இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமா பின்னணி இல்லாமல் தனது திறமையால் தமிழ் திரையில் தடம் பதித்த நடிகை என சொல்லும் அளவிற்கு திறமையும், பணிவும், அவரின் இயல்பும் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும். அப்படியான ஒரு நடிகைதான் பூஜா உமாசங்கர். திரைப்படங்களில் எப்பேர்ப்பட்ட வேடங்களையும் அசால்ட்டாக ஏற்று நடித்து, தனது அழகாலும், நடிப்பாலும் எளிதாக கவர்ந்துவிடும் பூஜா, தமிழில் அறிமுகமான சில வருடங்களில் பல விருதுகளை அள்ளி குவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர். நடிகை என்பதை தாண்டி சிறந்த மாடலாகவும் அறியப்பட்ட பூஜா, தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சினிமாவில் நடிப்பதை பூஜா நிறுத்தி இருந்தாலும், அவர் ஏற்று நடித்த ஒரு சில கதாபாத்திரங்கள் இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த அளவிற்கு அலட்டிக்கொள்ளாத அவரின் இயல்பான நடிப்பு, எதார்த்தமான பேச்சு தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஜூன் 25-ம் தேதி, தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் பூஜா கௌதமி உமாசங்கர் பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.


அப்பா மற்றும் அம்மாவுடன் நடிகை பூஜா

பூஜாவின் இளமை பருவம்:

கொழும்புவில் 1981-ம் ஆண்டு எச்.ஆர். உமாசங்கர் மற்றும் சந்தியா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தார் பூஜா. அவருடைய தாய்மொழி கன்னடம். பூஜாவின் அப்பா கர்நாடகாவை சேர்ந்தவர். அம்மா இலங்கையை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பூஜாவின் அப்பா வால்பாறையில் இந்துஸ்தான் யூனி லீவர் லிமிடெட் மேனேஜராக பணியாற்றினார். பூஜாவின் வீட்டில் கன்னடம், ஆங்கிலம் மட்டுமே பேசுவார்களாம். தமிழில் பேசியதில்லை என்றாலும், தமிழ் மொழி பூஜாவுக்கு பிடித்த ஒன்றாம். நாளடைவில் தமிழ் பேசவும் கற்றுக் கொண்டாராம். பூஜாவிற்கு கன்னடம், சிங்களம், தமிழ், ஆங்கிலம், மலையாளம் என ஐந்து மொழிகள் தெரியுமாம். எம்.பி.ஏ படித்து முடித்துள்ள பூஜாவுக்கு எளிமையாக இருப்பதே பிடிக்குமாம். வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக கொண்டாடி தீர்க்க வேண்டும் என்பதே லட்சியமாம்.


அட்டகாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் பூஜா

அட்டகாசமா ஆரம்பித்த பூஜாவின் திரை பயணம்:

சிங்கள மொழியில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு, தமிழ் சினிமாவில் உள்ளம் கேட்குமே என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. படத்தில் நடிப்பதை பற்றி பல்வேறு குழப்பங்களுடன் இருந்த பூஜாவிற்கு நண்பர்களின் வார்த்தைகளே வலு சேர்த்தன. உள்ளம் கேட்குமே படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக பூஜா நடித்து அசத்தினார். அவர் முதலில் நடித்த படம் உள்ளம் கேட்குமே என்றாலும், ரிலீசானது என்னவோ ஜே.ஜே. திரைப்படம்தான். நடிகர் மாதவனுக்காக மட்டுமே ஜே.ஜே. படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் ஒரு நேர்காணலில் கூறினார். திரையில் தோன்றிய சில காலங்களில் தனது மூன்றாவது படத்திலேயே தல அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிட்டியது. மிகவும் சுறுசுறுப்பான, அந்த கதாபாத்திரமாகவே வாழும் அளவிற்கு திறமை கொண்டவர் பூஜா. அடுத்தடுத்து தமிழில் முக்கிய நடிகை என்ற பெயரை பெற தொடங்கிய பூஜாவுக்கு, வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாகின. மாதவன், பூஜா இருவரின் நடிப்பில் ஜே.ஜே. திரைப்படம் வெற்றி அடைந்ததை அடுத்து இருவரும் தம்பி என்ற படத்தில் மீண்டும் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2007-ம் ஆண்டு நடிகர் ஆர்யாவுடன் பட்டியல் என்ற படத்தில் நடித்த பூஜாவிற்கு தொடர்ந்து ஆர்யாவுடன் மேலும் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


பொறி திரைப்படத்தில் இடம்பெறும் 'பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்' பாடல் காட்சி

ஜீவா மற்றும் பூஜா இணைந்து நடித்து, அதே வருடம் வெளியான பொறி என்ற படத்தில் வரும் ‘பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்’ என்னும் பாடல் எல்லோருக்கும் பிடித்த ஒன்றே. இயக்குநர் பாலா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான நான் கடவுள் என்ற படமே பூஜாவின் பேர் சொல்லும் படமாக மாறியது. இந்த படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்பு பூஜாவை தேடி வந்தது. பூஜா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான விடியும் முன் படம் பல விமர்சனங்களை பெற்றது. கடவுள் பாதி மிருகம் பாதி என்னும் படமே அவர் நடிப்பில் தமிழில் வெளியான இறுதி படம்.

பூஜா அள்ளி குவித்த விருதுகள்:

நான் கடவுள் படத்திற்காக 2009, 2010 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான மூன்று விருதுகளை பூஜா பெற்றார். இப்படத்திற்காக 2009-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. இதற்கு முன்னாள் பல விருதுகளுக்கு பூஜா பரிந்துரைக்கப்பட்டார். மிகவும் பிரபலமான நடிகை மற்றும் சிறந்த நடிகை என 2021-ம் ஆண்டுவரை 16 விருதுகளை பெற்றார் பூஜா. 2017-ம் ஆண்டு ஜானாபிமானி கௌரவ விருதை இலங்கை அரசு பூஜாவுக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.


நான் கடவுள் திரைப்படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிகை பூஜா

இயக்குநர் பாலாவும், பூஜாவும்:

இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த எல்லோரும் சிறந்த படங்களை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் தனது தனித்துவமான படைப்பில் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்னமோ இயக்குநர் பாலாதான். நான் கடவுள் திரைப்படத்தில் பார்வை தெரியக்கூடிய வெள்ளை நிற லென்ஸ் அணிந்து பூஜா நடித்ததாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் அந்த லென்ஸ் அணிந்து கொண்டால் சுத்தமாக பார்வை தெரியாது. கிளைமாக்சில் மலை மீது ஏறிச் செல்லும் காட்சியில் ஒரு பக்கம் 20 அடி பள்ளம் இருந்தது. அதனால் நான் மைக்கில் ரைட் லெப்ட் என்று சொல்ல சொல்ல, பூஜா அதை கேட்டு அழுது கொண்டே வேகமாக மலை மீது ஏறுவார். நான் மாற்றி கூறிவிட்டால் பூஜா பள்ளத்தில் விழுந்திருப்பார். அப்படியெல்லாம் சிரமப்பட்டு நடித்த பூஜாதான் என்னுடைய படங்களில் நடித்ததிலேயே சிறந்த நடிகை என்று பாலா கூறியிருக்கிறார். பாலாவும், பூஜாவும் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். சினிமா வட்டார விழா ஒன்றில் பூஜா, இயக்குநர் பாலாவை பார்த்ததும் ஓடிவந்து அவரின் கன்னத்தில் முத்தமிட்டார். பதிலுக்கு பாலாவும், பூஜாவின் கன்னத்தில் முத்தமிட்டார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.


கணவர் பிரஷானுடன் பூஜா கௌதமி உமாசங்கர்

பூஜாவின் திருமண வாழ்க்கை:

2016-ம் ஆண்டு பிரஷான் டேவிட் வெத்தகன் என்பவரை பூஜா திருமணம் செய்து கொண்டார். இவர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர். பூஜாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும்கூட. பழக்க வழக்கத்தில் பூஜாவின் குணத்திற்கு சமமானவர் என்பதால், இருவருக்கும் பிடித்துவிட்டதாம். பூஜா, பிரஷான் திருமணத்திற்கு திரை பிரபலங்கள் யாரும் அழைக்கப்படவில்லை. பூஜாவின் அம்மா, அப்பா, தம்பி, தம்பி மனைவி, பிரஷான் வீட்டார்கள் 50 பேர் என மிகவும் எளிமையாக திருமணம் நடந்தேறியது. இவ்வாறாக தனது குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக இருந்து வருகிறார் நடிகை பூஜா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்த பூஜா, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று தனது பாப்புலாரிட்டி குறையாதவாறு பார்த்துக் கொள்கிறார்.

Updated On 1 July 2024 6:40 PM GMT
ராணி

ராணி

Next Story