
தெலுங்கு தமிழ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாகவே தனது அறிவிப்புகள் மூலம் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஷாக் கொடுத்து வருகிறார். ஒருபுறம் சினிமாவுக்கு ஒரு வருடம் பிரேக் எடுப்பதாக அறிவித்தாலும், மற்றொருபுறம் சமூக ஊடங்களில் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இவர் தற்போது அரசியலில் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி பேசு பொருளாகியிருக்கிறது.
கைவிட்ட காதல், கைதூக்கிய சினிமா!
2010ஆம் ஆண்டு `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சமந்தா. அதன்பிறகு அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கான `ஏ மாயா சேசவா’ படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்து, முதல் படத்திலேயே பலரின் மனதிலும் இடம்பிடித்தார். அந்த திரைப்படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கிலும் தமிழிலும் மாறிமாறி தேடிவந்தன. ஆரம்பத்தில் நடிகர் சிதார்த்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட சமந்தா, நாகசைதன்யாவுடன் காதலில் விழுந்தார்.
`ஏ மாயா சேசவா’ திரைப்படம் மற்றும் முன்னாள் கணவருடன் சமந்தா
இருவருக்கும் 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் நடந்தால் பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று சொல்வதுண்டு. ஆனால் சமந்தாவிற்கோ அது நேர்மாறாக அமைந்தது. திருமணத்துக்குப் பிறகுதான் கிளாமர் ரோல்களில் களமிறங்கி, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். கணவன் - மனைவி இருவருமே சேர்ந்து படங்களில் நடித்தனர். இந்நிலையில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிவதாகவும் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே 2021-ஆம் ஆண்டு கூட்டாக அறிவித்தனர்.
அதன்பிறகு தொடர்ந்து படங்களில் பிஸியான சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சமூக ஊடகத்தையே சென்சேஷனலாக்கினார். இதனால் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றார். தொடர்ந்து ஹெவி வொர்க் - அவுட் வீடியோக்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.சமந்தாவின் டயட் மற்றும் உடற்பயிற்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன்பிறகு `காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கத்தீஜா கதாபாத்திரத்தின்மூலம் சமந்தாவா? நயன்தாராவா? என்ற விவாதத்தையே பற்றவைத்தார்.
`ஊ சொல்றியா மாமா’ பாடல் மற்றும் சமந்தாவின் வொர்க் - அவுட் போட்டோஸ்
சமந்தாவை முடக்கிய மயோசிட்டிஸ்
புகழின் உச்சத்தில் இருந்த சமந்தா, திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்து, தான் மயோசிட்டிஸ் எனும் அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் சமந்தா ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். இருப்பினும் தொடர்ந்து ஏற்கனவே கமிட் ஆகியிருந்த படங்களில் நடித்தார் சமந்தா. சாகுந்தலம், யசோதா போன்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன. பாலிவுட் ஹீரோ வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து ஓடிடியில் அறிமுகமானார்.
தான் பாதிக்கப்பட்டுள்ள மயோசிட்டிஸ் பற்றி சமந்தா ஒரு நேர்க்காணலில் மனம் திறந்திருந்தார். அதில், “ஒரு நடிகராக எப்போதும் பரிபூரணமாக இருக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் ஒரு நடிகருக்கு இது மிகவும் மோசமான விஷயம். நான் எப்போதும் சிறப்பாகவே இருக்க விரும்பினேன். இப்போது இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாத இடத்தில் இருக்கிறேன்.
மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா
ஒருநாள் குண்டாக இருக்கிறேன். ஒருநாள் உடம்பு சரியில்லை. நான் எப்படி இருக்கவேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் எழுந்திருக்கும்போது வெளிச்சம் பட்டால் கண்களில் ஊசி குத்துவது போன்ற வலியை உணர்கிறேன். ஒரு நடிகராக, கண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். நான் ஸ்டைலுக்காக கண்ணாடி அணிவதில்லை. வெளிச்சம் உண்மையில் என் கண்களை பாதிக்கிறது. எனக்கு கடுமையான ஒற்றை தலைவலி இருக்கிறது. கடந்த 8 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறேன்” என்று பேசியிருந்தார்.
குஷி ரிலீஸ்... சினிமாவுக்கு பிரேக்
விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ திரைப்பட படப்பிடிப்பில் இருந்தபோதுதான் சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஒருவழியாக அந்த படத்தின் நடித்து முடித்த சமந்தா மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். உடல்நிலையை சரிசெய்ய வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்குப் போவதாகவும், அதனால் ஒரு வருடம் சினிமாவிற்கு பிரேக் எடுப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே ஆன்மிகத்தலங்களுக்குச் சென்று புகைப்படங்களை பதிவிட்ட சமந்தா, அவ்வப்போது போட்டோஷூட் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
`குஷி’ திரைப்பட போஸ்டர்
கடந்த சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும், செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியான குஷி திரைப்படம் மாஸ் வெற்றி பெற்றிருக்கிறது. சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் சூப்பராக வொர்க்- அவுட் ஆகியிருக்கிறது. தேவரகொண்டாவுடனான நெருக்கமான காட்சிகள் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் எரிச்சலை தூண்டியிருப்பதாக செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. பெண்களை மையப்படுத்திய படங்களின் தோல்வியால் பல விமர்சனங்களுக்கு ஆளான சமந்தாவுக்கு இந்த ரொமானஸ் படம் கைகொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அரசியலில் சமந்தா?
குஷி பட வெற்றியை கொண்டாடி வருகிற அதே நேரத்தில் சமந்தா அரசியலில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ‘பிரதியுஷா’ என்ற அமைப்பைத் தொடங்கி சமூக சேவை செய்துவருகிறார் சமந்தா. மேலும், தெலங்கானா விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், கைத்தறி துணி விளம்பர தூதராகவும் அம்மாநில அரசு இவரை நியமித்திருக்கிறது.
சமூக சேவைப் பணிகளில் சமந்தா
இந்நிலையில் தெலங்கானாவில் கே. சந்திரசேகர் ராவின் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெலுங்கில் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
