
தினமும் காலையில் நான்தான் அவளை தட்டி எழுப்பிவிட வேண்டும். உடனே எழுந்திருக்க மாட்டாள். “இன்னும் பத்து நிமிடம்” என்று சுருண்டு விடுவாள். நான் மேலும் ஒரு பத்து நிமிடம் விட்டுக் கொடுத்து, இருபது நிமிடம் ஆனதும் மீண்டும் எழுப்பி விடுவேன். எழுந்து, காலைக் கடன்களை முடிப்பாள். பிறகு மேக்கப் போடத் தொடங்குவாள். மேக்கப் நடக்கும்பொழுது ஒரு டம்ளர் பால் கொடுப்பேன். மேக்கப் முடிந்து, சாமி கும்பிட்டுவிட்டு, டிபன் சாப்பிடுவாள். 2 இட்லிதான் அவளுக்குக் காலை உணவு.

குழந்தை நட்சத்திரமாக இருவெவ்வேறு தருணத்தில்...
அப்பா வேலை
ஸ்ரீதேவியோடு நானும் படப்பிடிப்புக்கு செல்வேன். இது, அவளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக அல்ல. துணைக்காகத்தான். அப்போது கூட, படப்பிடிப்பு தொடங்கிவிட்டால், அவள் முன்னால் போக மாட்டேன். என்னைப் பார்த்து, அவள் நடிப்பதற்குக் கூச்சப்படக்கூடாது என்பதற்காக, தனியாக ஒதுங்கிவிடுவேன்.
ஸ்ரீதேவிக்கு நாளைக்கு என்னென்ன படப்பிடிப்பு இருக்கிறது என்பதுகூட தெரியாது. நான்தான் சொல்ல வேண்டும். கால்ஷீட்டு விவகாரங்களை ஸ்ரீதேவி அப்பா கவனித்துக் கொள்கிறார். ஸ்ரீதேவியிடம் சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடு அதிகம். குறிப்பிட்ட நேரம் தவிர, மற்ற நேரங்களில் எதுவும் சாப்பிட மாட்டாள். காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு, படப்பிடிப்புக்குச் சென்றால், பதினோரு மணி அளவில் எதாவது பழச்சாறு கொடுப்பேன். மத்தியானம் ஒரு கப் சோறு சாப்பிடுவாள். கோழிக்கறி இருந்தால்தான் அந்த சோறும் இறங்கும்! சாப்பாட்டுக்குப் பிறகு, ஒரு டம்ளர் மோர். மாலையில் டிபன் கிடையாது. ஒரு டம்ளர் "போர்ன்விட்டா" குடிப்பாள். இரவு ஓர் எலுமிச்சம் பழ அளவு சோறு மற்றும் ஒரு சப்பாத்தி. சரியாக 10 மணிக்கு அவளை படுக்க அனுப்பிவிடுவோம்.

படப்பிடிப்பு தளத்தில் அம்மா ராஜேஸ்வரியுடன் மகிழ்ச்சியான தருணத்தில் ஸ்ரீதேவி
பூரிப்பு
என் மகள் பெரிய நட்சத்திரம் ஆகி, இலட்ச இலட்சமாக சம்பாதித்தாலும், என் சொல்லைத் தட்டுவது இல்லை. நாங்கள் கிழித்த கோட்டைத் தாண்டுவது இல்லை. இதை நினைக்கும்பொழுது பெற்ற வயிறு பூரிக்கிறது. அவள் சம்பாதிக்கிறாள் என்பதற்காக அவளை எப்பொழுதும் ஒரு நடிகையாகவே வைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அவளுக்கு பதினெட்டு வயது முடிந்ததும், திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருக்கிறோம். இப்பொழுது நிறைய இடத்தில் இருந்து ஸ்ரீதேவியை பெண் கேட்கிறார்கள். அவள் தங்கை லதாவையும் மணமுடிக்கக் கேட்கிறார்கள். நல்ல இடமாக அமைந்தால், அடுத்த ஆண்டு இருவருக்கும் ஒரே மேடையில் மணம் முடித்து வைத்துவிடலாம் என்று இருக்கிறோம் என்று சொன்னார், ராஜேஸ்வரி.
